தடுமாறுகிறதா தமிழக அரசு? – அஸ்வினி கலைச்செல்வன்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் மற்றும் பரவல் காரணமாக தமிழக அரசு பலகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகள் இந்தசூழ்நிலையை சமாளிக்க போதுமானதாக இல்லை என்பதை காணமுடிகிறது.

ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸ் நோயின் தன்மை ,அதன் வீரியம் ,பரவல் மற்றும் வாழ்காலம் பற்றியே யூகிக்க முடியாத நிலையில் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக பிரதமர் மோடி நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை நீடிக்கும் முதற்கட்ட அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் வெளிநாட்டு மக்கள் வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்திலிருந்து தொழில் காரணமாக சென்றவர்கள் என பல தரப்பட்ட பொது மக்கள் ஆங்காங்கே சிக்கி கொண்ட நிலையில் பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. நடைப்பயணமாக குழந்தைகள் வயதானோர் உள்ளிட்ட பலரும் வீதிகளில் நடந்து சென்ற காட்சிகளும் மாநில எல்லைகளில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் கண்டு நமது மனம் கனத்தது.

இந்நிலையில் நோயின் தீவிரம் மெல்ல வெளிவரத் தொடங்கியது. 15 நாட்கள் வரை வைரஸின் தாக்கம் அமைதியாக இருந்து ,பரவலாக பாதிப்பின் அளவு தெரிய வந்தது. தடுப்பு மருந்துகள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறைகளை சரி செய்யும் வேலைகளில் அரசு கவனத்தை திருப்பியது.இதைத் தொடர்ந்து மே 3ம் தேதி வரை இரண்டாம் கட்டமாக மத்திய அரசு நீடித்து உத்தரவு பிறப்பித்தது.வரும் காலங்களில் மேலும் நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், தொடர்ந்து 40 நாட்கள் வேலையின்றி உணவின்றி தவிக்கும் மக்களின் நிலையை அரசு போதிய அளவு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

தொழில் துறை நிறுவனங்கள் இயங்காத நிலையில் அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு மற்றும் உற்பத்தி தேக்கம் மூலம் அடையும் பொருளாதார சரிவுகளில் பெரு வாரியாக அரசு மட்டுமின்றி பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயர்வுக்கு இவை வித்திடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இதற்கிடையில் சாலை வழியாக செல்லும் வாகனங்களுக்கான சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியை உயர்த்தி மக்களின் தலையில் மேலும் மேலும் பாரத்தை ஏற்றும் அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.இனிவரும் காலங்களில் இது போன்ற பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க முடியாமல் மக்களின் சுமையை கூட்டும் வரி உயர்வை அரசு கைவிட வேண்டும்.

மக்கள் ஊரடங்கு வாழ்காலங்களில் பொருளாதாரத்தை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க திட்டங்களை வகுக்க வேண்டும்.

மாறாக, மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்கள் இல்லை என்று கூறும் மருத்துவர்களை பணி இடமாற்றம் செய்வதை விடுத்து ,கொரோனா வார்டுகளில் பணிப்புரிந்து பாதிக்கப்பட்டு மரித்த மருத்துவர்களின் சடலங்களை எரிக்கவோ புதைக்கவோ அனுமதிக்காத பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு வழங்குவது,கொரோனா வார்டுகளில் பணிப்புரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கும் ,துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு பொருட்கள் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவது மக்களுக்கும் நன்மைப்பயக்கும்.

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here