ட்ராஸ்கியவாதம் பற்றி- தோழர் சண்முகதாசன் (பகுதி-1)

ஒரு தத்துவம் என்ற முறையில் ட்ரொஸ்கியவாதம் ஒரு செத்த குதிரைக்கு ஒப்பானது. ஆனால் அது இன்னமும் சில இடங்களில் முக்கி முனகிக் கொண்டு இருக்கின்றது எனலாம். இந்த முக்கல் முனகல்களை ஏதோ பெரிய முழக்கங்களாகக் காட்ட சில ட்ராக்சியவாதிகள் முனைகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் தலை கீழாக நின்று முயற்சி செய்தாலும் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.

ட்ரொஸ்கியவாதத்தின் இன்றைய வக்கீல்கள் இதனைப் பற்றி அவ்வளவாக பேச விரும்பாவிட்டாலும் தனியொரு நாட்டில் மட்டும் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியுமா என்பதே ட்ரொஸ்கியவாதிகளுக்கும் கம்யூனிசவாதிகளுக்கும் இடையிலான பிரதான பிரச்சனையாக இருந்தது. இன்று சோஷலிசத்தை ஒரே நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் முற்றிலும் பொழுது போக்கற்ற அறிவு ஜீவிகளின் விவாதத் தலைப்புகளில் இடம் பிடிப்பவை. அதனைச் செய்ய முடியும் என்பதை லெனினும் ஸ்டாலினும் உலகிற்கு நிரூபித்தார்கள்.

ஐரோப்பாவின் பிரதான முன்னேறிய நாடுகளில் முதலில் புரட்சிகள் நடைபெறும் என லெனின் எதிர்பார்த்தது உண்மைதான். லெனின் ஒரு சர்வதேசியவாதி. எனவே அவர் உண்மையில் இதற்காக ஊக்கத்துடன் உழைத்தார். ஆனால் புரட்சிவாதி விரும்பும் பாதையிலேயே வரலாறு எப்பொழுதும் செல்வதில்லை. புரட்சி ஏற்பட்ட அங்கேரி, ஜெர்மனி போன்ற நாடுகளில் அது தோல்வி கண்டது. இந் நிலையில் தாம் வெற்றிக்கு இட்டுச் சென்ற ரசியப் புரட்சியை ரசியப் புரட்சியாளர்கள் என்ன செய்வது? ஸ்டாலின் வினவியவாறு “அதனை உலகப் புரட்சிக்கு காத்திருந்து கொண்டு அதன் சொந்த முரண்பாடுகளில் சிக்கி வேர் வரை அழுக விடுவதா?”

லெனின் இத்தகைய ஒரு வளர்ச்சியை எதிர்பார்த்தார். அவர் 1916ல் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் யுத்தத்திட்டம் என்பதில் “முதலாளித்துவத்தின் வளர்ச்சி பல்வேறு நாடுகளில் மிகுதியும் சமாந்திரமற்ற முறையில் நடைபெற்றது. பண்ட உற்பத்தி அமைப்பின் கீழ் வேறுவிதமாக அது நடைபெறமுடியாது. இதிலிருந்து சோசலிசம் சகல நாடுகளிலும் ஏக காலத்தில் வெற்றி பெறமுடியாது என்பது புலனாகிறது. அது முதலில் ஒரு நாட்டில் அல்லது சில நாடுகளில் வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்

இந்த லெனிசக் கருத்துக்களின் அடிப்படையில் முதலில் லெனினாலும் பின்னர் அவருடைய வாரிசான ஸ்டாலினாலும் தலைமை தாங்கப்பட்ட போல்ஷ்விக் கட்சி புரட்சி வெற்றி பெற்ற ஒரு நாட்டில் சோசலிச உற்பத்தியை ஒழுங்கு படுத்தியது. வரலாறு அது சரி என நிரூபித்துவிட்டது.

ஆனால் ட்ரொஸ்கி வேறுவிதமாக சிந்தித்தார். பின்தங்கிய ரசியாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி தப்பிப் பிழைப்பதை அவர் முன்னேறிய நாடுகளில் தொழிலாளர்களின் புரட்சிப் போராட்டத்தின் வெற்றியுடன் இணைத்தார். அவர் “உலகப் பாட்டாளிவர்க்கப் புரட்சி என்ற அரங்கில்தான் ரஸ்சியப் புரட்சியைக் காப்பாற்ற முடியும்” என்று ஆடம்பரமாகப் பிரகடனம் செய்தார்.

விவசாயிகளின் புரட்சிகர உள்ளார்ந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்காததே ட்ரொஸ்கியின் இந்த தவறான தர்க்கத்திற்கு அடிப்படைக் காரணம் ஆகும். புரட்சி சோசலிசக் கட்டத்தை நோக்கி நகரும் போது பாட்டாளி வர்க்கத்திற்கு பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல விவசாயிகளுடனும் மோதல் ஏற்படும் என அவர் கருதினார். அதனால் அவர் இவ்வாறு கூறினார் “ ….பாட்டாளி வர்க்க முன்னணிப் படை அதன் வெற்றியை அடையப் பெறுவதற்காக அதன் ஆட்சியின் அதி ஆரம்பக் கட்டத்திலேயே நிலப்பிரபுத்துவ சொத்தைப் பறிப்பது மட்டுமல்ல முதலாளித்துவ சொத்தையும் பறிக்க நேரிடும். இதில் பாட்டாளி வர்க்கம் புரட்சிப் போராட்டத்தின் முதல் கட்டங்களில் தனக்கு ஆதரவளித்த பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல தன்னை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு காரணமாயிருந்த பரந்துபட்ட விவசாயிகளுடனும் பகைமையான மோதலில் ஈடுபட நேரிடும்”.

லெனினுடைய கருத்துக்கள் ட்ரொஸ்கியின் கருத்துக்களுக்கு நேர் எதிர்மாறானவை. ரசிய மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான விவசாயிகளுக்கு புரட்சியின் இரண்டு கட்டங்களிலும் புரட்சிப் பாத்திரம் உண்டு என்று லெனின் வாதிட்டார். இந்த விவசாய மக்களை தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒழுங்கு படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்த விசேட நேச அணி பற்றி லெனின் பின்வருமாறு வர்ணித்தார் “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது உழைப்பாளிகளின் முன்னணிப் படையான பாட்டாளி வர்க்கத்திற்கும் உழைப்பாளிகளின் பாட்டாளிகள் அல்லாத எண்ணற்ற பிரிவினருக்கும் (குட்டி பூர்சுவா சிறிய கைவினைஞைர்கள் விவசாயிகள் அறிவுஜீவிகள் போன்றன)அல்லது பெரும்பாலான பிரிவினருக்கும் இடையில் உள்ள விசேட வடிவ வர்க்கக் கூட்டணியாகும்”.

ஆகவே விவசாயிகளுடனான கூட்டணியில் நம்பிக்கையற்ற ட்ரொஸ்கியால் ரஸ்சியப் புரட்சிக்கு எந்த எதிர்காலத்தையும் காண முடியவில்லை. அவருடைய கருத்தில் உலகப் புரட்சிதான் அதைக் காப்பாற்ற முடியும்.ஆனால் அது நடைபெறவில்லை. ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியாது என அவர் கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான போல்ஷ்விக்கள் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியும் என்பதை நிரூபித்ததுடன் சோவியத்யூனியனுக்கு எதிரான பாசிச ஆக்கிரமிப்பின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாறு காணாத கொடிய தாக்குதலுக்கு எதிராகவும் அதனைப் பாதுகாத்தார்கள். வரலாறு இவ்வாறு இந்தப் பிணக்குகள் பற்றிய தீர்ப்பை வழங்கி முன்னேறிச் சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here