நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் குறித்தாயிற்று. தமிழ்நாட்டில் கூட்டணிகளும் ஒரு முடிவுக்கு வந்தாயிற்று. இனிமேல் தேர்தல் பரப்புரையின் போது உச்சகட்ட நாடகங்களை பார்க்கலாம்.
ஐந்து வருடங்கள் அமைதியாக இருந்தாலும் தேர்தலின் போது மக்கள் ஒருவித உற்சாக நிலைக்கு வந்துவிடுகின்றனர் ஒன்று பேசுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கும்,இரண்டு வாக்கு செலுத்த பணம் கிடைக்கும். பரபரப்பான சூழலில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி ஆட்சி அமைந்த பின்தான் அமைதியாவர் .அடுத்த ஐந்து ஆண்டுகள் இவர்களை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று நொந்துக்கொள்வதில் கழியும்.
எப்பொழுதும் நடக்க கூடிய இந்த வழக்கமான வரிசைகளை மாற்ற ஏன் மக்கள் முயற்சிப்பதில்லை. தேர்தல் சமயங்களில் தாங்கள் செலுத்தும் வாக்கே ஆட்சியை தீர்மானிக்கும் என்பதை நன்கு உணர்வதோடு தனக்கேயுரிய காரணகாரியங்களோடு ஒரு கூட்டணியை தேர்வு செய்து யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்ளும் மக்கள், ஆட்சியை தீர்மானிக்க, விமர்சிக்க,எதிர்ப்பை காட்ட தேர்தலை தவிர வேறு வழிகள் இல்லை என்பதிலும் தீர்மானகரமாகத்தான் உள்ளார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆற்றும் இந்த ஜனநாயக கடமை நம் ஜனநாயகத்தை காப்பாற்ற போதாது என்பதை மக்களிடம் பரப்ப வேண்டுமே?செய்வது யார்?
இந்தக்கட்டுரையை வாசிப்பவர்கள் அனைவரும் அதனை செய்ய முயற்சிப்பார்களா?
அரசியல் கட்சிகளும் அவர்களுக்கேயுரிய அனுபவத்தில் தங்கள் வாக்கு வேட்டையை துவங்குகின்றனர். நடிப்பு,உணர்ச்சி,பணிவு,பணம் ,சாதி ,மதம் ,மொழி என்று அனைத்து ஆயுதங்களையும் பிரயோகித்து மக்களை கவர முயற்சி செய்கின்றனர். ஆனாலும் நீயோ அல்லது நானோதான் வெல்லப்போகிறோம் என்பதில் தெளிவாக உள்ளனர்.
அதாவது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால் ஆட்சியை மாற்றிவிட்டால் ஒரு திருப்திகரமான மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்.
பணக்காரர்களின் பணம் போட்டு பணம் எடுக்கும் இந்த பெரும்நிதி தேவைப்படும் தேர்தல் அரசியலில் ஏழை முற்போக்கு அரசியலாளர்களின் அறைகூவல்கள் எடுபடாமால் போவது இயல்புதான்.
ஆனால் பணம் அனைத்தையும் தீர்மானித்தும் விடுவதில்லைதான்.அப்படி பணம் கொண்டு வெல்ல முடியும் என்றால் அம்பானி அடுத்த பிரதமராகி விடுவார். அரசியல் ,மக்களின் ஆதரவு என்பது பணத்தால் விலைக்கு வாங்க முடியாதது. பணம் தேவைதான் ,ஆனால் அது மட்டுமே தீர்மானித்துவிட முடியாது என்பதுதான்.
பணம் இல்லாத பற்றாக்குறையை உழைப்பின் மூலம் சரிகட்டலாமே ?.அப்படி உழைத்து அரசியல் மாற்றத்தை உருவாக்க இங்கே யாரும் தயாராக இல்லை. மேடைகளில் பேசினால் போதும்? அறிவுரைகள் சொன்னால் போதும்? எப்படி அருமையாக பேசினார் பார் என்று புளாகிங்கதம் அடையும் தொண்டர்கள் (அ) போராளிகள் முகநூலில் தனக்கு பிடித்த அரசியல் பேச்சாளரின் நிழற்படத்தை வைப்பதோடு சரி ,அதற்கு மேல் இங்கே எதுவும் நடக்காது.
தேர்தல் பிரச்சாரம் என்பது ஒரு வேட்டையை ஒத்து இருக்கிறது.வேட்டையாடுபவர்கள் தான் பிடிக்க விரும்பும் விலங்குகளை பிடிப்பதற்கு பல முறைகளை பின்பற்றுகிறார்கள்.ஆசை காட்டுவது ,பொறி வைப்பது , விசம் வைப்பது ,அடித்து கொல்வது ,சுட்டுக்கொல்வது என்று முறைகள் நீளும் .
அரசியல் களம் சாதாரணமானது அல்ல , அது ஒரு சதுரங்க வேட்டையை ஒத்தது.
தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல்கட்சிகள் வேட்டையாடுபவர்கள், மக்கள் வேட்டையாடப்படுபவர்கள்.நாம் அதனை புரிந்துக்கொண்டால் மட்டுமே தப்பிக்க இயலும். . வேட்டையை நாம் நிகழ்த்தாவிட்டால் பதிலுக்கு நாம் வேட்டையாடப்படுவோம்.
இன்று தப்பிப்பது மட்டும் போதாது நம்மை வேட்டையாட வருபவர்களை வீழ்த்தவும் வேண்டியிருக்கிறது.
மக்களே , சதுரங்க வேட்டை துவங்கியாயிற்று.
வீழ்வதா? வாழ்வதா?
முடிவு நம் கையில்.
அபராஜிதன்.