தண்ணீர் அரசியல்- பெருங்களத்தூர் கார்த்திக்.

பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதிக்கும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திற்கும் இடையே உள்ள காலத்தில் நீராதாரத்தை பற்றி சிறிது பேசுவோம். 1970 ஆண்டுகளில் திருமணத்திற்கு செல்ல மாட்டு வண்டியில் புறப்படுவார்கள், குறைந்தது பயணம் 2 நாட்களாவது இருக்கும். இரண்டு நாட்கள் இருக்கும் தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு கிளம்புவார்கள். அந்த இரண்டு நாட்களுக்கும் தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்வார்கள் என்றால் நிச்சயம் இல்லை. ஏனெனில் விவசாய மேம்பாட்டிற்காகவும் அன்றாடத் தேவைக்காகவும் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளும், நீர் வழித்தடங்களும் அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலும் இருந்தது. போகிற போக்கில் நீர்நிலைகளின் அருகில் அமர்ந்து உணவை உண்ணுவார்கள், இல்லாவிடினும் ஏற்றம் இறைத்துக் கொண்டிருக்கும் ஏதாவது வயலின் அருகில் அமர்ந்து உண்ணுவார்கள். 2019 ஆண்டுகளில் இதுபோல் உண்ணும் நிலை உள்ளதா என்றால் நிச்சயம் இல்லை. சொட்டுநீர் பாசன வயல்களிலும், வறண்டு கிடக்கும் நீர்நிலைகளிலும் எவ்வாறு உண்ண முடியும். அப்படி இருந்த சூழலில் அடுத்த ஐம்பது ஆண்டுகள் கழித்து நீரை விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கும் என்று யாராவது நினைத்து பார்த்திருப்பார்களா? ஆனால் அவர்களின் அடுத்த தலைமுறையில் நாம் நீரை விலை கொடுத்து தான் வாங்குகிறோம். அன்றாட தேவைக்கான நீர், குடிப்பதற்கு என பிரித்து வாங்கி பயன்படுத்தும் சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் ஏன்.?

‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். இன்று சென்னையின் நிலை என்ன? கடல் சூழ்ந்த கடை மாவட்டத்திலும், ஏரிகளின் சொர்க்கம் என்றழைக்கப்பட்ட காஞ்சிபுரத்திலும், அடையாறும்,பாலாறும் கூவம் நதியும் ஓடி கடலில் சேரும் இடங்களில் ஏன் இந்த தண்ணீர் பஞ்சம். தொடர்வண்டியில் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டிய அவசியமென்ன.? ஏன் இந்த தட்டுப்பாடு நீரை சேமிக்க நீர்வழிப் பாதைகளை சீர்படுத்த ஆறு குளம் ஏரிகளை பராமரிக்க தமிழக அரசு தவறி விட்டதா அல்லது இத்தவறுகளை அரசு செய்யவில்லை எனில் ஏன் இன்று இந்த தண்ணீர் பஞ்சம்? மழைநீர் சேமிப்பிலும், மரம் வளர்ப்பிலும் பெரிதும் ஆர்வம் காட்டாத நம் மக்கள் மீது குறை சொல்லலாமா, யார் மீது குற்றம்?

இவ்வளவு தண்ணீர் நெருக்கடியில் சென்னையில் சாராய உற்பத்தி ஆலைகள் இருக்கும் உற்பத்தி ஆலைகளும் குளிர் பானம் தயாரிக்கும் ஆலைகளும் இயங்க வேண்டுமா. அவற்றை மூடி அதற்கு பயன்படுத்தும் நீரை மக்களுக்கு தரலாமே அரசுக்கு மக்கள் மீது அக்கறையா அல்லது தனியார் நிறுவனங்கள் மீது அக்கறையா என்ற அச்சமே ஏற்படுகிறது. இந்த நீர் பற்றாக்குறை என்பது வருடம்தோறும் ஏற்படும் பிரச்சனையாகவே உள்ளது. இதை தீர்க்க தமிழக அரசும் அதிகாரிகளும் என்ன திட்டத்தை வைத்திருக்கிறார்கள்.?

நீர் என்பது மண்ணின் பொதுச்சொத்து. அதை ஒரு தனி நபர் விற்கவோ வாங்கவும் அனுமதிக்க கூடாது. நீரை வணிகமாக்க கூடாது என்று இந்திய அரசியல் சட்டத்தில் இருந்தது. ஆனால் தனியார் நிறுவனங்களுக்காக அந்த சட்டம் தளர்ந்தது. அப்போதே இந்தியாவின் வளமும் தளர்ந்தது. குறிப்பாக மறைநீர் அதிகமாக பயன்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சிவப்பு கம்பளம் விரித்த பொழுது முற்றிலும் தமிழகத்தின் சுயசார்பும் விவசாயமும் தளர்ந்தது. நீர் பங்கீட்டில் அண்டை மாநிலங்களுடன் இன்று வரை சமரசம் செய்ய முடியாத நிலையில் நமது அரசின் பலம் தெரிகிறது. விவசாயி தன் அரை காணி நிலத்தை காப்பாற்ற ஒரு ஆழ் குழாய் அமைக்க வேண்டும் எனில் அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வேண்டுமெனில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் எத்தனை வேண்டுமானாலும் ஆழ்துளை குழாய் அமைத்துக்கொள்ள நமது அரசு அனுமதி தரும். இதுபோன்ற சூழ்நிலைகளை கையாளும்போது தண்ணீர் பிரச்சினை இயற்கையாக ஏற்படுகிறதா அல்லது செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறதா என்ற எண்ணம் நிலவுகிறது. இதுபோன்ற சூழ்நிலை எப்பொழுது மாறி விவசாயிகளும் மக்களும் தங்கள் உரிமைகளை மீட்க வேண்டும்.

பெருங்களத்தூர் கார்த்திக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here