சோசலிச கியூபாவும் மக்கள் நலத்திட்டங்களும்:-லிங்கராஜ்

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்று கியூபா.இதர ஏனைய லத்தின் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, பொலிவியா,சிலி போன்ற நாடுகளை போலவே கியூபாவும் ஸ்பெயினின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்துவந்துள்ளது.

வரலாற்று ஆசிரியர்கள் லத்தின் அமெரிக்காவின் காலனியாதிக்கத்தை மேலாதிக்கம் என்று விளக்குவார்கள்.
அதாவது அடிமட்ட மக்களின் சம்மத்துடனே செலுத்தபட்ட ஆதிக்கம் என்ற பொருளில் அவர்கள் அவ்வாறு விளக்குவார்கள். வன்முறையால் ஆதிக்கம் செலுத்துவதற்கு மாறானது மேலாதிக்கம்.

இரும்பு கரங்களால் அடக்கப்படுவதற்க்கு பதிலாக  எங்கும் வியாபித்து இருக்கும் வேறுவிதமான ஆதிக்கம் இது.
இவ்வகையான அரசியல் ஆதிக்கம் மென்மையானது போல தோன்றினாலும் எளிதில் வீழ்ந்து போகாது.
அடிமட்ட மக்களை மோசமாக பாதிக்கும் .
அடிமட்டமக்கள் தமது கீழ்நிலை தாமே ஏற்றுகொண்டு ,தம்மை அந்நிலையில் தொடர்ந்து வைத்திருக்கும் பழக்கவழக்கங்களை தாமே எதிர்ப்பின்றி பின்பற்றுவார்கள்.

இத்தகைய கொடிய மேலாதிக்கத்திலிருந்து கியூபா 1959-ல் தான் விடுதலை அடைந்தது.

சமீபத்தில் கோவிட்-19 நோய்தொற்றால் பாதிப்பிற்குள்ளான இத்தாலிய பயணிகளின் கப்பலை  உலக நாடுகள் அனைத்தும் தனது எல்லைக்குள் அனுமதிக்க மறுத்ததை தொடர்ந்து ,அக்கப்பலை கியூபா மனிதாபிமானத்துடன் தனது நாட்டிற்கு அனுமதித்து பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு
தீவிர சிகிச்சை அளித்தது. மேலும் இத்தாலிக்கு தனது மருத்துவ குழுவினரை அனுப்பி நோய் தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகிய பணிகளில் செயல்பட்டுக்கொண்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல் வெனிசுலா, இத்தாலி மற்றும் ஜமைக்கா போன்றவற்றிக்கும் தனது மருத்துவ குழுவை அனுப்பியுள்ளது.
கல்வி மற்றும் மருத்துவத்தில் உலகிலேயே தன்னிறைவு அடைந்த நாடாக விளங்குகிறது.அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி போன்ற முன்னேறிய நாடுகளால் சாதிக்க முடியாததை,30 வருடங்களில் கியூபா எப்படி சாதித்தது?.

1959-ல் பிடல் காஸ்ட்ரோ தலையிலான புரட்சி இயக்கமானது அமெரிக்க ஆதரவான பாடிஸ்டா என்ற சர்வாதிகாரியிடமிருந்து புரட்சியின் மூலமாக அரசை கைப்பற்றியது.புரட்சிக்கு பின்னரான பிடல் தலைமையிலான அரசு சோவியத் ரஷ்யாவை மாதிரியாக கொண்டு சோசலிச நாடாக தன்னை அறிவித்தது.சோசலிச பொருளாதார கொள்கையை தமது அரசமைப்பின் அடிப்படையாக்கிக் கொண்டது.

பிடல் காஸ்ட்ரோவின் புரட்சி அரசானது,
அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற முதலாளித்துவ நாடுகளை போன்று முதலாளிகளுக்கு சாதகமான முறையில்  பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது என்றில்லாமல் ,அதற்கு முற்றிலும் மாறாக
கியூபாவில் அதுநாள் வரை இயங்கிவந்த   அமெரிக்க சர்க்கரை ஆலை போன்ற பெரும்பான்மையான தனியார் நிறுவனங்களை நாட்டுடைமையாக்கியது.

மேலும் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம் என்ற திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவத்தினை வழங்கிவருகிறது.
நாட்டில் எந்த ஒரு குழந்தையும் கல்வி,உணவு ,உடை மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் போய்விடக்கூடாது . எந்த இளம்வயதினரும் கல்வி வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதை உத்திரவாதம் செய்வதை தங்களின் தேர்வாக ஏற்று கியூபாவின் மக்களும் அரசும் அதை அடிப்படையாகக் கொண்டு சோசலிச அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியுள்ளனர்.

புரட்சியை தொடர்ந்து அனைத்து கியூப மக்களும் எழுதப்படிக்க கற்பிக்கபட்டு,அனைத்து குழந்தைகளும் பள்ளி சென்று வந்தனர்.அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளால் பொருளாதார நெருக்கடி நிலவிய ஆண்டுகளில் கூட ஒரு குழந்தைக்கூட பள்ளி செல்லாமல் இருந்ததில்லை அல்லது குழந்தையின் பெற்றோர் ஒரு சென்ட்(கியூபா பணத்தின் பெயர்)கூட -ஏன் வரியாக கூட அந்த நாட்டின் கல்வி திட்டத்திற்கு தரவேண்டிய நிலை ஏற்பட்டதில்லை.

அமெரிக்கா ,இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது கியூபா அதிகமான மனிதவளங்களையும், இயற்கை வளங்களையும் கொண்ட நாடன்று. ஆனால் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி,மருத்துவ உதவி,பண்பாட்டு நடவடிக்கைகள்,போதுமான உணவு ,இருப்பிடம் என நாட்டின் பொருளாதாரத்தில் பங்கேற்க செய்து.அதன் மூலமாக பெறப்படும் உபரியை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து கொடுப்பது என்ற உன்னதமான பொருளாதார கொள்கையே மேற்படி நாடுகளுக்கும் கியூபாவிற்கும் வேறுபாடாகும்.

இத்தகைய சமூக மாற்றங்கள் அடைய கியூபா பல திட்டங்கள் ,அமைப்புகள் மற்றும் இயக்கங்களை உருவாக்கியுள்ளது.அவற்றில் முக்கியமான “ஆல்பா” என்று ஸ்பானிய மொழியில் அழைக்கப்படும்  லத்தின் அமெரிக்காவிற்கான பொலிவாரிய   அமைப்பாகும் .லத்தின் அமெரிக்க நாடுகளிடையே பரஸ்பர கூட்டுறவு,ஒருமைப்பாடு,மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டதாகும்.
பணக்கார நாடுகளுக்கு மட்டுமில்லாமல் அனைத்து உறுப்பு நாடுகளுக்கிடையே வர்த்தரீதியான தடைகளையும்,சுங்கவரி முதலியவற்றையும் நீக்கி பிராந்தியங்களிடையே வங்கிக்கூட்டுறவினை ஏற்படுத்தி முதலீட்டை அதிகப்படுத்துவது ஆல்பாவின் நோக்கமாகும். மேலும் வடஅமெரிக்க நாடோ ஒப்பந்த எல்லைக்கு ( இவ் ஓப்பந்தமானது அமெரிக்கா,கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளிடையே தாராளவாதம் மற்றும் சந்தைபடுத்துதல் ஆகிய கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.)
தெற்கே உள்ள அனைத்து கண்டபகுதிகளிலும்  மேற்படி சுகாதாரம் மற்றும் அனைவருக்கும் எழுத்தறிவு முதலியவற்றைக் கொண்டுவருவதாக ஆல்பாவின் ஒரு முக்கிய பிரிவு குறிப்பிடுகிறது. இதன் படி 13,000 மருத்துவர்களையும்  செவிலியர்களையும் வெனிசுலாவிறக்கும் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கும் ஆப்ரிக்காவிற்கும் கியூபா அனுப்பி வைக்கிறது.இதன் காரணமாக அனைவருக்கும் இலவச பல்கலைகழகக் கல்வியை அளிப்பது மற்றும் மூன்றாம் உலகநாடுகளின் ஏழைமாணவர்களுக்கு இலவச மருத்துவக்கல்வியை அளிப்பது என்று கியூபாவின் புரட்சிகரமரபு வலுவூட்டபட்டுள்ளது.
ஹென்றி ரீவ்ஸ் பன்னாட்டு சிறப்பு மருத்துவமனைகள்  பேரழிவு மற்றும் கொள்ளை நோய் தடுப்புக்குழு என்ற அமைப்பு 1500க்கும் மேற்பட்ட கியூப மருத்துவர்களை கொண்டு உருவாக்கபட்டுள்ளது.இயற்கை பேரழிவு மற்றும் தொற்றுநோய்களிலிருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் இக்குழு செயல்படுகின்றது.
இக்குழுவானது  40 வருடங்களுக்கு மேலான மருத்துவ உதவியளித்தல் தொடர்பான நடைமுறை அனுபவம் கொண்டதாகும்.
கியூபாவின் மத்தியபொதுசுகாதார அமைச்சகத்தில் நேரடி கட்டுபாட்டின் கீழ்  இக்குழு செயல்படுகிறது.
மேற்படி ஹென்றி ரிவ்ஸ் குழுவானது கடந்த 2010ம் ஆண்டில் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு அங்கு சென்று மருத்துவ உதவி அளித்ததோடு பாகிஸ்தானிய மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்தல்  மற்றும் கியூபாவில் இருந்து கொண்டுவந்த  32 நடமாடும் மருத்துவமனைகளையும் பாகிஸ்தானுக்கு அளித்துவிட்டும் சென்றது.

மேலும் 2014-2016ம் ஆண்டுகளில் மேற்கு ஆப்ரிக்காவில் மிகுந்த உயிரிழப்புகளை ஏற்படுத்திய ஏபோலோ நோய்க்கு  எதிராக
மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அடங்கிய 250 பேர் கொண்ட குழுவினை கியூபா ,லைபிரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி எபோலா வைரஸிடமிருந்து மக்களை  மீட்டது.
இவை மட்டுமின்றி மேலும் பல மக்கள் நல அமைப்புகளை கியூபா கொண்டுள்ளது. அவற்றுள் அனைவருக்கும் உயர்கல்வி அளிப்பதன் மூலமாக ஒருமைபாட்டு உணர்வு,சமூகநீதி மற்றும் சமத்துவத்தை அளிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
“கருத்துக்களின் போர்” எனும் அமைப்பும் அயல்நாட்டு மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வழங்குவதற்க்காக ELAM எனும் அமைப்பும் ,வயது வந்தவர்களிடையே கல்வியறிவை கொண்டு செல்ல உருவாக்கபட “ஆம் . என்னால் முடியும்” மற்றும் ராபின்சன்  ஆகியவை முக்கியமானதாகும் .
மேற்படி கியூபாவின் வளர்ச்சியானது நன்கு ஒருங்கிணைக்கபட்ட சோசலிச  நிறுவனங்களை உருவாக்கியதால் ஏற்பட்டதாகும். ஆகவே மனிதசமுதாயம் இப்பூமியில் நிலைக்க வேண்டுமானால் அது தனது  போராட்டத்தின் மூலமாக முதலாளித்துவ சமுதாயத்தை வீழ்த்தி ,மக்களுக்குகான சோசலிச சமூக அமைப்பை கட்டவேண்டும் என்பதை கியூபா இந்த உலகிற்கு  உணர்த்துகிறது. இந்நிலையில் கோவிட்-19 நோய்தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாத நாடுகளின் தோல்வி என்பது,மக்களின் உழைப்பை சுரண்டி , பெரும் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்கார்களாக  உருவாக்கி வரும் முதலாளித்துவத்தின் தோல்வியாகும்.
முதலாளித்துவத்தின் இத்தோல்வியை கியூபா தனது மக்கள் நலதிட்டங்களின் மூலமாக உலகிற்கு அம்பலபடுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here