கொரோனா தொற்றுநோய் உலகளாவிய உணவு பாதுகாப்பு நெருக்கடியை தூண்டிவிடுமா?

இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் ஒமன் நாட்டில் ஆசிரியராக பணியாற்றும் ஆபிரகாம் தெய்வநாதன்.”

வைரசு தொற்று உலகளாவிய உணவு பாதுகாப்பு நெருக்கடியை தூண்டிவிடக்கூடும். கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி பற்றிய அச்சம், தொன்றுதொட்டு பயிர் ஏற்றுமதி செய்யும் சில நாடுகளை, தங்கள் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்தத் தூண்டியிருக்கிறது. இது உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை மேலும் சீர்குலைக்கும்.
இந்த வாரம், வியட்நாம் அரசு  புதிய அரிசி ஏற்றுமதி ஒப்பந்தங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. கசக்கசுதான் நாடும்  தங்களின் சர்க்கரை, கேரட், உருளைக்கிழங்கு மற்றும் வேறு சில விவசாய பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரசு கதவடைப்பின்(Lockdown) போது நுகர்வோர் பீதியுடன் வாங்குவதால்,  பெரும்பாலான நாடுகளும் அவரவர் உள்நாட்டு உணவுப் பொருட்களின் புழக்கத்தை பாதுகாக்க தாங்கள் செய்யும் ஏற்றுமதியை நிறுத்தக்கூடும் என்று தெரிகிறது.
சர்வதேச விவசாய உற்பத்திப் பொருட்களின் இயல்பு நிலையை மீட்பதற்கும், ஏற்றுமதித் தடைகள் மற்றும் தளவாடங்கள் உண்மையான உணவுப் பாதுகாப்பு நெருக்கடியைத் தூண்டாமல் தடுக்கவும் உலக அளவில் அவசர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கவேண்டிய நேரம் இது. கொரோனா தொற்றுநோயினால் தேவையுள்ள சில பயிர்களின் உலகளாவிய வர்த்தகத்தில் விலை உயர்வை தவிர்க்க முடியாது என்றாலும், தற்போதைய கட்டத்தில் பயிர் விநியோகங்களுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. ஆனால் நாடுகளுக்கிடையே உணவுப் பதுக்கல் துவங்கினால் அது வணிகத்தை கடுமையான சீர்குலைவுக்கு தள்ளி, இறுதியில் ஒட்டுமொத்தப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கலாம்.

கொரோனா வைரசின் உலகளாவிய பரவுதலை எப்போது கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்று வரையறுத்து கூற இயலாத நிலையில், அதை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் பல நாடுகளில் இயல்பான விவசாய நடவடிக்கைகளை பாதிக்கும் என்பதால், எதிர்கால தானிய விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், 25 ஆண்டுகளில் காணாத மிக மோசமான அளவிற்கு கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு வெட்டுக்கிளிகள் பரவி மொய்த்ததால், ஏற்கனவே அந்த பிராந்தியம் உணவு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குட்பட்டிருக்கலாம்.
எனவே, குறுகிய காலத்தில் கொரோனா வைரசின் தொற்றுநோயை கட்டுப்படுத்த அரசாங்கங்கள் தவறிவிட்டாலும் அதனின் விளைவாக உலகளாவிய உணவு வழங்கலில் சிக்கலாகிவிட்டாலும், பல நாடுகளில் பெரும் உணவு பற்றாக்குறை நெருக்கடிகள் ஏற்படக்கூடும். ஏற்கனவே 820 மில்லியனுக்கும் கூடுதலாக, மக்கள் பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட சீனா, அதன் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் குறிப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு தன்னிடம் இருந்த மகத்தான அரிசி மற்றும் கோதுமையின் கையிருப்பைக் கொண்டு தனது நாட்டின் தானிய விநியோகத்தை உறுதி செய்வதில் சீன அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றாலும், சீன அரசு வரவிருக்கும் ஆண்டுக்கும் அப்பால் திட்டமிட வேண்டும்.
இவ்வுலக அரசாங்கங்கள் இப்பொழுது உலக உணவு விநியோகத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தவறினால் பீதி கொள்முதல் பெருமளவில் ஏற்படும். இது பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கிய நாடுகளில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும், பல மூலப் பொருட்கள் மற்றும் சரக்குகளுக்கு உலகளாவிய கதவடைப்பின் போது இருக்கும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் தடையை முடிந்தவரை விரைவில் நீக்க வேண்டும். அவை விரைவில் நீக்கப்படவில்லை என்றால், உணவு பற்றாக்குறையைத் தாண்டி பல பிரச்சினைகளை நாம் சந்திக்கக்கூடும்.

source : The Global times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here