தி.மு.க வுக்கு ஒரு சாமானியனின் திறந்த மடல்.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி போட்டியிட்ட 38 தொகுதிகளையும் வென்று விட்டது. சட்டமன்ற தேர்தலிலும் 13 இடங்களில் வென்று தன் எண்ணிக்கையை உயர்த்தி கொண்டது.தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனாலும் ஆட்சியமைவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லாமல் இல்லை.அதுவும் குதிரை பேரங்கள் நடத்தினால்தான் சாத்தியம்.

ஆனால் தனிப்பட்ட முறையில் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தாலும் மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்துவிட்டதால் வெற்றி பெற்றும் பயனேதுமில்லை என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள். பயனேதுமில்லை என்றால் காங்கிரஸ் ஆட்சியோ அல்லது மூன்றாம் அணி ஆட்சியோ அமைந்திருந்தால் பணம் கொழிக்கும் அமைச்சர் பதவிகளை வாங்கி அடுத்த ஐந்து வருடம் பெரும் பணம் ஈட்டுவதென்பது தற்போது முடியாது என்பதால் பயனேதுமில்லையா? அல்லது ஜெயலலிதாவின் 37 எம்.பி கள் போல பயனேதுமில்லையா?

தி.மு.க இவற்றிற்கு என்ன பதில் சொல்லப்போகிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, என் போன்ற பலருக்கும் அந்த சந்தேகம் எழுந்திருக்கிறது.அமைச்சர் பதவிகளும் ,அதிகாரத்தில் பங்கும் இல்லாமல் தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

தி.மு.க , அ.தி.மு.க வை போல இல்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை பயன்படுத்த தெரிந்த கட்சி,நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு பெற்றவர்கள் பண்பட்டவர்கள் ,திறமையானவர்கள் ,துணிந்து குரல் கொடுப்பார்கள் , வைகோ,முரசொலி மாறன்,திருச்சி சிவா இன்னும் பல வித்தகர்கள் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்ததில்லையா? என்று பல சமாளிப்புகள் வந்தாலும் 1999- 2014 வரை மத்திய அரசில் அங்கம் வகித்து பல அமைச்சர் பதவிகளை வகித்து நீங்கள் நடத்திய நாடாளுமன்ற ஜனநாயகம்தான் பின்வந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் நீங்கள் தொடர் தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்திருக்கிறது.

குடும்ப ஆட்சி ,அராஜக ஆட்சி என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டாலும் 2G ஊழல் உங்கள் கட்சிக்கு ஏற்படுத்திய அவப்பெயரை இன்றளவிற்கும் உங்களால் போக்க முடியவில்லை.அது உங்களுடைய நாடாளுமன்ற ஜனநாயகத்தை நீங்கள் பயனுள்ள வகையில் நடத்தியபோது நிகழ்ந்த விளைவு.

பிரதமர்,அமைச்சர் பதவிகளை விட பொறுப்பான பதவி எதிர்கட்சிகளுக்கு உண்டு. சரியான கொள்கையை வகுக்கும்படி செய்யவும், தவறான கொள்கைகளை எதிர்த்து நிற்கவும் பொறுப்பான எதிர்நிலைதானே உண்மையில் ஜனநாயகத்தை காப்பதற்கான கடமை கொண்டது! இந்த செயல்பாடுகள்தானே ஆளும்கட்சியின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லும்.தவறான ஆட்சியை அம்பலப்படுத்தும்.அப்படித்தானே தமிழகத்தில் பா.ஜ.க- அ.தி.மு.க கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது.

மக்களின் பிரதிநிதிகளாக செல்பவர்கள் மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரிய தீர்வினை எட்டுவதை நோக்கமாக செயல்படுவதை விடுத்து தான் ஆட்சியில் ,அதிகாரத்தில் இருந்தால்தான் ஏதும் செய்ய முடியும் என்றால் ? இன்றைய நிலையால் பயனேதுமில்லை என்றால்? வெற்றி பெற்ற எம்.பி க்களை எல்லாம் பதவி விலக சொல்ல வேண்டும்.பயனேதுமில்லை என்று நீங்கள்  வெளிப்படையாக சொல்லப்போவதில்லை. ஆனால் இதுவரை செய்யாததை இனிமேல் என்ன செய்து விடப்போகிறீர்கள் என்றுதான் நாங்கள் யோசிக்கிறோம்.

நாடாளுமன்றத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருந்த போது கூட அறிஞர் அண்ணா அவர்கள் தன் பேச்சினால்  நாடாளுமன்றத்தையே உலுக்கினார் என்று இன்றும் பெருமையாக பேசும் கழகம் , இன்றைக்கு கிடைத்திருக்கும் இந்த 23 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு  இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்க முடியும்.பா.ஜ.க வின் எண்ணிக்கையையும் தாண்டி அதனை கிடுகிடுக்க வைக்க முடியும்.பா.ஜ.க வின் மக்கள் விரோத திட்டங்களை மக்களின் முன் அம்பலப்படுத்த முடியும்.தமிழக மக்களை நோக்கி அவர்கள் போடும் நாசகார திட்டங்களை முறியடிக்க முடியும். மொத்தத்தில் இன்றைய தலைமுறைக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எல்லைகளை, ஆற்றல்களை கற்பிக்க முடியும்.
உங்கள் கூட்டணி எம்.பி கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் ஓயாமல் வலம் வந்து மக்கள் பிரச்சனைகளை விரைந்து தீர்ப்பதற்கும்,பிரச்சனைகளை உடனடியாக நாடாளுமன்றத்திலே முன்வைத்து உரிய தீர்வு காண்பதற்கும் ,மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக  கட்சியினரை திரட்டி போராடுவதற்கும் முன்வந்தால் இந்த மக்கள் தங்களுக்கு வாக்களித்ததற்கு அர்த்தம் இருக்கும்.

ஆனால் இவைகளெல்லாம் உங்கள் திட்டத்தில் இருக்கிறதா என்பது எங்களுக்கு தெரியாது.

இன்றும் மக்கள் உங்களுக்கு வாக்களித்திருப்பது பா.ஜ.க வந்துவிடக்கூடாது என்பதால்தானே தவிர தி.மு.க சிறந்த கட்சி என்பதால் அல்ல.சட்டமன்ற தேர்தலில் நீங்கள் 22  தொகுதிகளிலும்  வென்றிருந்தால் ஒருவேளை மக்கள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை கொள்ளலாம்.இப்போது அதற்கும் வாய்ப்பில்லை.

இத்தகைய கடுமையான சூழலிலும் கூட பொறுப்பான எதிர்கட்சியாக செயல்பட உங்களுக்கு வாய்ப்பும் பலமும் இருக்கிறது.அதை நீங்கள் உரிய முறையில் செயல்படுத்துவீர்களா? என்ற ஐயமும் இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் உங்கள் கட்சியையும் ,கூட்டணி கட்சிகளையும் தங்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்துள்ளார்கள்.தமிழ்நாட்டு மக்களின்  குரலாக ஒலித்து நமது உரிமைகளை மீட்பீர் என்று நம்புகின்றனர்.இந்த முறையும் நீங்கள் மக்களை ஏமாற்ற துணிவீர்களானால் அது தி.மு.க வின் எழுதப்படும் முடிவுரையாக அமைந்துவிடும்.

ஆதலால் பதவிகளும் ,பொறுப்புகளும் பெற்று வாழ்வாந்து வாழ்ந்த காலங்கள் உண்டு,மாநாடுகள் நடத்தி உவகை கொண்ட நாட்களும் உண்டு இப்போது மக்களுக்கு பணியாற்ற ,மக்களோடு மக்களாக நிற்க கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள், ஜனநாயகத்தை காப்பாற்றி மக்கள் வாழ்வை செழிப்படைய செய்யுங்கள்.

அபராஜிதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here