தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு அறைகூவல்.

வணக்கம் ,
இன்றைக்கு கொரோனா,கோவிட்-19 தொற்றானது உலகையே கடும் பாதிப்பிற்குள்ளாக்கியிருக்கிறது.ஜனவரி மாத துவக்கத்திலேயே சீனாவில் துவங்கிய இந்த வைரஸ்தொற்று மிகவேகமாக பரவி இன்று நம் தமிழ்நாட்டையும் பாதிப்பிற்குள்ளாக்கி இருக்கிறது.
மார்ச் -22 அன்று ஒருநாள் ஊரடங்கும் ,இரண்டு நாள் கழித்து ஏப்ரல்- 14 வரை ஊரடங்கு என்றும் மத்திய அரசு அறிவித்தது.

தமிழ்நாடு ஓரு பேரிடரை சந்தித்திருக்கும் சூழலில் இந்தப்பிரச்சனையை ஒட்டுமொத்த சமுகமும் முழுமையாக புரிந்துகொள்வதன் மூலம் மட்டுமே இதனை நாம் பாதுகாப்பாக எதிர்கொள்ள முடியும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இதுவரை தமிழ்நாடு சந்திக்காத வகையில் கடுமையான ஊரடங்கு சட்டம் , காவல்துறை கெடுபிடிகள், சுகாதாரத்துறையின் அன்றாட அறிவிப்புக்கள் மருத்துவமனைகளில் வசதிகள் போதாமை,உணவு பொருட்களின் பற்றாக்குறை குறித்த சந்தேகங்கள் ,வைரஸ்தொற்றை போக்கமுடியும் என்பதை பற்றிய அதிகாரபூர்வமற்ற புரளிகள் ,வைரஸ்தொற்றிற்கு மதச்சாயம் அளித்து பொதுமக்களிடையே பிளவையும்,பகைமையையும் ஏற்படுத்துவது போன்றவை மக்களை பாதித்திருப்பதும்,எல்லாவற்றிற்கும் மேலாக வைரஸ்தொற்றை குறித்த பீதி சாமானிய மக்களிடையே பரவி வேரூன்றி நிற்பதையும் காணமுடிகிறது.

இந்த பேரிடர் சூழலில் நாம் மக்களை கேட்டுக்கொள்வது…

இந்த நெருக்கடியான சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன, செய்ய கூடாதது என்ன என்பதை பற்றி தெளிந்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.
சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அரிசி,மளிகை பொருட்கள், காய்,கனிகள் அத்தியாவசிய்பொருட்கள் வாங்க செல்லுமிடத்தில் கட்டாயம் முகக்கவசம்,கையுறை அணிந்து செல்வது தேவையானது.

போதுமான பொருட்களை கையிருப்பு வைக்கும் அதேவேளையில் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்தவும் வேண்டும்.

ஊர்களில், தெருக்களில் விலகியிருந்து மனதால் இணைந்திருப்போம்.
உதவி வேண்டுவோருக்கு உடனே உதவிடுவோம்.

நமது தெருவில் உள்ள இளைஞர்கள்,மாணவர்களை கொண்ட குழுவினை ஏற்படுத்தி வீடுதோறும் தொற்று பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை மக்களை பின்பற்ற வைப்போம்.

நமது தெருவில் இருக்கும் முதியவர்கள்,மாற்றுத்திறனாளிகள்,ஏழை மக்கள்,கூலித்தொழிலாளர்கள்(வடமாநிலத்தொழிலாளர்கள் உட்பட),இச்சூழலால் வாடும் அனைவருக்கும் போதிய உதவிகள் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவோம்.

நமது தெருவிற்கு வரும் சுகாதாரப்பணியாளர்களுக்கு முழுஒத்துழைப்பு வழங்குவதை உத்தரவாதப்படுத்துவோம்.மக்கள் நிலைமைகளை சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவோம்.

நமது தெருவின் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஓத்துழைப்பும்,உதவியும் செய்வோம்.

வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அடைந்துகிடக்கும் சூழலால் மன அழுத்தம் ஏற்பட்டு அவதிப்படுபவர்களை கண்டறிந்து தேவையான உளநல, உதவிகளையும் வழங்குவோம்.

கொரோனா வைரஸ் தொற்றினை பற்றிய தவறான செய்திகளாலும்,வெளிநாடுகளில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்த செய்திகளாலும் மக்களிடையே இந்ததொற்றை பற்றிய பீதி நிலவி வருகிறது. மக்கள் பீதியடைய எந்த அவசியமுமில்லை.இந்த தொற்று சமாளிக்கக்கூடியதே.கவனக்குறைவாக இருந்து அதிகமாக தொற்று பரவிவிட்டால் சிகிட்சை அளிக்க நமது மருத்துவ வசதிகள் பற்றாக்குறை ஆகிவிடும் என்பதுதான் மிகப்பெரிய சிக்கலே தவிர, இந்த நோய்க்கு மருந்து கிடையாது என்பதல்ல. அதனால் தேவையில்லாமல் பீதி்அடைவதையும், அதுபோன்ற செய்திகளை பரப்புவதையும் தவிர்ப்போம்.

சீனர்களை போன்ற முகத்தோற்றம் கொண்ட வடகிழக்கு மக்களை இழிவாக பேசுவது,புறக்கணிப்பது ,இசுலாமியர்களால்தான் தொற்று பரவியது என்பதை நம்பி அவர்களை புறக்கணிப்பது,நிந்திப்பது போன்ற மனிதநேயமற்ற,ஆதாரமற்ற செய்கையை தவிர்ப்போம். அவ்வாறு செய்பவர்களை,தகவல் பரப்புபவர்களை பற்றி அரசிற்கு உடனடியாக புகார் செய்வோம்.

சுகாதாரத்துறை, வழங்கல்துறை ,காவல்துறை மற்ற அரசுத்துறையினரின் பணிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுவதை தவிர்ப்போம்.

மக்களே ,
நாம் இப்போது விலகி இருப்பது நமது பாதுகாப்பிற்காகத்தானே தவிர மனரீதியாக மனிதன்,மனிதனிடமிருந்து விலகி நிற்பதற்கான விலகல் அல்ல.நாம் அனைவரும் ஒன்றே என்பதைஇந்த கொரோனா தொற்று நமக்கு உணர்த்தியிருக்கிறது.அதனை எதிர்த்து நின்று வெல்வது என்பது நமது விழிப்புணர்விலும், ஒற்றுமையிலும் இருக்கிறது. அரிதினும்,அரிதாக இந்தச்சூழல் நமக்கு வழங்கியிருக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி நமது குடும்பத்தையும், சமுகத்தையும் அதற்கிடையிலான தொடர்புகளை பற்றியும் புரிந்துக்கொள்ள முயற்சிப்போம்.நெருக்கடிகளிலிருந்து மீண்டு புதிய சமூகத்தை படைப்பதற்கான போராட்டத்தை இணைந்து நின்று முன்னெடுப்போம்.

நன்றி.

இவண்,
மாணவர் இளைஞர் சமுக இயக்கம்.

குறிப்பு:
இந்த மடலை காணும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுடைய பெயரையும் இணைத்தோ அல்லது தங்களது பெயரிலோ இந்த அறைகூவலை மக்களிடையே கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here