சென்னை எதிர்கொள்ளவிருக்கும்”தண்ணீர் பஞ்சம்”-இளங்கோ.

சென்னையின் அடர்த்தியாக மக்கள் வசிக்கும் பகுதியில் இரவும் பகலும் மாறி மாறி பூமியை துளையிடும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஆம், கோடையில் தண்ணீர் பஞ்சம் வந்தே விட்டது. குடிநீர் வண்டிகள் மூலம் மட்டுமே நீர் விநியோகம் பெறும் மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு ஏற்கெனவே பழகி விட்டார்கள். தனி வீடுகள் , வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு இப்போது தான் தண்ணீரின் அருமை தெரிய துவங்கி இருக்கிறது. அதன் எதிர்வினை தான் ஆழ் துளையிடும் ஒலி.


வேளச்சேரி போன்ற ஏரி இருக்கும் பகுதியும் இதற்கு விதி விலக்கல்ல. தண்ணீர் என்பது பூமியில் இருந்து அள்ள அள்ள குறையாமல் கிடைக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். மழை பெய்து நிலத்துக்குள் தண்ணீர் சென்றால் தானே கிடைக்கும் என்பது படித்த மேதைகளுக்கும் தெரிவதில்லை அல்லது உணர மறுக்கிறார்கள்.
கோடையை தவிர்த்த காலங்களில் வண்டிகளை கழுவி, சாலையில் ஆறாக ஓட விடும் இவர்கள் தான் கோடையில் ஆழ்துளையிடும் வண்டிகளை வைத்து 100 அடி போட்டும் கிடைக்கவில்லை, 500 அடி போட்டும் கிடைக்கவில்லை என புலம்புகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தண்ணீரை லாரிகளில் பெறுகின்றனர். ஆனால் லாரிகளுக்கு தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. மாறாக எங்கிருந்து தண்ணீர் பெறுகின்றனரோ அங்கேயே தங்களுடைய கழிவுகளும் கொட்டப்படுகின்றது என்று தெரிவதில்லை. அவர்களை அறியாமலேயே விளை நிலங்களை பாழடிக்கின்றனர்.
குளியல் அறை தண்ணீர், பாத்திரங்கள் கழுவி கிடைக்கும் கழிவு நீர், துணி துவைத்த அழுக்கு தண்ணீர் என பலவற்றை கழிவு நீர் சுத்திகரிப்பு முறைமூலம் நல்ல நீராக பெற்று குடிப்பதற்கு இல்லை என்றாலும் குளிக்க, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, வண்டிகள் கழுவ, செடிகொடிகள் அல்லது பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் விட என்று இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு முறையை தனி வீடுகளை விட அடுக்குமாடி குடியிருப்பில் சிறப்பாக செய்ய முடியும், நடைமுறைபடுத்த முடியும்.

கால்வாய்களையும், நீர் வழித்தடங்களையும் மற்றும் ஏரிகளையும் இப்போதே தூர்வாரி நீர் வழித்தட மற்றும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி வரப்போகும் மாமழையை வரவேற்ற அணியமாக வேண்டும்.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு பலகையில் எழுதிப் போட்டால் மட்டும் போதாது; அதன் அருமையை அதை செயல்படுத்தும் முறையை நாளொன்றுக்கு 5-10 குடங்களே தண்ணீர் பெறும் மக்களிடம் சென்று பயில வேண்டும்.
இல்லை எனில் “கேப்டவுன் ” நகரத்திற்கு ஏற்பட்ட நிலை ஒவகு விரைவில் சென்னைக்கு வரும். அப்போது “நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் வரிகள் நம்மை பார்த்து எள்ளி நகையாடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here