செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாஸ்மாக் மதுபான கடை மற்றும் அரசு அனுமதியற்ற மதுக்குடிமையம் (பார்) நிரந்தரமாக மூடப்படவேண்டும்


காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பழமையானதும், பெரியதுமான அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செங்கல்பட்டு நகரத்தில் இயங்கிவருகிறது, இங்கு காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும். திருவண்ணாமலை. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஏழை உழைக்கும் மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அன்றாடம் வந்து செல்கின்றனர், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தரமான உயர்ந்த உத்திரவாதமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வரும் பொதுமக்களுக்கு இடையூறாக மருத்துவமனைக்கு மிக அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடையும் அரசு அனுமதி இல்லாத குடிமையம் (பார்) இயங்கிவருவது அனைத்து தரப்பினர் மத்தியிலும் கவலையளிப்பதாக உள்ளது, மேலும் மருத்துமனைக்கு வரும் பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் கையில் போடப்பட்டுள்ள ஊசிகளோடே மருத்துவமனைக்கு எதிரிலேயே உள்ள குறிப்பிட்ட டாஸ்மாக் கடைக்கு வந்து குடித்துவிட்டுச் செல்வது பேரதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும், இதன் விளைவாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மருவத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கிடையே தகராறு ஏற்படுவதும் சில நேரங்களில் கைகலப்பு வரை செல்வதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது,

இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகிலேயே மாவட்டத் தலைமை நீதிமன்ற வளகம். அரசு சட்டக்கல்லூரி. மகளிர் கல்லூரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் மேல் நிலைப்பள்ளியும் உள்ளன, இந்நிலையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக புழங்கும் இப்பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையும் அரசு அனுமதியற்ற மதுக்குடிமையம் (பார்) இயங்குவது பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு இன்னல்களைத் தரும் என்பது சொல்லித்தெரியவேண்டிய ஒன்றல்ல. இதனடிப்படையில் பொது மக்களுக்கு இடையூராக உள்ள இந்த டாஸ்மாக் மதுபான கடையை நிரந்தரமாக மூடுவதற்காக மருத்துவமனை டீன் அவர்கள் மதிப்பிற்குரிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடிதங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 2. 2018 அன்று டாஸ்மாக் கடை மற்றும் அரசு அனுமதியற்ற மதுக்குடிமையத்தையும் (பார்) சேர்த்து நிரந்தரமாக மூட உத்தரவிட்டார், ஆனால் தற்போது இந்த டாஸ்மாக் கடை மற்றும் அரசு அனுமதியற்ற மதுக்குடிமையமும் (பார்) மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதி இல்லாமால் வெளிப்பகுதியில் இருந்த டாஸ்மாக் மதுபான கடையை அரசு அனுமதியற்ற மதுக்குடிமையத்திற்கு (பாருக்கு) உள்பகுதியில் கள்ளத்தனமாக திறந்து மீண்டும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திறக்கப்பட்டுள்ளது,

எனவே இந்த டாஸ்மாக் மதுபான கடை மற்றும் அரசு அனுமதியற்ற மதுக்குடிமையமும் (பார்) நிரந்தரமாக மூடப்படவேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே தீவிரமடைந்து வருகிறது.

மாவட்ட நிர்வாகமும்,காவல்துறையும் தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் விரும்புகின்றனர்.

அரசு சரியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையென்றால் மக்களை திரட்டி போராடவும் தயங்க மாட்டோம் என்று அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here