சிலையல்ல, அவர் ஓரு சித்தாந்தம்.- அபராஜிதன்

“சிலைகள் உடைக்கப்படலாம்,ஆனால் எழுச்சி கண்டுவிட்ட எங்கள் அரசியல் உணர்வை உடைக்க முடியாது” என்பதைத்தான் ஒவ்வொரு சிலை உடைப்பு சம்பவங்களும் உணர்த்துகிறது.

ஒடுக்கப்பட்ட வகுப்பை சார்ந்த ராமச்சந்திரன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கான எதிர்வினைக்கு பதிலளிக்கவே இந்த சிலை உடைப்பு என்றால் அது உடைத்தவர்களின் அச்சத்தையே நிதர்சனப்படுத்துகிறது.இன்று சமுகத்தோடு மோத முடியாமல் சிலைகளோடு மட்டுமே மோத முடிகிறது இந்த கோழைகளால்.

சிலைகளோடு மோதுவதோ சித்தாந்தத்தோடு மோதுவது என்பதும் அவர்களுக்கு புரிவதில்லை.வேதாரண்யத்தின் அளவில் முடிந்திருக்க வேண்டிய பிரச்சனை இன்று தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறதென்றால் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வை காயப்படுத்த நினைத்தார்கள். ஆனால் இதுபோன்ற  ஒவ்வொரு சம்பவத்தையும் தங்களை ஒருங்கிணைத்துக்கொள்ளவும் , ஒன்று சேர்ந்து இகழ்பவர்களை இடித்து தள்ளவும் ஒடுக்கப்பட்ட சமுகம் பழக்கப்படுத்திக்கொண்டு பல ஆண்டுகள் ஆகிறது.
உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கும் தமிழர்களை எழுவே விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்பவர்கள் எப்படி தமிழர்களாக இருக்க முடியும். அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்தும் தன்னை விடுவித்து கொள்ள போராடுபவன் மட்டுமே தமிழனாக இருக்கமுடியும்.

வரலாறு ஒன்றைத்தான் மீண்டும் ,மீண்டும் வலியுறுத்துகிறது .இழப்பதற்கு எதுவுமில்லாதவன் எழுந்தால் இருப்பவன் இழந்தவனாக மாற வேண்டியிருக்கும். நீங்கள் சமத்துவத்தை விரும்பாது போனால் உங்கள் சரித்திரத்தை நீங்கள் இழக்க வேண்டியிருக்கும்.
சிந்தனைகளுக்கு விடைகொடுத்துவிட்டு சாதிவெறிக்கு ஆட்பட்டு நிற்பவர்களே! நீங்கள் சிலைகளை உடைக்க உடைக்க ஒடுக்கப்பட்ட மக்களின் சித்தாந்தம் வெடித்து கிளம்பவே செய்யும்.அவை நிரந்தரமாக உங்களின் சாதிவெறிக்கு சாவுமணி அடிக்கும்.

அபராஜிதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here