தமிழகத்தில் அதிகரித்துவரும் காவல்துறை அராஜகம்…அஸ்வினி கலைச்செல்வன்

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தமிழகத்தில் பரவலாக நடந்தேறி வருகிறது.

கோவை ரத்தினபுரியில் இரவு 8 மணிக்குள் தள்ளுவண்டி உணவு கடையை அப்புறப்படுத்த தவறிய பெண்ணை போலீசார் கண்மூடித்தனமாக தண்டனைக்கு உட்படுத்தும் சம்பவம் யாவரும் அறிந்ததே.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தில் பணிக்கு சென்ற மின் ஊழியர்களை தடுத்து காவல்துறையினர் தரக்குறைவாக பேசினார் என்று பொய்வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து வேதனையடைந்த லோகநாதன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறிப்பிடத்தக்கது.

சென்னை அருகே மீஞ்சூரில் கடந்த 18ம் தேதி அரங்கேறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய சம்பவம் இது.ஊரடங்கு காலத்தில் திறந்திருந்த டாஸ்மாக் கடைக்கு சென்ற இளைஞரை,கையில் உருட்டு பைப்புடன் சுற்றி வளைத்து போலீசார் தாக்கினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ். இவர்கள் ஊரடங்கு நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட சிறிது நேரம் கூடுதலாக கடையை திறந்து வைத்திருந்ததாகவும்,தந்தை மற்றும் மகனை விசாரணைக்கு அழைத்து செல்வதாக அழைத்துச் சென்று சித்திரவதை செய்து கொடூரமான முறையில் அடித்து கொன்ற விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து
சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்பு பட்டியலிலும் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 4 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அடக்குமுறையை செயல்படுத்தும் கரமாக காவல்துறை செயல்பட்டு 13 உயிர்களை குடித்தது. அதற்கு எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு அலட்சியம் காட்டி மனித உயிர்களின் மதிப்பையும், உரிமையும் காற்றில் பறக்கவிட்டது. இப்போது அதே காவல்துறையின் கரங்கள் இரண்டு உயிரை குடித்துவிட்டு வந்து நிற்கிறது.இந்த தொடர் நிகழ்வுகள்
காவல்துறை மீதான அச்சத்தையும் வெறுப்புணர்வையும் தருவதாக அமைவதோடு,அரசின் மெத்தனம் மிகவும் கண்டிக்கத்தக்கதாக உள்ளது.

அஸ்வினி கலைச்செல்வன்.