கொலையுணர்ச்சி- சுமதி விஜயகுமார்.

இயற்கை பேரிடர்கள் , தனி மனித பகை, விபத்துகள், நோய், வயது முதிர்வு இவைகளை தவிர்த்து நிகழும் அத்தனை உயிரிழப்புகளுக்கும் காரணம் ஒற்றை கேள்வி ‘நீ யார்?’ . இந்த கேள்விக்கான பதில் கேள்வி கேட்பவரை பொறுத்தது. பிறக்கும் பொழுது இயற்கை கொடுக்கும் அடையாளம் என்பது கொஞ்சம் தான். மனிதன், அதில் ஆண், பெண், அல்லது மாற்று பாலினம். இதை தாண்டி தன்னை யார் என்று அடையாளப்படுத்தி கொள்வதன் விளைவே மற்ற அனைத்து மரணங்களுக்கும் காரணம்.

இதுவரை மனிதனால் நிகழ்த்தப்பட்ட அனைத்து படுகொலைகளும், போர்களும் இந்த கேள்வியின் அடிப்படையிலேயே. மனிதன் தன்னை யார் என்று வரையறுத்து கொள்ளாதவரை வெறும் உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் மட்டுமே கொலைகள் நிகழ்த்தப்பட்டன. நாகரிக மனிதன் குழுக்களாக வாழத்துவங்கியதும் தங்கள் குழு இன்னது என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ள வைக்கப்பட்ட பொது பெயர் பின்பு மெல்ல மெல்ல வளர்ந்து கண்டம், நாடு, இனம், மொழி, நிறம், மதம் என்று வேறுபாடுகளின் வடிவம் எடுத்தது.

எது மென்மையான மதம்,இனம் என்பதை ஒரு போதும் வறியவர்களும் சாமானியர்களுக்கு நிர்ணயிக்கவே முடியாது. அதற்கான தேவையும் அவர்களுக்கில்லை. ஒரு நாட்டின்/பகுதியின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவோ,அல்லது அதை ஆள துடிப்பவர்களால் ஏற்படுத்தப்பட்டதே இந்த மாய அடையாளங்கள்.
இந்தியாவில் இருக்கும் வரைக்கும் தான் மேல் சாதி இந்தியாவை தாண்டி சென்றால் நாம் எல்லோரும் இந்தியர்கள் மட்டுமே. ஒரு வெள்ளைக்காரரிடம் போய் ‘நான் எல்லாம் எங்க ஊர்ல ஆண்ட சாதி பரம்பரை’ என்று சொல்வதால் அவர்கள் நம்மை மற்ற இந்தியர்களை விட உயர்வாக நினைப்பார் என்று கருதினால், இந்த உலகின் ஆக சிறந்த முட்டாள் நாம் தான். சாதியெல்லாம் இந்தியாவில் (இந்தியாவில் இருந்து பிரிந்த மற்ற நாடுகளில் ) மட்டும் தான் செல்லும்.

அறிவியலின் படி உலகின் முதல் மனிதன் தோன்றியது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு. இதில் மதங்களின் தோற்றம் என்று பார்த்தால சில ஆயிரம் ஆண்டு காலம் மட்டுமே. பல கோடி ஆண்டுகளாய் மனிதனுக்கு தேவை படாத கடவுள் சில ஆயிரம் ஆண்டுகளாய் அதிகம் தேவை படுவது மனிதர்களை பிரித்து ஆள்வதற்கு என்பதை தவிர வேறு என்ன காரணமாய் இருந்து விட முடியும். மிக சமீபத்தில் இலங்கையில் வெடித்த குண்டுகளில் பலியான மனிதர்களையோ, அதற்கு முன் நிகழ்ந்த நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டில் இறந்த மனிதர்களையோ, தினம் தினம் சாதியின் பெயரால் கொல்லப்படும் இந்துக்களையோ காப்பாற்ற கண்ணுக்கு புலப்படாத எந்த சக்தியும் வரவில்லை.

உலகின் மிக பாவப்பட்ட இனம் என்று சொல்லப்படுவது ரோஹிங்கியா இன மக்கள் . சென்ற வருடம் புத்த தேசமான மியன்மாரில் இருந்து சாரை சாரையாய் அகதிகளாக வெளியேற்றப்பட்ட மக்களின் துயரம் சொல்லி மாளாது. அதில் 12 வயதுடைய ஒரு சிறுமி தன் உயிரை காப்பாற்ற மட்டும் அல்லாது இன்னும் சரியாக நடை பயிலாத தன் தம்பியை இடுப்பில் சுமந்தபடி பல கிலோமீட்டர்கள் நடந்தே சென்று அகதியாய் அடைந்த பின்னர் அவளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவள் அழுது கொண்டே பதில் அளித்ததை பார்த்து அன்று உறங்க முடியவில்லை. இலங்கையின் இறுதி யுத்தம் நடந்த பொழுது (இன்னமும் ) அதை பற்றிய அரசியல் அறிவு இல்லாத பொழுதும் அங்கு நிகழ்ந்த போர் நின்றுவிடாதா என்று எண்ணியதுண்டு. அப்பொழுது கவின் என் வயிற்றில் இருந்த நேரம். ஒவ்வொரு நாளும் கொத்து கொத்தாய் மக்கள் செத்துக்கொண்டிருக்கும் செய்தியை கேட்கும் பொழுதெல்லாம் பதறியதுண்டு.

20ஆம் நூற்றாண்டின் மிக சிறந்த வில்லனான ஹிட்லர் யூத இனத்தை அழித்த பொழுது வந்த கோபத்தை விட, அப்படி ஒரு இன அழிப்பை எதிர்கொண்ட யூத சமூகம், இன்று அதே போல் ஒரு இன அழிப்பை பாலஸ்தீனத்தில் நிகழ்த்தும் பொழுது அதிகமாய் இருக்கிறது. பாதுகாப்பிற்காக இந்தியாவுடன், சில விதிகளுடன் இணைத்த காஷ்மீர் மக்கள் படும் துயரங்களும் இவற்றிக்கு சளைத்ததல்ல. இதில் கூடுதலாக அவர்களுக்கு தேச துரோகிகள் என்று பெயர் வேறு.

மேற் சொன்ன ரோஹிங்கிய, இலங்கை தமிழர்கள், பாலஸ்தீனிய மக்கள்,யூதர்கள், காஷ்மீரி மக்கள் இவர்கள் அனைவரும் சந்தித்த அந்த இன அழிப்பு என்பது எதோ ஒரு அடையாளத்தின் பெயரிலே தான். இவர்களில் சிலர் நல்லவர்களாக இருந்திருக்கலாம், நாணயமானவர்களாக இருந்திருக்கலாம், கொலைகாரன், கொள்ளைக்காரன், கெட்டவன், திருடன், ஏமாற்றுபவன் இருந்திருக்கலாம். அவர்களை கொன்று அழித்துக்கொண்டிருக்கும் நாடுகளிலும் அதே போல் எல்லா வகை மக்களும் இருந்திருப்பார்கள். ஏன் என்றால் எல்லாவற்றையும் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள். அவ்வளவே. முன்பே குறிப்பிட்டதை போல பாலஸ்தீனிய மக்களுக்கு யூதர்கள் நடத்தும் கொடுமைகளை அறிந்ததில் இருந்து அந்த இனத்தின் மேல் ஒரு விதமான வெறுப்பு இருந்தது. ஆனால் அதெல்லாம் கார்ல் மார்ஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், Noam Chomsky போன்றோர்கள் யூத இனத்தை சேர்ந்தவர்கள் என்று அறியும் வரையில் தான், யூதர் என்பது ஓர் மாய அடையாளம் மட்டுமே. அவர்களும் மனிதர்களே.

யாரையும் வெறுக்காமல் இருக்க முடியுமா? தெரியவில்லை. யார் மீதும் அதிக கோபம் கொள்ளாமல் இருக்க முடியுமா? தெரியவில்லை. ஆனால் நாம் ஒருவரை வெறுப்பதற்கோ, கோபம் கொள்வதற்கோ அவரின் செயல்பாடு காரணமாய் இருக்கும் வரையில் தவறில்லை. ஆனால் ஒரு மனிதனை வெறுப்பதற்கு அவன் மேல் நாம் சுமத்தும் அடையாளமோ, இல்லை அவனாக தேர்ந்தெடுத்த அடையாளமோ காரணமாய் இருந்தால், குறை அவரிடம் இல்லை.

கீழே உள்ள படத்தில் இருக்கும் அந்த குழந்தை ஆணாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம் , எந்த மதத்தை சேர்ந்த தாய்க்கு பிறந்தவளாக இருக்கலாம், எந்த தேசத்தை சேர்ந்தவளாகவும் இருக்கலாம். எந்த தாய்மொழியை கொண்டவளாக இருக்கலாம். அவளை ஏந்தி இருக்கும் அந்த தந்தையின் முகத்தில் உறைந்திருக்கும் அந்த சோகத்தை உணர நாம் மனிதராய் மட்டுமே இருந்தால் போதும் . எந்த அடையாளங்களும் தேவையில்லை.

சுமதி விஜயகுமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here