தாய்மொழியை மீட்டெடுத்த மணிப்பூர் மக்கள் – இளந்திரையன்.

இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் மாநிலம் மணிப்பூர். பொதுவாக இந்தியாவின் ஒரு மாநிலமாக அவர்கள் தங்களை கருதிக்கொள்வது இல்லை. இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் கூட நேரு மணிப்பூருக்கு செல்ல கடவுச்சீட்டு வாங்க நேர்ந்தது. இந்தியா பல மாநிலங்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக இணைத்தது போல் மணிப்பூர் மன்னரையும் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து இணைப்பு ஒப்பந்தத்தை எழுதி வாங்கினர். அதனால் இன்றளவும் மணிப்பூர் மக்கள் தங்களை இந்தியர்கள் என்று ஓத்துக்கொள்வதில்லை.

வடகிழக்கு முழுவதும் பல்வேறு சமவெளி மற்றும் மலைவாழ் பழங்குடியினர் தங்கள் சொந்த மொழியினை கொண்டிருந்தாலும் ஆங்கிலேயர்கள் வடகிழக்கை கைப்பற்றி தங்கள் ஆட்சியை செலுத்த வங்காளிகளையே பயன்படுத்தினர். அதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதாரம், அரசியல், மொழி, பண்பாடு ஆகியவற்றில் இன்றளவும் வங்காள மொழி கணிசமான ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மணிப்பூரை பற்றி இப்போது ஏன் எழுத வேண்டியிருக்கிறதென்றால் மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாட்டிற்கும் மணிப்பூருக்கும் மிகுந்த ஒற்றுமை இருக்கிறது. தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் இந்தியை திணிக்க முயல்கிறார்கள் என்றால் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் வங்காள மொழியின் ஆதிக்கம் நிறுவப்பட்டிருக்கிறது. அதுவும் மணிப்பூருக்கு அதன் சொந்த மொழியான ‘மெய்தேய்’ மொழி இருந்தாலும் அது அகற்றப்பட்டு அதனிடத்தில் வங்காள மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக எழுத்து வடிவத்தில் வங்காள மொழியின் எழுத்து வடிவமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

இது போன்று நீண்ட, தொடர்ச்சியான பூர்வீக வரலாற்றை கொண்ட தங்களது மொழி அகற்றப்பட்டு அதனிடத்தில் வங்காள மொழி வைக்கப்பட்டிருந்ததை தங்கள் மீதான அடக்குமுறையின் ஒரு வடிவமாகவே மணிப்பூர் மக்கள் பார்த்து வந்தனர்.

இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைத்ததிலிருந்து தங்கள் உரிமைகளை மீட்க தொடர்ந்து போராடி வரும் மணிப்பூர், மொழி விடயத்திலும் அதே உறுதியை பின்பற்றியதன் காரணமாக ‘மெய்தேய்’ மொழியை மீட்க வேண்டும் என்ற உணர்வும், கோரிக்கையும் வலுப்பெற துவங்கியது. அதே சமயத்தில் மொழி வல்லுநர்கள் தங்களது வரலாற்றுப்பூர்வமான மொழியின் பூர்வீகங்களை பல்வேறு ஆய்வுகள் நடத்தியதன் மூலம் மீட்டெடுத்து, இன்றைய நவீன பயன்பாட்டிற்கேற்ப ‘மெய்தேய்’ மொழியினை கட்டமைத்தனர். அதன் விளைவாக 1980- வாக்கில் அதன் சட்டமன்றம் வங்காள மொழியை சட்டப்பூர்வமாக அகற்றி மணிப்பூரின் ‘ மெய்தேய்’ மொழியை மாநிலத்தின் அதிகாரப்பூர்வ அலுவல், பயிற்றுவித்தல், பயன்பாட்டு மொழியாக அறிவித்தது. இன்று அரசு அலுவலகங்களில் ‘மெய்தேய்’ மொழியே அதிகாரபூர்வ அலுவல் மொழியாக உள்ளது. பல்கலைக்கழகங்கள், பள்ளிகளில் ‘மெய்தேய்’ மொழியே பயிற்றுவிப்பு மொழியாக உள்ளது.

கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட நிலையிலிருந்து இன்று அதிகாரப்பூர்வ மொழியாக மாறியிருக்கிறதென்றால் மணிப்பூர் மக்களின் சுதந்திர உணர்வும், மொழி உணர்வும், போராட்ட குணமும்தான் அதனை சாதித்திருக்கிறது.

இந்தியாவில் சமஸ்கிருத, இந்தி மொழி, மொழி திணிப்பு ஆதிக்க மரபிற்கெதிராக போராடி வரும் மாநிலங்களில் தமிழ்நாடு போன்றே மணிப்பூருக்கும் முக்கிய இடமுண்டு.மணிப்பூர் முழுவதும் இந்தி மொழியை நாம் எங்கும் பார்க்க முடியாது. இந்தி திரைப்படங்களை கூட அங்கு திரையிட முடியாது. இந்தி மொழியினை இந்திய அரசின் ஆதிக்க குறியீடாக பார்க்கும் அவர்கள் அது எவ்வகையிலும் நுழைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.

சிறிய மாநிலமாக இருப்பினும் அவர்கள் இந்தியா முழுமைக்கும் உள்ள மற்ற மாநிலங்களுக்கு ஓரு பாடத்தை உணர்த்துகிறார்கள். அது ‘சுதந்திர காற்றை அடிமைகள் சுவாசிக்க இயலாது’ என்பதாகும்.

புதிய கல்விக்கொள்கை, தேசிய பணியாளர் தேர்வு முகமை, தேசிய தேர்வு முகமை போன்றவற்றால் இந்தி மொழியை புகுத்த நடவடிக்கை எடுத்திருக்கும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் ஆதிக்க கொள்கைகளை எதிர்ப்பதற்கு நாம், இந்திய முழுமைக்கும் நம்மை போன்று ஒத்த சிந்தனை உள்ள மாநிலங்களை ஒரு இணைப்பிற்குள் கொண்டு வருவது மிகவும் முக்கியமானதாகும்.