சாதி-வர்க்கம்:அம்பேத்கரியர்கள்- மார்க்சியர்கள் – ஆனந்த் டெல்டும்டே.

இந்தியாவை சூழ்ந்துள்ள முரண்பாடுகளின் சுழலில் சாதி,வர்க்கம் போன்று வேறு எந்த சொற்களின் இணையும் ,இந்நாட்டின் எதிர்காலத்திற்கும்,அரசியலுக்கும் துயரம் தருவதாக இல்லை.இந்த இரு சொற்களும் நாட்டின் உழைக்கும் வர்க்க இயக்கத்தை இரு முகாம்களாக பிரித்துள்ளன.இவை ஒவ்வொன்றும் தமது முன்னோடிகளின் கொள்கை பிடிவாதங்களால் செலுத்தப்பட்டு ,மாறுபட்ட பாதைகளில் சென்று,இரு பாதைகளுமே விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதற்கு சென்றுள்ளன.கருத்தியல் ரீதியாக வர்க்கமும், சாதியும் மாறுபட்டவை என்றாலும் ,ஒரு ஒன்றுபட்ட விடுதலைக்கான போராட்டத்தை கட்டுவதற்கு இவை இரண்டிற்குமுள்ள ஒற்றுமை போதுமானது.இந்த வாய்ப்பை இந்த இயக்கங்கள் உணரத்தவறிவிட்டன.இதற்கான விலையும் தரப்பட்டுவிட்டது.இன்று இரண்டுமே கிட்டதட்ட பொருத்தமற்றவைகளாக சுருங்கிவிட்டன.பெரும்பாலும் ஆளும்வர்க்கங்களால் வளர்க்கப்பட்ட சாதி இயக்கங்கள் ஒரு மறுபரிசீலனைப் பார்வைக்கான தேவையை ஏற்க மறுக்கின்றன.வர்க்க இயக்கம் தனிமைப்படுத்தப்பட்டு அழிவின் ஆபத்தோடு இருக்கிறது. மாறாக கிராம்ப்புறப்பகுதிகளில் ,1960 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட நக்சல் எழுச்சியிலிருந்து,இடதுசாரிகள் தமது தத்துவத்தை ,நடைமுறையை மாற்றிக்கொண்டு ,கணிசமான எண்ணிக்கையில் தலித்துகளை ஈர்த்துள்ளது.இந்த சவாலை எதிர்கொள்வதற்கு தன்னிடம் உள்ள தத்துவார்த்த ,தார்மீக்க் குறைபாட்டை அதனால் முழுமையாக சரிசெய்ய முடியவில்லை.

இந்த எதிரும்புதிருமான நிலை எனக்கு எப்போதுமே வெறுப்பூட்டுவதாய் இருப்பதை நான் முதலிலேயே கூறிவிடுகிறேன்.உலகம் முழுவதிலுமுள்ள சமூகங்கள் வர்க்க வேற்றுமையை எதிர்த்துப் போராடி வரும்போது,தனது சாதி அமைப்பை கொண்டுள்ள இந்தியா மட்டும் ஏன் அந்த கோட்பாடு சட்டகத்திலிருந்து விதிவிலக்காக இருக்க வேண்டும்?அம்பேத்கர் சரியாக புரிந்து கொண்டது போல் , இந்தியாவில் சாதிகள் ஏதோ ஒரு வழியில் வர்க்கத்தின் ஒரு வடிவமாகவே இருக்க வேண்டும். வர்க்கங்களை சாதிகள் உட்பொதிந்தவையாக பார்க்கலாம். எனினும் இந்த போலியான இருமைமுறை மலட்டுக்கோட்பாடுகளையும் ,அறிவுரைகளையும் உருவாக்கியுள்ளது.மார்க்சை வர்க்கத்துடனும்,அம்பேத்கரை சாதியுடனும் வகைப்படுத்துவதை அறிவார்ந்த செயல்பாடு இல்லை என்றே தோன்றுகிறது.மார்க்சிஸ்டுகள் ,அம்பேத்கரிஸ்டுகள் எனப்படும் இருதரப்பினருமே,தங்கள் இயக்கங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகி செல்வதற்கும்,தங்களது சொந்த அழிவிற்கும் ஏராளமான வேலையை செய்துள்ளனர்.

சாதி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் எதிரும்புதிருமான நிலை ஆரம்ப கால கம்யூனிஸ்டுகளின் பிராமணியப்பார்வை,மற்றும் ஏதோ புனிதமான மந்திரம் போல் மார்க்சிய உருவகமான அடித்தளம் மேற்கட்டுமானம் என்பதன் மீது அவர்களுக்கு இருந்த பிடிவாதமான நம்பிக்கை ஆகியவற்றிலிருந்து தோன்றியதாக இருக்கலாம்.இதனால் ஒரு புரட்சியையே விலையாக தர நேர்ந்தது என்பதை அவர்கள் இப்போது வரை உணரவில்லை.

தன்பங்கிற்கு ,சாதி எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடியான அம்பேத்கர் வர்க்க,சாதி போராட்டங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று மும்பை வீதிகளில் போராடினார்.கம்யூனிஸ்ட் மற்றும் தலித் இயக்கங்களுக்கு சந்திக்கும் புள்ளிகள் இருந்தன.தமது பாதைகளை சரிசெய்துக் கொள்ள போதுமான வாய்ப்புகளும் இருந்தன. அவ்வாறு அவர்கள் செய்திருந்தால் ,வரலாற்றின் போக்கினை மாற்றியிருப்பார்கள்.எனினும் அவர்கள் இந்த வாய்ப்புகளை தவறவிட்டார்கள்.

நாம் நமது சக்தியனைத்தையும் தவறான சாதி,வர்க்க எதிரும்புதிருமான நிலை குறித்த பயனற்ற விவாதத்தில் செலவழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

பொருளாதார அடித்தளமான வர்க்கம் மார்க்சிய சித்தாந்த த்தின் ,சமூகக்கட்டுமானம் மற்றும் அதன் புரிதல் ஆகியவற்றின் பொருள்முதல்வாத அடிப்படைக்கு மிகவும் மையமானது என்பது உண்மைதான்.அதேபோல, சாதிகள் அம்பேத்கருக்கு மையமாக இருந்தன.அவர்கள் அதை இந்து மத த்திலிருந்து உருவானது என்று பெரும்பாலும் மத தத்துவ அடிப்படைகளில் பார்த்தார்கள்.இந்த மேலோட்டமான நிலைப்பாட்டைத் தாண்டி , மார்க்சிஸ்டுகளும் , அம்பேத்கரியர்களும் முறையே உழைப்பாளர்கள்,தலித்துகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார்கள் என்ற அளவில் ,இந்த வேறுபாடுகள் தோன்றுவதற்கு காரணங்கள் என்ன,போராட்டத்தின் எதிர்காலப்போக்கில் அதன் பாதிப்பு என்ன என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டியது அவசியம்.எல்லா வரலாறுகளுமே வர்க்கப்போராட்டத்தின் வரலாறுகள்தான் என்ற மார்க்ஸ் ,ஏங்கெல்சின் கருத்துக்கு , தன் சாதிகளோடு இந்திய சமுகம் மட்டும் எப்படி ஒரேயொரு விதிவிலக்காக மாறியது?

ஆனந்த் டெல்டும்டே.
சாதியின் குடியரசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here