தஞ்சை , நாகை ,திருவாரூர் மாவட்டங்களில் விவசாயத்தின் இன்றைய நிலை.- அஸ்வினி கலைச்செல்வன்.

ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டங்களில் பெரும்பரப்பை விவசாய நிலங்கள் தான் அலங்கரித்து கிடக்கிறது.

நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்ல சுற்றியுள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் கூட பதப்படுத்தப்பட்ட விதை நெல்லை ஒரு பிடியாவது பெரும் பண்ணை வீட்டில் தொடங்கி அன்றாடம் பிழைப்பைத்தேடும் விவசாய கூலிகளின் வீடு வரை வைத்திருப்பார்கள். குடும்பமே பஞ்சத்தில் வாடினாலும் விதை நெல்லை விற்கவோ சமைக்கவோ எடுக்காத மண்ணின் மைந்தர்கள் விவசாய நிலங்கள் சார்ந்த மக்கள்.

விவசாயம் மண் சார்ந்த துறை மட்டுமல்ல கால்நடைகள், மின்சாரம், கூட்டுறவு, வேளாண் பொறியியல், நுகர்பொருள், ஏற்றுமதி இறக்குமதி வணிக நிறுவனங்கள் இதனை சார்ந்தே இயங்குகிறது. பெரும்பாலான விவசாயங்கள் வானம் பார்த்தே நடைப்பெறுகிறது. நெல், கடலை, உளுந்து, பச்சைப்பயறு,பருத்தி,சணல்,எள் போன்றவை பெருமளவில் பயிரிடப்படுகிறது.

இயற்கை வளங்களை அந்நியக் கம்பெனிகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்திருக்கும் நிலையில் சீர்கெட்ட பொருளாதார கொள்கைக்கு பெரும்பங்கு இருக்கிறது. சமூக விரோத கும்பல்கள் ஆட்சியில் இருக்கும் பட்சத்தில் இயற்கை வளங்கள் மட்டுமின்றி அதனை சார்ந்த பல வளங்களும் மத்திய மாநில ஆளும் தரப்பின் கொள்ளையடிக்கும் பணவாத மதவாத கூட்டணியால் பல மாநிலங்களில் கிடைக்கப்பெறும் வன வளங்கள்,கனிம வளங்கள் நிலக்கரி நீர்வளம் எரிவாயு எண்ணெய் கிரானைட் உட்பட்ட அனைத்து வளங்களும் கார்பரேட் கையில் கொள்ளை பொருளாக போய் சேருகின்றன. நில அபகரிப்பும் சட்டபூர்வ உரிமையை மத்திய மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தரைவார்ப்பதும் விவசாய குறும் பெரும் பரப்பை கையாளும் விவசாயிகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விவசாய தொழில்கள் பெருமளவில் நலிவடைந்துள்ளது.

சிறு குறு நடுத்தர விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கான நியமான கட்டுபடியான கொள்முதல் விலை கிடைக்காமலும், கடன் நெருக்கடி, சீதோசன இயற்கை பேரிடர்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். விளைநிலங்கள் பாசன வசதியற்று பயிர்கள் கருகி போவதும், காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் ஆதாரங்களும் வலுவற்று இருப்பதால் விவசாய சூழல் மிக மோசமாக உள்ளது.

விவசாய கூலிகளின் நிலை இதிலும் மோசமாக உள்ளது. தொடர் வேலை வாய்ப்பின்மையும்,கிடைக்கபெறும் ஊதியம் உடலுழைப்பிற்கு தக்கதாக இல்லாத சூழலில் வறுமையில் வாடும் விவசாய கூலிகள் பலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

பெரும் பண்ணைகாரர்கள் அடிமை கூலியாக குறிப்பிட்ட சில சாதிய விவசாய கூலிகளாக அமர்த்தி கொள்வதும்,வேறு நிலங்களில் வேலை செய்வதை அனுமதிக்காத நிலையும் தகுந்த ஊதியமற்ற விவசாய கூலிகளின் மீதான வன்முறையற்ற அடக்கு முறையை கையாண்டு வருவதும் இப்பகுதிகளில் நடந்து வருகிறது.

உயிர் வாழ தனது உழைப்பை அல்லது உழைப்பின் உற்பத்தி பொருளை விற்க வேண்டிய கட்டாயத்தில் மூலதனமான உடலை பாதுகாப்பதும் அவசியமாகிறது.
அன்றைய தேவைகளை பூர்த்தி செய்யவே பெரும்பாடுபடும் விவசாய கூலிகளின் நிலையும், பிடுங்கப்பட்ட நிலங்களும் அரசின் பார்வையில் வெளிவருவதே இல்லை. மாறாக பெரும் கார்ப்பரேட்களின் கையில் விலைப்போன கைக்கூலி அரசாகவே உள்ளது.

சில மாற்றுகள் :

புதிய நிலசீர்திருத்தத்தை கொண்டு வந்து நிலமற்ற விவசாயக்கூலிகளுக்கு நிலம் வழங்கலாம்.

நீர்வள ஆதாரங்களை கெடுக்கும் ரசாயனக் கழிவுகளின் சுத்திகரிப்பு மற்றும் கேடுகள் குறித்த வெள்ளை அறிக்கை அரசுக்கு வழங்கலாம்.

விவசாயிகளின் வேலையை உறுதி செய்ய தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைநாட்களை அதிகரித்தும் ஊதியத்தை அதிகரித்தும் தர வழி வகை செய்யலாம்.

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here