பிரபாகரனும், அவரோடு போராடிய தோழர்களும் ஈழ இனப்படுகொலையில் கொல்லப்பட்டதை அறிந்த பிறகு தமிழ்நாட்டில் உருவான இனப்படுகொலை எதிர்ப்பு அரசியலை மடைமாற்ற ஒரு அமைப்பை உருவாக்கியவர் நடிகர் சீமான்.
பிரபாகரனுடன் இருப்பது போன்ற ஒரு படத்தோடு ஆரம்பமாகி விடுதலைப்புலிகள் அமைப்பின் அடையாளங்களை நகலெடுத்து ஒரு போலியாகவே கோடம்பாக்கத்திலிருந்து சீமானின் அரசியல் துவங்கியது. ஆமைக்கறி, அரிசிக்கப்பல் இப்படி அளக்காத கதைகள் இல்லை. இனப்படுகொலையை எதிர்த்து காத்திரமாக நடவடிக்கைகளை ஈழத்தமிழர்கள் எடுக்காத வகையில் ஒற்றைக் கையெழுத்து போலி நம்பிக்கைகள் முதல் புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளைக் கைப்பற்றுதல், உடைத்தல், சிதைத்தல் எனச் சீமானும், மிக நெருக்கமாகச் சுற்றியிருப்பவர்களும் செய்தது கொஞ்சமல்ல.
தங்களை விடுதலைப்புலிகளின் அடுத்த கட்டம், ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற போலியான தோற்றத்தை உருவாக்க விடுதலைப்புலிகளின் அடையாளங்கள் பயன்பட்டது போலத் தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வந்த விடுதலைப்புலி ஆதரவாளர்களைக் களத்திலிருந்து ஒதுக்கவும், துரோகிகள் முத்திரை குத்தவும் “தமிழ் ரத்தப்பரிசோதனை” சாதி அடிப்படையில் துவங்கி வைக்கப்பட்டது. அப்படியும் அதில் முழு வெற்றி கிடைக்காததும் ஏற்கனவே பார்ப்பனீயம் உருவாக்கி வைத்த பெரியார் அவதூறுகளைக் கையிலெடுத்தார்கள்.
சீமான்/நாதக பேசுகிற எல்லா பெரியார் அவதூறுகளும் சோ, தினமலர் கும்பல், இந்துத்துவக் கும்பல் எழுதியவை. அதையே ஒரு துண்டறிக்கை பிரசுரமாகப் பெங்களூர் குணா நீட்டி எழுதியிருந்தார். அவற்றை எதிர்த்து முன்னர் பெரியார் திக மேடைகளில் பேசிய அதே சீமான் தனது பிழைப்புவாத அரசியலை துவக்கியதும் இந்துத்துவ கும்பலின் அவதூறுகளைக் கையிலெடுத்தார். கடந்த பத்தாண்டுகளில் எந்த காத்திரமான போராட்டங்களை நாதக நடத்தியது?
மிகக் கவனமாகக் கடந்த பத்தாண்டுக் கால சீமானின் பேச்சு நடவடிக்கைகளைக் கவனித்தால் ஒன்று விளங்கும். நாதகவின் பிழைப்புவாத அரசியலுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது கடுமையான தாக்குதல் ஆமைப்படையினரால் உருவாக்கப்பட்டன. அவை அனைத்திலும் ஆர்எஸ்எஸ் முத்திரை கலந்திருக்கும் – 99%பொய்யில் 1% உண்மை/நிகழ்வைக் கலந்து உக்கிரமாக ஒரு போலி விவாதத்தைத் துவங்கிப் பரப்புவது, அதை ஒரு தாக்குதல் முறையாக்குவது. திடீரென கவனத்தைத் திசைதிருப்ப எதையாவது உளறுவது. அப்படி நிகழ்ந்திருக்கவே செய்யாத ஒன்றை நடந்ததாகப் பொய் சொல்வது. இதை அத்தனையையும் சீமானும், சுற்றியிருக்கிற ஒரு கும்பலும் கடந்த பத்தாண்டுகளில் செய்து வருகிறது. ஆர்எஸ்எஸ் தமிழ் வடிவம் நாதக என்றாகியது.
இந்த வரிசையில் தாங்கள் புலிகள் அமைப்பின் குரல்/ ஒட்டுமொத்த தமிழர்களின் ஏக பிரதிநிதி என்ற ஒரு தோற்றத்தைச் சீமான் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். தன்னை தேசியத் தலைவராகச் சித்தரிக்கிற வேலையும் நடக்கிறது. இந்த நிலையில் “ராஜீவை நாங்கள் கொன்று தமிழ் மண்ணில் புதைத்தோம்” என்று பேசுவதன் பொருள் என்ன? “நாங்கள்” என்பது யாரைச் சுட்டுகிறது? தமிழர்களை என்றால் எல்லா தமிழர்களுக்கும் அதில் பங்குண்டா? புலிகளை என்றால் புலிகள் அமைப்பு இன்று இல்லை. அவர்கள் இயங்கிய 2009 வரை எங்காவது தாங்கள் ராஜீவ் கொலையில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக எங்காவது குறிப்பிட்டார்களா?
ஏழு தமிழர் விடுதலைக்காக எல்லோரும் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கிற இந்நேரத்தில் அவர்களது விடுதலையைக் காங்கிரஸ் கூட பழையது போல எதிர்க்காத சூழலில் ஏன் இந்த பேச்சு? ஏழுபேர் விடுதலையை ஆட்சியில் இல்லாவிட்டாலும் பாஜக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. குறிப்பாக, ராஜீவ் கொலையில் சந்தேக நபரான சுப்பிரமணியம் சுவாமி முகாம் மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது. அவர்கள் விடுதலையாவதையோ, ராஜீவ் கொலை வழக்கு மீள் விசாரணை செய்யப்படுவதையோ, சதியை விசாரிப்பதையோ இந்த கும்பல்கள் விரும்பவில்லை. தங்களது தலைவரை இழந்த காங்கிரஸ் கூட அவர்கள் அளவிற்கு எதிர்ப்பை காட்டவில்லை.
எந்த தொடர்பும் இல்லாத நேரத்தில் இத்தகைய உளறல் என்பது ஏழுபேர் விடுதலையைத் தடுக்கவே என்பதாகக் கருத வேண்டியுள்ளது. அதை மறைக்கத் தற்போது ஊடகங்களில் நாதகவினர் போலியான வாதங்களை எழுப்புகிறார்கள். நாதகவின் கல்யாணசுந்தரம் வழக்கத்திற்கு மாறாகப் பிரபாகரன் படம் பொறித்த துண்டை விரித்து வைத்து நேற்று புதியதலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் காட்டியது இந்த போலித்தனத்தின் உச்சம். தாங்கள் சொன்னது புலிகளின் கருத்து என்பது போன்ற பாவனையை உருவாக்குகிற முயற்சியது.
இனப்படுகொலை திட்டமிடலின் ஒரு பாகமாகத் தமிழ்நாட்டில் எதிர்ப்புகளை மட்டுப்படுத்தவும், புலம்பெயர் அமைப்புகளைக் கைப்பற்றி அழிக்கவும்/சிதைக்கவும் இனப்படுகொலை எதிர்ப்பு போராட்ட அரசியலை இல்லாமல் ஆக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு போலி முகம் சீமான் என்கிற கருத்து உறுதியாகி வருகிறது. அந்த திட்டம் வெற்றியடைந்து இனப்படுகொலையை நடத்தியவர்கள் தப்பித்தனர். இனி மிச்சமிருப்பது போலி கதைகளை வரலாறாகக் கட்டமைப்பது. அதோடு உண்மைகள் வெளிவராமல் வரலாறு புதைக்கப்படும். தமிழர் அரசியலில் இது சீமானுக்கு வழங்கப்பட்டுள்ள பாத்திரம்.
thiru yo.
https://m.facebook.com/story.php?story_fbid=3546089185404966&id=100000117593190