சீமான் – தடுமாற்றமா? சந்தர்ப்பவாதமா?. – க.இரா.தமிழரசன்.

தோழர்.சீமான் அவர்களுக்கு
………………………………………………………….
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய நீங்கள், “ஆமாம்… நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” என்று பேசியுள்ளீர்கள். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அப்படிப் பேசினீர்கள்.

ராஜீவ் கொலை சம்பவத்தில் புலிகளின் அமைப்பு ஈடுபட்டதாக பல தரப்புகளிலிருந்தும் குற்றச்சாட்டு எழுப்ப பட்ட போதிலும், புலிகளின் அமைப்பு அதனைக் கடுமையாக மறுத்தே வந்திருக்கிறது.

1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலைச்சம்பவம் நடந்தேறிய பிறகு அச்சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட புலிகளின் அப்போதைய வெளியுறவு பொறுப்பாளர் கிட்டு, ராஜீவ் கொலையில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லையென அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி, பிபிசிக்கு நேர்காணல் அளித்திருந்த விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், ராஜீவ் காந்தி கொலையில் எங்கள் இயக்கத்திற்கு தொடர்பில்லை என்பதனை அழுத்தமாகவே தெரிவித்திருந்தார்.

அதோடு 2002இல் தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் ஏற்பாடு செய்திருந்த உலக இதழியலாளர் சந்திப்பு ஒன்றில் ‘ராஜீவ் காந்தி படுகொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ‘அது ஒரு துன்பியல் சம்பவம் (‘It was a tragedy’) என்று பிரபாகரன் குறிப்பிட்டு முடித்துக் கொண்டார்.

சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கமும் அரசியல் துறை பிரதிநிதி குருபரன் குமாரசாமியும் இணைந்து 1.12.2018 அன்று முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என விடுதலைப் புலிகளால் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அதில் எங்கள் ஆயுத மௌனிப்பின் 10 வருடங்களுக்குப் பிறகும் கூட புலிகளையும் தமிழீழ மக்களையும் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்பு படுத்துவதைக் காணும் பொழுது, இந்த கொலை தமிழீழ மக்களை அழிக்கச் செய்யப்பட்ட சதித் திட்டமாகத்தான் தோன்றுகிறது என்று இருந்ததை மறந்து விட்டீர்களா ?

இவ்வளவு ஏன், கடந்த மாதம் வரை, ராஜீவ் கொலையில் விடுதலை புலிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. சர்வதேச சந்தை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்த உலக தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் தான் ராஜீவ்காந்தியும். அவரது கொலைக்கு பின்னால் சர்வதேச அரசியல் இருக்கிறது என்று தானே நீங்கள் பேசி வந்தீர்கள்.

இப்போது ஏன் இந்தத் தடுமாற்றம் ?

உங்களுக்கு பின்னால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் , இலட்சக்கணக்கான வாக்காளர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு கவனமாக பேச வேண்டிய நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசலாமா?

ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக 1999-ம் ஆண்டு உள்துறை அமைச்சர் அத்வானிக்கு கடிதம் எழுதிய முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அர்ஜூன் சிங், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணி உண்மைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜெயின் கமிஷன் அறிக்கையையே முக்கியமான ஆதாரமாகக்கொண்டு அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்க வேண்டும் என்கிறார். மேலும்

” இலங்கையின் பங்கு, விடுதலைப் புலிகளின் தொடர்பு, சீக்கிய பயங்கரவாதிகளின் தொடர்பு, வெளிநாட்டு முகமைகளின் தொடர்பு ஆகியவற்றைத் தாண்டி, ஆயுதங்கள் எப்படி வாங்கப்பட்டன, பணம் எங்கிருந்து வந்தது? என்பதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறார். திருச்சி வேலுசாமி அவர்கள் பக்கம் பக்கமாக எழுதி உள்ளதை நீங்களும் படித்து இருக்கிறீர்கள் தானே. காங்கிரஸ்காரர்களே ராஜீவ் காந்தி கொலை சம்பந்தமாக விடுதலைப் புலிகளையும் தாண்டி தங்களது சந்தேகத்தை நீட்டிக் கொண்டிருக்கும் வேளையில் தங்களுடைய பேச்சு நியாயம்தானா ?

சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சந்திரா சுவாமி, சுப்பிரமணியன் சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி ஆகியோரையும் ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிஷன் கூறியது
உங்களுக்குத் தெரியாதா ?

அரசாங்கமே ஏதும் ஒரு முடிவுக்கு வராத போது சுப்பிரமணிய சுவாமி மட்டும் விடுதலைப் புலிகள் தான் ராஜிவை கொன்றார்கள் என கூறியதன் மர்மத்தை நீங்களே பல இடத்தில் கூறியுள்ளீர்களே. அதை மறந்து விட்டீர்களா ?

சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் இந்திய புலனாய்வு துறையின் இயக்குனராக இருந்த எம்.கே. நாராயணன் ராஜீவ் கொல்லப்பட்ட அந்த இடத்தில் பிடிக்கப்பட்ட வீடியோ டேப்பை தராமல் மறைக்கிறார் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்ததை நீங்கள் மறந்து விட்டீர்களா ?

இந்தக் கொலையைச் சொல்லித்தானே இந்த கேடுகெட்ட அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் 30 ஆண்டுகளாக சிறையில் போட்டு வைத்திருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று 30 ஆண்டுகளாக 7 தமிழர்களும் கத்திக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக மக்களிடம் 7 தமிழர் விடுதலைக்கான கருத்தியல் நியாயம்தான் என்றும் அவர்கள் விடுதலைக்காக அனைவரும் தற்போது ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தங்களுடைய கருத்து அதைப் பாதிக்காதா ?

ராஜிவ் படுகொலை தொடர்பாக பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. எனவே மறுவிசாரணை நடத்தி புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டுவர வேண்டும் என்று பல தரப்பினரும் நீதிமன்றத்தின் கதவுகளைத் தண்டிக் கொண்டிருக்கும் பொழுது ” ராஜீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகள்தான் நாங்கள் தான் ” என்று மேடையில் பேசியது அறச்செயல் அல்ல தோழர் சீமான் அவர்களே.

குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கமே அதை மறுக்கும் பொழுது அவர்கள்தான் செய்தார்கள் என்று கூறுவதற்கு நீங்கள் யார் ? அதைச் சொல்வதற்கு உங்களுக்கு உரிமை கொடுத்தது யார் ? எந்த அடிப்படையில் அவர்கள்தான் செய்தார்கள் என்று பொது அரங்கத்தில் கூறுகிறீர்கள்? அதற்கு உங்களிடம் உள்ள ஆதாரம் என்ன ?

க.இரா.தமிழரசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here