ஜப்பானில் ஜாதி ஒழிக்கப்பட்டது_எப்படி?

100 ஆண்டுகளுக்கு முன்பும் ஜப்பான் நாட்டிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது…

கீழ் சாதியினர் என்ற வார்த்தைக்கு ஈடாக ஜப்பானிய மொழியில் ‘புராக்குமீன்’ (Burakumin) என்று கூறி சில மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

இந்தியாவில் இருப்பது போல அவர்களையும் “சேரி”களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர். அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது.. அவர்களுக்கு செருப்பு, தோல், சாக்கடை கழுவுதல் சார்ந்த தொழில்கள் மட்டுமே தரப்பட்டது…

1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் இரண்டு அணு குண்டுகளால் படுதோல்வியடைந்த பிறகு குறைவான மக்கள் தொகையில், பொருளாதாரமற்ற சூழ்நிலையில் திக்கு முக்காடியது… இனி ஜப்பான் அவ்வளவுதான், சரித்திரத்தின் பக்கங்களில் காணாமல் போய்விடும் என்று உலகம் உச்சுக்கொட்டியது..

காலங்காலமாக ஆண்ட பரம்பரையாக சொல்லிக்கொண்டு, நாட்டை உலகப்போரில் சீர்குலைத்ததற்கு மன்னர் “ஹிரோஹிட்டோ’ (Hirohito) பொதுமன்னிப்பு கேட்டு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகிக் கொண்டார்… அவருக்குப் பதில் போர்களில் பெரும் பங்கு வகித்த அவரது மந்திரி ‘டோஜோ’ (Tojo) போர் வெறியை தூண்டியதற்காக தூக்கிலிடப்பட்டார். (அப்போதும் மன்னர்களே தப்பினர், அவரின் எடுபுடிகளான மந்திரிகள் மாட்டிக்கொண்டனர்)

பின்னர் வந்த மக்களாட்சி முறை ஜப்பானிய மக்கள் மத்தியிலுள்ள சாதி பிரிவினைகளை முதலில் ஒழித்தது. ஜப்பான் வளர வேண்டுமென்றால் அனைவருமே ‘ஜப்பானியர்’ என்ற சொல்லைத் தவிர ‘நான் சாமுராய் இனம், என்‌ பரம்பரை வீரப்பரம்பரை, நான் அவன் நான் இவன்’ போன்ற வீண் பெருமைக்கு இனி இடமில்லை என்று திட்டவட்டமாக நின்றது…

பொது மக்களின் வேலை நேரத்தை அதிகரித்தது.. விடுமுறைகளை குறைத்தது… புராக்குமீன்களை ஊருக்குள் அழைத்தது… ஊரார் அனைவருக்கும் ஒரே கல்வியை தந்தது… சாதிய புனைப்பெயர்களை அழித்தது… உலக நாடுகளின் பண உதவியுடன் ஜப்பானியர் அனைவருமே தம் தம் திறமையை வைத்து ஏற்றுமதி தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் தந்தது… அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் தொழில் ரீதியாக கைகோர்த்து நின்றது… முதலாளித்துவமாக வெளியே தெரிந்தாலும் உள்ளே சிறந்த சோசலிச கொள்கை கொண்ட நாடாக பரிணமித்தது…

“ஜப்பானிய நாட்டில் தயாரிக்கப்பட்டது”(Made in Japan) என்றால் அதன் தரமே உலக நாடுகளின் தரத்தை விட உயர்ந்த தரமாக இருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் விட்டு கொடுக்கவில்லை… நாடு மெல்ல மெல்ல முன்னேறியது… இத்துபோன பழைய பெருமைகள் பேசி, எங்கள் சாதி, எங்கள் பரம்பரை, எங்கள் இனம் என்று முட்டுகட்டையாக கூவிய சில பழமைவாதிகளை ஈவிரக்கமின்றி கைது செய்து கடுமையாகக் தண்டித்தது… ஆன்மீகத்தைவிட அறிவியல்சார் நாத்திகத்தையே முதல் கொள்கையாக பாவித்தது…

கலப்பு சாதி திருமணங்களை வலுக்கட்டாயமாக்கியது.. சம்பந்தி வீட்டார் என்ன சாதி? நம் மேனேஜர் என்ன சாதி? சக பணியாளர் என்ன சாதி? எதிர் வீட்டுக்காரன் என்ன சாதி ? என்று மோப்பம் பிடிப்பதை அரசாங்கம் தண்டனை குற்றமாகவே மாற்றியது… சாதியை பற்றி பேசினாலே கடும் தண்டனை என்பதால் வெறும் 30 ஆண்டுகளில் கடை சாதியான புராக்குமீன் இரத்தமும் சாமுராய்களின் இரத்தமும் அனைத்து ஜப்பானியர் உடலிலும் ஓடியது..

விளைவு…??

இந்தியா இன்னமும் 100 ஆண்டுகளில் வளரமுடியாத சமூக வளர்ச்சியை பெற்று இன்று ஜப்பான் நாம் எட்ட முடியாத தூரத்தில் உயர்ந்து நிற்கிறது‌..

“புராக்குமீன்” என்ற வெறுப்பை ஒரு கடந்தகால கனவாக ஜப்பான் மக்களிடம் மறக்கடித்து சாதி பிரிவினைகளை வென்று உலக நாடுகளில் சிறந்த மக்கள் மேம்பாடான முதல் 10 நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது‌…

இந்தியா..??

அறிவியல்சார் நாத்திகமும் மக்கள் மேம்பாடுமே நமது இரு கண்கள்.

முகநூல் பதிவு : J.M. Ravi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here