சிரியாவை சூழ்ந்திருக்கும் உண்மைகளும் ,பொய்களும்.- ராபர்ட் ஃபிஸ்க்

ஆங்கில செய்தித்தளம் the independent – க்காக ராபர்ட் ஃபிஸ்க் எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்தவர் முனைவர்.சபூர் அலி.

இந்நாள் வரை சிரியாவில் நடைபெறும் போரைப் பற்றி உங்களுக்கு கூறப்பட்டவை அனைத்தும் தவறானவையாக இருந்தது.

எல்லா ஆதாரங்களும் மாறாக இருந்தபோதிலும், துருக்கியர்கள் சிரியா மீது படையெடுக்கும் வரை, சிரியாவின் ஜனநாயகப் படைகளின் அதுவரை கேள்விக்குள்ளாக்காத பெயரடையாளம், திடீரென்று ‘குர்தீஷ் படைகளாக’ மாற்றப்பட்ட போது அமெரிக்கர்களால் ஏமாற்றப்பட்டவர்களாக இருந்தனர். நிச்சயமாக அவர்கள் எப்போதும் ஏமாந்தவர்களாகவே இருந்தனர்.

போர்கள் நம் எதிர்பார்ப்புகள் அல்லது திட்டங்களுக்கு மிகவும் மாறுபட்ட முறையில் முடிவடைகின்றன என்பது நெடுநாளுக்கு முன்பே நிறுவப்பட்டு விட்டன. ‘நாம்’ இரண்டாம் உலகப்போரை வென்றோம் என்பதற்காக அமெரிக்கர்கள் வியட்நாம் போரை வெல்வார்கள் என்றோ அல்லது அல்ஜீரியாவில் பிரான்ஸ் தனது எதிரிகளை இல்லாது அழித்தொழிப்பார்கள் என்றோ அர்த்தம் இல்லை. இருந்தும் நல்லவர்கள் யார் நாம் அழிக்க வேண்டிய தீய அரக்கர்கள் யார் என்பதை நாம் தீர்மானிக்கும் தருணத்தில் நாம் நமது பழைய தவறுகளுக்கே மீண்டும் மீண்டும் வருகிறோம்.

நாம் சதாம் அல்லது கடாபி அல்லது அசாத்தையோ கீழ்த்தரமான பேய்கள் என வெறுப்பதால், அவர்கள் அகற்றப்படுவார்கள், சுதந்திரத்தின் நீலவானம் அவர்களின் உடைந்த நிலங்களில் பிரகாசிக்கும் என்பதில் நாம் உறுதியாகவும் முழுமையான திருப்தியிலும் இருக்கிறோம். இது சிறுபிள்ளைத்தனமான, முதிர்ச்சியற்ற, குழந்தைத்தனமான நம்பிக்கையை போன்றது. (இருப்பினும், ப்ரெக்சிட்-ன்(brexit) பெயரில் கொடுக்கப்பட்ட குப்பைகளை நம்ப நாம் தயாராக இருக்கிறோம், அது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்)

சதாமின் மறைவு ஈராக்கின் மீது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு துன்பத்தை கொண்டு வந்தது. மிகவும் பிரபலமான சாக்கடைக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட கடாபியின் படுகொலையும் கூட லிபியாவிற்கு இதே போன்ற துன்பத்தை கொண்டுவந்தது. பஷர் அல்-ஆசாத்தை பொறுத்தவரை தூக்கி எறியப்பட்ட நிலையிலிருந்து, சிரியப் போரின் மிகப்பெரிய வெற்றியாளராக உருவெடுத்துள்ளார். நிலைமை இவ்வாறு இருக்கையில் இன்னும் அவர் தூக்கி எறியப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். இன்னும் நாம் அவரை சிரியப் போர்க்குற்றவாளியாக்க விரும்புகிறோம். ஆனால், உண்மை யாதெனில் சிரியா போரின் ரத்த அலைகளுக்கு மேலே, எந்தவொரு மத்திய கிழக்கு அரசிற்கும் குறைவில்லாமல் இருக்கக்கூடிய மிகவும் நம்பகமான வல்லரசு கூட்டணியுடன் முழுதாகவும் உயிருடனும் எழுந்திருக்கிறது.

‘தொகுத்தளிப்பது’ என்ற வார்த்தையை நான் வெறுக்கிறேன். எல்லோரும் காட்சிகளை அரசியல் உரையாடல்களை அல்லது வணிக விற்பனைக்கு தொகுத்தளிப்பவர்களாக தெரிகிறார்கள். இந்த மோசமான ‘தொகுத்தளித்தல்’ என்ற வார்த்தைக்கு நாம் அடிமையாகி விட்டோம் போல் தோன்றுகிறது. ஆனால் ஒரு முறை நான் அதை உண்மையான வடிவத்தில் பயன்படுத்தப் போகிறேன். சிரியப் போரின் கதையை தொகுத்தவர்கள் ஆரம்பத்தில் இருந்தே அனைத்தையும் தவறாக புரிந்து கொண்டனர்.

பஷர் ஆட்சியிலிருந்து போக வேண்டும். அதன்பிறகு பல்லாயிரக்கணக்கில் சிரிய இராணுவத்தை விட்டு வெளியேறியவர்கள் தராயா, டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸின் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆகியவர்களை கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் சுதந்திர சிரிய ராணுவம் அசாத் குடும்பத்தை அதிகாரத்தில் இருந்து நீக்க வேண்டிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். நிச்சயமாக, மேற்கத்திய பாணியிலான ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் வெடிக்க வேண்டும். உண்மையில் பாத் கட்சியின் அடித்தளமாக இவையே இருக்க வேண்டியது. மேலும் இது ஒரு புதிய மற்றும் தாராளவாத அரபு அரசின் அடிப்படையாக இருக்க வேண்டும். தற்போது நுஸ்ராவின் பெயருடன் சுத்திகரிக்கப்பட்டுள்ள அல்கொய்தாவின் வருகையை நாம் கணிக்கவில்லை என்பதற்கான உண்மையான காரணங்களில் ஒன்றை இப்போது ஒதுக்கி வைப்போம். கிழக்குப் பாலைவனங்களிலிருந்து ஒரு பூதத்தை போல ஐஎஸ்ஐஎஸ் எனும் பயங்கரக்கனவு வெளிப்படும் என்று நாம் நினைத்துப் பார்க்கவில்லை.
இந்த இஸ்லாமியவாதிகளின் வழிபாட்டு முறைகள் நாம் நம்பிய மக்களின் புரட்சியை எவ்வாறு நுகரும் என்பதை நாம் புரிந்து கொள்ளவுமில்லை, அது எப்படியென்று சொல்லப்படவுமில்லை.

இன்றளவிலும் கூட, சிரியாவின் “மிதமான” கிளர்ச்சி எவ்வாறு இஸ்லாமிய அரசின் அழிவுக்காலக் கொலை இயந்திரமாக மாறியது என்பதை நான் அறியத் தொடங்கியிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். சில இஸ்லாமியவாத குழுக்கள் ஆரம்பத்தில் இருந்தே இருந்தன (அனைத்துக் குழுக்களும் அல்ல, எந்த வகையிலும் அல்ல இன்னும், அது ஒரு எளிய மாற்றமாகவும் இருக்கவில்லை). அவர்கள் 2012ஆம் ஆண்டுவாக்கிலேயே ஹோம்ஸில் இருந்தனர்.

இதற்கு சிரிய கிளர்ச்சியாளர்கள் கோழைகள் என்றோ, ஜனநாயக எண்ணம் கொண்டவர்கள் அல்ல என்றோ அர்த்தம் இல்லை. ஆனால் அவர்கள் உலகில் மிகப்பெரிய அளவில் மிகைப்படுத்தப்பட்டார்கள். அசாத் ஆட்சியை எதிர்த்துப் போராடும் 70,000 சுதந்திர சிரிய இராணுவ (எஃப்எஸ்ஏ) “மிதவாதிகள்” பற்றி டேவிட் கேமரூன் கனவு கண்டு கொண்டிருந்த வேளையில் – உண்மையில், அப்பிரிவில் அதிகபட்சம் 7000 பேருக்கு மேல் இருந்ததில்லை. இது ஒருபுறம் இருக்க சிரிய இராணுவம் ஏற்கனவே அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தது, குறிப்பாக கூற வேண்டுமானால் சில நேரங்களில் நேரடியாக மொபைல்போன் மூலமும் பேசிக்கொண்டிருந்தது. அவர்களை முன்னர் இருந்த தங்களின் அரசாங்க இராணுவப் பிரிவுகளுக்குத் திரும்பும்படி வற்புறுத்தியது அவ்வாறு இல்லையெனில் சண்டையில்லாமல் ஒரு நகரத்தை கைவிடவேண்டும் கூறியது அதுவும் இல்லை எனில் உணவுக்காக அரசாங்க வீரர்களின் உடல்களை கைமாற்ற கோரியது. இங்கு ஒரு செய்தியை குறிப்பிட வேண்டும், சிரிய அதிகாரிகள் எப்.எஸ்.ஏவை (FSA) எதிர்த்துப் போராடுவதை எப்போதும் விரும்புவதாகச் சொல்வார்கள், ஏனென்றால் அவர்கள் ஓடிவிடுவார்கள். ஆனால் நுஸ்ராவும் (Nusrah) ஐஎஸ்ஐஎஸ் -ம் (ISIS) அவ்வாறு ஓட மாட்டார்கள்.

ஆயினும்கூட, இன்றும் வடக்கு சிரியாவின் துருக்கிய படையெடுப்பின் முடிவுகளை நாம் தெரிவிக்கையில், துருக்கியின் அரபு போராளி கூட்டாளிகளுக்கு ஒரு விசித்திரமான வார்த்தையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அசாத் அரசாங்கத்தின் மற்றும் தற்போதுள்ள சிரிய அரபு ராணுவத்திற்கு எதிரான வகையில் அவர்கள் ‘சிரிய தேசிய ராணுவம்’ என்று அழைக்கப்படுகிறார்கள். டப்ளினில் மத்திய கிழக்கு அரசியலில் பேராசிரியராக இருக்கும் வின்சென்ட் துராக் கடந்த வாரம் கூட, இந்த அரபு போராளி நட்பு நாடுகள் ‘துருக்கியின் உருவாக்கம்’ என்று எழுதினார்.

இது முட்டாள்தனம். அவை ஆரம்ப மற்றும் இப்போது முற்றிலும் சிதறுண்ட சுதந்திர சிரிய இராணுவத்தின் சிதைந்த எச்சங்கள்தாம் – டேவிட் கேமரூனின் இந்த இதிகாசத் துருப்புகளின் மர்மமான கூறுகள், ஒருமுறை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது தூதுவர் என்று புகழும் விதமாக அழைக்கப்பட்டவர் மூலம் விளக்கப்பட்டதை நினைவு கூறுகிறேன். சில காட்சிகள் துருக்கிய ஊதியம் பெறும் போராளிகள் பழைய சுதந்திர சிரிய இராணுவத்தை பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு கொடியைக் கொண்டு முத்திரை குத்துவதை தெளிவாகக் காட்டியிருந்தாலும், மிகச் சில நிருபர்களே போரின் இந்த அதிமுக்கிய உண்மையையும் விளக்கியுள்ளனர்.(சேனல் 4 செய்தி அறிவிப்பாளர்களை தவிர)

இதே இந்த முன்னாள் எஃப்எஸ்ஏ கும்பல்தான் கடந்த ஆண்டு அஃப்ரின் குர்திஷ் பகுதிக்குள் நுழைந்து, அவர்களின் நுஸ்ரா சகாக்கள் குர்திஷ் வீடுகளையும் வணிகங்களையும் கொள்ளையடிக்க உதவி புரிந்தது. துருக்கியர்கள் இந்த வன்முறை ஆக்கிரமிப்பு செயலை ‘ஆலிவ் கிளை நடவடிக்கை’ என்று அழைத்தனர். இன்னும் மோசமான, அதன் சமீபத்திய படையெடுப்பிற்கு ‘அமைதியான வசந்த நடவடிக்கை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது தகாத அவமதிப்பு எதிர்வினையைத் தூண்டியிருக்கக் கூடிய ஒரு காலமாக இருந்தது. இனி இல்லை. இன்று, ஊடகங்கள் பெருமளவில் இந்த அபத்தமான பெயரிடலை ஏதும் மரியாதைக்குரிய ஒன்றாக பேசியும் எழுதியும் பூசி வந்திருக்கின்றன.

‘அமெரிக்க ஆதரவுடைய’ சிரிய ஜனநாயக படைகள் (எஸ்டிஎஃப்) என்று அழைக்கப்படுபவர்களுடனும் நாம் அதே தந்திரங்களைத்தான் கையாண்டு கையாண்டு வருகிறோம். நான் முன்பு கூறியது போல் கிட்டதட்ட எஸ்டிஎஃப் முழுவதுமே குர்துகள்தான் மேலும், அவர்கள் ஒருபோதும் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுமில்லை, தெரிவுசெய்யப்படவுமில்லை அல்லது ஜனநாயக முறைப்படி சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களும் இல்லை. உண்மையில் போராளிகளுக்கு ஜனநாயகம் என்று எதுவும் இல்லை, மேலும் போராளிகளின் ‘படை’ கூட அமெரிக்க விமான சக்தியால் ஆதரிக்கப்படும் வரை மட்டுமே இருந்தது. இவ்வளவு இருந்தும் கூட, சிரிய ஜனநாயக படைகள் தங்கள் பெயரடையாளத்தைத் தடையின்றியும் மற்றும் பெரும்பாலும் ஊடகங்களால் கேள்விக்குள்ளாக்கப்படாமலும் வைத்து இருந்தன.

ஆனால் அவர்களை சிரிய-துருக்கிய எல்லையிலிருந்து விரட்டியடிக்க, துருக்கியர்கள் சிரியா மீது படையெடுத்தபோது அவர்கள் திடீரென்று நம்மால் ‘குர்தீஷ் படைகளாக’ மாற்றப்பட்டனர் – அவை பெரும்பாலும் – அமெரிக்கர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டவை – அவை நிச்சயமாக காட்டிக்கொடுக்கப்பட்டவைதான்.

நாம் மறந்து போன அல்லது நமக்குத் தெரியாத முரண்பாடு ஒன்று உள்ளது. அதாவது 2012இல் அலெப்போவில் சண்டை தொடங்கிய போது எஃப்எஸ்ஏ, நகரின் பல பகுதிகளை பிடிக்க குர்துகள் உதவினர். துருக்கியர்கள் ரொஜாவாவின் “சுதந்திர” சுதந்திர குர்திஷ் எல்லைப் பகுதியை ஆக்கிரமித்ததை அடுத்து ஏழு ஆண்டுகளாக இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள். சிரியாவினுள்ளான துருக்கிய எஃப்எஸ்ஏ முன்னேற்றம், போர் தொடங்கிய பின்னர் அழிந்த மாநிலத்தை புணரமைத்தபோது ஆயிரக்கணக்கான அரபு சிரிய கிராமவாசிகள் குர்துகளிடம் இழந்த தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அது வழிவகுத்தது என்ற உண்மை கூட மிகவும் குறைவாகவே விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் சிரிய தோல்வியில், சவுதி அரேபியாவின் புதிய பங்கைப் பற்றிய எந்தவொரு விமர்சன புரிதலையும் நாம் இடைநிறுத்தியதன் மூலம் இந்த யுத்தத்தின் கதை இப்போது மேலும் திசை திருப்பப்படுகிறது.

சிரியாவில் அசாத் எதிர்ப்பு இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி என்ன உதவி அளித்தது என்று கேட்டபோது, சவுதியின் பதிலளிக்கும் கொள்கை மறு,மறு மீண்டும் மறு என்பதாகவே உள்ளது. நான் அலெப்போவில் உள்ள ஒரு நுஸ்ரா தளத்தில்,இஃபெட் க்ரான்ஜின் என்று அழைக்கப்பட்ட, சரஜெவோவிற்கு அருகே ஒரு ஆயுத உற்பத்தியாளரால் கையொப்பமிடப்பட்டிருந்த போஸ்னிய ஆயுத ஆவணங்களை கண்டறிந்தேன். மேலும் நான் க்ர்ன்ஜிக்கைத் தேடிக் கண்டுபிடித்தபோது, ஆயுதங்கள் எவ்வாறு சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டிருந்தன. (மேலும் கூடுதலாக எந்தெந்த சவுதிஅதிகாரிகளுடன் அவருடைய தொழிற்சாலையில் வைத்து சந்திப்பு நிகழ்ந்தது) என்பதை என்னிடம் விளக்கினார்.இருந்தும் சவுதி உண்மைகளை மறுக்கவே செய்தது.

முகமது பின் சல்மான்

ஆயினும்கூட, இன்று கிட்டத்தட்ட நம்பமுடியாத அளவிற்கு, சவுதிகளே இப்போது சிரியாவிற்கு முற்றிலும் புதிய அணுகுமுறையைப் பற்றி சிந்திக்கிறார்கள். ஏற்கனவே ஏமன் போரில் (மற்றொரு சவுதி பேரழிவு) அவர்களின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டாளிகள் டமாஸ்கசில் உள்ள தங்கள் தூதரகத்தை மீண்டும் திறந்துள்ளனர். மேற்கில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டாலும், இது வளைகுடா அரசின் ஒரு மிக முக்கியமான முடிவு. இப்போது, சவுதிகள் எமிரேடிஸூடனும், ஒருவேளை குவைத்துடனும் கூட சேர்ந்து நிதி உதவி மூலம் சிரியாவின் புனரமைப்பு பணிகளில் ரஷ்யாவுக்கான தங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்த நினைப்பதாக தெரிகிறது.

இவ்வாறு சவுதி, ஈரானின் தடைகளை விட, சிரிய பிராந்தியத்தில் முக்கியமான சக்தியாக மாறும். மேலும் ஒருவேளை பஸார் அல் ஆஸாத் உடனான உறவுகளில் கத்தாரின் வளர்ந்து வரும் அரவணைப்பை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். அல்ஜசீரா உலகளாவிய சாம்ராஜ்யத்தை கொண்டிருந்த போதும் அவர்கள் தங்களின் சொந்த நிலத்தில் இஸ்லாமிய நாடுகளில் நிலப்பரப்பு தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்த விரும்புகிறார்கள். மேலும், அவ்வகையில் அவர்களது பெருந்தன்மைக்கும் செல்வங்களுக்கும் ஏற்ற ஒரு இடம் சிரியா தான். ஆனால் இந்த வலுவான பங்கை ஆற்ற முடிவு செய்துவிட்டால், ஈரானையும் கத்தாரையும் அது ஒதுக்கும் அல்லது அவ்வாறு முடியும் என்று நம்புகிறது. அத்தருணங்களில் காத்திரு இன்னும் காத்திரு மேலும் காத்திரு என்ற கொள்கையுடைய சிரியர்கள்தான் தங்களது அண்டை நாட்டு காரர்களின் குறிக்கோள்களுடன் எப்படி நடந்து கொள்வது என்பதை முடிவு செய்வார்கள்.ஆனால் சிரியா மீதான சவுதியின் ஆர்வம் வெறுமனே ஊகிக்கப்படுவதல்ல. முடி இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த ஆண்டு ஆகஸ்டில் டைம் பத்திரிக்கைக்கு'பஷர் தங்கப் போகிறார். ஆனால் ஈரானியர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை செய்ய விடக்கூடாது என்பதே பஷரின் விருப்பம் என்று நான் நம்புகிறேன்' என்று பேட்டியளித்தார். சிரியர்களும் பஹ்ரைனியர்களும் போருக்குப் பிந்தைய பிராந்தியம் பற்றி தவறாக பேசுகிறார்கள். எமிரேட்ஸ், சவுதிகளுக்கும் சிரியர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும். அரபு கூட்டமைப்பிலிருந்து சிரியாவை தற்காலிக உறுப்பு நீக்கம் செய்தது தவறு என்று வளைகுடா நாடுகள் இப்போது கூறுகின்றன.

வேறு வார்த்தையில் கூறுவதானால், சிரியா – ரஷ்யா ஊக்கத்துடன் 2011 கிளர்ச்சிக்கு முன்பிருந்த நிலையை சீராக மீட்டு வருகிறது.

டமாஸ்கஸில் உள்ள நமது தூதர்கள் சிரிய வீதி ஆர்ப்பாட்டகாரர்களின் அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர ஊக்குவித்தபோது, அசாத் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளவோ பேச்சுவார்த்தை நடத்தவோ கூடாது என்று குறிப்பாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அறிவுறுத்திய போது, அதற்கான காரணத்தை பற்றி மேற்கில் நாம் செய்த கற்பனை முற்றிலும் கள யதார்த்தத்திற்கு மாறாக இருந்தது.

கள யதார்த்தம் யாதெனில் மத்திய கிழக்கு முழுவதும் அச்சத்தையும், அவநம்பிக்கையையும் விதைத்து, எங்களது அனைத்து ஊகங்களையும் நொறுக்குவதற்கு இரண்டு வெறித்தனமான கூறுகள் ஏற்கனவே அங்கு இருந்தன. அவையாவன டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆகும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here