செங்கல்பட்டு மாவட்டத்துக்கு கூடுவாஞ்சேரியில் கலெக்டர் அலுவலகம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி, ஆக 1: புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மையப்பகுதியான கூடுவாஞ்சேரியில் கலெக்டர் அலுவலகம் அமைக்க கோரி தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி சட்ட சபையில் 110விதியின் கீழ் அறிவித்தார். இதுகுறித்து கேள்விப்பட்டதும் பட்டாசு வெடித்து பொதுமக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இதனையடுத்து செங்கல்பட்டு புதிய மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மையப்பகுதியான கூடுவாஞ்சேரியில் கலெக்டர் அலுவலகம் அமைக்க கோரி தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு செல்லும் ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு, கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட முக்கிய நகர் பகுதிகளும், இதேபோல் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரி, நாவ;ர், தாழம்பூர், படூர், கேளம்பாக்கம், திருப்போரூர், இதனையடுத்து திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளும், மேலும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், சித்தாமூர், லத்தூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளும் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பதற்காக நெடுந்தொலைவில் உள்ள காஞ்சிபுரத்துக்கு பல்வேறு சிரமங்களுடன் சென்று வந்தோம். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிதாக செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம். இதில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு புதிய மாவட்டமாக அறிவித்த தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு வாழ்த்தி வரவேற்கிறோம். மேலும் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரத்துக்கும், மேலும் செங்கல்பட்டிலிருந்து வல்லம், கொட்டமேடு வழியாக திருப்போரூருக்கும், செங்கல்பட்டிலிருந்து மதுராந்தகம், செய்யூர், சித்தாமூர், லத்தூர், அச்சிறுப்பாக்கம் வழியாக திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு போக்குவரத்து இடையூறும் இல்லை. ஆனால் சென்னையிலிருந்து அனகாபுத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஓட்டேரி, ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரியை கடந்து செங்கல்பட்டு நோக்கி தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு மணி ஆகிறது. இதில் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை மற்றும் கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலைகளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளிலிருந்து அன்றாடம் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்று வருவோரும், வெளியூர்களுக்கு சென்று வருவோரும் கூடுவாஞ்சேரி மற்றும் வண்டலூர் வழியாக தாம்பரம் சென்றுதான் சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு பஸ் மற்றும் ரயில்களில் போக்குவரத்து செய்ய வேண்டும். இதில் இடைப்பட்ட பகுதியில்தான் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தவியாய் தவித்து வருகின்றனர். இதில் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையை ஒட்டியபடி உள்ள பேருந்து நிலையம் அருகில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக 150ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் போக தற்போது 51ஏக்கர் அரசு நிலம் காலியாக உள்ளது. இதேபோல் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை மற்றும் கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையை இணைக்கும் மேலைக்கோட்டையூர்-கல்வாய் சாலையில் உள்ள கீரப்பாக்கத்தில் சர்வே எண் 99-ல் அரசுக்கு சொந்தமாக 900ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிலம் காலியாக உள்ளது. மேலும் இதே சாலையில் கல்வாய் கூட்ரோடு பகுதியில் 104ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அரசு நிலம் காலியாக உள்ளது. மேலும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேர்காணல் நடத்திய இடத்தின் அருகில் பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் எதிரே பட்டாதாரருக்கு சொந்தமான 223ஏக்கர் கொண்ட நிலம் காலியாக உள்ளது. எனவே செங்கல்பட்டு புதிய மாவட்டத்துக்கு அனைத்து பகுதி மக்களுக்கும் மையப்பகுதியாக உள்ள கூடுவாஞ்சேரியில் அல்லது கூடுவாஞ்சேரியை சுற்றியுள்ள கீரப்பாக்கம், கல்வாய், கொளப்பாக்கம் ஆகிய பகுதியில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் இடவசதி தாராளமாக உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து செங்கல்பட்டு தாசில்தார் சங்கரிடம் கேட்டதற்கு, தற்காலிகமாக மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் பரிந்துரை செய்துள்ளோம். மேலும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அரசு எந்த இடத்தை தேர்வு செய்து தருகிறதோ அந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here