கொரோனா தடுப்பு நடவடிக்கை- சில ஆலோசனைகள்…ஆன்றனி கிளாரட்.


கொரோனா வைரஸ் இன்று உலகின் பல நாடுகளிலும் சமூகத்தொற்று என்கிற மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அன்றாட இறப்பு எண்ணிக்கை நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் வந்துவிட்டது.
இந்தியாவின் தட்பவெப்பம் மற்றும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியன அத்தகைய அபாய கட்டத்தை நோக்கி நகர்வதை தடுக்க உதவும் காரணிகளாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவை எவ்வளவு காலத்துக்கு உதவக்கூடும் என்பதை அறுதியிட்டு கூற இயலாது.
மேலும் இதற்கான தடுப்பு மற்றும் குணப்படுத்தும் மருந்து ஏதும் இன்றுவரை கண்டறியப்படாத சூழலில் பிற தடுப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
குழந்தைகள், முதியோர் மற்றும் பிற உடல்நலச் சிக்கல்கள் கொண்டோர் என்கிற பிரிவினர் இத்தொற்று சுலபமாக பரவும் அபாயத்துக்குட்பட்டோராக அறியப்பட்டுள்ளனர். சிகிட்சை பலனின்றி இறப்போரில் கணிசமான விழுக்காட்டினர் இப்பிரிவினராக இருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது.
இச்சூழலில் பாதிக்கப்பட்டோரை குணப்படுத்தும் பணியில் மருத்துவத் துறையினர் மெச்சத்தக்க முறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரப் பணியாளர்கள் அளப்பரிய சேவையாற்றி வருகின்றனர்.

குறிப்பாக ,சமூக விலகல் மூலம்தான் சமூகப்பரவலைத் தடுக்க இயலும் என்பதால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினை ஆட்சியாளர்கள் பிறப்பித்துள்ளனர்; காவல்துறையினர் கடினமான சூழல்களின் நடுவில் அதனை அமல்படுத்தி வருகின்றனர்.
எனினும், பாதிப்பைப் பொறுத்த மட்டில் நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக நமது தமிழ்நாடு உருவெடுத்துள்ளது; மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது.இது இந்நெருக்கடியைக் கையாளும் உத்தியைப் பொறுத்த மட்டில் ஓர் மீளாய்வை அவசியப்படுத்துவதாக நாங்கள் உணர்கிறோம்.
இத்தாலி, ஸ்பெயின் , அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவும் சூழல் பற்றிய செய்திகள் சமூகப் பொதுமனத்தில் பீதியை விதைத்துள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பீதி அவசியமற்றது எனினும் எதார்த்தமான கண்ணோட்டத்தோடு இதன் படிப்பினைகளை கருத்தில் கொள்வது அறிவுடைமையாகும் என்று நாங்கள் உணர்கிறோம்.
ஏக காலத்தில் எத்தனை ஆயிரம்பேருக்குத்தான் சிகிட்சை அளித்துவிட முடியும் எனபதை இந்த வளர்ந்த நாடுகள் உலகின் கண்முன் நிறுத்தியுள்ளதை நாமறிவோம்.
தொற்று அறியும் கருவிகள், பாதுகாப்புக் கவசங்கள், மருத்துவமனைகள், மருந்துகள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டத் தேவையான அம்சங்களைப் போதுமான அளவு கொண்டிருக்கும் வல்லமை கொண்ட எந்த வல்லரசு நாடும் இப்புவியில் இல்லை என்கிறப் புரிதல் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மட்டுமன்றி, அன்றாடம் ஆயிரக்கணக்கில் இறப்பு நிகழும்போது கெளரவமான இறுதிச் சடங்குகளை நிகழ்த்தவோ, இழப்பின் பாரத்தை துக்கம் கொண்டாடித் தணித்துக் கொள்ளவோ அவகாசமில்லையென்பது இன்று மனித குலம் சந்திக்கும் பேரவலத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
எனவே நமது முழுபலத்தோடும், வீரியத்தோடும், அனைத்து வளங்களையும் களமிறக்கி சமூகப்பரவலைத் தடுத்தே ஆகவேண்டும்.
ஆட்சியாளர்களின் அறிவிப்புக்கள் மற்றும் அறிவுரைகள், காவல்துறையினரின் கெடுபிடியான அணுகுமுறைகள் ஆகியவ ற்றினால் இன்றுவரை இந்த இலக்கினை நோக்கி நகர இயலவில்லை என்கிற எதார்த்த நிலையை நாம் வேதனையோடு அவதானிக்க வேண்டியுள்ளது.
இது அவர்களின் தோல்வி என்பதைவிட உத்தியில் மேற்கொள்ளத் தேவையான சில திருத்தங்கள் குறித்த கவன ஈர்ப்பு என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த இலக்கு நோக்கிய பணியினை அரசு ஆற்றிட மக்கள் யாவரும் அதன் செயலூக்கமற்ற பயனாளிகள் என்று பாவிப்பதே தொற்றுப்பரவல் தடுப்பின் முன்னோக்கிய நகர்வில் அச்சுறுத்தும் அளவிலான மந்தநிலைக்கான காரணமாகும்.
வரையறுக்கப்பட்ட பிரிவினர் தவிர்த்த ஏனையோர் யாவரும் ஒருசேர பயனாளிகளாகவும், பணியாளர்களாகவும் இயங்கினால் மட்டுமே சமூகத்தொற்று எனும் பேரபாயத்தை தவிர்க்க இயலும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இப்போது இயங்கும் அரசு ஊழியர் வலைப்பின்னல் அமைப்புடன் அந்தந்த பகுதிசார்ந்த மாணவர்-இளைஞர்-மகளிர் தன்னார்வலர்கள் இணைந்தால் நூறு விழுக்காடு நோய்தடுப்பு எனும் இலக்கினை வெகுவேகமாக அடைந்திட முடியும் என்று நாங்கள் உறுதிபட நம்புகிறோம்.
தமிழ்நாட்டு மக்களின் நலம் பேணிட நகர்கள் தோறும், ஊர்கள் தோறும், தெருக்கள் தோறும் அர்ப்பணிப்பு மிக்கத் தன்னார்வத் தொண்டர்கள் களமிறங்க முன்வரவேண்டும் என்று நாங்கள் விரும்பி வேண்டுகிறோம்.
அவர்களைப் பயிற்றுவித்து நோய்த் தடுப்பு பணியில் இணைத்திட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
பொது அறிவிப்போடு நில்லாது ஊர் அளவிலான மக்கள் அமைப்புக்கள், உள்ளாட்சி அமைப்புக்கள் வாயிலாக தன்னார்வக்குழுக்கள் அமைத்துக் களம்காண தமிழ்நாட்டு மக்கள், குடிமைச்சமூக அமைப்புக்கள், தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டால் கொரோனா தொற்று தடுப்பில் உலகுக்கே தமிழ்நாடு முன்னுதாரணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை என்று சூளுரைத்து சமர்ப்பிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here