அன்று ரகு, இன்று சுபஸ்ரீ……
அம்மா வாழ்க , அய்யா வாழ்க , இவர் வருக அவர் வருக என்று பல விதமான பதாகைகளை, நாம் தினம்-தினம் சாலையெங்கிலும் நம் நிழல் போல எங்கும் பின்தொடர்ந்து வருவதை பார்த்து கொண்டே நகர்ந்து செல்லும் இந்த குமுகத்திற்கு , இன்று வழக்கம் போல ஒரு நாளாகத்தான் துவங்கியது. இயல்பான இந்த நாளில் , அரசாங்கத்தின் அலட்சியத்தாலும், அரசியல் கட்சிகளின் அராஜகத்தாலும், நம் போன்றவர்களின் கண்டுகொள்ளாமையினாலும் , இன்று சுபஸ்ரீ என்ற ஒரு 23 வயது இளம் பெண்ணை நாம் இழந்துள்ளோம். இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை அருகே சாலையில் சுபஸ்ரீ சென்றுகொண்டிருந்தார். அச்சாலை நடுவே, அ.தி.மு.க வை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயபாலின் மகன் திருமணத்திற்காக பல பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அப்பொழுது அந்த சாலை வழியே சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது பாதகை ஒன்று விழவே, அவர் நிலைதடுமாறி சாலையில் விழ, அவர் மீது பின் வந்துகொண்டிருந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். செய்தி அறிந்ததும், ஆளும்கட்சியினரும் , மாநகராட்சியும் இனைந்து விரைவாக மிச்சம் இருந்த பதாகைகளை அகற்றினர். இது ஒரு வழக்கமான ஒன்றாக மாறி விட்டது, அதற்கு சில எடுத்துக்காட்டுகளை கூறுகிறேன். 2006 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பொதுநல வழக்குகள் இந்த பேனர் கலாச்சாரத்தை எதிர்த்து தொடரப்பட்டன. 2017/12/17 அன்று டிராபிக் ராமசாமியால் தொடரப்பட்ட ஒரு வழக்கை , நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் – பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில் நீதிபதிகள் அரசாங்கத்தை கடுமையாக சாடினார். 2006 முதல் நீங்கள் சாக்கு போக்கு சொல்லி தவிர்த்துக்கொண்டே வருகிறீர்கள் எனவும், மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் என்றும், நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் பணியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைத்துக்கொள்ளுங்கள் என மிக கடுமையாக எச்சரித்திருந்தார். மேலும் தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சாலைகளில் பதாகைகள் வைப்பதற்கும் தடை விதித்திருந்தது, இந்நாளில் நாம் எண்ணி பார்க்க வேண்டிய ஒன்று. இத்தனை நடந்தும் இன்னும் ஏன் நீதிமன்றம் இதை பெரிதாக கண்காணிக்கவில்லை என்பது, நீதிமன்றம் இன்று நிதி தருபவர்களின் மன்றமாக மாறி இருப்பதை உணர்த்துகிறது. இத்தனை இருந்தும் நாம் எளிதாக இதை கண்டுகொள்ளாமல் செல்வது , மனிதகுலத்திற்கே தலைகுனிவென்பதை மறுக்க முடியாது. 2017 இல் ரகு என்று இளைஞன் , கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த பதாகையினால் சாலை விபத்தில் உயிர் இழந்தார் என்பதை இன்னமும் அந்த சாலைகள் மறக்கும் முன்னே, அதே போல் மீண்டும் ஒரு அநீதி இன்று வரலாற்றில் பதியப்படுகிறது என்பதை வெட்கத்துடனும் வேதனையுடனும் பதிவுசெய்வதில் வருத்தப்படுகிறேன். சுபஸ்ரீயும் நம்மை போல் பல கனவுகளை சுமந்து வாழ்நதவர் என்பதை மறக்கவும், மறைக்கவும் இயலாது.
அவர் கனடா செல்லும் கனவில் வாழ்ந்து கொண்டிருந்த போது , அவரை இந்த குமுகம் ஒன்று சேர்ந்து கொன்றுவிட்டது என்பதை வரலாறு பதியட்டும்..
zaddy ப்ரதீப்