சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.

 *சாதியை ஒழிப்பது, 

தமிழ்த்தேச விடுதலைக்கும், 

நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை

வீழ்த்தவும் உடனடி அவசியம்.

       

   இந்தியா எனப்படுவது தேசிய இனங்களின் சிறைக்கூடம் மட்டுமல்ல சேரிகள் என்னும் தாழ்த்தப்பட்ட மக்களின் லட்சக்கணக்கான சிறைக்கூடங்களும் உடையதாகும். ஆடுமாடுகளைப் பட்டியலில் அடைப்பதைவிடக் கேவலமான முறையில் தீண்டத்தகாதவர்களென்ற பெயரில், ஐந்திலொரு பங்கு மக்களை தூரத்துச் சேரிகளில் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் சனநாயக நாடே இந்தியா.

    மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை உலகத்திற்கே அறிமுகப்படுத்தியவர்கள் ஏகாதிபத்தியங்களல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரக்கணக்காக சாதிகளாக்கி ஆள்வதெப்படி என்பதை அறிமுகப்படுத்தியவர்கள் நம்மவர்களே. பறை 18  நுழை108-ஐ நுழைத்தவர்களும் நம்மவர்களே. மொத்த இந்தியரில் 7 வீதம் உள்ள தமிழரில் மட்டுமே மலைசாதிகள் 36-உம, தாழ்த்தப்பட்ட சாதிகள் 80-உம, பிற்பட்ட சாதிகள் 150-உம, முற்பட்ட சாதிகள் 50- மாக  300-க்கு மேல் நாம் பிரித்து வைத்திருக்கிறோம்.

    சாதிகளின் இத்தகைய கண்டத்தில் ஒற்றுமையொன்று இருக்க முடியுமா?

அடிமையாயில்லாமல் வாழ முடியுமா? உலகப் பேரறிஞர் மார்க்சும் இதைத்தான் கேட்கிறார். “இந்து முஸ்லிம் பிளவு மட்டுமின்றி, குலத்திற்கும் குலத்திற்குமிடையில், சாதிக்கும் சாதிக்குமிடையில் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கிடையில் ஒரு பொதுவான நிராகரிப்பை அங்கீகரித்து, தனித்துவத்தைத் தருகின்ற ஒருவகை சமநிலையை அடிப்படைக் கட்டமைப்பாய் கொண்டிருக்கும் ஒரு சமுதாயமாகும் அத்தகைய ஒரு நாடும் ஆக்கிரமிப்பின் முன்னறிவிக்கப்பட்ட பலியல்லவா?” என இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுக்கென்ற கட்டுரையில் கேட்கின்றார்.

    தேவகுமாரன் இயேசுவையுடைய கிறித்துவ மதமும், தேவதூதன் அல்லாவையுடைய முஸ்லீம் மதமும் உட்பட்ட மதங்களனைத்துமே மனிதன் ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தவே செய்கின்றன. ஆனால் கடவுள்களுக்கெல்லாம் கடவுளான தேவாதி தேவனையே கொண்டிருக்கும் இந்து மதமோ-ஏற்றத்தாழ்வையே சாதி அமைப்பையே அதன் அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு (பிறவி பேதம்) சமுதாய அமைப்பு (பிறவி பேதம்) மறைந்துவிட்டால் இந்து மதமே அழிந்துவிடுமெனக் காஞ்சி சங்கராச்சாரி நாசிக்கில் தெரிவித்திருக்கிறார். “இந்து மதத்தைப் போல் இப்பொழுது அனுஷ்டானத்தில் ஏழை எளியவர்களை மிதித்து நசுக்கும் மதமும் வேறொன்றில்லை” என விவேகானந்தரும், “பாமரர் பிற மதம் புகுவது மதத்துக்காகவன்று, ஆனால் இந்து சமுதாயத்திலுள்ள கொடுமையைப் பொறுக்க மாட்டாமல்தான்” என சித்பவானந்தருமே இந்து மதம் பற்றி கூறியுள்ளனர். அப்படிப்பட்ட இந்து மதத்தின் கோயில்களில், சாஸ்திர ஓலைச்சுவடிகளில் பாதிக்கு மேலானவை காஞ்சி காமகோடி கூறுவது போல் தமிழ் நாட்டிலேயே உள்ளன. அவற்றின் விளைவாகத்தான் தாழ்த்தப்பட்டோரைத் தாக்குவத்தில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டமே 400 இந்திய மாவட்டங்களிலும் முதலிடத்தில் நிற்கிறது.

      சுதந்திர இந்தியாவின் சுதந்திரமான நிலப்பிரபுத்துவ சாதிவெறியர்கள் 1957-இல முதுகுளத்தூரில் 42தாழ்த்தப்பட்டவர்களைச் சுதந்திரமாகப் படுகொலை செய்தனர். 1968-இல கீழ் வெண்மணியில் கூலி உயர்வு கேட்ட 42 தாழ்த்தப்பட்டவர்களைச் சுதந்திரமாகச் சுற்றி வளைத்து உயிரோடு எரித்தனர். சுதந்திரமான சென்னை உயர்நீதிமன்றமும் “நல்ல வசதியுள்ள இந்த நிலப்பிரபுக்கள், அவர்களே நேரிலிருந்து தாழ்த்தப்பட்டோரைத் தாக்கினார்கள் என்பதையும், கலவரம் நடந்தபோது அங்கே இருந்தார்கள் என்பதையும் நம்ப முடியவில்லை. இந்தத் தீயப்பணிகளைச் செய்வதற்கு அவர்கள் கூலிக்கு அடியாட்களை அமர்த்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு வசதியுடையவர்கள் என” சுதந்திரமாகத் தீர்ப்பு கூறி 1970-இல சர்வ சுதந்திரத்தோடு விடுதலை செய்தது.   1978-இல விழுப்புரத்தில் 14 தாழ்த்தப்பட்டவர்களை மேலும் சர்வ சுதந்திரத்தோடு படுகொலை செய்தனர். இன்றுங்கூட இந்து மதத்தின் லோககுருவான சிருங்கேரி சங்கராச்சாரி சர்வ சுதந்திரமாக அரசாங்க ஆதரவோடு பிரச்சாரம் செய்வதென்ன? தாழ்த்தப்பட்டோரைத் தொடாதே!  எட்டி நில் என்று சொல்கின்றோமெனில் அதற்கு காரணம் பிறவியின் அடிப்படையிலேயே அவனுக்குள் தூய்மையற்ற நிலையேயாகும். உலகிலேயே உயர்ந்த சோப்பினால் ஒருவனைப் போட்டுக் குளிப்பாட்டினாலும் நவநாகரீக ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும் பரம்பரை பரம்பரையாக வந்த அவர்களுடைய தீட்டை, அழுக்கைப் போக்கவே முடியாது என்பதையே”

    இச்சாதி வெறியர்கள் இன்று மட்டுமின்றி சாதியமைப்பு தோன்றிய காலங்களிலிருந்தே சர்வ சுதந்திரமாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். தீண்டாமையை மட்டுமின்றி, காணாமை, அண்டாமை, பேசாமை அனைத்தையுந்தான் அமுலாக்கி இருக்கின்றனர். திருநெல்வேலி பகுதியில் தாழ்த்தப்பட்டவர்களின் துணியை வெளுக்கும் புதர வண்ணான் சாதியினர் பகலில் நடமாடக் கூட அனுமதிக்கப்பட்டதில்லை அனைவரும் தூங்கிய பின்பே நடுசாமத்திற்கு பின்பே துணிகளையும் அவர்கள் வெளுத்தாக வேண்டும். ஈழத்தமிழரில் இதே வேலையச் செய்ய துரும்பரும், பிணங்களைச் சுட்ட சண்டாளரும் இவ்வாறே நடமாட அனுமதிக்கப்பட்டதில்லை. அவர்கள் அனுமதிக்கும் எல்லையைக் காட்டும் “தீண்டல் பாறை” விளையூரில் இன்னும் இருக்கிறது. நாயாடி நடமாடுகையில் மனிதர்கள் பயன்படுத்தும் குளங்கள், கட்டடங்கள், கோயில்கள், குளிக்குமிடங்க்களை நெருங்கிவிடக் கூடாது. நாயாடி நீரிலிறங்கினால் அதே தண்ணீரில் கண்ணுக்கெட்டிய தூரத்திலிருப்பவனும் தீட்டாகி விடுவான். ஒவ்வொரு சாதியானும் நெருங்கிக் கொள்ளக்கூடிய தூரங்களைக் குறிப்பிட்டு 1807-இல ஜொனாதன் டங்கன், 1861-இல் மபீர், 1863-இல் பிரான்சிங்க்கேட், 1877-இல் வில்சன், 1886-இல் ஹாட்சன் ஜாப்சன், 1908-இல் இன்ஸ் எட்கர் தர்ஸ்டன் என எண்ணற்ற ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். தீயன் நெருங்கக்கூடிய கூப்பிடு தூரத்தைத் தீப்பாடெனவும், சேருமாள் நெருங்கக்கூடிய தூரத்தை செருபாடெனவும் கூறும் வார்த்தைகளை மலையாளத்தில் இன்றும் பயன்படுத்துகின்றனர். கர்நாடகத்தின் தென் கன்னட மாவட்டத்திலோ அன்டீ பொடா என்னும் கூடை பின்னும் சாதியினர் எச்சிலை சாலையில் துப்பினால் சாலை தீட்டாகி விடுமென எச்சில் துப்பும் கலயத்தைக் கழுத்திலேயே கட்டிக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. இதே வேலையைச் செய்யும் சிங்கள இனத்தின் ரொடியன் சாதியினரும் இவ்வாறே நடக்க வேண்டியிருந்தது. மராட்டிய இனத்திலிருந்த தீண்டத்தகாத ஹலால்கோர் தேத சண்டாள சாதியினர் காற்றைத் தீட்டாக்கி விடுவாரென காலை 9 மணிக்கு மேல் வீட்டிற்கு வெளியே வரக்கூடாதென 1783-இல மராத்தா அரசாங்கம் கட்டளையிட்டிருந்தது. அதே மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மகார் சாதியினர் டாக்டர் அம்பேத்கரும் இதனை விவரிக்கிறார்.“பேர்ஷ்வாக்கள் ஆட்சியில் மகாராஷ்ர தேசத்தில் பொது வீதிகளில் தீண்டத்தகாதார் நடக்கக் கூடாது. ஏனெனில் தீண்டத்தகாதாரின் நிழல்பட்டால் இந்துக்களுக்குத் தீட்டேற்பட்டுவிடும்”

    தவறுதலாக இந்துக்கள் தீண்டி தீட்டாகமலிருக்கும் பொருட்டு தீண்டத்தகாதார் கழுத்திலோ, மணிக்கட்டிலோ ஒரு கறுப்புக் கயிற்றை கட்டிக்கொள்ள வேண்டுமென்று பேர்ஷ்வாக்கள் கட்டளையிட்டிருந்தார்கள். பேர்ஷ்வாக்களின் தலைநகரமான பூனாவில் பொது வீதிகளில் நடக்கும் தீண்டத்தகாதார், தாம் நடக்கும்போது எழும்பும் தூசியால் இந்துக்களுக்குத் தீட்டு ஏற்படாமலிருக்க தடுக்கும் பொருட்டு இடுப்பில் பின்புறமாக ஒரு விளக்குமாற்றைக் கட்டி தொங்கவிட்டிருக்க வேண்டுமென்று ஒர் ஏற்பாடு அமுலிலிருந்துவந்தது. அவர்கள் நடக்கும் போது எழும்பும் தூசியை அந்த விளக்குமாறு பின்புறமிருந்து பெருக்கிக்கொண்டே செல்லுமாம். தீண்டத்தகாதார் தெருவில் துப்பினால் இந்துக்களுக்குத் தீட்டு ஏற்படாமலிருக்குமாறு தீண்டத்தகாதார் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டுமென்றும் பூனாவில் ஒரு சட்டம் வகுக்கப் பட்டிருந்தது என கூறுகிறார். இப்படி 3000-க்கும் மேலான ஆண்டுகளாக அவதிப்படுவது பற்றி 500-க்கும் மேலான புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

     இத்தகைய கொடிய சாதியமைப்பின் பின்னணியான பார்ப்பனீயத்தைத் தகர்க்க கிளம்பியவர்கள் சமணம், புத்தம், சீக்கியமெனத் தனி மதங்களானார்களே தவிர சாதியமைப்பில் மாற்ற மெதுவுமேற்படவில்லை.     

     12-ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் சாதிகளை ஒழிக்க கிளம்பிய பசவர் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இன்று “லிங்கயாத்துகள்” என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை. 15-ஆம் நூற்றாண்டின் கடைசியில் சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய கபீர்தாசு இயக்கத்தில் சேர்ந்த இந்து, முஸ்லிம் நெசவாளிகள் இன்று “கபீர்பாந்தி”கள் என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.17-ஆம் நூற்றாண்டின் முடிவில் சத்தியமே கடவுள் என்று சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய ஜகஜீவன்தாசென்னும் ராஜபுத்திரரின் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இன்று “சத்நமி” என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.19-ஆம் நூற்றாண்டின் முடிவில் சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய ரயிதாஸ் இயக்கத்தில் சேர்ந்த சமார்கள் இன்று புதிய சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.

    சாதிகளை எதிர்ப்பதாகக் கூறி மதம் மாற்ற வேண்டிய சாதிகளே இல்லாத முஸ்லீம், கிறித்துவ மதங்கள் இந்தியாவிற்குள் நுழைந்தன. ஆனால் அவைதாம் சாதிகள் உள்ளவையாக மாறினவே தவிர சாதிகள் ஒழியவில்லை. தாழ்த்தப்பட்டவரிலிருந்து முஸ்லீமானவர் மூசல்லி சாதியாகவும், பஞ்சாபில் துப்புரவு சாதியிலிருந்து முஸ்லீமானவர் சூஹ்ரா சாதியாகவும், பஞ்சாபில் கத்தி சாதியிலிருந்தும், சிந்துவில் லோகனா சாதியிலிருந்தும் முஸ்லீமானவர்கள் கோஜா சாதியாகவும், ராசபுத்திர சாதியிலிருந்து முஸ்லீமானவர் லால்கனி சாதியாகவும், பஞ்சாபில் முஸ்லீமாயுள்ள அவான், கோஷி, கட்டீ, மிராதி சாதிகளாகவும், மேல் இந்தியாவில் லால்பெகி, மிவாதி ஜொலாகா சாதிகளாகவும், சிந்து பகுதியில் மீமான், துருக்கிய பஞ்சாரா சமார்,  கௌர் சாதிகளாகவும், பார்ப்பனரிலிருந்து முஸ்லீமானவர் தாக்கர் சாதியாகவும், டவாய்ப் சாதியாகவும் சாதியற்ற முஸ்லீம் மதத்தில் எண்ணற்ற சாதிகள் தோன்றிவிட்டன. அதேபோன்றே சாதியற்ற கிறித்துவ மதத்தில் சேர்ந்த நாடார், கிறித்துவ நாடாராயும், தேவர், கிறித்துவ தேவராயும், பள்ளர், கிறித்துவ பள்ளராயும், கவுண்டர், கிறித்துவ கவுண்டராயும்…..சாதியற்ற கிறித்துவ மதத்தில் எண்ணற்ற சாதிகள் தோன்றிவிட்டன.

இவை காட்டுவதென்ன?

     ஆரியமதம், வைதீகமதம், சனாதன மதமென அழைக்கப்படும் இந்து மதத்தின் அடித்தளமான சாதியமைப்பை, அம்மதத்திற்குள்ளிருந்து எதிர்ப்பவர்களையும் சரி முறியடித்து அவர்களையே சாதியமைப்பைப் பின்பற்றும் படி செய்யும் வல்லாண்மையுடையதாய் சாதியமைப்பு இருந்து கொண்டிருக்கிறது என்பதையே. இதைத்தான் உலகப் பேரறிஞர் மார்க்சும் “இந்தியாவை அராபியர்களும், துருக்கியர்களும், தார்த்தாரியர்களும், மொகலாயர்களும் தொடர்ச்சியாக வெற்றி கண்டனர். ஆனால் காட்டுமிராண்டிகளான அவர்கள் வரலாற்றில் ஒரு நிரந்தர நியதிப்படி அவர்களிடம் அடிமைப்பட்டவர்களின் உன்னத நாகரீகத்தால் வெற்றி கொள்ளப்பட்டனர். உடனடியாகவே இந்து மயமாக்கப்பட்டனர்”எனக்கூறுகிறார்.

    இப்படி சர்வ வல்லமையுடன் நிலைத்து நீடித்து நிற்கும் சாதியமைப்பை அடியோடு அழிக்க வேண்டுமெனில் அதைப் பற்றிய மார்க்சிய அறிவியல் ரீதியான, வரலாற்று ரீதியான பார்வையும், அணுகுமுறையும் தேவை. தோற்றம், வளர்ச்சி, அழிவு, நிலைமைகள் பற்றிய தெளிவும் தேவை.       

1.சாதியமைப்பு என்றால் என்ன?

    “இந்தியாவில் சாதிகளும் அவற்றின் செயல்பாடும், தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர் இக்கேள்விக்குப் பதிலளிக்கிறார். “அகமணமே சாதிக்குரிய தனியம்சமென்னும் ஒரே குணாம்சமாயிருக்கிறது” எனக் கூறுகிறார். அதனை மையமாகக் கொண்டே “ஒரு பெரிய கலாச்சாரப் பிரிவைத் துண்டுகளாகக் கட்டியிருப்பதே சாதி” என்றும், “ஒரு சாதி என்பது ஓர் அடைக்கப்பட்ட வர்க்கம்”என்றும் கூறுகிறார். ஆனால் இந்தியாவைவிடக் கொடூரமான முறையில் அகமணமுறையை அமுலாக்கிய நாடு இங்கிலாந்து. அகமணமுறையை மீறுபவர்களுக்கு அங்கு தூக்கு தண்டனையே தரப்பட்டிருக்கிறது. இதனை இங்கிலாந்தின் சட்ட இயல் வரலாறு என்னும் நூலிலிருந்து அறியலாம். அதில் 9-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப பிரான்சு பேரரசின் சாக்சன்களைப் பற்றி ருடால்ப் கூறுகிறார். “பிரபு, சுதந்திரமானவன், விடுவிக்கப்பட்டவன், வேலை செய்வோன்….” என்பவர்களை உடையதாக இனம் இருக்கிறது. திருமணம் செய்கையில் அதனதன் ஒதுக்கீட்டின் எல்லை வரம்புகளை எந்த முறையிலும் மீறக்கூடாதென சட்டம் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது. பிரபு பிரபுவையும், சுதந்திரமானவன் சுதந்திரமானவனையும், விடுவிக்கப்பட்டவன் விடுவிக்கப்பட்டவனையும், பண்ணையாள் பண்ணைக்காரியையும் திருமணம் செய்ய வேண்டும். வேறான அல்லது உயர்நிலையிலிருந்து ஒரு மனைவியை எவனாவது எடுத்தால் பின் அவன் அச்செயலுக்காக உயிரை இழக்க வேண்டுமெனச் சட்டமே இருந்தது. அந்தளவு கடினமான அகமண முறை இருந்தும் அங்கு சாதியமைப்பு தோன்றிவிடவில்லை. அகமண முறை நீடித்திடவில்லை.

    எனவே சாதியமைப்பின் தோற்றம், வளர்ச்சிக்கு மட்டுமே வரையறையாக்குவதென்பது பிரச்சினையின் உயிரோட்டமான அம்சத்தையும், முழுமையையும் பார்க்கத் தவறுவதாகும். அதே சமயத்தில்“ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய தொழிலை முன்னாடியே நிர்ணயம் செய்திருப்பதனால் சாதி ஏற்பாட்டில் ஒவ்வொரு தனி நபருக்கும் தொழில் விசயத்தில் சுயநிர்ணய சுதந்திரம் இல்லை. சாதியோடு தொழிலும் இணைக்கப்பட்டிருப்பதனாலேயே சமூக முன்னேற்றத்திற்குச் சாதி பெரும் தடையாக இருந்து வருகிறது” என்றும் கூறுகிறார். இது மிகமிக முக்கியமான விசயமாகும்.அதாவது ஒரு மனிதன் தனது திறமைக்கேற்றத் தொழிலையோ, விருப்பத்திற்கேற்ற தொழிலையோ, தேவைக்கேற்றத்  தொழிலையோ செய்யும் உரிமையோ மாற்றிக் கொள்ளும் உரிமையோ இல்லாமல் தடுக்கப்பட்டிருக்கிறான் என்பதை இது காட்டுகிறது. சுய நிர்ணய சுதந்திரம் என்பது தொழில் விசயம் ஒன்றில் மட்டும் மறுக்கப்படவில்லை, விரும்பும் ஆணும பெண்ணும் சாதி பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளும் சுய நிர்ணய சுதந்திரம் கூட இல்லை. எனவே சகலத்திலும் அதாவது அரசியல், பொருளாதாரம், கலாச்சாரத்துறைகள் அனைத்திலும் சகலருக்கு அதாவது தாழ்த்தப்பட்டவருக்கு மட்டுமின்றி மற்ற சாதியினருக்கும் ஒவ்வொரு தனி நபருக்குச் சுய நிர்ணய சுதந்திரம் இல்லை. சாதி முறைப்படி பிறப்பதற்கு முன்பே அனைத்தும் தீர்மானிக்கப்பட்டு விட்டது. ஒவ்வொருவனிடமிருந்தும் சுய நிர்ணய சுதந்திரம், தனி மனித உரிமை அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டது.

    உலகப் பேரறிஞர் மார்க்சு அவர்கள் வேலை பங்கீட்டின் இந்திய வடிவமாக சாதியமைப்பு பற்றி பல இடங்களிலும் கூறுகிறார். இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியின் எதிர்கால விளைவுகளைப்பற்றி எழுதுகையில்“இரயில்வே அமைப்பிலிருந்து விளையும் நவீன தொழிலானது பரம்பரை வேலை பங்கீட்டையும் அதன் மேலமைந்திருக்கும் இந்திய சாதிகளையும், இந்திய முன்னேற்றத்திற்கும், இந்திய பலத்திற்குமுள்ள அத்தகைய தீர்மானமானத் தடைகளையும் அழித்துவிடும்.” எனக் கூறுகிறார். இதிலிருந்து பரம்பரை வேலைப்பங்கீட்டின் வடிவமே சாதியமைப்பென்பது தெளிவாகிறது. இத்தகைய பரம்பரை வேலைப்பங்கீட்டின் மூலமாகத்தான் சமூகப் பொருளாதார கட்டமைப்பைக் கொண்டுதான் பரம்பரை பரம்பரையாக இங்கே பொருள் உற்பத்தி நடந்து வருகிறது. எனவே தனி மனித உரிமைகளைப் பரம்பரை பரம்பரையாக மறுக்கும் பரம்பரை வேலைப்பங்கீடே, சமூகப் பொருளாதார கட்டமைப்பே சாதி.

2. சாதி தோன்றக் காரணம் என்ன?

    ஒரு சிலர் ஆரியர் வருகைக்கு முன் சாதிகளே இருந்ததில்லை என்றும், ஆரியர் வருகைக்குப் பின்னர் தான் அதுவும் ஆரியப் பார்ப்பனர்களால் தாம், இன்னும் குறிப்பாகச் சொன்னால் மனுதர்மத்தை வகுத்த சுவயம்பு மனுவினால்தான் சாதிகளே தோன்றிற்று எனக் கூறுகின்றனர். பார்ப்பனர் வராமலிருந்தால் மனுதர்மம் எழுதப்படாமலிருந்தால் சாதிகளே தோன்றியிருக்காது என்பது போலக் கூறுகின்றனர். இதற்கு டாக்டர் அம்பேத்கரவர்கள் சிறப்பாக பதிலளிக்கிறார். “உங்களுக்கு நான் உணர்த்த விரும்பும் ஒரு விசயம் என்னவெனில் சாதியின் சட்டத்தை மனு கொடுக்கவில்லை என்பதும் அவன் அப்படிச் செய்யமுடியாது என்பதும்தான். மனுவிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே சாதி இருந்தது. அவன் அதை உயர்த்திப் பிடிப்பவனாக இருந்தான். எனவே அதைப் பற்றி தத்துவ           மயப்படுத்தினான். ஆனால் இந்து சமுதாயத்தில் தற்கால ஒழுங்கை அவன்     நிச்சயமாகச் செய்யவில்லை. செய்திருக்கவும் முடியாது. சாதி தர்மத்தை போதிப்பதுடன் இருந்துவந்த சாதி விதிகளை ஒழுங்கு படுத்தியதுடன் அவன் வேலை முடிந்தது. ஒரு வர்க்கம் (அ) ஒரு தனி நபரின் சூழ்ச்சி (ஆ) அதிகாரம் மூலம் அடையக்கூடிய ஒன்றாக இருப்பதற்கு முடியாத அளவில் சாதியமைப்பின் பரவலும் வளர்ச்சியும் மிகப்பெரியதாயிருக்கிறது. பார்ப்பனர்கள் சாதியை உண்டாக்கினார்கள் என்ற கொள்கைக்கும் அதைப்போன்ற வாதமே இருக்கிறது. சிந்தனையில் அது சரியற்றது. நோக்கத்தில் அது கெட்டது எனச் சுட்டிக்காட்டுவது தவிர, மனு சம்பந்தமாக நான் என்ன சொல்லியிருக்கிறேனோ அதன் பிறகு மேலெதுவும் சொல்ல எனக்கவசியப்படுவது கடினமே. பல விசயங்களில் பார்ப்பனர்கள் குற்றமுடையவராயிருந்து கொண்டிருக்கலாம். அவர்கள் அவ்வாறு இருந்தார்கள் என நான் துணிந்து சொல்கிறேன். ஆனால் பார்ப்பனரற்ற மக்கள் மீது சாதியமைப்பைத் திணிப்பது அவர்களது சக்திக்கப்பாற்பட்டது. அவர்களது மோசடித் தத்துவத்தால் இச்செயல் போக்கிற்கு அவர்கள் உதவி இருக்கக்கூடும். ஆனால் தங்களது சொந்தத்தரப்பிற்கு அப்பால் தங்களது திட்டத்தை அவர்கள் நிச்சயமாக நகர்த்தியிருக்க முடியாது” எனக் கூறுகிறார்.

    உலகப் பேரறிஞர் மார்க்சு அவர்களும் “தத்துவத்தின் வறுமை” எனும் நூலில் இதற்கு பதிலளிக்கிறார்.“தந்தை அமைப்பின் கீழ் சமுதாயம் முழுவிலும் நிலையான விதிகளின்படி வேலைப்பங்கீடு இருந்தது. ஒரு சட்டம் இயற்றுபவரால் இவ்விதிகள் புகுத்தப்பட்டனவா? இல்லை. பொருளாதார உற்பத்தி நிலைமைகளின் நிலைமையிலிருந்தே அது ஆரம்பத்தில் பிறந்தது. மிகவும் பின்னாலேயே அவை சட்டங்களின் தரத்துக்கு உயர்த்தப்பட்டன. வேலைப் பங்கீட்டினுடைய இத்தகைய பல்வேறு வடிவங்களும் இவ்வழியில் சமுக அமைப்பினுடைய பல தளங்களாக ஆயின” எனக் குறிப்பிடுகிறார். சாதி தோன்றக் காரணமென்ன என்ற கேள்விக்கு ஆரியப் பார்ப்பனரோ அல்லது சிறந்த முறையில் சட்டம் வகுக்கக்கூடிய சுவயம்பு மனு போன்று ஒரு மகானோ வரையறை செய்ததால் ஒரே இரவில் திடிரென உதித்தது கிடையாதென இது பதிலளிக்கிறது. அதிகபட்சமாகப் போனால் நடைமுறையில் இருந்தவற்றைத் தொகுத்தளித்து அவற்றைச் சட்டத்தின் தரத்துக்கு உயர்த்தியவர்களாக மட்டும் அவர்கள் இருந்திருக்க முடியும் எனக் கருதுகிறது. அத்துடனில்லாமல் இந்தியப் பொருளாதார உற்பத்தி நிலைமைகளின் நிலைமையிலிருந்தே பிறப்பதென்பதால் இந்தியப் பொருளாதார உற்பத்தி நிலைமைகளே காரணமெனவும் பதிலளிக்கிறது.

இந்தியப் பொருளாதய உற்பத்தி நிலைமைகள் எத்தகையன?

    தனிமனித உரிமைகளை நிலைநாட்டி, சாதிகளை ஒழிக்க விரும்பும் ஒவ்வொருவர் முன்னாலும் உள்ள கேள்வி இதுவாகும். சாதிகள் தோன்றிய காலத்தில் இந்தியாவிலிருந்த பொருளாயத உற்பத்தி நிலைமைகள் தெளிவாகின்றன.

(1)     வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இயற்கையை எதிர்க்க வேண்டிய தேவை இங்கே மிக அதிகமானதாக இருந்திருக்கிறது. வெள்ளத்தைத் தடுக்கவும், வறட்சியைப் போக்கவும், பாசன ஏற்பாடுகளைச் செய்யவும் மற்றும் பஞ்சம், தொற்று நோய், புயல், கடல் கொந்தளிப்பு எனக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கிறது. இதனை எதிர்கொள்வது என்பது ஒவ்வொருவருக்கும் இங்கே வாழ்வா? சாவா? எனும் பிரச்சனையாக இருந்திருக்கிறது.

(2)     வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சாதனங்கள் படுமட்டமானதாக இருந்திருக்கிறது. சாதி தோன்றிய காலத்தில் சாதனம் எனக்கூறக்கூடிய மட்டத்தில் எதுவுமே இல்லாமல் படுமட்டமான நிலைமையே இருந்திருக்கிறது. ரொமிலாதாப்பர் “வரலாறும் வக்கிரங்களும்” எனும் நூலில் “தமிழ் நாடு பாசனவசதிகள் விவசாயத்தில் ஒரு தொடர்ச்சியான வளர்ச்சி பெற்றிருந்ததைக் காண்கிறோம். பழைய கற்காலம் முதல் அக்கறை காணப்படுகிறது. இங்கும் மைசூரிலும் சோழப் பேரரசர்களும், விஜயநகரப் பேரரசர்களும் காவிரியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அணைகள் கட்டினர். தமிழ் நாடு சபைகளான ஊர், சபை என்ற நிறுவனங்கள். இவற்றில் பிரதிநிதித்துவம் பார்ப்பனர்களும், பெரு நிலக்கிழார்களும் மட்டுமே இருந்த போதிலும், பார்ப்பனர்களுடைய அக்ரகாரங்களில் மட்டுமே இவை ஒழுங்காக செயலாற்றிய போதிலும், பிரதேச பாசனவசதிகளை, முக்கியமாக ஏரி பாசனத்தை இச்சபைகள் செய்தன” எனக் கூறுகிறார்.    

   வெள்ளத்தையும் வறட்சிப் பஞ்சத்தையும் தடுத்து உயிர் பிழைக்க   

   வேண்டிய தேவை பழைய கற்காலம் முதல் இருந்திருப்பதை இது

   காட்டுகிறது. விவசாயம் செயற்கைப் பாசனத்தை பெரிதும் நம்பி

   இருந்ததைக் காட்டுகிறது.

   உலகப் பேரறிஞர் மார்க்சு ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சி என்ற கட்டுரையில் இதனை விளக்குகிறார் “பொதுவாக ஆசியாவிலோ நினைவுக்கெட்டாத காலம் முதல் அரசாங்கத்தில் மூன்று இலாகாக்கள் இருந்து கொண்டிருக்கின்றன. (1) நிதி (அ) உட்கொள்கை (2) யுத்தம் (அ) வெளிக்கொள்கை (3)கடைசியாக பொதுமராமத்து இலாகா. குறிப்பாக சகாராவிலிருந்து அராபியா, பாரசீகம், இந்தியா, தார்த்தாரி வழியாக மிகவும் உயர்ந்த ஆசிய பீடபூமிகள் வரையுள்ள பாலைவனத்தின் பரந்த பிரதேசங்களின் பருவ நிலையும், நிலவியல் நிலையும் கால்வாய்கள், நீரமைப்பு வேலைகள் மூலமான செயற்கைப் பாசனத்தைக் கீழ்த்திசை விவசாயத்தின் அடிப்படையாக்கியிருக்கின்றன….. தண்ணீரைப் பொதுவாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டுமென்ற இந்த முதன்மையான தேவை, இத்தாலியிலும் சுற்றுப் பகுதிகளிலும் இருப்பது போல மேற்கில் தனியாரைச் சுயகூட்டு தள்ளியிருப்பது போல, மிகவும் தாழ்ந்த நாகரீகத்திலும், சுயகூட்டில் செயல்பட முடியாத அளவிற்கு மிகப் பெரிய நிலப்பரப்பிலும் இருந்த கீழ்த்திசையில், அரசாங்கத்தில் மையப்படுத்தும் அதிகாரம் தலையிடுவதை அவசியப்படுத்திற்று. எனவே பொதுமராமத்து செய்ய வேண்டிய ஒரு பொருளாதார வேலை எல்லா ஆசிய அரசாங்கத்தைச் சார்ந்து நிலத்தை வளப்படுத்தும் இந்த வடிகாலும் புறக்கணிக்கப்பட்ட உடனே அழிந்ததானது. இந்துஸ்தான், பாரசீகம், எகிப்தின் பெரும் மாகாணங்கள் ஏராளமான அழிவுகள் பனை, ஈச்சை என ஒரு சமயம் சிறப்பாகப் பயிரிடப்பட்ட இடங்களைத் தற்சமயம் முழு நிலப்பகுதியும் தரிசாயும் பாலைவனமாயும் காணப்படுவதை வேறு வகையில் பார்த்தால் வினோதமான விசயத்தை விளக்குகிறது. அழிவைத் தருகின்ற யுத்தமானது எப்படி ஒரு நாட்டை நூற்றாண்டுகள் அளவிற்கு மக்களை இல்லாமல் செய்து அதனது நாகரிகம் அனைத்தையும் இழக்கச் செய்திருக்கிறதென்பதையும் கூட இது விளக்குகிறது.”

    தற்சமயம் கிழக்கிந்தியாவிலுள்ள பிரிட்டிஷார் அவர்களது முன்னோர்களிடமிருந்து நிதி, யுத்த இலாகாக்களை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் பொது மராமத்து வேலைகளை முழுதாகப் புறக்கணித்துவிட்டார்கள். எனவே அரசாங்கத் தலையீடின்றி சுதந்திரமான போட்டி எனும் பிரிட்டிஷ் கொள்கைப்படி நடக்க முடியாத விவசாயம் அழிவதையும் அடுத்த அரசாங்கத்தில் வளமாவதையும் நாம் பார்த்துப் பழகியிருக்கிறோம். ஐரோப்பாவில் நல்ல அல்லது மோசமான பருவங்களைச் சார்ந்து அறுவடை மாறுவது போல அங்கே நல்ல அல்லது மோசமான அரசாங்கத்தை அது பொறுத்தது.

    முழு ஆசிய உலகில் வரலாற்று ஆவணங்களுக்குமே ஒரு விநோதமாயிருக்கும் இதை முற்றிலும் வேறான முக்கியத்துவமுடைய சூழ்நிலை ஒன்றினால் கவனிக்கவில்லை என்றால் இவ்விதம் மோசமாகியிருக்கிற விவசாயத்தையும் புறக்கணிப்பையும் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளரால் இந்திய சமுதாயத்திற்குக் கொடுக்கப்பட்ட இறுதி அடியாக பார்க்க முடியாது. இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியலம்சம் எவ்வளவு மாறியதாகத் தோன்றினாலும் அதனுடைய மிகப் பழைய காலத்திலிருந்து 19–ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு வரை அதனது சமுக நிலை மாற்றமின்றியே இருந்திருக்கிறது.

    இத்தகைய இரண்டு சூழ்நிலைகளிலும் எல்லா கீழ்த்திசை மக்களையும் போலவே இந்து, அவனது விவசாயம் வர்க்கத்திற்கு முதன்மையான நிபந்தனையாயிருக்கிற பெரும் பொது மராமத்து வேலைகளை மத்திய அரசின் பொறுப்பில் விட்டுவிடுவது ஒரு புறம நாட்டினுடைய பரப்பில் கலைத்தும் ஸ்தல தொழில், விவசாய வேலைகளின் ஐக்கியத்தின் மூலம் சிறு மையங்களில் சேர்ந்துமிருப்பது மறுபுறம் இரு சூழ்நிலைமைகளும் நெடிய பழங்காலத்திலிருந்து குறிப்பான அம்சங்களையுடைய ஒரு சமுக அமைப்பைக் கொண்டு வந்திருக்கிறது. இத்தகைய சிறு சேர்க்கைகள் ஒவ்வொன்றுக்கும் சுயேச்சையான அமைப்பையும் வித்தியாசமான வாழ்வையும் தந்திருக்கிற கிராம அமைப்பெனப்படுவதே அது. ஐரோப்பாவில் நல்ல அல்லது மோசமான பருவங்களைப் பொறுத்து அறுவடை இருப்பது போல அங்கே நல்ல அல்லது மோசமான அரசாங்கத்தை அது பொறுத்தது என்பதன் மூலம் ஐரோப்பாவில் இல்லாத தேவை இங்கு இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார்.

    கால்வாய்கள் நீரமைப்பு வேலைகள் மூலம் செயற்கைப் பாசனம் செய்வது கீழ்த்திசை விவசாயத்தின் அடிப்படை எனக் கூறி உள்ளதன் மூலம் வேறெந்த நாட்டிலுமில்லாத செயற்கைப் பாசன முறை அடிப்படை அம்சமாய் இங்கிருந்ததைக் குறிப்பிடுகிறார். மிகவும் தாழ்ந்த நாகரீகத்தைக் கொண்டிருந்தன என்பதன் மூலம் வேறெந்த நாட்டிலுமில்லாத அளவுக்குப் படுமட்டமான நிலையில் அன்று இங்கு உற்பத்தி சாதனம் இருந்து வந்ததைக் கூறுகிறார். எனவே அரசாங்கத் தலையீடின்றி சுதந்திரமானப் போட்டியில் நடக்க வேண்டுமெனப் பிரிட்டிஷ் கொள்கைப்படி நடத்தமுடியாத விவசாயம் சீரழிந்தது என்பதன் மூலம் பிரிட்டனில் இல்லாத விவசாய நிலைமை இங்கிருந்ததைக் கூறுகிறார்.

   மேலும் தண்ணீரைப் பொதுவாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டியது முதன்மையான அம்சமாக இருந்திருக்கிறதென்பதையும் கூறுகிறார். உயர்ந்த சாதனம் இருக்கும் போது கண்ட கண்டவர்களும் கண்ட கண்டபடி மனம் போன போக்கில் உற்பத்தியில் இயற்கையை எதிர்ப்பதில் ஈடுபட்டாலும் அதிக உற்பத்தியும் அதிகப் பயனும் இருக்கக்கூடிய காரணத்தால் சக்திகள் சிதறிச் சீரழிவது உருப்பெறாமல் போவதென்பது சுரண்டுவதர்கான அபகரிப்பிலோ, இயற்கையை வென்று உயிரைக் காப்பாற்றிக் கொள்வதிலோ, பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது. ஆனால் படுமட்டமான சாதனம் இருக்கக்கூடிய நிலையில் மிகமிகக் குறைந்த உற்பத்தியே மிகமிகக் குறைந்த பலனே உள்ள நிலையில் கண்ட கண்டவர்களும் கண்ட கண்ட வேலையைச் செய்தது கொண்டு மனம் போனபோக்கில் செயல்பட்டால் சக்திகள் சிதறி உருவில்லாமல் போனால் சுரண்டுவதற்கு என்ன மிஞ்சும்? வெள்ளம் பஞ்சத்தைத் தடுத்து உயிரை எப்படிக் காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே இருந்துகொண்டிருக்கும் மிகக் குறைந்த சக்திகளையும் மனம் போனபோக்கில் செயல்படாமல் தடுக்க தனி மனித உரிமைகளை ரத்து செய்து “கடமையைச் செய் உரிமையைப் பேசாதே”என்னும் ராணுவக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்களை அணி வரிசையாக்கி ஒழுங்குபடுத்தி ஒருமுகப்படுத்த வேண்டியிருந்தது. பழியை யாரும் யார் மீதும் போட்டுத் தப்பித்துக்கொள்ள  முடியாதபடிக்கு யார் யார் எந்தெந்த வேலையைச் செய்து தீர வேண்டுமெனப் பொறுப்பும், வேலைப் பங்கீடும் கட்டுப்பாடும் திணிக்கப்பட்டது.

    மிகமிக மட்டமான சாதனமும் அதனால் மிகமிகக் குறைந்த உற்பத்தியும் இருக்கும்போது கூட அதிகமாகச் சுரண்டி அபகரிக்க வேண்டுமெனில் அதற்குத் தனி மனித உரிமைகளை ரத்து செய்து சக்திகளைச் சிதற விடாமல் தடுத்து (1) இராணுவத்தில் அடிமைகளாக இருப்பதுபோல் ஒரு முகப்படுத்தி உழைக்கும் படி மட்டுமே செய்ய வேண்டும். (2) சாதனம் படு மட்டமாக இருப்பதால் மனித உடலின் மிருக பலத்தை நம்பியே உற்பத்தி இருப்பதால் மிகமிகக் கடுமையாகக் கடின உழைப்புக்கு இணை இல்லையெனக் கூறி அதிக நேரம் மாடு போல் எல்லோரையும் உழைக்கச் செய்ய வேண்டும். (3) மிகமிகக் குறைவாக இருக்கும் உற்பத்தியில் அபகரிப்பை அதிகமாக்க வேண்டுமெனில் மக்களிடம் வாழ்க்கைச் செலவைக் குறைத்து எளிமையாகக் கோவணத்துடன் வாழும்படிச் செய்ய வேண்டும். இதுவே அன்று நடந்தது. ஒரு பக்கம் இயற்கையை, பஞ்சத்தை வென்று ஒவ்வொருவரும் உயிர் தப்பிப் பிழைத்தாக வேண்டும் எனும் கட்டாயம், மறுபக்கம் ஆண்டை வர்க்கத்திற்கோ சாதனமும் உற்பத்தியும் படுமட்டமாக இருந்த அன்றைய நிலையிலும் அதிகம் அபகரித்தாக வேண்டும் என்னும் தேவை. எனவே தனி மனித உரிமைகள் மறுக்கப்பட்ட ராணுவ அணி வரிசைகளாக சாதிகளாக மக்கள் ஆனார்கள,.ஆக்கப்பட்டார்கள். யார் யார் எந்தெந்த வேலையைச் செய்ய வேண்டும் எனும் கட்டுப்பாடும் திணிக்கப்பட்டது.

3.சாதி நீடிக்கக் காரணம் என்ன?

    சாதி தோன்றுவதற்கு எப்படி இந்தியப் பொருளாயத உற்பத்தி நிலைமைகள் காரணமோ அதே போன்றே சாதி நீட்டிப்பிற்கும் இந்திய பொருளாதார உற்பத்தி நிலைமைகளே காரணம். இந்தியாவில் நீண்ட நெடுங்காலத்திற்குச் சாதனங்களில் மாற்றமெதுவும் நிகழவே இல்லை. மட்டரகமான பழைய சாதனங்களைக் கொண்டே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு உற்பத்தி நீடித்தது. சாதனங்களில் மாற்றம் நிகழாமையால் பழைய மட்டமான சாதன நிலைமைகளில் கட்டமைக்கப்பட்ட 1) சுய தேவை கிராமப் பொருளாதாரமும் 2) சாதியமைப்பும் நிலைத்து நீடித்தது. சாதனங்களில் வளர்ச்சியும் மாற்றமும் நிகழும் போதுதான் உற்பத்தி அதிகரிப்பும் அதனால் விற்பனை அதிகரிப்பும் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் நிலபிரபுத்துவ ஆட்சியமைப்பும் சுயதேவை பொருளாதாரத்தையும் அடித்து வீழ்த்துவதும் நிகழும்.

    அப்படி சாதன மாற்றம் நிகழாதிருந்ததற்குக் காரணம் என்ன? இந்தியாவின் பொருளாதாய உற்பத்தி நிலைமையில் விவசாயத்திற்கான நிலம் என்பது பிரச்சனைக்குரிய பற்றாக்குறையான விசயமல்ல. பழைய சாதனத்தைப் பயன்படுத்தியே சாதனத்தை மாற்றித் தீரவேண்டிய அவசியமெதுவும் இன்றியே, சாதியமைப்புக் கட்டுமானத்தை மாற்றித்  தீரவேண்டிய அவசியமெதுவும் இன்றியே, சாதியமைப்பு கட்டுமானத்தை வைத்துக் கொண்டே, திரும்பத் திரும்பத் தொடர்ந்து காடுகளை வெட்டிப் புதுப்புது சுயதேவை கிராமங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்துகொள்ள முடியும் எனும் நிலை இருந்தது. அப்படிப் பரவி 57,600 சுயதேவை கிராமங்களையுடைய கிராமங்களின் கண்டமாக இந்தியா இன்று இருந்து கொண்டிருக்கிறது. சுயதேவை கிராமமும் சாதியமைப்பும் வாழ்க்கை உத்தரவாதத்தை மக்களுக்குத் தொடர்ந்து தந்து கொண்டிருந்ததால் பலமடைந்த நிலபிரபுத்துவ சக்தி திரும்பத் திரும்ப முதலாளித்துவ சக்தியை வெற்றி கொண்டுவந்திருக்கிறது. 

      வாழ்க்கை உத்திரவாதத்தைத் தரும் உன்னத சாதியமைப்பு, இந்த உலகத்தில் ஒருவன் பிறந்தவுடன் அவன் உயிர் வாழ்வது எப்படி? அவனுக்கு எங்கே வேலை தேடுவது? எந்த வேலையைத் தேடுவது? என்னும் கவலை ஏற்படுகிறது. விவசாயம், தொழில், வியாபாரம், கைத்தொழில் என உள்ள பல துறைகளில் எதிலுமே வேலை கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது? ஒரு துறையில் வேலை கிடைத்தாலும், தடையில்லாமல் கண்டவர்களும் அதிலே நுழைந்து, அளவுக்கு மீறிய போட்டி ஏற்பட்டு தனது பிழைப்பு பாதிக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது? எந்தத் துறையிலும் வேலை கிடைக்காமலோ அல்லது எந்த நேரத்திலும் வேலையை இழந்தோ பட்டினிக்குள்ளாகி மடிந்துவிடுவோமோ எனும் வாழ்க்கை பயம் வாழ்நாள் முழுவதும் ஏற்படுகிறது. அந்தக் கவலையையும் பயத்தையும் போக்கி கண்டவர் அத்துறையில் நுழைவதையும் தடைசெய்து சாகும் வரைக்குமான வாழ்க்கை உத்திரவாதத்தை நிச்சயப்படுத்தி தருகிறது சாதியமைப்பு.

    குறிப்பிட்ட துறையையும் குறிப்பிட்ட வேலையையும் நிச்சயித்த பின்னர் உற்பத்தியில், உழைப்பில் ஈடுபட சாதனத்திற்கு என்ன செய்வது? அதைக் கையாளும் நுட்பத்தை எங்கே எப்பொழுது யாரிடம் கற்றுக்கொள்வது? யாருமே சொல்லித்தரவோ, செய்துகாட்டவோ மறுத்துவிட்டால் என்ன செய்வது எனும் கவலை ஏற்படுகிறது அல்லது தடையேயின்றி கண்டவர்களும் அந்நுட்பத்தைத் தெரிந்துகொண்டு போட்டியிலிறங்கி பிழைப்பைக் கெடுத்தால் வாழ்வதெப்படி என்ற பயம் ஏற்படுகிறது. இந்தக் கவலையையும், பயத்தையும் போக்கி சாதனத்திற்கும் அதனைக் கையாள கற்றுக்கொடுப்பதற்குமான உத்திரவாதத்தை ஏற்படுத்தி கண்டவர் தெரிந்து கொள்வதற்கான உரிமையையும் வாய்ப்புகளையும் தடைசெய்து வாழ்க்கை உத்திரவாதம் செய்து நிச்சயப்படுத்தித் தருகிறது சாதியமைப்பு.

   சாதனத்தையும் கையாளும் திறமையையும் வாழ்நாள் முழுதுக்கும் தடையின்றி உத்தரவாதம் செய்த பின்னர் அதில் கஷ்டப்பட்டு உழைத்துக் கிடைக்கும் பலனை யார் அனுபவிப்பது? எப்போது அனுபவிப்பது? எனும் கவலை ஏற்படுகிறது. யாராவது சொந்தப்படுத்திக்கொண்டால் அல்லது பஞ்சம், வெள்ளம், நோய், தீ போன்ற எதிர்பாராத நெருக்கடியேற்பட்டால், வயதாகி தெம்பு குறைந்துபோனால், தனக்கோ தனது சந்ததிக்கோ அந்நேரத்தில் யார் தருவார்கள் எனும் கவலையும் பயமும் ஏற்படுகிறது. அந்தக் கலையையும் பயத்தையும் போக்கிக் கிடைக்கும் பலனைப்பற்றி முடிவெடுக்கும் உரிமை, அனுபவிக்கும் உரிமை முழுவதையும் அவனுக்கே சுவாதீனப்படுத்தி அவனும், சந்ததியும் பயமின்றி வாழ்வதற்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்தித் தருகிறது சாதியமைப்பு.

    ஒரேவரியில் சொன்னால் பிள்ளைகளைப் பெற்றுத் தருகிற ஒரு வேலையை மட்டுமே செய்தால் போதும் மற்றவற்றையெல்லாம் சாகும் வரை சாதியமைப்பே கவனித்துக்கொள்ளும்! அதாவது பிறக்கப்போகும் ஒருவரை எந்தவிதத் தடங்கலும் தாமதமுமின்றி எந்த நிமிடத்திலும் சேர்த்துக்கொள்ள தயாராக பிறந்துவந்த பின்பு ஆர்டர் (தேவைப்படுபவைகளைச் சொல்லி) கொடுத்து தயாரிக்க வேண்டிய அவசியமெதுவுமே இல்லாதபடிக்கு, அக்காரணத்தால் காத்திருக்க வேண்டிய சிரமமெதுவுமே அப்புதியவருக்கு ஏற்படாதபடிக்கு, அத்தாமதத்தால் அவர் இறந்துவிடாத (அல்லது) பலமிழந்துவிடாத படிக்கு அவருக்கு அவசியப்படக்கூடிய எல்லாவற்றையும் பற்றி அவரைக் கேட்காமலேயே அவர் பிறந்து வருவதற்கு முன்பே, முன்கூட்டியே தீர்மானித்து, தயாரித்து தயார்நிலையில் வைத்துக்கொண்டு, அவரை எதற்காகவும், எந்தவித (தேடியலையும்) சிரமத்திற்கும் (கிடைக்காத) கவலைக்கும் (கிடைத்ததை இழந்துவிடுவோமோ) பயத்திற்கும் ஆளாக விடாமல் (அக்காரணத்தை செத்துவிடாமல் அல்லது பலமிழந்து விடாமல்) உயிர் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து நிச்சயமாக்கிக் கொண்டு “அய்யாவின்” வருகைக்காகத் தவங்கிடந்து காத்துக்கொண்டிருப்பது சாதியமைப்பு. தடைகளின்றி இப்படி வாழ்நாள் முழுதுக்கும், பரம்பரை முழுதுக்குமே வேலை பங்க்கீட்டையும், உயிர் வாழ்வதையும் உத்தரவாதம் செய்து நிச்சயமாக்கித் தரும் சமூக பொருளாதாரக் கட்டமைப்பே சாதியமைப்பு. இந்த உயிரோட்டமான தன்மையினாலும், உயரிய தன்மையினாலும்தான் சாதியமைப்பு இன்றளவும் நின்று பிடித்து வருகிறது. சாதியமைப்பு இப்படி ஒவ்வொருவனுக்கும் வாழ்க்கை உத்தரவாதத்தைத் தருவதன் தேவையும் நோக்கமும் அன்றைய ஆளும் வர்க்கத்தின் சுரண்டலம்சத்திலிருந்து எழுகிறது.

    சாதனம் மட்டமாக இருக்கையில் மனிதனின் உடலுழைப்பையே உற்பத்தி பெரிதும் நம்பியிருக்கிறது. அந்நிலையில் அவன் உயிரோடிருந்தால் மட்டுமே சுரண்ட முடியும். எந்தளவு அதிக காலம் எந்தளவு அதிக நபர் உயிரோடு நீடித்து உழைக்கிறார்களோ அந்தளவுக்குத்தான் சுரண்டலின் பலனும் கிடைக்கும். எனவே ஆளும் வர்க்கமே வாழ்க்கை உத்தரவாதத்தைத் தந்து மனிதனை உயிரோடு வைத்திருப்பதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்கிறது. அதற்கான சாதியமைப்பை தோற்றுவிக்கிறது. ஆனால் இன்றோ நவீன சாதனங்களில் தயவு கிடைத்துவிட்டால் மனிதனை உயிரோடு வைத்திருக்கும் பொறுப்பை வாழ்க்கை உத்தரவாதம் தரும் பொறுப்பை ஆளும் வர்க்கம் எடுத்துக் கொள்ளத் தயாரில்லை. மாறாக திட்டமிட்டபடி குடும்பக் கட்டுப்பாடென்ற பெயரில் ஏழைகளைக் கருவறுக்கிறது.

4.சாதியமைப்பு எப்போது தோன்றியது?

    சாதியமைப்பின் இந்த பரம்பரை வேலை, பங்கீட்டை எந்தவிதத்திலும் ஆதிப் பொதுவுடைமை சமுதாயத்தின் விருப்பப்பூர்வமான, இயற்கையான வேலை பங்க்கீட்டுடன் ஒப்பிடவே முடியாது. ஏனெனில் இது டாக்டர் அம்பேத்கர் கூறுவதுபோல் “மனிதனிடமிருந்து அவன் பிறப்பதற்கு முன்பே அவன் சுய நிர்ணய உரிமையைப் பிடுங்கிவிடுகிறது.”

    சாதி ஏற்பாடு தொழிலாளரைப் பாகுபடுத்தும் ஏற்பாடாக மட்டும் இருக்கவில்லை, தொழில் பாகுபாட்டுக்கும் தொழிலாளர் பாகுபாட்டுக்கும் நிரம்ப வித்தியாசமுண்டு. தொழிலாளர்களுக்குள்ளே உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் முறை ஒரு பரம்பரை ஏற்பாடாகும். எந்த நேரத்திலும் தொழிலாளர் பரம்பரை முறையில் ஒருவர் விருப்பத்திற்குத் தக்கபடி தொழில் பாகுபாடு ஏற்படுத்தப்படவில்லை. சமூகம் விருத்தியடைய வேண்டுமானால் ஒவ்வொரு தனிநபருக்கும் தனக்கு இஷ்டமான தொழிலைப் பின்பற்ற சுதந்திரம் இருக்கவேண்டும்.

   ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய தொழிலை முன்பே நிர்ணயம் செய்திருப்பதினால் சாதி ஏற்பாட்டில் ஒவ்வொரு தனி நபருக்கும் தொழில் விசயத்தில் சுயநிர்ணய சுதந்திரம் இல்லை. சாதியோடு தொழிலும் இணைக்கப்பட்டிருப்பதனாலேயே சமூக முன்னேற்றத்திற்குச் சாதி பெரும் தடையாக இருந்து வருகிறது என டாகடர் அம்பேத்கர் “சாதியை ஒழிக்க வழி” என்னும் கட்டுரையில் கூறுகிறார்.

   சுயநிர்ணய உரிமை சுய விருப்பத்தை ஒவ்வொருவருக்கும் மறுக்கின்ற இத்தகைய ஒரு வேலை பங்கீடு, பலாத்காரத்தினாலன்றி வேறு எந்த விதத்திலும் திணிக்கப்பட்டிருக்க முடியாது. அத்தகைய ஒரு பலாத்காரம் ஆண்டை அடிமை சமுதாயத்தின் தொடர்ச்சியாகவன்றி அதற்கு முந்தையதாக இருக்க முடியாது. அத்தகைய ஆண்டை அடிமை சமுதாயம் உலகப்பேரறிஞர் மார்க்சு கூறுவது போல் “ஆரம்ப வரலாற்று உறவுகளிலிருந்து சமூக வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கான மாற்றம். ஓர் ஆரம்ப இயற்கையான வேலைப் பிரிவினையிலிருந்து சமூகப் பிரிவை வர்க்கங்கலாகக் காட்டும் வடிவத்திலான சமூக வேலைப் பிரிவினைக்கு இட்டுச்செல்லும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் தீர்மாணிக்கப்பட்டது” என்ற நிலையில்தான் ஏற்பட்டிருக்க முடியும்.

    இத்தகைய ஓர் ஆண்டை அடிமை சமுதாயமும, சாதி முறைகளும் ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இருந்ததா அல்லது பின்புதான் ஏற்பட்டதா என்பது ஆராயப்பட வேண்டிய விசயம். கி.மு1500-க்கும்        2500–க்கும் இடைப்பட்ட காலத்தில் தான் ஹரப்பா, மொகஞ்சதாரோவில் கிடைத்த முத்திரைகளை1964–இல் ஆராய்ந்த பின்லாந்து அறிஞர்கள் சிலர் அதிலுள்ள குறிகள் சிலவற்றுக்கான பொருளை கண்டுள்ளனர். அங்கு வாழ்த்தவர்கள் திராவிடர்களே என்றும், அவர்களின் நாகரீகம் ஆரியர்களாலேயே அழிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர்கள் கருதுகின்றனர். அம்முத்திரை உருவங்களை ஆராய்ந்தும், அங்குள்ள குளிக்கும் இடங்களைக் கொண்டும் இதர உள்ளுணர்வு முறைகளினாலும் ஆரியர் இந்தியாவிற்குள் நுழையும் முன்பே அங்கு நெடுங்காலம் சாதியமைப்பு முறை நிலைத்திருக்கிறது என்ற முடிவிற்கு அவர்கள் வந்துள்ளனர். (26.02.1964) ரஷ்ய அறிஞர்களும் இதே முடிவிற்கு வந்துள்ளனர். மிகப் பழைமையான கடைச்சங்ககாலத் தொல்காப்பியத்தில் “மேலோர் மூவர்க்கும் புணர்ந்த காரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல்காப்பியம்–பொருள்-142  கற்பியல்-3) எனவரும் அடிகள் மேலோர்,கீழோர், ஆண்டை, அடிமை நிலையை தெரிவிக்கின்றன. சங்ககாலக் குறிப்புகள் பலவும் நெல் வயல்களில் வேலை செய்த கடைநிலைப் பெண்களைக் கடைசியர் எனக் குறிப்பிடுகின்றன.

   இங்கு நமக்கு முதல் முக்கியமான கேள்வி மனிதன் என்ற வார்த்தைக்குள் அனைவரையும் அர்த்தப் படுத்துகின்றோமா என்பதே. ஏனெனில் தாழ்த்தப்பட்டவர்கள் எக்காலத்திலும் மனிதர்களாகக் கருதப்பட்டதே கிடையாது. சங்ககாலமும் சரி வேதகாலமும் சரி அவை பேசும் சாதிப்பிரிவுகளில் அடிமைகள் அடங்கியதே கிடையாது. எனவே அந்நாளில் சாதிகளைப் பற்றிய பேச்சென்பது .ஆண்டைகளுக்குள் தோன்றிய பிரிவுகளைப் பற்றிய பேச்சே தவிர வேறல்ல. அடிமைகளையும் மனிதர்களாகக் கருதுவோமேயானால் முதன்முதலில் தோன்றிய சாதி தாழ்த்தப்பட்டவர்களின் சாதியே அது ஆண்டை அடிமை சமுதாயத்தின் தோற்றத்துடன் சங்ககாலத்தில், வேதகாலத்தில், சிந்துவெளிகாலத்திலேயே தோன்றிவிட்டது. மனித சாதிகளை நான்காக பிரித்த இந்துமதம் அந்நான்கு

சாதியிலும் சூத்திர சாதிகளை அடிமட்டத்தில் வைத்து அந்த சூத்திர சாதியில்கூட தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்கவில்லை என்பதிலிருந்தே சதுர்வர்ண தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துமதம் அவர்களை மனிதன் என்னும் தகுதி உடையவர்களாகக் கருதியதில்லை என்பது திட்டவட்டமாகிறது. அன்றைய நிலையில் அவர்கள் இரண்டு கால மிருகம் என்பதைத் தாண்டி நடத்தப்பட்டதுமில்லை, கருதப்பட்டதுமில்லை.

5.சாதியமைப்பு தோன்றியது எப்படி?

   ஆதிப் பொதுவுடைமை சமுதாயம், ஆண்டை அடிமை சமுதாயம், நிலவுடைமைச் சமுதாயம், முதலாளியச் சமுதாயம், சோசலிச சமுதாயம் என மனித சமுதாயம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கொண்டிருக்கிறது. இதற்கு உட்படாத சமுதாயமோ, இனமோ, நாடோ கிடையாது. இது உலகம் முழுவதற்குமே பொருந்திய பொதுவிதி, அதே சமயத்தில் இந்த உள்ளடக்கம் அந்தந்த சமுதாயத்திற்கு, இனத்திற்கு, நாட்டிற்கு மட்டுமே இருக்கக்கூடிய பல்வேறு தனிச்சிறப்பான அம்சங்களை விவரமாக எடுத்துக்கொண்டு வெளிப்படுகிறது. அந்த வகையில் ஆண்டை அடிமை சமுதாயம் உருவானதென்பது உலகத்திற்கே உரிய பொதுவிதி. இந்தியாவோ, தமிழ்நாடோ அதற்கு விதிவிலக்கல்ல. அதே சமயத்தில் அது சாதியமைப்பு வடிவத்தை எடுத்திருப்பதென்பது இந்தியாவிற்கு மட்டுமேயுரிய தனியம்சமென்பதை முப்பதாண்டிற்கும் மேலாக இந்திய நிர்வாக அதிகாரியாக இருந்த ஹட்டனும் குறிப்பிடுகிறார். “இந்தியாவில் உள்ளதைப் போன்று சாதியை நினைவுபடுத்தும் அம்சங்களைக் கொண்ட சமூகக்கட்டமைப்புகள் தொடக்கத்தில் தோன்றியதற்கான சூழ்நிலையையும் சாதியின் தோற்றத்திற்கான சூழ்நிலையையும் ஒப்பிடும் போது சில பொதுவான அம்சங்கள் காணப்படுகின்றன. ஆயினும் தன் குணாம்சங்கள் முழுவதும் நிறைந்துள்ள சாதி அதாவது இந்தியாவில் நாம் காணும் சாதி முழுக்க முழுக்க இந்தியக் கருத்தும் சமூகக் கட்டமைப்புமாகும். இதற்கு ஒப்புமையான சமூக கட்டமைப்பு எங்கிலும் இல்லை. இந்தியாவில் சாதி எனும் அமைப்பில் கடும் சிக்கலுக்குரியதாகவும் மிக நுட்பமாகவும் கட்டிறுக்கத்துடனும் கொண்ட அம்சங்கள் நிறைய உண்டு. அவை எங்கிலும் இல்லை எனலாம்.” எனக் குறிப்பிடுகிறார்.

    டாக்டர் அம்பேத்கர் “பஞ்சாலப் பார்ப்பனனுக்கும் சென்னைப் பார்ப்பனனுக்கும் ஏதேனும் கோத்திரபந்தம் அல்லது ஒற்றுமையுண்டா? வங்காள தீண்டப்படாத சாதிக்கும் சென்னை தீண்டப்படாத சாதிக்கும் ஏதாவது கோத்திர ஒற்றுமையுண்டா? பாஞ்சாலப் பார்ப்பானுக்கும் சாமருக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது? சென்னைப் பார்ப்பானுக்கும் பறையனுக்கும் என்ன கோத்திர வித்தியாசம் இருக்கிறது? பாஞ்சாலாப் பார்ப்பான் பாஞ்சால சாமர் கோத்திரத்தைச் சேர்ந்தவனே. சென்னைப் பார்ப்பான் சென்னை பறை கோத்திரத்தைச் சேர்ந்தவனே. சாதி ஏற்பாடு கோத்திர வித்தியாசத்தைக் காட்டவில்லை. ஒரே கோத்திரத்தாருக்குள் ஏற்பட்டிருக்கும் சமூக பிரிவினையே சாதி ஏற்பாடு.” எனக் கூறுகிறார். அவரது இக்கூற்று அதாவது குலத்துக்கும் குலத்துக்கும் இடையில் நடந்ததா அல்லது குலத்துக்குள் நடந்ததா என்று ஆராயப்பட வேண்டிய ஒன்று.

    அகமண செயல்பாட்டின் தோற்றமே சாதியின் தோற்றம் என டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார். இது சாதி முறை தோன்றியதில் உள்ள மைய விசயம் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை பலாத்காரமாக தோற்கடித்து அவர்களது ஆடு, மாடு, நிலம், வீடு……..அனைத்து உடைமைகளையும் உரிமைகளையும் பலாத்காரமாக் கைப்பற்றிக்கொண்டு, நிராயுத பாணியாக்கி மிருகமாகத் தாழ்த்தியே உலகம் முழுதும் ஆண்டை அடிமை சமுதாயம் ஏற்படுகிறது. தமிழகமும் இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. உரிமையையும் உடைமையையும் இழந்து மிருக நிலைக்குத் தள்ளப்பட்டபின் அவர்கள் மனித தகுதியே இழந்து விடுகின்றனர். தொடர்ந்து அவர்களைச் சுரண்டி ஆதிக்கம் செலுத்துவதற்கு மனித தகுதியை அவர்கள் இழந்து இருப்பதே போதுமானதென மிருக நிலைக்கு கேவலப்படுத்தப்பட்டுள்ள அத்தகையவர்களுடன் உயர்நிலை மனிதர் வெறும் தொடர்பு எதையும் தொடர மாட்டார்களென அடிமையாக்கப்பட்டிருப்பதே போதுமானதென, அத்தோடு வெளிநாடுகளில் உள்ளவர்கள் விட்டுவிட்டனர். ஆண்டை அடிமைச் சமுதாயம் நீடித்தது நிலைக்க இந்த உத்திரவாதமே அங்கு போதுமானதாக இருந்தது. இக்காரணத்தால் நீண்ட காலப்போக்கில் அடிமைகளுக்குள்ளிருந்தும் சிலர் சிறிய அளவில்தான் எனினும் உடைமையை அடையவும் அதனால் ஒன்று கலக்கவும் வழியேற்பட்டு பிளவுகளாகச் சமுதாயம் நீடிப்பதென்பது மட்டுமே அங்கு தொடர்ந்தது.

    ஆனால் இங்கோ கைப்பற்றிக் கொண்ட அதிகாரங்களையும், உடைமைகளையும் தங்களுக்கு மட்டுமே உரியதாகப் பரம்பரை பரம்பரையாக சர்வகாலத்திற்கும் சாசுவதமாக்கி தக்கவைத்துக் கொள்வதெப்படி என ஆராய்கின்றனர். கைக்கு (தங்களுக்கு)க் கிடைத்த கையோடு (தங்களோடு) போய்விடாமல் நிரந்தரமாய் நீடித்துத் தங்களுக்கு மட்டுமின்றி தங்கள் பாரம்பரையுள்ள காலத்திற்கும் கிடைக்கச் செய்வதை உத்திரவாதப்படுத்துவதற்கான வழிமுறைகளைத் தேடுகின்றனர்.

   இங்கிருந்த பஞ்சமும் சாவும் கைப்பற்றியதை இழந்து விடாமல் தக்கவைத்துக் கொள்வதற்கான உத்திரவாதத்தை தேடச்செய்தது. அந்நிலையிலிருந்தே எந்த நாட்டிலும் இல்லாத அளவில் அடிமையை தீண்டாமை, காணாமை, நெருங்காமை, பேசாமை என எவ்வளவு கேவலமான நிலையில் வைத்திருந்தாலும் ஆணும பெண்ணும் விரும்புவதென்பது இயற்கையான மனித சுபாவம். அப்படி ஆண்டைகளுக்குள் உள்ள ஆணோ பெண்ணோ அடிமைகளுள் உள்ள ஆணையோ பெண்ணையோ விரும்பினால் திருமணம் செய்ய வேண்டி ஏற்படும். அப்படி திருமணம் செய்தால் குழந்தை பிறக்கும். குழந்தை பிறந்தால் அக்குழந்தையும் நான் உனக்குத்தானே பிறந்தேன், எனக்கும் சொத்தில் பங்கு கொடு எனக் கேட்கும். அப்போது அதற்குப் பங்கு கொடுப்பதால் ஆண்டைகளிடமிருந்து வரும் சொத்தும், சுகமும் அடிமைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்ச் சேர்ந்துவிடும். அதன்பின் ஆதிக்கச் சுரண்டலையே இழந்துவிட வேண்டிவரும் என்ற முடிவுக்கு வருகின்றனர். அப்படித் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள முடியாதென்பதால் மட்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் அகமண முறை கட்டுப்பாடு திணிக்கப்பட்டது. ஆண்டைக்கும் அடிமைக்கும் இடையிலான திருமணத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த வைகையிலான திருமணத் தடை முதன் முதலில் ஆண்டை அடிமைகளுக்கிடையில் தான் ஏற்பட்டிருக்க முடியுமேயல்லாமல் ஆண்டைகளுக்குள் அல்ல.

   எனவேதான் தாழ்த்தப்பட்டவர்களையும் மனிதர்களே என்ற நிலையிலிருந்து ஆராய்ந்தால் முதன் முதலில் தோன்றிய சாதி என்பது தாழ்த்தப்பட்ட சாதிகளே எனக் கருதவேண்டியுள்ளது. “பாரத வர்ஷத்தின் பூர்வீகவாசிகள்” எனும் நூலில் ஒப்பார்ட் அவர்களும் இதனைக் குறிப்பிடுகிறார். இத்தகைய தீண்டத்தகாதவர்கள் இந்திய சமுதாயத்தின் முதல் கிளை ஆனார்கள் என்கிறார்.

6.சாதிகள் எப்படிப் பெருகின?

   இதைப் பற்றியும் எண்ணிறந்த ஆசிரியர்கள் எழுதியிருந்தனர். இது குறிப்பாக இரண்டு விதங்களில் நடந்தேறியுள்ளது.

  1. இருந்துகொண்டிருக்கும் ஒரு சாதியில் உள்ளவர்களில் சிலர் சமுதாயத்தின் தேவையை ஒட்டி தங்கள் சாதியின்  வேலையிலிருந்து வித்தியாசப்பட்ட புதிய வேலையை செய்து  வருகின்றனர். அப்படி புதிய வேலையைச் செய்வோரின் வேலையைப் பொறுத்து அவர்களுக்குக் கிடைக்கும் வருமானம் அவர்களது சாதியினருக்கு கிடைப்பதைவிடக் கூடுதலாக அல்லது  குறைந்ததாக அமைகிறது. புதிய தொழிலையும் கூடுதலாக வருமானத்தையும் பெரும் பிரிவினர் தங்களது தாய்ச் சாதியினருக்கு முதலில் பெண் கொடுக்க மறுக்கின்றனர். பெண் எடுப்பதை மட்டும் தொடர்கின்றனர். சில காலங்கழித்து பெண் எடுப்பதையும் நிறுத்திக்கொள்கின்றனர். தமிழகத்தில் உள்ள பள்ளர் சாதியினர்  பறையர் என்ற சாதியிலிருந்து அவ்விதம் கிடைத்தவர்களே. இதனை பள்ளு இலக்கியமெனும் நூலிலிருந்து காணலாம். வருமானம் குறைவாக இருக்குமானால் தாய் சாதியினர் அவர்களுக்கு பெண் கொடுப்பதை மறுத்து பெண் எடுப்பதை மட்டும் சிலகாலம் தொடர்ந்து பின்னர் அவர்கள் அதையும் கைவிட்டுவிட்டனர்.ஒரிசாவில் உள்ள சந்திரக்கார் சாதியை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். வெள்ளையர் ஆட்சியின் போது இந்திய விவசாயத்தின் அடிப்படையாக இருந்த செயற்கைப் பாசன ஏற்பாட்டை அரசின் மராமத்து இலாகா பராமரிக்காமல்  கைவிட்டதால் ஏரி குளம் தூர்ந்து போய் தண்ணீர் தேங்காமல் விவசாயம் அழிந்து பஞ்சங்கள் பெருகின. தொடர்ச்சியான பஞ்சங்களின் கொடுமையினால் வறுமைக்குள்ளானவர்கள் 1866-இல்  தர்மசத்திரங்களில் கஞ்சி வாங்கிக்குடித்து உயிர் தப்பினர். அப்படி  அவர்கள் நடந்துகொண்டதற்காக அவர்களது தாய்ச் சாதியினர்  அவர்களை சாதியில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். அதன் விளைவாய் இன்று அவர்கள் சந்திரகார் எனும் புது சாதியாக ஆகிவிட்டனர். 100 (அ) 150 ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கைக்குப்  பஞ்சம் பிழைக்கப்போன தமிழர்கள் அந்த நாட்டில் சாதி கொடுமைகளின்றி சாதியே தெரிய வேண்டிய அவசியம் இல்லாமல் வாழ்ந்துவிட்டனர். இன்று அவர்கள் சுமார் 5 லட்சம் பேர் அகதிகளாக மீண்டும் தமிழகம் திரும்பியிருக்கின்றனர். சாதிவெறி கொடுமையுள்ள தமிழகத்தில் எந்தச் சாதியினரும் அவர்களை ஏற்பாருமில்லை பெண் கொடுப்பாருமில்லை.இந்நிலையில் அவர்களும் ஒரு புது சாதியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    

2) இருந்து கொண்டிருக்கக்கூடிய பழங்குடிகள் அப்படியப்படியே    ஒவ்வொரு பழங்குடியும் ஒவ்வொரு சாதியாக ஆகிவிடுவதும் உண்டு. அசாம் பள்ளத்தாக்கிலுள்ள பல சாதிகள் அப்படி  உருவானவையே. வங்காளத்திலுள்ள ராஜ்பாண்சி சாதியையும் அசாமில் கசாரிஸ், லாலுங்ஸ், மிகிர்ஸ் பழங்குடிகள் சேர்ந்த கோச்  சாதியானது இவ்வாறு உருவானதே. ஒரு குழந்தையானது அது பிறந்தது முதல் வீட்டின் குடும்ப சூழ்நிலையில் வாழ்கிறது. ஆனால்  பெற்றோரின் தொழிலை எந்தவித தனி முயற்சியும் இன்றி தன்னை  அறியாமலேயே கற்றுக்கொள்கிறது. அதுவே பருவமடைந்தபின் தனது தொழிலையே செய்கின்ற குடும்பத்தில் திருமணம் செய்தால் மட்டுமே தனது தொழிலுக்கு அது உதவியாக அமையுமெனக்    கருதுகிறது. இல்லையேல் கணவன் மனைவி ஒன்றுபட்டுத் தொழிலைத் தொடர முடியாமல் தாறுமாறாகச் செயல்பட்டு  வருமானம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பது    தங்களது தொழில் அனுபவத்தைத் தொகுக்கவும்     பரிமாறிக்கொள்ளவும் வளர்க்கவும் கட்டாயத் தேவை என்பதால்  அவரவரும் அவரவர் தொழிலில் உள்ளவரை மட்டுமே திருமணம்  செய்யும் நிலை ஏற்பட்டுத் தொழில் ரீதியில் சாதிகள் மேலும்    மேலும் கிளைக்கின்றன.               

7.சாதியைக் காப்பவர்கள் யார்?

    ஆண்டை அடிமைச் சமுதாயத்தில் தோன்றிய இந்த சாதிகள் வலுவான சமூக, பொருளாதாரக் கட்டமைப்பாய் நிலபிரபுத்துவ சமுதாயத்திலும் வேரூன்றி ஆயிரக்கணக்கான சாதிகளாக பெருகின. இந்தியாவில் இன்று தாழ்த்தப்பட்டவர்களில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேலான சாதிகள் இருக்கின்றனவென்று அரசாங்க விவரங்கள் கூறுகின்றன. உழைக்கும் மக்கள் எந்த அளவுக்கு அதிகமாக பிளவுபட்டுத் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு ஒரு பிரிவு மற்ற பிரிவை எவ்வளவு காலத்திற்குப் பரம வைரியாக கருதுகிறார்களோ அந்த அளவுக்கு வலுவான சுரண்டலாதிக்கத்தைத் தொடர முடியுமென்பதால் ஆளும் வர்க்கங்களுக்கு அந்த அளவுக்கு அது நல்லது. பாதுகாப்பானது. எனவே அழிந்துகொண்டிருக்கும் நிலபிரபுத்துவம் இச்சாதிகளை இச்சமூகப் பொருளாதார கட்டமைப்பைக் கட்டிக்காப்பதன் மூலம் தன்னைத் தற்காத்துக்கொண்டு அரும்பாடுபடுகிறது. எந்தத் தனி மனித உரிமைகளையும் தர மறுக்கிறது. ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ வர்க்கங்க்களோ மக்களுக்குத் தனி மனித உரிமைகளையும் வழங்கி சாதி அமைப்பைத் தகர்ப்பதென்பது உள்நாட்டில் சுதந்திரமான தொழில் வியாபார வளர்ச்சிக்கு வழிகோலிவிடுமென்பதால், அப்படியே அது வளர்ந்தால் இந்தியாவை மலிவான மூலப்பொருட்களுக்காகவும், உழைப்புக்காகவும் தங்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை சந்தையாகப் பயன்படுத்தி வருவதற்கும் போட்டியும் எதிர்ப்பும் வலுவடைந்து வருகிறது என்பதாலும் தங்களது சுரண்டல் ஆதிக்கத்திற்கு உறுதுணையான சமூக அடிப்படையாக இருந்து கொண்டிருக்கும் நிலபிரபுத்துவம் எவ்வளவு காலத்திற்கு எவ்வளவு பலமாகக் கட்டிக்காக்கப்படுகிறதோ அந்த அளவிற்குத்தான் தங்கள் சுரண்டலாதிக்கத்தை நீடிக்க முடியும் என்பதாலும் இச்சாதி சமூக பொருளாதார கட்டமைப்பை கட்டிக்காக்கவே பாடுபடுகிறது. எனவே அழிந்து கொண்டிருக்கும் நிலபிரபுத்துவம் தரகு முதலாளித்துவம் ஏகாதிபத்தியங்களே, இச்சாதியமைப்பைக் கட்டிக்காப்பவர்கள். சாதி ஒழிப்பின் எதிரிகளும் அவர்களே.

8.சாதி ஒழிக்கவேண்டிய அவசியமென்ன?

   இந்தியாவில் சாதிகள் தோன்றியதென்பது ஏதோ தற்செயலானதோ அல்லது ஏதோ தனிப்பட்ட நபரின் அல்லது பார்ப்பனரின் சூழ்ச்சியினாலோ அல்ல. இந்திய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் அன்றைய மட்டத்தில் அது தவிர்க்க முடியாததாயும் அத்தியாவசிய மானத்தாயும் இருந்தது. உற்பத்தி சாதனம் படுமட்டமானதாக இருந்த உற்பத்தி சக்தியின் அன்றைய மட்டத்தில் இயற்கையிடமிருந்து ஒவ்வருவனும் தப்பிப் பிழைக்க பஞ்சத்திலடிபட்டு மடிந்து போகாமலிருக்க செயற்கைப் பாசனம் மூலம் வாழ்க்கை உத்தரவாதம் பெறுவது கட்டாயத் தேவையாய் இருந்தது. அதனால் இவ்வாழ்க்கை உத்தரவாதத்தைக் கொடுத்த தனிமனித உரிமைகள் ரத்து செய்யப்பட்ட இராணுவ அணிவரிசைகளாக, சாதிகளாகத் தங்களை இயற்கையின் முன் நிறுத்திக்கொள்ள மக்கள் சம்மதித்தார்கள். அந்த ஒழுக்கக்கட்டுப்பாடு அதிகபட்சமாகப் பாதித்த தாழ்த்தப்பட்டவர்கள் கொதித்தெழுந்தபோது, பெரும்பான்மையும் சேர்ந்து அவர்களை அடக்கி அணிவரிசைப் படுத்தினார்கள். ஒவ்வொருவனுக்கும் வாழ்க்கை உத்திரவாதத்தைத்தந்த சாதியமைப்பு இல்லாமல் அன்றைய உற்பத்தி சக்திகள் வளர்ந்திருக்க முடியாது. செத்து மடிந்திருக்கும். உலகப் பேரறிஞர் மார்க்சு கூறுகிறார் “உண்மையில் ஆக என்ன நிகழ்ந்தது எனில் மனிதனின் அலட்சியத்தால் அல்லாமல் இருந்துவரும் உற்பத்தி சக்திகளினால் ஆட்டுவிக்கப்படுகிற, அனுமதிக்கப்படுகிற அளவிற்கே ஒவ்வொரு முறையும் மக்கள் தங்களுக்கான சுதந்திரத்தை வென்றெடுக்கிறார்கள். இதுவரை செயலாக்கப்பட்ட அனைத்து விமோசனமும் எப்படி இருந்தபோதிலும் கட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி சக்திகளை அடிப்படையாகக் கொண்டே இருந்து வருகிறது. இந்த உற்பத்தி சக்திகள் தரக்கூடிய உற்பத்தி சமுதாயம் முழுமைக்கும் போதாததாயும் சில நபர்கள் அவர்களது தேவைகளை இதரர்களின் செலவில் பூர்த்தி செய்தால்தான் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்துவதாயும், எனவே சிலர்-சிறுபான்மை-வளர்ச்சியின் ஏகபோகத்தை எடுத்துக்கொள்வதும் இதர மற்றவர்கள்-பெரும்பான்மை- தங்களது மிகவும் அத்தியாவசியத் தேவைகளைத் தீர்க்க வேண்டிய நிலையான போராட்டத்தினால் (புதிய புரட்சிகர உற்பத்தி சக்திகள்) உருவாக்கப்படும் வரை எந்த வளர்ச்சியிலிருந்தும் விலகிக்கொள்கின்றனர்.” (தொகுதி : 5 பக்க எண் : 432).

     எனவே அன்றைய நிலைமைகளின் கட்டாயத் தேவையினால் அன்றைய சமுதாயத் தனி மனித உரிமை பறிக்கப்பட்டதைச் சகித்துக்கொண்டு அனுமதித்து மீறிய தாழ்த்தப்பட்டவரை ஒன்று சேர்த்து அடைகிறது.

   ஆனால் உற்பத்தி சக்திகளின் இன்றைய வளர்ச்சி மட்டம் என்ன? விவசாத்தை மட்டும் நம்பி இராமல் தொழில் வியாபாரம் மேலும் மேலும் பெருகி வளர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். காரணம் உற்பத்தி சாதனம் என்று கட்டைக் கலப்பையோடும் கட்டை வண்டியோடும் முடங்கிவிடவில்லை. கட்டுச்சோறும் கால் நடையுமாக இல்லை. எந்த மேல் சாதியினர் ஒன்று சேர்ந்து ஓரணியில் நின்றார்களோ, இன்னமும் நிற்கிறார்களோ, அதே மேல் சாதியினர் முன்புபோல் விவசாயத்துடன் நிற்காமல் தொழில் வியாபாரமும செய்கிறார்கள். அவர்களுடைய தொழில் வியாபாரம் பெருக வேண்டுமென்றால் அவர்கள் சாதிகளிலேயே உள்ள நிலபிரபுத்துவ சாதி வெறியர்கள் போடும் கட்டுப்பாடுகளை அவர்களே தகர்த்து தனி மனித உரிமைகளை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். சைக்கிள்களை வைத்திருக்கும் ஒரு கவுண்டர் தெருவில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் சைக்கிளில் போகக்கூடாது என்னும் சாதி வெறி கவுண்டனின் நிலையை ஏற்றுக்கொள்ள முடியுமா? ஏற்றுக்கொண்டால் தொழில் வளருமா? சினிமா கொட்டகை நடத்தும் ஒரு ரெட்டி தாழ்த்தப்பட்டவனைத் தொட்டால் தீட்டு எனும் சாதி வெறி ரெட்டியின் நிலையை ஏற்றுக்கொள்ள முடியுமா? ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கொட்டகை கட்ட முடியுமா? இத்தகைய புது சாதனங்களையுடைய தொழில் வியாபார சக்திகள் மேல் சாதிகளிலேயே உள்ளன. மூலதனமில்லாததால் தாழ்த்தப்பட்டவர்கள் கையில் தொழிலோ வியாபாரமோ இல்லை. எனவே எந்த மேல் சாதியினர் இன்றுவரை ஒன்று சேர்ந்து வந்து உதைத்தார்களோ அவர்களுக்குள்ளாகவே பிளவுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. எந்த சாதியமைப்பு இன்றுவரை அவர்களது வளர்ச்சிக்கு உதவியாய் வரலாற்றில் இருந்ததோ அதுவே அவர்களுக்கு விலங்காக மாறிவிட்டது. எனவே சமுதாயத்திற்கே இன்று விலங்க்காகிவிட்டது. எனவே மேல் சாதிகளிலுள்ள தேசிய முதலாளித்துவ சக்திகள் உட்பாடு அவர்களது தொழில் வியாபாரத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தால் சாதியமைப்பை ஒழிக்க வேண்டிஇருக்கிறது. யாரும் யாருக்காகவும் பரிதாபப்பட்டு சாதியை ஒழிப்பதில்லை. அப்படி பரிதாபத்தில் ஒழிக்கவும் முடியாது. பரிதாபப்பட்டுச் சாதிகளை ஒழிப்பர்கள் எனில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரிதாபப்பட்டுச் செய்திருப்பார்கள்.

9.சாதியை அழிக்கக்கூடியவர்கள் யார்?

   விற்பனை அம்ச தேசிய முதளித்துவ சக்திகள் தங்களது தொழில் வியாபாரத்தைப் பெருக்க வேண்டிய நிலபிரபுத்துவ தரகு முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தில் சாதி வெறி சக்திகளை முறியடித்ததாக வேண்டும். ஆனால் சர்வவல்லமை படைத்த சர்வதேச ஏகாதிபத்தியமும் கோடிக்கால் பூதமான பாட்டாளி வர்க்கமும் தோன்றிவிட்ட பின்னால் அவர்கள் இன்று தலைமையளிக்கத் தயாரில்லை. தலைமையளிக்காதது மட்டுமின்றி பங்கு  கொடுக்கக்கூட தயங்குகின்றன. எதிரியைக்கண்டு மலைக்கின்றனர். பாட்டாளிகளைக் கண்டு பயப்படுகின்றனர். இந்நிலையில் அவர்களால் தலைமையளிக்கவும் முடியாது. பாட்டாளி வர்க்கம் ஒன்றினால் மட்டுமே உறுதியான தலைமையை அளிக்க முடியும்.

   பாட்டாளி என்று சொல்லும்போது நகரம் கிராமம் அனைத்து இடங்களிலும் அனைத்து சாதிகளிலும் அவர்கள் கலந்து கிடக்கிறார்கள். அதே நேரத்தில் கிராமங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களிலும் அவர்கள் குவிந்து கிடக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்டவர்கள் மனிதனாகக்கூட கருதப்பட்டது கிடையாது. மேல்சாதியினர் வசிக்கும் தெருக்களில் மற்ற சாதிகளைப் போன்று சேர்ந்து வாழக்கூட அனுமதிக்கப்பட்டதில்லை. நிலபிரபுத்துவ சாதிவெறிக் கொடுமையின் முழுத்தாக்குதலுக்கும் தினமும் ஆளாகிக் கொண்டிருப்பவர்களும் அவர்களே! நிலபிரபுத்துவ பரம வைரிகளாகக் கிராமப்புறங்களில் நின்றுகொண்டிருப்பதும் அவர்களே! சாதிகள் இருப்பதும் நீடிப்பதும் யாருக்கும் சகிக்க முடியாததாயும் அவமான முள்ளதாயும், தினமும் இருக்கிறதோ அவர்களுக்கே அதை ஒழித்துக் கட்ட வேண்டிய முதன்மை தேவையானதாக இருக்கிறது. கட்டாயத் தேவை உடையதாக இருக்கிறது. யாருக்கும் சாதிகள் நீடிப்பது லாபம் அளிப்பதாயும் மதிப்பிற்குரியதாயும் இருக்கிறதோ அவர்களுக்கு அதை கட்டிக்காக்க வேண்டிய தேவையே இருக்கிறது. அதனால்தான் அவர்கள் மீதான சாதி வெறிக் கொடுமையை அனைத்து முற்போக்குகளும் கண்டும் காணாமல் இருக்கின்றன. அதுமட்டுமின்றி அம்மக்களுடைய சனநாயக உரிமைகளை முன்வைத்தால் அம்மக்களது தனிமனித உரிமைகளை ஆதரிக்க வேண்டிய உண்மையான தேசிய முதலாளிக்கே, அவனது தொழில் வியாபார சுரண்டல் தேவைக்கே அத்தியாவசியமானது. அம்மக்களது சனநாயக உரிமைக்கான முதலாளித்துவ சனநாயக சக்தியாகக் கூட இருக்க முடியாது. இந்த நிலையில் கொசுரு பிசுரு இன்றி ஈவிரக்கமின்றி சாதியமைப்பை அழிக்கக்கூடிய முன்னணி சக்தி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்க முடியும்.

10.சாதி ஒழிப்பு போராட்ட வரலாறு என்ன?

    சாதி என்ற பெயரில் தனிமனித உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து சாதி தோன்றிய காலம் முதல் எண்ணற்ற போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அவை அனைத்தும் சாதி மோதல்களையும் சமய மோதல்களையுமே நடத்தியிருக்கின்றன. சாதி மோதல் ஒவ்வொன்றுமே உயர்ந்த சாதி என்ற பெயரில் அனுபவிக்கப்பட்டுவரும் தனி உரிமைகளை எதிர்த்த மோதல்களே. நிலபிரபுத்துவத்தால் கட்டிக் காக்கப்படும் சாதி என்னும் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை தகர்த்தெறிய நடந்த மோதல்களே. சனநாயக உரிமைகளுக்கான மோதல்களே. எனவே இந்தியாவின் வர்க்கப் போராட்ட வரலாறு என்பது சாதிசமையப் போராட்ட வரலாறாகவே இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் பலாத்காரத்தின் மூலமே அவை முறியடிக்கப்பட்டிருக்கின்றன. சனநாயகத்தை விரும்பிய மக்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட இந்த சாதியமைப்பை என்றுமே ஏற்றுக் கொண்டது கிடையாது.

   அகமண முறையை எவ்வளவுதான் திணித்திருந்தாலும் விரும்பிய ஆணும பெண்ணும் மணமுடிப்பதை முழுதாக தடுத்திட முடியவில்லை. “செல்லத்தக்க திருமணமென்பது ஆண், பெண் இருவரும் அதே சாதியைச் சேர்ந்தவர்களாய் இருப்பதே.” (மனு அத்தியாயம்-10, சுலோகம்-5) என வேதசாத்திரங்கள் அனைத்தும் தடைகளையும் விதித்தன. அப்படி இருந்தும் அசாமில் பார்ப்பனப் பெண்ணுக்கும்  கீழ்ச்சாதி ஆணுக்கும் இடையில் பிறந்தவர்களைக் கொண்ட சுத்சாதி, பார்ப்பனப் பெண்ணுக்கும் சத்திரிய ஆணுக்கும் பிறந்தவர்களைக் கொண்ட சுடாசாதி, வங்காளத்தில் பார்ப்பனப் பெண்ணுக்கும் சூத்திர ஆணுக்கும் பிறந்த சண்டாளர் சாதி, பார்ப்பனனுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவர்களைக் கொண்ட நிஷதா சாதி போன்ற கலப்பு சாதிகளை அவை தடுத்திட முடியவில்லை. மனுதர்ம நூலே சங்கர சாதிகள் என்ற பெயரில் இவற்றைப் பற்றி குறிப்பிடுகிறது. பிந்திய வேத இலக்கியங்கள் எட்டு கலப்பு சாதிகளையும் வசிஸ்தாபத்தையும் பவுதாயன பதினைந்தையும், கௌதாமா பதினெட்டையும் மனு 72-ஆம் பிரமவை வரதப்புராணா நூற்றுக்கு மேலானதையும் இத்தகையதாகக் குறிப்பிடுகின்றன. சுக்ராச்சாரிய பார்ப்பனனின் மகள் தேவயானை சத்திரிய யாயபதியிடம் பார்ப்பனரும் சத்திரியரும் பிரிக்க முடியாதவர்கள் என்பதால் தன்னை மணந்தே ஆக வேண்டுமெனக் கேட்கிறார். (ஆதிபருவ-76) கலப்புத் திருமணங்களைப் பற்றிக் குறிப்பாக பார்ப்பனர் சத்திரியர் திருமணங்களைப் பற்றி காளிதாசரின் நூல்கள் குறிப்பிடுவதாக பாண்டே கூறுகிறார். இவை அனைத்தும் மேல்சாதிகளுக்குள் கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டதைக் காட்டுகின்றன.

   மாடுகளின் உபயோகம் கண்டுபிடிக்கப்பட்டபின் மாட்டு சாணி முதல் ஏர் வண்டி கவலை வரை விவசாய வேலைகள் அனைத்திற்குமே மாடு அவசியப்பட்டது. அனைத்து வேலைகளையும் அடிமைகள் மட்டுமே செய்த இடத்தில் மாடுகளுடைய உழைப்பு சேர்ந்ததும், வேலை செய்யவில்லை எனக்கூறி கண்மண தெரியாமல் அடிமைகளைக் கொல்வது அவசியமில்லை என்னும் நிலை உண்டாயிற்று. அதனால் அடிமைகளையும் மாடுகளையும் கொல்லக்கூடாது என்னும் அகிம்சைத் தத்துவம் பிறந்தது. சமணரும், புத்தரும் சாதியின் தளர்வைக் கோரினர். பார்ப்பன சத்திரிய மோதலாக அது வெடித்தது.

   பார்ப்பனர்கள் நந்தர்களுடைய ஆட்சியை தூக்கி எறிந்தபிறகு சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியைத் தொடங்குகின்றனர். பிறகு மௌரியர் ஆட்சியைத் தூக்கி எறிந்து சுங்க்கர் ஆட்சியைத் தோற்றுவிக்கின்றனர். மீண்டும் அதே பார்ப்பனர்கள் சுங்க்கர் ஆட்சியைத் தூக்கி எறிந்து சாதவானர் ஆட்சியைத் தோற்றுவிக்கின்றனர். இப்படி வட இந்தியாவில் பார்ப்பனர்கள் திரும்பத் திரும்பக் கைப்பற்றி சாதி வெறியை நிலை நாட்டுகின்றனர்.

   தமிழ்நாட்டில் திருவள்ளுவர் கொல்லாமையையும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறி சாதியின் தளர்வைக் கோருகின்றார். சித்தர்களும் சாதி முறைகளை சாடுகின்றனர். குதம்பை சித்தர் ஆண்சாதி பெண்சாதி, ஆக இருசாதி வீண்சாதி மற்றெல்லாம் எனப்பாடுகிறார். ஔவையாரோ சாதி இரண்டொழிய வேறில்லை என்கிறார். இப்படிப் பரவலாக சாதி எதிர்ப்பு நிலைகள் இருந்திருக்கின்றன. புத்த சமண மதங்களும் வேரூன்றின. ஆதலால் இந்துமதம் 72 பிரிவுகளாக உடைந்தது. நிலபிரபுத்துவத்தின் சார்பில் ஆதிசங்கரர் தோன்றி ஆறு பிரிவுகளை மட்டும் அங்கீகரித்து ஒன்றிணைத்து சண்மதம் எனப்பெயரிட்டு பக்தி இயக்கமென்ற பெயரில் சாதிமத வெறியைக் கட்டவிழ்த்து விடுகிறார். கி.பி 7–ஆம் நூற்றாண்டில் இருந்து 10 வரை இது நடந்தது.

   ஆதிசங்கரர் புத்த மடங்களை நெருப்பு வைத்துக் கொளுத்துகிறார். ஞானசம்பந்தனோ கூன்பாண்டியன் என்னும் சுந்தரபாண்டியனின் துணைகொண்டு 8000 சமணர்களை அனல்வாதம் புனல்வாதம் என்ற பெயரில் மதுரையில் கழுவிலேற்றுகிறான். வைணவர்களோ புத்த விக்ரகங்களை உடைத்து உருக்குகின்றனர். சங்கராச்சாரி மதம் புத்த மதங்களில் நெருப்பு வைத்தும் சைவமதம் சமணர்களைக் கழுவிலேற்றியதும் வைணவமதம் புத்த விக்ரகங்களை உடைத்து உருக்கியதுமான காரியங்கள் எல்லாம் நினைத்துப் பார்ப்போமானால் பிற்காலத்தில் முகமதியர்கள் செய்ததாகச் சொல்லப்படுபவை எதற்கும் இக்காரியங்கள் தாய் என விளங்கும். ராமானுசரும் சாதி தளர்வைக் கோருகிறார். நந்தனார் தனக்கும் வழிபாட்டுரிமையைக் கோருகிறார். கி.பி 11-லிருந்து 19 வரை வலங்கை இடங்கை சாதி மோதல்கள் எழுந்தன. 1970-இல் திருச்சி தஞ்சை மாவட்டங்களில் பெரும் மோதல்கள் ஏற்பட்டன. இடங்கை சாதியினர் தனிச்சலுகைகளை எதிர்க்கின்றனர். வலங்கை  சாதியினரோ அதை நிலைநிறுத்த முயல்கின்றனர். மக்கள் முஸ்லிம் கிறித்துவ மதங்களுக்கு மாறுவதைத் தடுக்க பள்ளுபாடல்கள் எழுகின்றன. சாதி முறைகளை எதிர்த்த காத்தவராயன், முத்துப்பட்டன் நாடோடி பாடல்களும், வள்ளலார் இயக்கமும் விரிவடைகின்றன.

   இதைப்போன்றே இதர மாநிலங்களில் சாதி எதிர்ப்பு இயக்கங்கள் வெடிக்கின்றன. கர்நாடகத்தில் 12-ஆம் நூற்றாண்டில் பசவர் இயக்கமும், கேரளத்தில் 19-ஆம் நூற்றாண்டில் நாராயணகுரு இயக்கமும்,மராட்டியத்தில் 19-ஆம் நூற்றாண்டில் ஜோதிராவ் புலேயின் சத்திய சதக் மண்டல இயக்கமும், இந்திய மாநிலங்களில் 17-ஆம் நூற்றாண்டில் ஜகஜீவன்தாஸ் இயக்கமும், 19-ஆம் நூற்றாண்டில் ரயிதாஸ் இயக்கமும், இராமநந்தர் இலக்கியம், 15-ஆம் நூற்றாண்டில் கபீர்தாஸ் இயக்கமும் என எண்ணற்ற இயக்கங்கள் வெடித்தன. இந்த இயக்கங்கள் அனைத்துமே சமய வரம்புகளுக்குள் நின்று தீர்வுக்கான முயல்கின்றன. அதகபட்சமாகப் போனால் சாதிவெறியின் பின்னணியாகப் பார்ப்பனீயத்தை மட்டுமே கருத்தின. அதன் பின்னணியாக இருந்த நிலபிரபுத்துவ வர்க்கத்தையும் ஆட்சியையும் தூக்கி எறிந்து, நிலத்தையும் அதிகாரத்தையும் கைப்பற்றாமல் சாதிகளை ஒழிக்க முடியாதென்பதைக் காணத்தவரினர். சாதியமைப்பு நிலபிரபுத்துவத்தால் காக்கப்படும் ஒரு சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு என கருதவில்லை. அதனாலேயே அவை தோல்வியிலும் வர்க்க சமரசத்திலும் முடிந்தன.

   இந்தியாவிற்குள் வந்த ஏகாதிபத்தியம் நிலபிரபுத்துவ சாதி அமைப்பிற்கும், மக்களுக்கும் இடையிலிருந்த இந்த முரண்பாட்டை சரியாகக் கையாண்டது. இந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஈடேற்ற வேண்டி ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் தீட்டில்லாமல் பழகி அவற்றைப் படைகளாக்கின. கிறித்துவத்திலும் சேர்த்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொடுமைகளுக்குள்ளான அம்மக்களுக்கு மதமாற்றம் என்பது சாதிவெறி எதிர்ப்பின் வடிகாலாயிற்று.

   இதனை 17-ஆம் நூற்றாண்டுத் தமிழகம் எனும் நூலில் “போர்த்துக்கீசியரிடம் மக்கள் பெரிதும் வெறுப்புக் கொண்டிருந்தனர். அவர்கள் பன்றி இறைச்சி மாட்டிறைச்சி ஆகியவற்றை உட்கொண்டு போதைப்பொருட்கள் அருந்தி பறையர்களுடன் கூடிக் குலாவிக்கொண்டு இருந்ததனால் இவ்வாறு வெறுப்புக் கொண்டிருந்தனர்.”என வருவதிலிருந்து காணலாம். பள்ளர் பறையர் போன்ற அடிநிலை மக்களிடம்தான் கிறித்துவமதம் வேகமாகப் பரவிற்று என்பதை “பள்ளர் யார்” நூலில் “சாக்காட்டைவிட மோசமானச் சமூக சடங்குகளிலிருந்து எப்படி விடுதலை அடைவது என்று சுயமரியாதைக்கும் மனரோசத்திற்கும் மதிப்பளித்த பள்ளர் அனைவரும் எண்ண ஆரம்பித்தனர். ஐரோப்பிய கிறித்துவ பாதிரியார்களின் மனிதாபிமான உயர்வும் சமத்துவப்போக்கும் இவர்களை மிகவும் கவர்ந்தது. ஏராளமான பள்ளர்கள் மதமாறினார்கள்.” என உள்ளதிலிருந்து காணலாம். ஆனால் கூடிய சீக்கிரமே ஏகாதிபத்தியம் இங்குள்ள நிலபிரபுத்துவத்துடன் சமரசமாகி சாதியமைப்பைக் கட்டிக்காக்கும் வகையில் மக்களின் முதல் எதிரியாகிவிட்டது.

   சென்னை மாகாணத்தில் நிலவிய அடிமை முறை பண்ணை அடிமை முறையாகும். இது நிலத்தோடு கட்டுண்டதாகும். 1801-ஆம் ஆண்டில் வருவாய் வாரியத்தில் இப்பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. அப்போது கருநாடகப் பகுதி கலெக்டர் ஜெ.சி.ரேவன்ஷா பின்வருமாறு குறிப்பிட்டார். இந்த அடிமைகள் தம்முடைய எஜமானர்களைக் கைவிட்டுச் செல்வதை நாம் ஆதரிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் இந்நாட்டின் சமூக மரபுகளினால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அமைப்பைச் சீர்குலைப்பதாகும். அவ்வாறு நடந்தால் அது நம் வருமானத்தைக் கணிசமாகக் குறைக்கும். இவ்வாறு அடிமைத்தன ஒழிப்பின் மூலம் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படும் என்பதால் இந்த அடிமைத்தனம் தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்பட்டது.” என வருகிறது. எனவே ஏகாதிபத்தியமும் நிலபிரபுத்துவமும் இன்று சாதி ஒழிப்பின் எதிரிகளாகிவிட்டன.

    20-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பெரியார் இயக்கமும், மராட்டியத்தில் அம்பேத்கர் இயக்கமும் சாதி ஒழிப்பு முயற்சிகளைத் தொடங்கின. பி.ஆர.அம்பேத்கர் அவர்கள் பொதுவுடைமையை ஏற்றுக் கொள்பவரல்ல. மதத்தை எதிர்ப்பவரும் அல்ல. ஆனால் அவர் சாதிகளை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று மனப்பூர்வமாக விரும்பினார். குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிமனித உரிமைகள் கிடைக்க வேண்டுமென அயராது பாடுபட்டார். செகசீவன்ராம் போல் இந்திய ஆளும் வர்க்கத்திடம் பதவிக்காக அவர் தொங்கிக்கொண்டிருக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்களின் நலனை உயிர்மூச்சாகக் கொண்டு தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தினார். அன்றைய ஆளும் வர்க்கங்களுக்கு அவர் தொடர்ந்து தலைவலியாகவே இருந்தார். அவர்களால் அவரைக் கைவிடவும் முடியவில்லை, அணைத்துக்கொள்ளவும் முடியவில்லை. பாபா சபர்க்கார் என்பவன் குர்த்து கோடி ஜகத்குரு என்ற மதத்தலைவனிடம் 500 ரூபாய்களைக் கேட்டு அதை அம்பேத்கரின் சமையல்காரனுக்கு லஞ்சமாகக் கொடுத்து அவரின் உணவில் விஷம் கலந்து கொல்லத் திட்டமிட்டுத் தோல்வியடைந்தான். அவர் கடைசியாக இறந்ததாகச் சொல்லப்படுவதும் சந்தேகப்படுவதே. ஏனெனில் நம்மவர்கள் நந்தனாரையும் வள்ளலாரையும் சோதியில் கலக்கச் செய்தவராயிற்றே.

   ஆனால் அவருடைய அணுகுமுறை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சாதி ஒழிப்பின் எதிரிகளிடமே கெஞ்சிக் கேட்பதாகவே இருந்தது. ஏகாதிபத்தியத்திடம் கெஞ்சிக் கூத்தாடி தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி முறையை வாங்கினார். அதன் மூலம் பொதுத்தொகுதி தனித்தொகுதி ஆக இரண்டு ஓட்டு உரிமைகள் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைத்தது. அதன் மூலமாவது தாழ்த்தப்பட்ட எம்.பிக்கள் அதிகமானாலாவது தாழ்த்தப்பட்டோகளுக்கு அதிக உரிமைகள் கிடைக்காதா என ஏங்கினார். ஆனால் ஏகாதிபத்தியமே விட்டுக்கொடுத்தாலும் இங்குள்ள தரகு முதலாளித்துவமும்-நிலபிரபுத்துவமும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. காந்தி சாகும்வரை உண்ணாவிரதமிருந்து பூனா ஒப்பந்தத்தின் மூலம் அதனை முறியடித்தார். இப்படி வாழ்நாள் முழுதும் மோதி மோதி அடிபட்டுப் பலனின்றிப் போகவே“பறிபோன உரிமைகளைப் பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ மன்றாடுவதன் மூலமோ நியாயம் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்களின் முன் வெட்டுகிறார்களே தவிர சிங்கங்களை அல்ல.”என இறுதி முடிவாக வழிகாட்டிச் சென்றார். நீண்ட நெடுங்கால அலைமோதல்களுக்குப் பிறகு தனது சொந்த அனுபவத்தையே  திரட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் சொன்ன கடைசி வழிகாட்டல் இதுவே.

   பெரியாரைப் பொறுத்தவரையில் எந்த மதத்தையும் எந்தக் கடவுளையும் ஏற்றுக் கொண்டதில்லை. அதே நேரத்தில் பலாத்கார அமைப்புடைய எதிர்ப்பைப் பலாத்கார அமைப்பு மூலம் மட்டுமே வீழ்த்த முடியும் என்ற நிலையை எடுத்தவருமல்ல. இவர் சாதி ஒழிப்பைப் பற்றிக் காட்டிய அக்கறை என்பது பார்ப்பனீய ஆதிக்கத்தைப் பிற்படுத்தப்பட்டவர் எதிர்ப்பதையே மையமாகக்கொண்டது.

   அம்பேத்கர், பெரியார் இருவருமே பார்ப்பனீயத்தைத் தகர்த்தால் சாதி ஒழிந்துவிடும் எனப்பார்க்கின்றனர். பார்ப்பனீயத்தைத் தகர்க்க கல்வி, வேலை, அரசியல், அதிகாரம் அனைத்திலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கிடைத்தால் சரியாகிவிடும் எனப் பார்க்கின்றனர். அத்தகைய பிரதிநிதித்துவத்தையும் சாதியமைப்பின் காவலர்களான ஏகாதிபத்தியம், தரகு முதலாளித்துவம், நிலபிரபுத்துவத்திடம் அம்பேத்கரைப் பொருத்தவரையில் கெஞ்சியே, பெரியாரைப் பொருத்தவரையில் வாய் மிரட்டல் மூலமே சாதிக்க முயன்றனர். பார்ப்பனீயம் இந்துமதத்தின் பின்னணியாகச் சாதியத்தின் காவலர்களாக நிற்பது அரசியல் அதிகாரம் உடைய ஏகாதிபத்தியம், தரகு முதலாளித்துவம், நிலபிரபுத்துவமே எனக் காண மறுத்தனர். அவர்களைத் தூக்கி எறிந்து அதிகாரத்தையும் நிலத்தையும் கைப்பற்றினால் மட்டுமே சாதியத்தை ஒழிக்க முடியுமென்பதைக் காணமறுத்தனர். அவர்களைத் தூக்கி எறியாமலேயே அதிகாரத்தில் வைத்துக்கொண்டே பேரம் பேசியே வர்க்க சமரசம் செய்து தீர்வு காண முயன்றனர். அவர்களுடைய வாதமெல்லாம் பெரும்பான்மையாய் இருக்கும் தாழ்த்தப்பட்டவரும், பிற்படுத்தப்பட்டவரும் வகுப்புவாரி பிரநிதித்துவம் மூலம் பெரும்பான்மையான அரசியல் அதிகாரத்தில் உட்கார்ந்தால் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிறுபான்மை ஆக்கப்படுவதன் மூலம் தீர்வு கண்டுவிடலாம் என்பதே.

   அம்பேத்கர் வருகிறார் “ரோமர் சரித்திரத்திலிருந்து ஆதாரம் காட்டுகிறேன். அங்கே வெறும் சூழ்ச்சி செய்ததாகக் கூறமுடியாது. ரோம குடியசு அரசியல் அமைப்பில் வகுப்புத் தீர்வு சாயல் ஏராளமாக இருப்பதை ரோம சரித்திரம் படிப்போர் உணரக்கூடும். முடியாட்சி ஒழிக்கப்பட்ட பிறகு தேச நிர்வாக அதிகாரத்தைக் கான்சல்களும் பாண்டிபெக்ஸ், மாக்கிமஸ்களும் பங்கு போட்டுக்கொண்டனர். அரசரின் அந்தரங்க அதிகாரங்கள் எல்லாம் கான்சல்களுக்கு வழங்கப்பட்டன. மதம் சம்பந்தமான அதிகாரங்கள் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டன. குடியரசு அரசாங்கத்தை நடத்தும் இரண்டு கான்சல்களில் ஒருவர் பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருக்க வேண்டும் என்றும், மற்றவர் சாமானிய மக்களைச் சேர்ந்தவராய் இருக்க வேண்டும் என்றும் விதி ஏற்பட்டிருந்தது. மற்றும் மத போதகர்களில் பாதி பேர் பிரபு குடும்பத்தில் பிறந்தவராயும், பாதி பேர் சாமானிய மக்களைச் சேர்ந்தவராயும் இருக்க வேண்டுமென்ற வேறொரு விதியும் வகுக்கப்பட்டிருந்தது. குடியரசு அரசியல் அமைப்பில் நமது வகுப்பு தீர்ப்புக்கு ஒப்பான இந்த விதிகள் அடங்கியிருக்கக் காரணமென்ன? ஏனெனில் பாட்ரிஷியன் என்னும் பிரபு குடும்பத்தாரும், பிளேபியன் என்னும் சாமானிய மக்களும் இரண்டு தனிப்பட்ட சாதியராய் இருந்து வந்தார்கள். எனவே அவர்கள் இருசாராருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் பொருட்டு அரசியல் அமைப்பில் இவ்வாறு விதிகள் ஏற்படுத்தப்பட்டன. எங்கு பார்த்தாலும் சரி எல்லா அரசியல் அமைப்புகளிலும் அந்தந்த நாட்டு சமூக நிலைமைக்குத் தக்கபடி விதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதை அரசியல்வாதிகள் கண்டு கொள்ளலாம்.” எனக் கூறுகிறார். இது உண்மையே.                                           

   இதுவே அம்பேத்கர், பெரியாரின் கனவுகளுமாகும். ஆனால் சாமானியர்களுக்கு பங்கு எப்படி கிடைத்தது? ஏகாதிபத்தியமும் (அ) ஆளும் வர்க்கங்களையும் கெஞ்சியோ, வாய் மிரட்டலிலோ அல்ல. எவரும் கூப்பிட்டு கொடுத்தல். இரத்த ஆறு வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடிய ஆயுதப் புரட்சியின் மூலம் அவர்கள் அதைச் சாதித்தர்கள். இங்கு இவர்கள் ஆயுதப் புரட்சிக்கான எதையும் பற்றிக் கனவு கண்டதாவது உண்டா? அதற்கான ரகசிய கட்சி, ரகசிய படை பற்றி வாய் பேச்சாவது பேசியது உண்டா? இந்திய ஆளும் வர்க்கங்களின் எசமானனான வெள்ளை ஏகாதிபத்தியத்திடமே எவன் எல்லாவற்றுக்கும் மூலகாரணமோ அவனிடமே மன்றாட மட்டுமே செய்தார்கள். அதனால் தனிமைப்படுத்தப்பட்டார்கள். தனிமைப்பட்டார்கள். சீர்திருத்த சகதிக்குள் சுற்றுவதற்கு அப்பால் அவர்களால் எதையும் செய்யமுடியவில்லை. அதற்கு காரணம் அவர்களது வர்க்கப் பின்னணியே. இத்தனையும் யாரைத் தூக்கி எறியாமல் இவர்கள் கேட்கும் வகுப்புவாரி தீர்ப்புகூட கிடைக்காதோ அவர்களையே தொடர்ந்து அதிகாரத்திலிருக்கும்படி வைத்துக்கொண்டே அவர்களிடமே தொடர்ந்து வர்க்க சமரச தீர்வு காண முயற்சிப்பதே இவர்களுடைய நிலை. அது சீர்திருத்த விதத்துக்கப்பால் எதுவும் அல்ல.

   வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தீர்வாகுமா? அக்கோரிக்கையை நாம் ஆதரிக்கிறோம். ஆனால் அதுவே தீர்வாகி விடாது என்கிறோம்.  ஆதிக்கத்தில் உள்ளவனுக்கும் ஆதிக்கத்தில் இல்லாதவனுக்கும் அவனவன் வகுப்பின் சனத்தொகைப்படி பிரநிதித்துவம் என்பது, நம்மைப் பொறுத்தவரையில் ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு பிரதிநிதித்துவத்தையே முழுதாக ரத்து செய்துவிட வேண்டும் என்பதே தவிர அவர்களையும் அவர்களின் சனத்தொகை விகிதப்படி உட்காரவைத்துப் பங்காளிகளாக்கிக் கொண்டு அவர்களுடன் நாமும் பெரும்பான்மையாகவே இருந்தாலும் கூட சேர்ந்து ஆளுவதல்ல. அது கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியையும் வைத்துக் கொள்வதே தவிர வேறல்ல. ஏனெனில் இன்றைய ஏகாதிபத்திய யுகத்தில் அவர்களின் அடிவருடிகளான தரகு முதலாளித்துவம், நிலபிரபுத்துவத்திடம் பெருச்சாளிகளையும் பிரதிநிதிகளாக அவர்களது சாதி எண்ணிக்கைப்படி சேர்த்துக் கொள்வதென்பது, சாராம்சத்தில் அவர்களிடமே சர்வ வல்லமையுடைய ஏகாதிபத்திய மூலதனமே உலகை ஆட்டிப்படைக்கிற இன்றைய யுகத்தில் அதனுடன் அல்லது அதன் அடிவருடிகளுடன் சேர்ந்து அதிகாரத்தில் உட்காரும் பிரச்சனைக்கே இடமிருக்கமுடியாது. மக்களின் எதிரிகளான அவர்கள் தூக்கி எறியப்பட்டு ஒழித்துக்கட்டப்பட வேண்டும். அவர்களின் பிரதிநிதித்துவமே முழுதாக ரத்து செய்யப்பட வேண்டும். அவர்களுடன் அதிகாரத்தில் நாமும் கூட்டாளிகளாக அமர்வதென்பது வர்க்க சமரசவாதிகளின் வேலையே தவிர, போராளிகளுடைய வேலை அல்ல.

11.சாதிகளை ஒழிப்பது எப்படி?

     (அ) வறட்டு வாதமும் சீர்திருத்த வாதமும்.

  இரண்டுமே புரட்சிக்கு எதிரானது. இரண்டுமே ஆளும் வர்க்கங்களை அரசியல் அதிகாரத்தில் நீடிக்கச்செய்வது. தீண்டாமை, அண்டாமை, காணாமை, பேசாமை அனைத்துமே சாதியமைபிலிருந்தே எழுகின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் தொடக்கூடிய மிருகங்கூட அல்ல என்ற நிலையிலிருந்தே எழுகின்றன. மற்ற நாடுகளில் அடிமைகளை இரண்டுகால் மிருகம் (அ) பேசக்கூடிய மிருகம் என்றே கருதினர். தொடக்கூடாத மிருகம் எனக் கருதவில்லை. அந்நிலையில் தொடக்கூடிய மிருகமா இல்லையா என்பதே முதல் கேள்வி. அதன்பின்னரே மிருகமா? எனும் கேள்வியும் அதற்கடுத்தே மற்ற மனிதனுக்குள்ள சமமான உரிமை சனநாயக உரிமை உண்டா? இல்லையா? எனும் கேள்வியும் எழுகிறது. அனைத்தையும் மறுத்து வைத்திருப்பதே இன்றைய சாதியமைப்பு.

   ஆனால் வறட்டுவாதிகளைப் பொறுத்தவரையில் சாதிப் பிரச்சனை என்பது எல்லாப் பிரச்சனைகளையும் போலவே, தேசிய இனப்பிரச்சனைகளையும் போலவே அது ஒரு சாதாரண பிரச்சனை. தேசிய இன பிரச்சனையை எடுத்தால் எப்படி இந்திய ஒருமைப்பாடு கெட்டுவிடுமோ அதே போல் சாதிப் பிரச்சனையை எடுத்தால் இங்குள்ள ஒருமைப்பாடு கெட்டுவிடும் என்கின்றனர். சாதாரண பிரச்சனையிலும் அது வெறும் பண்பாடு பற்றிய பிரச்சனையே என்கின்றனர். அதாவது புரட்சி முடிந்த பிறகு அதிகாரத்திற்கு வந்த பிறகு பல ஆண்டுகள் கழித்துப் பண்பாட்டுப் புரட்சி நடத்துகின்ற காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை என்கின்றனர். அதுவரையில் தேசிய இன பிரச்சனையில் எப்படி செத்து மடியவேண்டுமோ அதுபோல செத்து மடிய வேண்டுமென்கின்றனர். அதுவரை அவர்களைப் பலிகடாக்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாமெனப் பார்க்கின்றனர். ஆனால் சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதனும் அங்கமாக இருந்தால்தான் சமூக சேம லாபங்களில் அவனுக்கும் பற்றும் கவலையும் உண்டாகும் என டாக்டர் அம்பேத்கர் அறிவுறுத்தியுள்ளார். அது முற்றிலும் உண்மை. எனவே வறட்டுவாதிகளுடைய நிலைப்பாடென்பது மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை இங்குள்ள நிலைமைகளில் செயல்பட்டு விடாதபடிக்கு வறட்டு சூத்திரமாக்கி வைக்க வேண்டுமென்பதே. சாதியமைப்பை எதிர்த்து சாதிவெறிக் கொடுமைகளை எதிர்த்து நிற்கக் கூடாதென்பதே.

   அடுத்து, ஒவ்வொரு சாதி மோதலும் நிலபிரபுத்துவத்துக்கும் மக்களுக்குமிடையிலான முரண்பாட்டின் விளைவாக அல்லது மக்களுக்கிடையே உள்ள முரண்பாட்டின் விளைவா என்னும் கேள்வி எழுகிறது. உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்திப் பிளவுபடுத்தி மோதவைத்து மோதவைத்து ஆளவேண்டி தனியுடமைகளைத் தனித்தனியாகக் கொடுத்து தனித்தனிச் சாதிகளாக ஆக்கி ஒவ்வொரு தனியுரிமையும் சாதிக்கு மட்டுமே உரியதாக வைத்திருக்கிறது நிலபிரபுத்துவம். எந்த ஒரு தனி உரிமையும் எந்த ஒரு தனிச் சாதிக்கும் பொதுவுரிமை ஆக்கப்பட வேண்டுமென மக்கள் மோதுகிறார்கள். நிலபிரபுத்துவம் வழங்கியுள்ள தனி ஒரு சாதியின் தனி ஒரு உரிமையை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகயில்லை. எனவே உயர்ந்த சாதி என்ற பெயரில் தனியுரிமை தனக்கு மட்டுமே உரியதாக நிலபிரபுத்துவத்தின் சாதியமைப்பை நிலை நிறுத்தும் சக்திக்கும, அதை உடைத்தெறிந்து பொது உரிமை ஆக்க வேண்டுமெனக் கிளம்பும் மக்களுக்கு இடையில் நடக்கும் மோதல்களே ஒவ்வொரு சாதி மோதலும். எந்த ஒரு தனியுரிமையும் எந்த ஒரு சாதிக்கு மட்டுமே அல்லாமல் அனைவருக்கும் பொதுவுரிமை ஆக வேண்டுமென்பது நியாயமான சனநாயக கோரிக்கை. எனவே அதனை ஆதரித்துப் பொது உரிமைக்காக நாம் நிற்க வேண்டுமே அல்லாமல் நிலபிரபுத்துவம் ஒரு சாதிக்கு மட்டுமே உரியதாக வழங்கி உள்ளதை நிலை நிறுத்த அல்ல. எனவே சாதி மோதலை மக்களுக்கிடையிலான மோதலாக முரண்பாடாகப் பார்க்க முடியாது.

    சில சாதிவெறியர்கள் வகுப்புவாரி ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்குள் தனியுரிமை என்றும், எனவே அதை ஒழித்து அனைவருக்கும் பொது உரிமை ஆக்கவேண்டும் என்றும் கூறுகின்றனர். தப்பு கொட்டுவதும், பிணம் சுடுவதும் பறையர்களுக்கு மட்டுமே உரிய தனி உரிமையாக இருப்பது ஒழிக்கப்படும்போது இந்தத் தனி உரிமைகளும் ஒழிக்கப்படும்.

    எனவே வறட்டு வாதிகளுடைய நிலைப்பாடென்பது ஆளும் வர்க்கங்களின் கையில் அரசியலதிகாரம் நீடிப்பதற்குரிய நிலைப்பாடே ஆகும். எனவேதான் சாதிப் பிரச்சனைகளைத் தொடுவதே தீட்டு என்கின்றனர். தொடக்கூடாதென்கின்றனர். சீர்திருத்தவாதிகளும் ஆளும் வர்க்கங்களின் கையிலுள்ள அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களைத் தூக்கி எறியாமல் வைத்துக்கொண்டே எதையாவது பெறமுடியுமா என்பதே அவர்கள் நிலை. அவர்கள் அதைக் கூட பெறாதிருந்தால் இன்று எதுவுமே கிடைத்திருக்காது. அம்பேத்கரினால்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 1943–இல மத்திய அரசால் ஒதுக்கீடாவது கிடைத்தது. 1925–இல தீண்டாமை ஒழிப்புச் சட்டமாவது கிடைத்தது. பெரியார் 1919–லிருந்து குரலெழுப்பியதால்தான் 1929–இல தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் 1947–இல பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கீடே கிடைத்தது.

     1980-இல தரப்பட்ட 50 சதவீதமும்,1985 சனவரியில் காலாவதியாக வேண்டுமென சுப்ரீம் கோர்ட் கூறுகிறது. இந்நிலையில் மண்டல கமிசனின் பிற்படுத்தப்பட்டவருகான 27 சதவீதம் பரிந்துரை அமுலாகுமா என்பது ஐயமே. நுழைவுத்தேர்வைத் திணித்து ஏழைகளைத் தமிழக அரசு வடிகட்டுவதையும் முறியடித்ததாக வேண்டும்.

   (ஆ) மதமாற்றம் தீர்வாகுமா?

   சாதிவெறிக் கொடுமையினால் அம்பேத்கர் காலத்திலிருந்து, மீனாட்சிபுரம் கலவரத்திலிருந்து, புத்த சமண காலங்களிலிருந்து மதம் மாற்றம் என்பது சாதி வெறி எதிர்பின் ஒரு வடிகாலாக இருந்து வருகிறது. மிகச் சமீபத்தில் தோன்றிய சீக்கிய மதமும் சாதிகளை ஒழிப்போமென்றே கிளம்பிற்று, அதற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் சீக்கியத்திலும் தாழ்த்தப்பட்ட மஸ்பி எனும் சாதியாகவே உள்ளனர். ஜாட் சாதியினர் சீக்கிய ஜாட் ஆகவே உள்ளனர். எனவே மதம் மாறுதல் என்பதும் பழைய விலங்கிற்கு பதில் ஒரு புதிய விலங்கைப் பூட்டிக்கொள்வதைத் தவிர வேறல்ல. எனவே ஒன்றுபட்டுப் போராடி உரிமைகளைச் சாதிப்பதே சாதிகளை ஒழிப்பதற்குரிய ஒரே வழி.

   அதே நேரத்தில் பிறக்கும் முன்பே ஒருவன் மீது ஒரு மதத்தை திணிப்பதை நாம் எதிர்க்கிறோம். ஒவ்வொருவனும் அவன் விரும்பும் மதத்தில் சேரவும் இருக்கவும் மாறவும் கூடிய சுதந்திரம் இருக்க வேண்டுமென்கிறோம். மதம் மாறிய காரணத்திற்கான உரிமைகள் எதுவும் சலுகைகள் எதுவும் ரத்தாகக் கூடாதென்கிறோம். ஆனால் இந்துமத வெறி இந்திய அரசு, ஆர.எஸ்.எஸ், இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் சாதிவெறி மதவெறி அமைப்புகளைத் தூண்டிவிட்டு சாதிமத மோதல்களுக்குத் திட்டமிடுகிறது. ஊக்குவிக்கிறது. காஷ்மீர் இனத்திற்கும் இந்துவெறி பண்டிட்களுக்கும் இடையிலான மோதலை முஸ்லீம் இந்து மோதலாகச் சித்தரித்து இந்து மதவெறியைத் தூண்டுகிறது. பஞ்சாபில் இந்தி இனவெறி மோதலைச் சீக்கிய இந்து மோதலாகச் சித்தரித்து இந்து மதவெறியைத் தூண்டுகிறது. ஒவ்வொரு தேசிய இனத்தையும் சாதி மதவெறி மோதலின் மூலம் பிளவுபடுத்தவே இப்படித் திட்டமிட்டு இந்து மதவெறியை திணிக்கிறது. சிறுபான்மையினருக்கான மதங்களுக்கான உரிமையை நசுக்குகிறது.                      

12.சாதிச்சங்கங்கள் அமைப்பது சரியாகுமா?

    சாதி தோன்றிய காலங்களிலிருந்து ஒவ்வொரு சாதியும் தன்னைச் சாதி அமைப்பாக்கிக்கொண்டு தனது உரிமைகளுக்காகத் தனித்தோ அல்லது சேர்ந்தோ போராடி வந்திருக்கிறது. தமிழகத்தில் 98 இடங்கைச் சாதிகளும்  98 வலங்கைச் சாதிகளும் அப்படி 700 ஆண்டுகள் அளவில் போராடி வந்திருப்பது நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சாதிகள் உள்ளவரை சாதி அமைப்புகளும் சாதி மோதல்களும் நீடிக்கவே செய்யும். ”ஒவ்வொரு வகுப்புகளுக்கும் பிரத்தியேக நன்மைகள் இருந்து வரும்வரை அவர்களைக் காப்பாற்ற அந்தந்த வகுப்புகள் முயற்சி செய்யத்தான் செய்யும்.” என்றும்“ஒவ்வொரு சாதியையும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதையே உயிர் லட்சியமாக மதிக்கிறது.” என்றும் அம்பேத்கர் கூறுகிறார். இது உண்மையே. ஆனால் இது நிலைத்து நீடித்த ஒன்றல்ல நவீன சாதனங்களும் தொழில்களும் நுழைந்து ஒவ்வொரு சாதியையும் அதன் வாழ்நிலையையும் உடைத்தெறிந்து கொண்டிருக்கிறது. அதாவது சாதி தோன்றிய அன்று ஒவ்வொரு சாதியும் அம்பேத்கர் கூறுவதுபோல் ஒரு அடைக்கப்பட்ட வர்க்கமாகவே இருந்தது, ஆனால் இன்றும் அவ்வாறேதான் துளிகூட மாற்றமின்றி இருக்கிறதா? ஒவ்வொரு சாதிக்குள்ளும் எல்லா வர்க்கங்களும் தோன்றி இருக்கின்றன. மேலும் மேலும் வளர்ந்துகொண்டிருக்கின்றன. ஒரே வாழ்நிலையை மட்டுமே சாதி உறுப்பினர் அனைவரும் கொண்டிருக்கும் நிலையில் எந்தச் சாதியும் இன்று இல்லை.

   அப்படி ஒவ்வொரு சாதிக்குள்ளும் வர்க்க உடைவுகள் ஏற்பட்டு எல்லா வர்க்கங்களும், ஒவ்வொரு சாதிக்குள்ளும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. அதனால் ஒவ்வொரு சாதிக்குள்ளும் வர்க்க நலன்கள் மறுக்கப்பட்டு முரண்படும் நிலை. அதனால் சாதி ஒற்றுமை பலவீனப்பட வேண்டிய கட்டாயம் தோன்றிக்கொண்டிருக்கிறது. ஒவொரு சாதிக்குள்ளும் வர்க்கப் பிளவுகள் முற்றிலும் துவங்காத நிலையோ அல்லது ஒவொரு சாதிக்குள்ளும் வர்க்கங்களாக உடைந்து முற்றிலும் முடிந்துபோன நிலையோ இன்று இல்லை. மாறிக் கொண்டிருக்கும் நிலைதான் இன்றிருக்கிறது. இந்த யதார்த்த நிலையைக் கணக்கிலெடுக்காமல் இப்பிரச்சனையை அணுக முடியாது.

  எனவே சாதியும் சாதியமைப்பும் சாதி ஒற்றுமையும் வலுவாயிருக்கும் அதேநேரத்தில் பலவீனப்பட்டுக்கொண்டும் வருகிறது. ஒரே வார்த்தையில் சொன்னால் சாதி ஒழிப்பை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. எனவே முற்போக்கு அம்சத்தை, எதிர்கால ஒன்றை பிரநிதித்துவப் படுத்தும்                                                                             பாட்டாளி வர்க்கம் சாதிச் சங்கங்களை அல்லாமல் சாதி ஒழிப்பு சங்கத்தையே ஊக்குவிக்க வேண்டியிருக்கிறது. அதுவே இன்றைய சாதி ஒழிப்பு சனநாயக சாதிகளையும் உண்மையில் ஒன்று சேர்ப்பதாய் இருக்கும்.

13.சாதிச் சங்கங்களைக் கட்டலாமா?

   சாதிகள் தோன்றிய காலம் முதல் சாதிகள் மறையும் வரை சாதிகள் இருப்பதும் சாதிச் சங்கங்கள் இருப்பதும் சாதி மோதல் நடப்பதும் தடுக்க முடியாதவை. சில சாதிகள் தங்கள் ஆதிக்க வெறியை நீடித்தது சவாரியைத் தொடர வேண்டி இதனைச் செய்கின்றன. சில சாதிகள் தங்களை அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டி அதைச் செய்கின்றன. ஆதிக்கவெறி சாதிகளிடமுள்ள சாதிவெறிச் சங்கங்களைக் கலைத்த பின்பே தாழ்த்தப்பட்ட சாதிகளின் சாதிச் சங்கங்களைக் கலைக்க முடியும். எனவே சாதிச்சங்கம் கூடாதென்போர் முதலில் மேலே கூறிய ஆதிக்கவெறிச் சாதிச் சங்கங்களைக் கலைக்கவேண்டும். தாழ்த்தப்பட்டவரின் சாதிச்சங்கம் எவரையும் சவாரி செய்வதற்கானதல்ல. அப்படி அவர்களால் சவாரி செய்யவும் முடியாது. முழுக்கவும் தற்காப்பிற்கானது. ஆனதால் முழு தற்காப்பு என்பது ஆளும் வர்க்கங்களைத் தூக்கி எறிந்து மற்ற சாதிகளிலுள்ள உழைக்கும் மக்களுடன் ஒன்றுபட்டால் மட்டுமே உண்டு என்பதால் சாதி ஒழிப்பு நோக்கத்திற்கு முன்னணியாக வரும்படி அழைக்கிறோம்.

   தனித்து தங்கள் சாதியை மட்டும் திரட்டி தற்காத்து கொள்வது என்பது முடியாதென்பதை ஆண்டு வரலாறு நிரூபித்துவிட்டது. முடியுமென்றால் எப்போதோ சாதியைத் தாழ்த்தப்பட்டவர்கள் ஒழித்திருப்பார்கள். ஏனெனில் என்றுமே தாழ்த்தப்பட்டவர்கள் சாதியை ஏற்றுக்கொண்டதில்லை. இவ்வளவு காலமும் மேல்சாதி ஏழை, மேல்சாதி பணக்காரனுடனே கைகோர்த்து ஒன்று சேர்ந்து வந்து சேரிகளைத் தாக்கினார்கள் என்பது உண்மையே. ஆனால் இன்று அவர்களுக்குள்ளாகவே முரண்பட வேண்டிய கட்டாயம் எழுந்துவிட்டதால் உழைக்கும் மக்களனைவரும் ஒன்றுசேர்ந்து சாதி அமைப்பைத் தகர்ப்போம்.

  சாதிக்கொரு பஸ், சாதிக்கொரு ரயில், சாதிக்கொரு சினிமாக் கொட்டகை, கல்லூரி வைத்து இங்கு செயல்பட முடியாது. எனவே இந்தத் தொழில் வியாபார வளர்ச்சி தொட்டால் தீட்டு உட்பட அனைத்து சாதி விலங்கையும் உடைத்து தனிமனித உரிமைகளை வழங்கி ஒன்று கலக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. சாதிகளைக் கட்டிக்காக்க விரும்பும் நிலபிபுத்துவ சாதிவெறியர்கள் ஒன்று கலப்பதைத் தடுக்க வேண்டுமானால் நவீன சாதனங்களைத் தடுத்தாக வேண்டும். நவீன சாதனங்கள் இல்லாமல் இன்றைய சமுதாயம் வாழவோ வளரவோ முடியாது. எப்பொழுது நவீன சாதனங்களையும் தொழில் வியாபார வளர்ச்சியையும், நிலபிரபுத்துவ சாதிவெறியர்களால் தடுத்து நிறுத்த முடியாதோ, அப்பொழுது அதனுடன் எழும் சாதி ஒழிப்பையும் அவர்களால் தடுக்கவே முடியாது.

   நிலபிரபுத்துவ சாதியமைப்பு தினமும் சாதிவெறி மதவெறியைத் தூண்டி வருகிறது. மக்களின் சனநாயக உரிமைகளை மறுத்து வருகிறது. சாதி ரீதியில் பிரித்து பிரித்துக் கையாள்கிறது. கிராம நிர்வாகத்திலும் அன்றாட கிராம நடைமுறையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிறருக்கும் சம உரிமைகளைத் தர மறுக்கிறது. ஒதுக்கி வைக்கிறது. இதனால் பிரித்து ஒதுக்கும் நடைமுறைகளை எதிர்த்தும், சம உரிமைக்காகவும் பாதிக்கப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் மக்கள் போராட வேண்டிய கட்டாயம் எழுகிறது. அதுவே சாதி மோதல் வடிவத்தில் வெடிக்கிறது.

    சாதிப் பிரச்சனை ஒவ்வொன்றுமே ஜனநாயக உரிமைக்கான பிரச்சனையாகும். சாதி ஒழிப்பிற்கான பிரச்சனையாகும். சாதி ஒழிப்பிற்கான ஜனநாயக உரிமைக்கான போராட்டங்களைப் பாட்டாளி வர்க்கக் கட்சி வறட்டுவாதங்களில் சிக்கி சரியான நிலை எடுக்கத் தவறுவதால் நிலபிரபுத்துவ சாதிவெறிக் கொடுமையிலிருந்து தப்பித்தாக வேண்டிய கட்டாயத்தால் மக்கள் அச்சாதிவெறிக் கொடுமைகளைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டிருக்கும் பிற்போக்கு வாதிகளின், வர்க்க சமரச சீர்திருத்தவாதிகளின் பின்னால் ஓடுகிறார்கள். பிற்போக்கு வாதிகளின் நோக்கம் உழைக்கும் மக்களை ஒன்றுபட்டு விடாதபடி பிரித்துவைத்திருப்பதே என்பதால் சனநாயக உரிமையை வழங்குவதை என்றுமே தீர்ப்பதில்லை. சீர்திருத்தவாதிகளோ மதமாற்றம், வகுப்புவாரி ஒதுக்கீடு, சாதி சங்கம் என்ற குறுகிய வட்டத்திற்குள் நின்று பிரச்சனையை ஓரிரு எலும்புத் துண்டோடு நிறுத்திவிடுகிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றிச் சாதிகளையே ஒழிப்பதை நோக்கி இட்டுச் செல்வதில்லை.

   சாதிப் பிரச்சனை என்பது சனநாய பிரச்சனையில் சாதி ஒழிப்பின் வடிவமே. இது இந்தியாவிற்கு மட்டுமே, இந்தியத் துணைக்கண்டப் புரட்சிக்கு மட்டுமே உரியதென்பதால் மற்ற நாட்டு புரட்சி போலல்லாமல் இதற்குத் தனி கவனம் செலுத்தப்பட்டாக வேண்டும். இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமே தீர்க்கப்பட முடியுமென்பதால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அனைத்து சனநாயகப் போராட்டங்களுடனும் அதாவது புதிய சனநாயகப் புரட்சிக்குரிய சனநாயகப் போராட்டங்களுடனும் இணைக்கப்படவேண்டும். சாதி ஒழிப்புப் போராட்டங்கள் உழவர் விடுதலை, தமிழக விடுதலைப் போராட்டங்களுடன் இணைக்கப்பட்டாக வேண்டும்.

பிற்போக்கு வாதிகளின் மதவெறி, சாதிவெறி, பிரித்தொதுக்கும் முயற்சிகளை முறியடிப்போம்.

உழைக்கும் மக்களைச் சாதி ஒழிப்பின் அடிப்படையில் ஒன்றுபடுத்துவோம்.

வறட்டுவாதிகளின் சீர்திருத்தவாதிகளின் தவறான அணுகுமுறைகளை முறியடித்து சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா!

தாழ்த்தப்பட்டவர்களின் சிறைக்கூடமே சேரிகள்!

நிலப்பிரபுத்துவத்தின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பே சாதியமைப்பு!

நிலப்பிரபுத்துவத்துக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடே சாதி மோதல்கள்!

சாதி ஒழிப்பின் எதிரிகள் ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளே!

சாதிகளை ஒழிக்கக்கூடிய முன்னணி சக்திகள் தாழ்த்தப்பட்டவர்களே!

அதிகாரத்தையும், நிலத்தையும் கைப்பற்றாமல் தாழ்த்தப்பட்டவர்களால் சாதிகளை ஒழிக்க முடியாது.

பாட்டாளி வர்க்கத் தலைமையில்லாமல் உழைக்கும் மக்களை அணிசேர்க்காமல் தாழ்த்தப்பட்டவர்களால் அதிகாரத்தை வெல்லவே முடியாது.

தோழர்.தமிழரசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here