போராட்ட குணம் கொண்ட தமிழர்களை பற்றி- சொ.சங்கரபாண்டி.

பெருவாரியான தமிழர்கள் நடுத்தரவர்க்கக் குணம் கொண்டவர்கள். தானுண்டு, தன் வாழ்க்கைத் தேவைகளுக்காக உழைப்பது, தம் குடும்பத்தினரின் பொருளாதார முன்னேற்றத்தில் மட்டுமே கவனமாயிருப்பது, பொழுதுபோக்குகள், கொண்டாட்டங்கள் என்று தன்னைச்சுற்றிய ஒரு சிறு வட்டத்துக்குள்ளே இயங்குவது. மேலோட்டமாக பிரபலமான ஆங்கிலச் செய்தித்தாள்களும், தொலைகாட்சிகளும் அளிக்கும் உலகம்தான் உண்மையென்று முடித்துக்கொள்வது. தமிழர்களின் தேர்தல் அரசியலை தங்கள் வாக்குகள் மூலம் நிர்ணயம் செய்யும் இத்தகைய பெருவாரியான தமிழர்களைப் பற்றி இங்கு பேசவில்லை. நான் இங்கு சொல்ல வருவது தமிழர்களில் சிறுபான்மையினரான போராட்ட குணம் கொண்ட தமிழர்களைப் பற்றியது.

காலங்காலமாக தமிழ்மொழி, தமிழ் அடையாளம் போன்றவற்றில் ஆழமான பற்றுதலுடைய கணிசமான தமிழர்கள் எப்பொழுதுமே தன்னலமில்லாமல் இயங்கி வந்துகொண்டிருக்கின்றனர். ஆயுள் முழுக்க தம்முடைய நேரத்தையும், பொருளையும், உழைப்பையும் செலவழித்து தத்தம் குடும்பநலன்களைக் கூட தியாகம் செய்துவருகிறார்கள். தமிழர்களின் பிரச்னைகள் மக்களிடையை தொடர்ந்து பேசப்பட்டு வருவது இவர்களால்தான். ஆனால் இவர்களால் எந்த இலக்கையும் வெற்றிகொள்ள முடியாமல் இருக்கிறதென்றால் அதற்குத் தடையாக இருப்பது பின்வரும் அவர்களது அடிப்படைக் குணங்கள்தான். சிலவற்றைப் பட்டியலிட முயல்கிறேன்.

 1. தம் கொள்கையுடன் உடன்படுபவர்களிடம் முதலில் உயிராய்ப் பழகுவதும், இணைந்து அமைப்புகளை ஏற்படுத்துவதும். அவர்களே சில இடங்களில் முரண்பட்டாலோ அல்லது தன்னைவிடப் புகழடைந்து விடுவார்கள் என்ற அச்சம் வந்தாலோ அவர்களைப் பிரிவதும், அவமானப் படுத்துவதும் வழக்கம்.
 2. ஒர் அமைப்பு என்று இணைந்து செயல்படும் பொழுது, அமைப்பின் பெயரைப் பலப்படுத்துவதற்குப் பதிலாகத் தன்னை முன்னிலைப்படுத்துவது, தானே எல்லாவற்றையும் சாதித்ததாக விளம்பரப்படுத்துவது, அதன் தொடர்ச்சியாக போட்டி, பொறாமை, பதவிச்சண்டைகள் உருவாகக் காரணமாயிருப்பது.
 3. கொள்கையளவில் ஒற்றுமை இருந்தாலும் யதார்த்தத்தில் செயல்படுவதில்/படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் சில கருத்துமாறுபாடுகள் இருக்கலாம் என்பதை அங்கீகரிக்கிற அடிப்படை ஜனநாயகப் போக்கு இல்லாதது.
 4. மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியான பண்புகள்/ஒழுக்கங்கள்/நடத்தைகள் கொண்டவர்கள் என்பதைக்கூட புரிந்துகொள்ளாமல் தன் கூட இருப்பவர்களையே சந்தேகிப்பது, அவர்கள் இயல்பாய்ச் செய்யும் மிகச்சிறு தவறுகளைக்கூட பூதக்கண்ணாடி போட்டு ஆராய்ந்து தமக்கெதிரான நகர்வுகளாக கற்பனை செய்வது.
 5. அமைப்புகளுக்குள் விரிசல்கள் ஏற்படும்பொழுது எப்படியும் தொலைகிறார்களென அவற்றிலிருந்து அமைதியாக விலகி ஒதுங்குவது கிடையாது. ஒருவருக்கொருவர் வீணாக சேற்றை அள்ளி எறிந்துகொள்வதை விடுத்து புதிதாக ஒரு அமைப்பில் சேர்ந்தோ, அல்லது புதிதாக ஓர் அமைப்பை உருவாக்கிச் செயல்படுவதோ கிடையாது.
 6. அமைப்புகளுக்குள் பிளவுகள் ஏற்படும்பொழுது தமக்கிடையே முன்பு நடந்த தனிப்பட்ட உறவுகளையும்/உரையாடல்களையும் கூட வெளியே அம்பலப்படுத்தி ஒருவரையொருவர் மேலும் காயப்படுத்திக்கொள்வது. அவர்கள் மேலுள்ள கோபத்தில் சமயங்களில் எதிரிகளுடன் கூட சமரசம் செய்வது. இவையே ஆயுதம் தாங்கிய அமைப்புகளென்றால் ஒருவரையொருவர் வெட்டி/சுட்டுச்சாய்ப்பதில் போய் முடிவது.

இவை தொடர்ந்து தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு அரசியல்/பண்பாட்டு/தொண்டு அமைப்புகளுக்குள் நடந்து வருகின்றன. இவற்றில் இயங்கி வரும் அனைவரும் பல்வேறு திசைகளில் பிளவுபட்டுக் கிடந்தாலும் கொள்கையில் உறுதியானவர்கள்தான். உண்மையிலேயே தம் வாழ்க்கையைத் தியாகம் செய்தாலும் கூட பிளவுபட்டுக் கிடப்பதால்
மிகப்பரிதாபத்துக்குரியவர்கள். இவர்களெல்லாம் தம் வாழ்க்கையை பின்நோக்கிப் பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஒருவேளை தம் வாழ்க்கையின் இறுதியில் விமர்சனமாகப் பார்த்தார்களென்றால் தாம் எப்படி தவறிழைத்திருக்கிறோமென்று புரிந்துகொள்வார்களோ என்னவோ?

இவர்களைப் பிளவுபடுத்துவது தமிழர்களுக்கெதிரான உளவு அமைப்புகளுக்கு மிக எளிது. இந்திய-இலங்கை-அமெரிக்க உளவு அமைப்புகள் இவற்றைச் செய்து வருகின்றன.

2009 முள்ளிவாய்க்கால் அவலம் தமிழகத்தில் புதிய தலைமுறை தமிழ் இளைஞர்களிடம் ஒர் எழுச்சியை ஏற்படுத்தியது உண்மை. அது தமிழ்நாட்டில் புதிய பாதையை உருவாக்கிவிடக்கூடாதென்பதில் இந்திய-இலங்கை உளவு நிறுவனங்கள் மும்முரமாகச் செயல்பட்டு முழுவெற்றியை அடைந்துள்ளன. இந்தப்பின்னணியில்தான் பின்வரும் நிகழ்வுகளை நான் பொருத்திப் பார்க்கிறேன்.

 1. தமிழர்களின் உரிமைகளில் எந்தவிதக் கருத்துமாறுபாடில்லாமல் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஓர்குடையின் கீழ் செயல்பட்டு வரும் திராவிடக்கருத்தியல் கொண்டவர்களையும், தமிழ்தேசிய உணர்வாளர்களையும் பிளவுபடுத்தியது.
 2. பெரியார் திராவிடர் கழகம் உடைக்கப்பட்டது.
 3. நெடுமாறன், சுபவீ, தமிழருவி மணியன், தியாகு, கஸ்பர் ராஜ் போன்ற கட்சிசாரா ஒருங்கிணைக்கும் நபர்களெல்லாம் ஒருவரையொருவர் முகம்பாரா அளவுக்குச் சிதறுண்டு போனது.
 4. மாணவர்களின் அமைப்புகள் உடைக்கப்பட்டு போராட்டங்களை கைவிடச்செய்தது.
 5. இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்குள்ளே ஈழஉரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாய் இயங்கியவர்களைப் பிளவுபடுத்தியது.
 6. சாதியப் பிளவுகளை பெரிதாக்கிக் கலவரங்களை உருவாக்கி, தமிழ்தேசிய உதிரிகளின் சாதியச் சார்பு முன்னெடுக்கப்பட்டது.
 7. தற்போது மே 17 உடைக்கப்பட்டு உலக அளவில் ஈழவிடுதலைக்கு பல்வேறு ஜனநாயக நகர்வுகளைச் செய்தவர்களின் தனிப்பட்ட மடல்களை வெளிப்படுத்தி அவர்களைச் சங்கடத்துக்குள்ளாக்கியது .

ஈழத்தில் நடந்து வருபனவற்றையும் தொடர்ந்து அவதானித்து வருகிறேன். அந்நியனான நான் அவற்றைப் பற்றி எழுதத் தகுதியற்றவன். ஆனால் அங்கு இந்திய-இலங்கை உளவு அமைப்புகளோடு அமெரிக்க உளவு அமைப்பும் செயல்பட்டு வருகிறதென்று மட்டும் சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.

ஈறாயிரம் ஆண்டுகள் வேண்டுமானால் மூவாயிரம் ஆண்டுகளாகலாம். தமிழர்களின் பிரச்னைகளுக்கு எப்பொழுதுதான் விடிவோ?