தங்கத்தாரகை கோமதி.- தமிழ்.அரவி.

எனக்கு டிவி கூட ஆன் பண்ண தெரியாது அவள் தாயின் குரல்! என்ன தொழில் செய்கிறீர்கள்? எனக்கு என்ன தொழில் செய்யத்தெரியும் !மாடு மேய்ப்பேன், பால் கறப்பேன், அப்படியே குடும்பத்துக்கு சமைச்சு போட்டு கூலி வேலைக்கு போயிட்டு வருவாங்க. உங்க கணவர் என்னமா செய்றாங்க? அவர் புற்று நோயால் இறந்து இரண்டு வருஷம் ஆகுது.

இப்படி பதிலளித்தவர்கள் அவர்கள், அவர்களை தேடி இப்பொழுது ஓடியது மீடியாக்களும், செய்தித்தாள்களும் கையில் காஸ்ட்லியான வீடியோ கேமராக்களையும் மைக்கையும் எடுத்துக்கொண்டு.

ஆரவாரம் இன்றி வாழும் அந்த கிராமத்திலும் இவர்களுக்கென ஒரு வீடு. அதில் மூன்று பெண் குழந்தைகளும் வளர்ந்து வந்தனர், இறுதியாய் பிறந்தவள்தான் அவள். அவளுடைய இறுதி மூன்று நொடியில் ஆசியாவையே திரும்பி பார்க்க வைத்து இந்திய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார், அவளே கோமதி மாரிமுத்து!

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் விராலி மலை தாண்டி முடிகண்டம் என்ற கிராமம் அங்கு வளர்ந்தவள் தான் கோமதி, சிறுபிள்ளையாய் பிறக்கும்போதே வறுமையில்தான். பெரியவள் ஆன பிறகும் அவள் வாழ்க்கையில் வறுமையில்தான் இருந்தாள். சத்தான உணவு உண்டு இருப்பாளோ? இல்லையோ? ஆனால் அந்த வறுமையிலும் அவள் செய்த பயிற்சியின்,முயற்சியின் விளைவுதான் இந்த தங்கப்பதக்கம். தடகளப் போட்டியில் முதலிடம், ஆகமொத்தத்தில் இந்தியாவை இந்த தடவையும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு கொண்டு வந்ததல் இவளின் உழைப்பு மிகவும் பெரிய பங்காற்றியது.

கோமதியின் கடந்தகால வாழ்க்கையை சென்று பார்ப்போம்? தந்தை மாரிமுத்து கோமதியை தினமும் கல்லூரி அனுப்புவதற்காக சைக்கிளில் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்டுவந்துவிடுவார், இது கோமதி இளம் வயது படிப்பு தொடங்கியதிலிருந்தே! காரணம்? சரியான நேரத்திற்கு இவர்கள் கிராமத்திற்கு பேருந்து கூட வருவதில்லை. இப்படியே பள்ளி காலங்களும், கல்லூரி காலங்களும் கடந்து போக, சிறுவயதிலிருந்தே கோமதிக்கு ஓட்டத்தில் ஆர்வம் அதிகமாக இருந்தது.அதற்கு காரணம் அவருடைய அப்பா என்று தான் தங்கம் வென்ற தாரகை கூறினாள். இது மட்டுமில்லாமல் கோமதிக்கு மிகவும் சவாலாக இருந்த விஷயம் என்னவென்றால் அவள் வசித்த ஊரில் மைதானமும் கிடையாது .அவள் மைதானத்திற்கு சென்று பயிற்சி எடுக்க வேண்டும் என்றால் தினமும் 20 கிலோமீட்டர் தூரம் கடந்து போக வேண்டி இருந்தது . சிறிதும் சளைக்காமல் தினமும் அங்கு சென்று பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தபடி இருந்தாள். திடீரென இரண்டு வருடத்திற்கு முன்பு எதிர்பாராத விதமாக ,கோமதியின் தந்தை புற்றுநோயின் காரணமாக இயற்கை எய்தினார்! இது ஒரு வலியை கோமதியின் நெஞ்சில் பதிய வைத்தது.அவருக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளரும் சிறிது நாட்களில் மண்ணுலகம் விடுத்து விண்ணுலகம் அடைந்தார்.

மன உளைச்சலில் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்து கோமதி மூலையில் முடங்கவில்லை எவ்வளவு அவமானங்கள், போட்டிகள், பொறாமைகள் இத்தனையும் தாண்டி ஓட ஆரம்பித்தாள். எண்ணிலடங்கா கோப்பைகளையும் கைப்பற்றினார். ஆனால் இது இல்லை இவளுடைய வெற்றி! எவ்வளவோ குடும்ப கஷ்டங்கள் இருந்தாலும், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்தாலும், மனம் தளராது கடுமையாக பயிற்சி எடுத்து உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாளே அதுவே அவளின் முதல் வெற்றி.

ஆனால் என்னதான் பயன், நம் உயர் அதிகாரிகளுக்கு தான் தெரியாதே! இதன் மகத்துவம் என்னவென்று

நம் அரசியல்வாதிகளுக்கும் தெரியாதே! அவர்கள்தான் அக்கிராம மக்களை விட அதிக அறியாமையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்லவா?

கடந்த 21 ஆம் நாள் இதுவரை யாரும் அறிந்திராத அந்த கிராமத்தின் பெயரை நம் நாடு அறிய வாய்ப்பு அளித்தவள் கோமதி,, அவளின் பெயரையும் உலகறியச் செய்தார், அவள் ஓடி வென்ற தூரம் என்னவோ 800 மீட்டர், அது மட்டும் தான் நாம் அறிந்தது! அதை கடக்க அவள் ஓடிய தூரம் பல ஆயிரம் மைல்கள் தாண்டியது என யாருக்கும் தெரியாத ஒன்று, நான் தங்கம் வெல்வேன் ! என அவளுக்குள் அடிக்கடி ஒலித்த அசரீரியை நினைவூட்டினாள் மீண்டும் ஒருமுறை நமக்காக! இவள்தான் தமிழ்நாட்டின் தங்கத்தாரகை

தமிழ் அரவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here