தமிழக அரசின் இரட்டை வேடம்.- ஸ்டான்லி தனக்குமார்.

அரசின் முன்னறிவிப்பற்ற காலவரையற்ற ஊரடங்கால் உழைக்கும் ஏழை மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக்கூடாது, மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூடாது என உழைக்கும் மக்கள் மீது அறிவிப்பற்ற ஊரடங்கை அமல்படுத்தியது.

மருத்துவ தேவை மற்றும் தவிர்க்கமுடியாத இதர சூழ்நிலைகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல E-PASS வழங்கபடுகிறது.( அதிலும் ஏராளமான குளறுபடிகள்)

இந்த E-PASS இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர்களை, வழியில் உள்ள சோதனைசாவடிகளில் தடுத்து அவர்கள் மீது அபராதம்,பேரிடர் மேலாண்மை, ஊரடங்கு விதிமீறல்,கொரானா நோய்தொற்று பரவ காரணம் என காவல்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்கிறது, வாகன பறிமுதலும் நடக்கிறது.

நடிகர்கள் சூரி மற்றும் விமல் உடன் சில பிரபலங்கள் கொடைக்கானலுக்கு சென்று சொகுசு பங்களாவில் தங்கியுள்ளனர்.

வனத்துறையினரால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பேரிஜம் ஏரியில் இவர்கள் மீன்பிடித்துள்ளனர்.

இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த 7 நபர்கள் அந்த ஏரியில் மீன்பிடித்தற்காக வழக்கு பதியப்பட்டு கைது செய்யபட்டுள்னர்.

இதனால் அந்த ஊர் பொது மக்கள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் காதுகளுக்கு நடிகர்கள் சூரி மற்றும் விமல் மீன்பிடிக்கபட்டது தெரியவர, அவர்கள் விமல் மற்றும் சூரி மீது வழக்கு பதிய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஊரடங்கால் தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் இழந்ததால் அவரவர் தத்தம் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் இல்லாததால், பலர் பல நூறு கிலோ மீட்டர் நடந்தே சென்றனர். அதில் பலர் தங்களின் உயிரையும் விட்டனர்.

பல செக்போஸ்ட்களில் அந்த உழைக்கும் வர்க்கத்தை அவரவர் ஊருக்கு செல்லவிடாமல் திருப்பி அனுப்பியது இந்த மனிதாபிமானம் கொண்ட அரசு.

பலர் மருத்துவ தேவைக்காக வெளியே வந்த பொழுது அவர்கள் மீது வழக்கும் ,அபராதமும்,வாகன பறிமுதலும் நடைபெற்றது.

கடையடைப்பதற்கு சில நிமிடங்கள் (சாத்தான்குள காவல்துறையால் சொல்லபட்டது)தாமதமானதால் சாத்தான் குளத்தில் இரண்டு உயிர்கள் காவல்துறையினரின் அடாவடி ரவுடித்தனத்தால் பலியாகியது.

மருத்துவ தேவைக்காக வெளியே வந்ததால் வாகனத்தை பறிமுதல் செய்யததால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சாலையில் தள்ளுவண்டி கடை போட்டதற்காக பெண்மணி ஒருவரின் தள்ளுவண்டியை கவிழ்த்துவிட்ட அதிகாரி என பல சம்பவங்கள் நமக்கு நினைவுக்கு வருகிறது.

அரசின் அடக்குமுறையும், காவல்துறையின் அடாவடித்தனமும், அதிகாரிகளின் திமிரும்,சட்டத்தின் சமத்துவமும் அனைத்தும் சாமானியன் மீதே பாய்கிறதே தவிர அதிகாரத்தின், பணத்தின் முன் பம்மி நிற்கிறது.

இத்தனை சோதனைசாவடிகள், ஊர் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு காவல்துறையின் தொடர் கண்ணகாணிப்பில் இருக்கின்ற நேரத்தில் சூரி மற்றும் விமல் ,எப்படி கொடைக்கானல் சென்றனர்?.

கொடைக்கானல் சென்றதோடு மட்டுமில்லாமல் பேரிஜம் ஏரியில் எப்படி அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர், பேரிஜம் ஏரிக்கு அருகில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சொகுசுபங்களாவில் எப்படி தங்கினர்?.

சூரி மற்றும் விமலுடன் அங்குள்ள வனத்துறையினர் செல்பி எடுத்தும் அவர்களுக்கு துணையாய் இருந்தது தெரியவர ,மூன்று அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளனர்.
தொடர் வலியுறுத்தல் பேரில் நடிகர்கள் சூரி மற்றும் விமல் மீது நடவடிக்கை எடுக்கபட்டதுடன் அவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.பாவம் இவ்வளவு பெரிய தொகைக்கு அவர்கள் எங்கே போவார்கள்.
நடிகர்களை அழைத்து வந்த உள்ளூர் நபர் மற்றும் அவர்கள் கடந்து வந்த சோதனைசாவடிகளில் பணிபுரிந்த காவல்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மாவட்டம் விட்டு சென்றதற்காக E-PASS எங்கே என தமிழக மக்களால் வலியுறுத்தபட்ட பொழுது அவர் E-PASS காட்டினார் ஆனால் அவர் காட்டிய E-PASS ல் தேதி முன்னுக்குபின் முரணாக முறைகேடுகள் நிகழ்ந்தது அம்பலமாகியுள்ளது.

அதிகாரவர்க்கத்துக்கும், பணத்திற்கும் சலாம் போட்டு ,செல்பி எடுத்து, கையசைத்து வழியனுப்பி வைக்கும் கண்ணியமிக்க காவல்துறை, சாமானிய ஏழை உழைக்கும் மக்கள் மீது மட்டுமே தனது சட்டத்தையையும் , நீதியையும் நிலைநாட்டுகிறது.

பல்வேறு சம்பவங்களில் காவல்துறைக்கு லத்தி உற்ற நண்பனாகி விடுகிறது.
அந்த லத்தியை வைத்து உழைக்கும் மக்கள் மீது ரவுடித்தனத்தை செய்கிறது.கேட்டால் மனஅழுத்தமாம்.

இதுபோன்று சட்டவிரோதமாக செல்லும் பிரபலங்களை காணும் பொழுது அந்த லத்தியும், காவல்துறையினரின் மனஅழுத்தமும் எங்கே செல்கிறது என்று தெரியவில்லை.

மாறாக கையை நீட்டுவதும், கையை ஆட்டுவதும் மட்டுமே குறியாக உள்ளனர்.

அரசே உடனடியாக சட்டவிரோதமான முறையில் சென்று வந்துள்ள சூரி மற்றும் விமல் மீது நடவடிக்கை எடு.
கூடவே E-PASS ல் முறைகேடு செய்த ரஜினிகாந்த் மீதும் நடவடிக்கை எடு.

குறிப்பு- சூரி,விமல் மீது வழக்கு தற்போது பதியப்பட்டுள்ளது.