“சர்வதேச பால் புதுமையினர் வெறுப்பு எதிர்ப்பு நாள்” – வளவன்.


உலகளவில் மே 17 நாம் வழக்கமாக நினைத்திராத காரணத்திற்காகவும், முக்கியத்துவம் தராத ஆனால் விவாதிக்கப்படவேண்டிய விவாகாரத்திற்கான தினமாக அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச தன்பாலீர்ப்பாளர்கள், திருநர் மற்றும் இருபாலீர்ப்பாளர்கள் வெறுப்பு  எதிர்ப்பு தினம் (International Day Against Homophobia, Transphobia And Biphobia). அடிப்படையில் மேலே நான் மொழிபெயர்த்தலாக பயன்படுத்திய   சொற்களில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் நாம் யாரையும் இவர் எதிர்பாலீர்ப்பாளர் (Heterosexual) என்று சொல்லி அறிமுகம் செய்வதில்லை. மொழியின் சொற்களுக்கு பின் உள்ள அரசியலின் காரணமாக அவர்கள் தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்ட பொது சுட்டுச் சொல் ‘பால் புதுமையினர்’ என்பது. எனவே இதனை “சர்வதேச பால் புதுமையினர் வெறுப்பு எதிர்ப்பு நாள்” எனக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மே 17 தினம் இதற்கென்று எடுத்தாளப் படக் காரணம் இந்த நாளில் தான் 1990ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் (WHO), சம பாலீர்ப்பினை (Homosexuality) மனநோய் எனும் பட்டியலில் இருந்து விலக்கியது. உலக சமூகம் அப்படியானால் அதுவரை எத்தகைய தரமான குடிமக்களாக அவர்களை நடத்தியிருக்கும் என்பது ஒவ்வொருவரின் மனதிற்கு விடப்படுகிறது.

வரலாற்றுப் புனைவுகளின் இடையில் மொழியில்லாத ஒரு சாராரின் கனத்த மௌனமும் கலந்திருப்பதை பொது சமூகம் யோசிப்பதற்கில்லை‌. நான் என்ன உண்ண வேண்டும் என்று அரசு முடிவு செய்யக் கூடாது; அது எதேச்சாதிகாரம் என்று தன் தட்டின் மீதான ஒரு சார்பின் திணிப்பை எதிர்த்தவர்கள், நான் யாரைத்
(எந்த பாலினத்தவரை) திருமணம் செய்து கொள்ள வேண்டும், எத்தனையாவது மாதத்தில் பிள்ளை பெற வேண்டும் என்கிற தனிமனித பாலியல் உரிமைகளின் மீதான திணிப்புகளில் கருத்தற்று கண்காட்சியை வேடிக்கை பார்க்க வந்தவர்களைப் போல இருப்பது நம் அண்மைக்கால மரபு சார்ந்ததாக இருக்கிறது. எதேச்சாதிகாரம் என்பது உங்களின் மீது ஏவப்படும் பொழுது மட்டும் குரல் ஒலிப்பேன் என்றிருப்பது எத்தகைய தன்னன்மை சார்பு மனநிலை.

இப்படி ஒரு தினம் கொண்டாட்டமாக அன்றி விழிப்புணர்வுக்காக அனுசரிக்கப்படும் இந்நாளில், ஓர் உள்நாட்டு செய்தியும்,  ஓர் உள்ளூர் செய்தியும்‌ நம்மை வந்து சேர்ந்திருக்கிறன.  உள்நாட்டு செய்தி பின்வருமாறு: 21 வயது வயதான, தன் குடும்பத்தாருக்கு தானொரு இருபாலீர்ப்புள்ள பெண் என்பதை சொல்லி இந்த சமூக கற்பிதங்களை எதிர்த்து நின்ற பெண் கடந்த 12ம் தேதி தான் சிந்திப்பதை நிறுத்தியும், தன் கலகத்தை முடித்தும் கொண்டாள்.  அவரின் மீது இந்த சமூகம், அதன் அடக்குமுறைக்கு உட்பட்டு வாழ்வதாக காட்டிக் கொள்ளும் பிற்போக்கு குடும்ப அமைப்பு, பால் புதுமையினரை கேலிப் பொருளாய் உதாசீனம் செய்கிற சல்லிகள், அவர்களின் மீது தானாக வளர்த்த கற்பனைகளாலும், சொல்லப்பட்ட கற்பிதங்களாலும் பயமும், வெறுப்பும் மண்டிய நிலையில் திரியும் மனநோயாளிகள் என இவர்கள் அத்தனை பேரும் எறிந்த சொற்கள், ஏச்சுக்கள், ஏளனப் பார்வைகள், இச்சை அழைப்புகள் ஆகியன அப்பெண்ணின் உடல் முழுவதும் தைத்து இருப்பதை எந்த உடற்கூராய்வும்   சொல்லப் போவதில்லை.

மார்ச்சு 13 – தன் சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக நேரலையில் வந்த அவர் இவ்வாறு பதிவு செய்ததாக அறியப்படுகிறது : “என் குடும்பத்தினர் என்னை உடல் ரீதியிலும், உளவியல் ரீதியிலும் தொடர்ந்து வன்முறைக்கு உட்படுத்தி வருகின்றனர். என்னை ‘பாலீர்ப்பு மாற்று சிகிச்சை’க்கு (Sexuality Conversion therapy) அழைத்து போய், என் இயல்பை மாற்றி விடலாம் என துடிக்கின்றனர்” என்று சொல்லியுள்ளார். தானொரு இருண்ட அறையில், சிகிச்சை எனும் பெயரில் அடைத்து வைக்கப்பட்டு, சுயமாக செயல்பட முடியா வண்ணம் உடலும், மூளையும் கட்டுப்படுத்தப்பட முயற்சிகள் நடப்பதாகவும், ஒரு இயந்திரத்தன்மை தனக்குள் புகுத்தப் படுவதாகவும் தெரிவித்தார். தன்னுடைய இயல்பினை வன்முறையாலேனும் மாற்றி விடத் துடிக்கிற ஒரு அமைப்புக்குள் சிக்கிய அவர்   பதிவு செய்யாமல் போன துயரங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ ?

இத்தகைய பாலீர்ப்பு மாற்று சிகிச்சை எனும் உளவியல் வன்முறை, வசிய இத்யாதிகள் பல நாடுகளில் தடைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் , இந்தியாவில் இதற்கான சட்டவிதிகள் உள்ளனவா, எனில் நடைமுறையில் அது எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பது மாபெரும் வினாக்குறி.

377 குற்றவியல் சட்டப்பிரிவின் ஒரு பகுதி நீக்கப்பட்ட பொழுது இப்படி ஒருவர் குறிப்பிட்டார்: “நாங்கள் இப்பொழுது தான் சுழியத்துக்கு கீழிருந்து சுழியத்தை அடைந்திருக்கிறோம். உண்மையில் போர் இனிதான் ஆரம்பம்” என்று அறைகூவல் விடுத்தார். அதுதான் எத்தனை உண்மை. பால் புதுமையினரின் நலம் சார்ந்து இன்று வரை வந்துள்ள சட்ட வரைவுகள் என்னென்ன எனும் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை, அவர்களைப் பற்றிய சமூக புரிதல் உருவாக்கிட, ஆக்கப்பூர்வமான ஒரு களம் அமைக்க, தன்னிச்சையாகவோ அல்லது தன்னார்வல அமைப்புகளோடு இணைந்தோ அல்லது தன்னாட்சி அதிகார அமைப்பு ஒன்றை உருவாக்கிடவோ அரசு முனையவில்லை என்பது முகத்திலறையும் யதார்த்தம்.

அவர்கள் நாலாந்தர குடிமக்களினும் மோசமாக, சொந்த குடும்பத்தினராலேயே வாழ்தல் உரிமை (Right to Live) யின் மீதான தலையீடுகளுக்கு உட்படுகிறார்கள். “நான் நானாக, என் அடையாளத்துடன், ஆளரவமில்லாத எனது தனியறையின் நான்கு சுவர்களுக்கும் தெரியாத வண்ணம் என்னை வாழச் சொல்கிற சமூகமே..! எல்லையிலா வானை எனது சிறகுகளினை விரித்து மறைக்குமளவு வல்லமை கொண்ட நான், இன்றைக்கு உங்களில் சூழலியலால் அடைபட்டு இருக்கிறேன். ஒரு நாள் நான் ஒளிவு மறைவின்றி எனை ஏளனம் செய்தோர் யாவரை விடவும் உயரங்களையும், உன்னதங்களையும் அடைந்து நீங்கள் அண்ணாந்து பார்க்க வளர்ந்து நிற்பேன்; என் சக தோழமைகளான சமூகத்துக்கும் தோள் கொடுப்பேன். என் நாள் வரும்…” இத்தகைய சுய உற்சாகமூட்டுதல்களோடு தொடங்கியவர்கள் அத்தகைய நிலையை அடைய விடாமல் இடர்படுத்துதலை விடவும் மோசமாக  அவர்களுக்குள் நம்பிக்கையின்மை துளிர்த்து, சுய பச்சாதாபம் உருவாகி பின்னர் அது வெறுப்புணர்வு என‌ எழுந்து, தற்கொலை என முதல் தகவல் அறிக்கை சத்தியம் செய்கிற தூண்டுதல் கொலைகள் நம்மையெல்லாம் பார்த்து இளித்துக் கொண்டிருப்பது இந்த நிமிட சத்தியம்…

அடுத்து உள்ளூர் செய்தி: முதன்மை பத்திரிக்கை ஒன்று இப்படி குறிப்பிடுகிறது : திருமணம் செய்து தன் தோழியை பிரிய மனமில்லாமல் ஒற்றைச் சேலையில் தூக்குப் போட்டுக் கொண்ட பெண்கள். அவர்கள் தோழிகள் என்பது முதல் பார்வை. காட்சி ஊடக செய்தி, அதே நிகழ்வை ‘தன் பாலின உறவால்’ நேர்ந்த விபரீதம் என்றும் அவர்கள் காதலர்கள் என்று கூட சொல்லாமல்  பாலுறவுக் கூட்டு என்கிற ரீதியில் விவரிக்கிறது இரண்டாவது பார்வை. எனக்கு எழுகிற கேள்வி நாம் எந்த ஒரு பாலியல் வன்கொடுமையை அல்லது கூட்டு வன்முறையை ‘எதிர் பாலின ஈர்ப்பால்’ நிகழ்ந்த கொடூரம் என பேசுகிறோமா ? இல்லையே… அப்படியென்றால் இவ்விடம் ‘வன்கொடுமையை’ அடிக்கோடிடுகிற தருமமிகு சமூக ஊடகங்கள், முதல் செய்தியில் ‘தன் பாலின’ ஈர்ப்பு என்பதைத்தான் அழுத்திச் சொல்கிறது; இதுவே அதன் நிலைப்பாடு எத்தன்மைத்தானது என அறிய துணைக்கரமாகிறது.
இந்த சம்பவத்தில் உண்மை இன்னதென அந்த இரண்டு பேர் மட்டுமே அறிவார்கள்.

அடுத்தவரின் அந்தரங்கம், அவர்களின் சுய வாழ்க்கை சார்ந்த முடிவுகள் இவற்றின் மீது நாம் களங்கம் சொல்லுதல் நேர்மையின்மை என்கிற அறம் இல்லாத ஒரு சமூகத்தில் நாம் இருக்கிறோம். பால் புதுமையினர் ஒருவர் இறந்த பிறகும்  அவரின் குடும்பம் செய்கிற ஆகப் பெரிய அவமானம், அவரின் இயல்பு இன்னதென ஏற்காமையும் , அவரை கொலை செய்த சமூக அமைப்பின் இழிநிலையை கேள்வி கேளாமல் இருத்தலும் தான். செய்திகளாக நாம் கடந்து போகிற, செய்தியாக வர வாய்ப்பில்லாமலே நிகழ்ந்து முடிகிற இவை யாவும் எனக்கு சன்னமான குரலில் சொல்வதெல்லாம் “காதல் பால் சார்ந்ததல்ல…”

சுழியத்தில் இருந்து தொடங்கி இருக்கிற அவர்கள் நிச்சயமான தங்களுக்கான போரினை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இன்னும் ஒரு நூறு ஆண்டு கழித்து இந்தியாவில் பிறக்கப் போகிற ஒவ்வொரு பால்புதுமை குழந்தைக்காகவும் இவர்தம் ஆயுட்காலம் முழுவதையும் 21ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப ரீதியிலும் அசுர வளர்ச்சி அடைந்துள்ள பிற்போக்குத்தனமான பாலியல் அடக்குமுறையை எதிர்த்து இன்று இவர்கள் போராடுகிறார்கள்…
இதற்கு நாம் தோளொடு தோள் நிற்காவிட்டாலும் பரவாயில்லை (அவர்கள் விரும்பினாலொழிய உடன் நிற்றல் சாத்தியமில்லை, காரணம் உணர்வுப் புரிதல் என்பது உள்ளவரே அறிவார்கள்; சம்பந்தமில்லாத மற்றவர்களுக்கு பரிதாபம் வருமே அல்லாது ரௌத்திரம் கடினம் தான்) ஏளனம் செய்தலும், இழித்துரைத்தலும், புரளி பேசுவதும் ஆகியன தவிர்த்தல் குறித்து யோசிக்க முயற்சி செய்வோம். இந்த சிந்தனை ஓட்டத்திற்கு, அதனை தட்டச்சு செய்வதற்கு நான் பயன்படுத்திய என்னுடைய நேரம், அழுத்தங்களிலிருக்கும், போராட்ட களங்களிலிருக்கும் என் சக இருதயர்கள் யாவருக்கும் நிமிர் வணக்கங்களுடனான சமர்ப்பணம்.

எழுத்தாக்கம்: வளவன்
Mail: nishanth143.kapv@gmail.com