சண்டிகரில் தமிழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேசுவரத்தைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ண பிரசாத் (26), சண்டிகரில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் மருத்துவக் கல்லூரியில் ஊடுகதிர் துறையில் பட்ட மேற்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 26-ம் தேதி காலை அவர் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சண்டிகரின் செக்டர் 11 காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக சடலத்தைக் கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக ராமேசுவரத்தில் உள்ள கிருஷ்ண பிரசாத்தின் பெற்றோருக்கு அவரது நண்பர்கள் தகவல் அனுப்பி உள்ளனர். உடனே கிருஷ்ண பிரசாத்தின் தந்தை ராமசாமி, அவரது குடும்ப உறுப்பினர்கள் 26-ம் தேதி சண்டிகர் சென்றனர்.
மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் கே.பழனிசாமி, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சண்டிகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ண பிரசாத்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.