தீயச் சொல்லா சாதி? : – அஸ்வினி கலைச்செல்வன்

சாதி பொதுவெளியில் பகிரங்கமாக பேச முடியாத அல்லது சொல்ல முடியாத அளவிற்கு அவ்வளவு இழிவான சொல்லா?! அதன் பின்னான கொடூரத்தனத்தின் கீழ் நிகழ்ந்தேறும் வன்முறைகளுக்கான காரணம் என்ன?!

வர்க்க அடிப்படையிலான சாதிய பிரிவினைகள்:

ஒருவர் சாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு, மனித உரிமை மீறல்களுக்கு, பாகுபாட்டுக்கு உட்படுதல் சாதிய ஒடுக்குமுறைஆகும். 

முன்பு தொழில் வாரியான வகுப்புகள் இருந்தன,தொழில் மாறலாம் தீண்டாமையில்லை,பாகுபாடு இல்லை. பின் தொழிலை வாரிசு ரீதியாக செய்ய தொடங்கினர்.பின் தொழிலின் அடிப்படையில் சாதி தோன்றி,அதன் தொடர்ச்சியாக, தீண்டாமை, உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. மனிதன் என்ற உயர்நிலை,பின்னர் தரம் தாழ்ந்த உயிரினம் ஆனான். ஆரியர்களின் தெய்வம், படைப்பு போன்றவற்றை எதிர்த்து விலகியவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்பட்டனர்.

 “1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று கீழத்தஞ்சை மாவட்டத்தில் கீழ்வேளூர் அருகே உள்ள வெண்மணி கிராமத்தில் அந்த வெங்கொடுமை அரங்கேறியது. சாதிய – நிலவுடைமை ஆதிக்க வெறியர்களின் ஈவிரக்கமற்ற வன்முறை வெறியாட்டத்திற்கு 44 உயிர்கள் பலியாயின.கீழ் வெண்மணி படுகொலைகளும் ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டங்களில் அரங்கேறிய சாதிய வன்கொடுமைகளின் உச்சம். இது ஒரு வர்க்கப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டாலும் அடிப்படையில் அது சாதி ஆதிக்க ஒடுக்குமுறையை நிலைநாட்டுவதற்கான களமாக அமைந்துவிட்டது. அதாவது, இப்போராட்டத்தில் வர்க்க முரண்களோடு சாதிய முரண்களும் கூர்மை அடைந்தன.

இந்தியச் சமூக கட்டமைப்பில் வர்க்க முரண்கள், தேசிய இன முரண்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட போராட்டக் களங்கள் யாவற்றிலும், சாதிய முரண்கள் குறுக்கிட்டு கூர்மை பெறுவதைக் காணமுடிகிறது.

பக்தவச்சல பாரதியின் மானிடவியல் கோட்பாடுகள்
மரபுக் கோட்பாடு (traditional theory)

தொழிற் கோட்பாடு (occupational theory)

சமயக் கோட்பாடு (religious theory)

அரசியற் கோட்பாடு (political theory)

இனக் கோட்பாடு (racial theory)

படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)

சாதியின் வரையறையாக தமிழகம் பார்ப்பது எதை? :

தமிழகம் என்பது பலநூறு சாதிகளின் பெரும்பரப்பு.வாழ்வியல்,தொழிற்பரப்பை பொருளாதாரத்தை மையப்படுத்திய வகையீட்டின் அடிப்படை காரணியாக விளங்குகிறது சாதி. நம் மக்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் சாதிகளைப்பற்றி அறியாமல் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் இந்த அரைநூற்றாண்டு அறிவியக்கத்தில் நம் சாதிகளைப்பற்றி குறிப்பிடும்படியான ஆய்வுகள் என எவையுமே வரவில்லை. சாதி ஒரு தான்தோன்றித்தனமாக உருவானதாகவே கருதப்படுகிறது. வரலாற்றில் இதற்கான வரைவுகள் இல்லையென்பதே உண்மை. ஆகவே நம் மக்கள் வரலாறு இன்னமும் எழுதப்படவில்லை.பிறகெப்படி இத்தனை வகையீடான சாதிகள் என்ற கேள்வியும் எழுகிறது. சொல்லப்போனால் நம்மை ஆளவந்த வெள்ளையர் அக்காலத்தில் பதிவுசெய்தவற்றை நம்பியே நம் ஆட்சி நிர்வாகம் நடந்துவருகிறது.

அ. ஆதிக்க சாதிகள்

(i). பார்ப்பனர்

(ii). வேளாளர் (10)

ஆ. ஒடுக்கப்பட்ட/சுரண்டப்பட்ட சாதிகள்

(i). விவசாயச் சாதிகள் (எ-டு : கள்ளர், மறவர், வன்னியர்…

(ii). கைவினைச் சாதிகள் (எ-டு : தச்சர், கொல்லர், குயவர், மருத்துவர்…

(iii). தாழ்த்தப்பட்டோர் {எ-டு : தேவேந்திரர் (பள்ளர்), ஆதிதிராவிடர் (பறையர்),  அருந்ததியர் (சக்கிலியர்) முதலானோர்} (11)

தமிழகத்தில் நீளும் சாதிப்பட்டியல்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளையும் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது. இவை முறையே 1. ஆதிதிராவிடர் பட்டியல், 2. பழங்குடியினர் பட்டியல், 3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், 4. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்), 5. மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியல் 6. சீர்மரபினர் பட்டியல் 7. இதர சாதியினர் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

நீளும் ஆதிதிராவிடர் பட்டியல் மாவட்ட வாரியாக 76 வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் பழங்குடியினர் பட்டியல் மாவட்ட வாரியாக 36 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணைகள் எண்:85, நாள் 29-07-2008, எண்:97, நாள் 11-09-2008 மற்றும் எண்:37, நாள்: 21-05-2009 கீழ் 136 சாதி பிரிவுகளும் மொழி பேசும் மக்கள், மதம் மாறிய மக்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்)

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் அரசாணை எண்:85, நாள் 29-07-2008.

  1. அன்சார்
  2. தக்கானி முஸ்லீம்
  3. துதிகுலா
  4. லப்பைகள் இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது ஆக இருப்பினும்)
  5. மாப்பிள்ளா
  6. ஷேக்
  7. சையத்

மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 40 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

சீர்மரபினர் பட்டியல் 40க்கும் மேற்பட்ட சாதி வகைகளை கொண்டுள்ளது.

இத்தனை வகைகளை கொண்ட சாதிகளானது தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்பித்து பிரச்சினைகளை உருவாக்கி வலுப்பெறுவதாய் இருக்கிறது.இதற்கு அரசியல் மற்றும் சமுதாயச் சிக்கல்கள் முக்கிய காரணமாகவும் இருக்கிறது. டாக்டர் அம்பேத்கர் இல்லாமல் சாதியை பற்றி பேசி கடந்து விட முடியாது. டாக்டர் அம்பேத்கர் தனது சாதிய ஆய்வுக் கட்டுரையில் இவ்வாறாக கூறியுள்ளார்.

 “சாதிச் சிக்கல் ஒரு வட்டாரச் சிக்கல். ஆயினும், மிகப் பரந்தளவில் தீங்கு விளைவிக்கும் வல்லமை கொண்டது. ஏனெனில், இந்தியாவில் சாதிமுறை உள்ளவரை, இந்துக்கள் கலப்புமணம் செய்ய மாட்டார்கள். அன்னியருடன் சமூக உறவு கொள்ள மாட்டார்கள். இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்குச் சென்றால் இந்தியச் சாதி உலகளாவியதொரு சிக்கலாக உருக்கொள்ளும்”

தற்போதைய தீண்டாமைச் சுவர், ஆணவப் படுக்கொலை, சாதி கலவரங்களும் இதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்கிறது.

பெரும் அச்சத்தை விளைவிக்கும் சாதி ஒரு குழப்பமான முடிவு நிலையை தீர்க்கமாக விரிக்க முடியாத ஒன்றாக விளங்குகிறது.

தொடக்ககால மார்க்சியர்கள், இந்தியாவில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வு குறித்து, ‘அவை சமுக மேற்கட்டுமானங்கள்,இது பொருளாதார வளர்ச்சியில் மாறிவிடும்’ என்றே கருதினார்கள்.இதையே அம்பேத்கர், ‘சாதியும் வர்க்கமும் அண்டைவீட்டுக்காரர்கள் மாதிரி. மிகச்சிறிய இடைவெளியே சாதியையும் வர்க்கத்தையும் பிரிக்கிறது.
சாதி என்பது தனித்து ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கம்’ என்றார். அதை யாரும் அவர் காலத்தில் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.இப்போதோ அதை சரியானதெனவே பார்க்கப்படுகிறது.

சங்கக்காலத்தில் சாதி:
முதலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்க காலத்தில் இடம்பெற்ற புறநூனூற்றுப் பாடலில் `அடலருந் துப்பின்…..’ எனத் தொடங்கும் பாடலின் (புறம்335) சாதியை பற்றிய வரிகளாக இருக்கிறது.

துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’

இப் பாடல் வரிகளில் புலவர் மாங்குடி கிழார் `துடியன், பாணன், பறையன், கடம்பன்’ என்ற நான்கு குடிகளே சிறந்த குடிகள் என்கின்றார். இப்பாடலில் துடியன், பாணன், பறையன்,கடம்பன் ஆகிய நான்கு சாதிகளுமே ஆண்ட சாதிகளாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளது.

அப்படியே மாறாக 2000 ஆண்டுகளுக்கு முன்னாக வெளிவந்த ‘அலை ஓசை’ (1985)
படத்தில் “போராடடா ஒரு வாளேந்தடா, வேங்கைகளும் இனித்  தூங்காதடா…”
என்ற பாடலின் வரிகள் பள்ளு, பறையென்று சொல்வதே கீழானதாக, தாழ்ச்சியானதாக கருதுவதே மடமையானது என்றும் பாடப்பட்டுள்ளது.ஈழத்தமிழர் பிரச்சினை மற்றும் பரியேறும் பெருமாள் படத்திலும் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்பட்ட பாடல்.

‘இன்னும் இங்கு பள்ளு பறையென
சொல்லும் மடமைகள் உள்ளதடா
நித்தம் சிறு சேரி சிறகுகள்
வேள்வி விறகென மாறுதடா’

இவையிரண்டுமே முரணுடையதாக இருப்பதால், உண்மையாக இருக்கும் வாய்ப்புகள் குறைவே. உண்மையில் சங்ககாலத்தில் சாதி என்ற சொல்லோ அல்லது அந்தக் கருத்துருவாக்கமோ தமிழர்களிடமில்லை. அவ்வாறாயின் மேற்கூறிய புறநானூற்றுப் பாடல் வரிகள் என்ன? என்ற கேள்வி எழலாம். அப் பாடல் வரியிலேயே அதற்கான பதில் உண்டு. அதுதான் ‘குடி’.  சாதி என்பது குடி-குலம் என்பதிலிருந்து வேறுபட்டது.

தமிழ் மரபில் சாதிகள் இல்லை என்பதற்கான சான்றுகள்:

“தமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா?” என்ற கேள்விக்கான பதில் சாதி என்ற சொல்லிலேயே உண்டு, அதாவது சாதி என்ற சொல்லே தமிழல்ல. அது ஜாதி என்ற வடசொல்லின் கிரந்தம் நீக்கிய வடிவமே (ஜாதகம்- சாதகம் போன்றவை).

ஜா என்பது ஜனனம் (பிறத்தல்) என்பதுடன் தொடர்புடையது. ஜாதி/ சாதி என்ற சொல் தமிழல்ல என்பது மட்டுமல்ல, அதற்கு இணையான தமிழ்ச்சொல் வேறு எதுவும் கூட வழக்கில் இல்லை.குலம், குடி போன்ற தமிழ்ச்சொற்களின் பொருள்தான் என்ன?

சங்க கால குறுந்தொகை பாடல் பிரபலமான பல படங்களில் இடம்பெற்ற பாடலை உற்று கவனித்தால்,தமிழர்களிடையே புறமணமுறை காணப்பட்டதனை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. புறமணம் உள்ள ஒரு சமூகத்தில் சாதியமைப்பு இருப்பதற்கான சாத்தியமேயில்லை.

“யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே”

குறிப்பு :
குறுந்தொகை 167
கலித்தொகை 107

இனங்களை கடந்த காதல் திருமணங்கள் அந்த காலந்தொட்டே நடத்து வருவதற்கான சான்றுகளாக விளங்குகிறது.

சாதிக்கும் குடிக்கும் உள்ள வேறுபாடுகளை தெளிவோடு அணுக வேண்டும். தமிழர்களிடம் சங்ககாலத்தில் காணப்பட்ட குலக்குழுக்கள் (tribes), குடிகள் என்பவற்றைச் சாதியுடன் போட்டுக் குழம்பத்தேவையில்லை, ஏனெனில் அவை உலகெங்கும் பழங்குடி மக்களிடையே காணப்பட்ட பிரிவுகள் போன்றனவையே. அவற்றில் அகமணம், பிறப்பிலடிப்படையிலான தொழில் கட்டாயம் என்பனவில்லை. இதுவே சாதிக்கும்-குடிக்குமுள்ள வேறுபாடாகும்.

சாதி ஒழிப்பு :

1.சுய சாதிப் பற்றை விட்டொழித்தல் வேண்டும் .தாழ்த்தும் சாதியினரோ அல்லது தாழ்த்தப்படும் சாதியினரோ தமது சாதிப் பற்றினை விட்டொழிக்கவேண்டும்.

2.சாதிமுறையினை வலியுறுத்தும் எந்த மதக்கோட்பாட்டையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

3.பிறப்பிலடிப்படையிலான தொழில் செய்வதனை முடியுமானவரைத் தவிர்த்து, எத் தொழில் விருப்பமானதோ/ எதில் திறமையுள்ளதோ, அதனையே செய்ய வேண்டும்.இதற்கு கல்வியும் பகுத்தறிவும் அவசியமாகிறது.

  1. புறமணமுறை(சாதி மறுப்பு) ஊக்குவிக்கப்படவேண்டும். அதாவது சொந்தச் சாதி பார்த்து திருமணங்கள் செய்வதனைத் தவிர்க்கவேண்டும். இப் புறமணமுறையானது ஈழப்போரின் போது, விடுதலைப் புலிப் போராளிகளிடையே பெருமளவிற்கு கடைப்பிடிக்கப்பட்டு, அப்போது சாதியானது போராளிகள் மட்டத்திலாவது பெருமளவிற்கு ஒழிக்கப்பட்டிருந்தது. எனவே புறமணமுறையே சாதி முறைக்கான இறுதியாக அமையும்.
  2. சாதி மறுப்புத் திருமணம் செய்யும் தம்பதிகள் இருவரும் சாதியற்றவர்களாக தாங்களையும் தங்கள் வாரிசுகளையும் அடையாளப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

“இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டத்தையும், சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்துப் பார்த்தவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளே.”

தொடர் புரட்சியும் போராட்டங்களுமே சாதிய கொடுமைகளுக்கான தீர்வை தருமென்பதில் எந்த ஐயப்பாடுமில்லை.

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here