செயலுத்தியா? சந்தர்ப்பவாதமா?………செந்தமிழ்க்குமரன்

செயலுத்தியா? சந்தர்ப்பவாதமா?
தேசிய இன உரிமைப்போராளிகள் என்ன செய்யலாம்!

பாசிச பாசக அணியைத் தோற்கடிக்கவேண்டும்!
அதற்கு நமக்கு முன்னுள்ள ஒரே மாற்று காங்கிரசு தலைமையிலான தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்!

நமது தோழர்கள் எல்லாம் இப்படித்தான் புறப்படுகிறார்கள். இதற்குப் பெயர் பாசிசத்திற்கு எதிரான செயலுத்தி என்கிறார்கள்.

பாசிசத்திற்கு எதிரான நமது நடவடிக்கையில் பாசக மீதான முக்கியமானக் குற்றச்சாட்டு மதவெறியை ஊக்குவித்து இந்தியாவை ஒற்றை இந்துத்துவ இந்தியாவாக மாற்றும் முயற்சியும், அரசு அதிகார மட்டத்தில் இந்துத்துவ சக்திகளை ஊடுறுவ வைத்து எவர் ஆட்சிக்கு வந்தாலும் இந்திய அதிகார மையம் இந்துத்துவ சங்பரிவார் கும்பல்களின் மறைமுகக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயல்வதும் மிக முக்கியமானது.

உண்மையில் காங்கிரசு இப்படியான முயற்சிகளை எடுக்கவில்லையா? என்றால் காங்கிரசு மதவாதத் தன்மையில் பா.ச.க போல அணுகவில்லை மாறாக இனவியல் (தேசிய இன ஒடுக்குமுறை) தன்மையில் அதை அணுகி உள்ளது.

 

ஆம்! இந்தியாவில் எங்கெல்லாம் மாநில முழக்கம், தனிநாடுக் கோரிக்கைகள் எழுந்தனவோ அங்கெல்லாம் அக்கோரிக்கைகள் வலுவிழக்க வைக்கப்பட்டு அந்த அமைப்புகள் கொடூரமாக அழிக்கப்பட்டன.(காசுமீர், பஞ்சாப், வட கிழக்கு மாநிலங்கள், தமிழ்நாடு,) அல்லது அவர்கள் தேர்தல் களத்திற்கு வரவழைக்கப்பட்டு இந்திய ஆளும் வர்க்க வலைப்பின்னலுக்குள் வீழ்த்தப்பட்டனர். அதற்காக 356வது பிரிவு எந்த அளவுக்குப் பயன்படுத்தப்பட்டது என்பது நாடறியும்.

நக்சல்கள், தேசிய இனப்போராளிகள், மதவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த இசுலாமியர்கள் எனப் பலரும் தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு ஒழிக்கப்பட்டதும், கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டதும் பாசக ஆட்சியில் என்பதை விட 60 ஆண்டு கால காங்கிரசும், இந்தியாவினதுமான வரலாறு இதுதான்.

ஏன்! தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் அழிக்க காங்கிரசு துணையோடு திமுக செயல்பட்டதும் இந்த விதியின் அடிப்படையிலேயே!

ராசீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகும், உலகமயமாக்கல் வளர்ச்சியினாலும் காங்கிரசுக்கு மாற்றாக ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டல் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட கட்சியாகவே பாசக உள்ளது.

பாசக மதவாத ஒற்றை இந்தியாவை உருவாக்கவும் காங்கிரசு போலி மதச்சார்பற்ற ஒற்றை இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவதும் தான் இரண்டுக்கும் உள்ள நூலிழை வேறுபாடு!

பாசகவின் தீவிர சுரண்டல் நடவடிக்கைகள், பணமதிப்பு உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகள், பல்லாயிரம் கோடி வங்கிப் பணத்தைக் கொள்ளையடித்து நாட்டை விட்டு ஓடுவது. நிதித்துறை, நீதித்துறை, ராணுவம் உள்ளிட்டவற்றில் அதீதத் தலையீடு போன்றவை கார்ப்பரேட்களின் தேவைக்கேற்ப இந்திய நிர்வாகவியல், நீதித்துறையியல் மாற்றப்படவேன்டும் என்றத் தன்மையும் உள்ளடங்கியுள்ளது. அதாவது பாசக உருவாக்க நினைக்கும் இந்தியா மதவாத ஒற்றை இந்தியாவாக மட்டுமல்ல, கார்ப்பரேட் மைய இந்தியாவாகவும் அமையும்.

இதில் காங்கிரசு மதவாதம் என்பதற்கு பதில் போலி மதச்சார்பின்மையைத்தான் நிறுவும். மற்ற எதற்கும் யாரும் உத்தரவாதம் தரமுடியாது.
இந்நிலையில் இரண்டு கட்சிகளுமே ஒற்றை கார்ப்பரேட் மைய இந்தியாவை உருவாக்க தேசிய இனங்களை கூறு போடுபவர்களே!
எனவே தேசிய அரசியல், தேசிய இன உரிமை பேசுபவர்களுக்கு இந்த இருக் கட்சிகளுமே முதன்மை எதிரிகள் தான்.

இந்திய தேசியவாதிகளுக்கும், தேசிய இன உரிமை மறுப்பாளர்களுக்கும் வேண்டுமானால் முதன்மை எதிரி, இரண்டாவது எதிரி என்ற வரையறை இருக்கலாம்.

ஆனால் தேசிய இன உரிமைப் போராளிகள் இவ்விரு கட்சிகளையும் அதன் அணிகளையும் எதிர்த்து தேசிய இனக்கோரிக்கைகளை உரத்து தேர்தலில் முழங்குபவர்களை மாற்று சக்தியாக(செயலுத்தியாக) அங்கீகரிக்கலாம் தவிர பாசிச, பாசகவுக்கு மாற்று இனத்துரோக காங்கிரசு என முடிவெடுக்கக்கூடாது!

அதை செயலுத்தியாக அனுமதித்தால் அதன் சந்தர்ப்பவாத விளைவுகளை நாம் எல்லாத் தளத்திலும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்!
ஆம் காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு 2009 ஈழப்போராட்டத்தில் நமது மக்களை இரக்கமில்லாமல் கொன்றொழித்து மாபெரும் விடுதலை இயக்கத்தை சீரழித்தபோது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள செயலுத்தி என்ற அடிப்படையில் தான் மாபெரும் துரோகத்தை செய்தார். எனவே செயலுத்தி என்பது நமக்கு மட்டுமே சொந்தமல்ல அது எதிரிகளுக்கும் சொந்தமானதே!

செந்தமிழ்க்குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here