கொரோனாவிலிருந்து மீண்ட இளைஞரின் அனுபவ பகிர்வு….தமிழ்அரவி.

சில தினங்களுக்கு முன்பு,
நாம் அனைவரும் அறிந்த (covid-19)கொரானா என்ற கொடிய நுண்ணுயிரி(வைரஸ்) தாக்கபட்டு சிகிச்சை பெற்றவனில் நானும் ஒருவனே.

அறிகுறிகள்:-
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தருணம் அது, திடீரென ஆரம்பித்தது தான் சில உடல்நிலை கோளாறுகள் (அதிகமான சோர்வு, மற்றும் தொண்டை குழியில் தண்ணீர் கூட பருகமுடியாத அளவிற்கு வலி), இதனால் என்னுள் ஒரு பதட்டமும், பயமும் ஆரம்பித்திருந்தன, காரணம் இந்த மீடியாக்களும், அரசாங்கமும் இதனை பற்றி ஒரு பெரும் பயத்தை இந்த சமூகத்தின் மீது திணித்து விட்டது. பொறுத்துக்கொள்ள முடியாத வலியின் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையை அனுகி இரண்டு நாட்கள் சிகிட்சை பெற்று வந்த நிலையில் நல்லதொரு முன்னேற்றம் காணப்பட்டது.

நான் ஏன் (covid -19) பரிசோதனை செய்து கொண்டேன்:-
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு பொறியாளராக (safety Engineer) வேலைசெய்து கொண்டிருந்தேன், ஒருவேளை எனக்கு தொற்று ஏற்பட்டிருந்தால் என்னிடம் இருந்து யாருக்கும் பரவக்கூடாது என நினைத்தேன்.
இதன் காரணமாக ஒரு தனியார் ஆய்வகத்தில் என் மாதிரிகளை ஆய்விற்காக கொடுத்திருந்தேன், அன்றைய தேதி (06-ஜூன்-2020) அடுத்த நாள் அதாவது (07-ஜூன்-2020) காலை பத்து மணி அளவில் எனக்கு ஆய்வு அறிக்கை கிடைக்க பெற்றது. அதில் எனக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால் எனக்கு உடல் சோர்வு ஏற்பட்ட, அதாவது தொற்று உறுதியாவதற்கு ஐந்து தினங்களுக்கு முன்னதாகவே என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். அடுத்த நாள் தேதி (08-ஜூன்-2020) அன்று அரசாங்கத்தில் இருந்து தகவல் ஏதேனும் வரும் என்றும், அவர்கள் என்னை அழைத்து செல்வார்கள் என்ற மனநிலைமையோடும் காத்திருந்தேன். அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது. (09-ஜூன்-2020) இன்றாவது வருவார்களா? என காத்திருந்த தருணம், அரசுக்கு என் மனநிலை புரியவில்லையே என்று நினைத்துக்கொண்டு நானே முடிவுக்கு வந்துவிட்டேன், அப்போதே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்தேன், எனக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது பற்றியும், மூன்று நாட்கள் ஆகியும் என்னை அழைத்து செல்ல யாரும் வரவில்லை எனவும் முறையிட்டேன், இன்று வரையில் எனக்கு புரியவில்லை ஏன் அரசாங்கம் இத்தனை மெத்தனம் காட்டியது என்று, இல்லை அரசு ஊழியர்கள் அரசாங்கத்தை மதிக்கவில்லையா?என்பதும் தெரியவில்லை.

பிறகு 2:00 மணி அளவில் 108 வாகனம் நான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் வந்தது. பிறகு நானிருந்த இடம் கிருமிநாசினி கொண்டு தெளிக்கப்பட்டது, (கடமைக்கும் மற்றும் கணக்கு காட்டவும்) அதுபோல இருந்தது அவர்களின் செயல்பாடு. அரைமணிநேர ENQUIRY-க்கு பிறகு 108ல் ஏற்றப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

மருத்துவரும் சுற்றுசூழலும்:
ஜூன் 09 ம் தேதி மாலை 4:00 மணி அளவில் என்னுடைய இரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பட்டது, அடுத்ததாக ஒரு செவ்வக வடிவிலான நீண்டதொரு அறையை காட்டி இதில் ஏதாவது ஒரு ஆள் இல்லாத கட்டிலை நீங்கள் எடுத்துகொள்ளுங்கள் என சொல்லிவிட்டு சென்றார்கள், அந்த அறையில் சராசரியாக (30-40) கட்டில் இருந்திருக்கும், எந்த ஒரு பாதுகாப்பு இன்றியும் ஒவ்வொரு கட்டிலுக்கும் அதிகபட்சமாக 1 மீட்டர் இடைவெளியுடனும் இருந்தது அவ்விடம். எந்த ஒரு தடுப்புமின்றி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் தொற்று சுலபமாக பரவ ஏதுவாக இருந்தது அந்த சூழல். இது என்னுடன் இருந்த மற்ற சக நோயாளிகளின் கருத்தும் கூட.

covid-19 மூன்றுநிலை உடையது.

முதல் நிலை:-
நோய் தொற்று ஏற்பட்ட ஓரிரு தினங்கள் – உடல் சோர்வு மற்றும் தொண்டை வறட்சி (தொற்று உறுதி),

இரண்டாம் நிலை:-
காய்ச்சல்,இருமல் மற்றும் சளி (தொற்று உறுதி)

மூன்றாம் நிலை:-
இந்த அறிகுறிகளுடன் மூச்சு திணறல் (தொற்று உறுதி)

இதில் முதல் நிலை நோய்தொற்று உள்ளவர்களிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் தொற்று பரவுவது கடினம் என்பது WHO வின் கருத்து.

இந்த மூன்று நிலை தொற்று உள்ளவர்களை தனித்தனியாக வைக்கவில்லை, இதனால் முதல்நிலையில் உள்ளவர்கள் எளிதாக மூன்றாம் நிலை அடையும் வாய்ப்பு இருந்தது. இது அங்கு அனுமதிக்கபட்ட மற்ற நோய்தொற்று இருந்தவர்களின் கருத்தும் கூட.

செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவருமே உள்ளே வரும் பொழுது பாதுகாப்பு உடை அணிந்திருந்தார்கள். அதை அணிவது எவ்வளவு கடினம் என்பது தெளிவாக தெரிந்த ஒரு விசயம், அதற்காகவே அவர்களை பாரட்ட வேண்டும்.

இதில் அவர்கள் செய்த சிறிய தவறு, சமூக இடைவெளி பற்றி சிறிய அறிவு அவர்களுக்கு இல்லாததே ஒரு வருந்தக்கூடிய விசயமாக இருந்தது. உணவு மற்றும் மாத்திரைகள் தரும்பொழுது தொற்று உறுதியானவர்கள் எவரும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை, அதை கண்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களும் அமைதிகாத்த வண்ணம் இருந்ததும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

உணவு முறையும் மற்றும் (மாத்திரைகளும்) சிகிட்சைமுறையும்:-

1.காலை 7:00 மணிக்கு மஞ்சள்பொடி மற்றும் மிளகுடன் கூடிய பால்.

2. 8:00 மணி அளவில் காலை உணவு (இட்லி ,தோசை) +முட்டை.

3.பிறகு மூன்று மாத்திரைகள்.

4. 11:00 மணி அளவில் கசாயம் வழங்கபட்டது.

5. 1:00 மணிக்கு மதிய உணவு.

6. மாலை 4:00 மணிக்கு கசாயம் மற்றும் புரதசத்து நிறைந்த ஏதேனும் ஒரு தின்பண்டம்.

7. இரவு 8:00 மணிக்கு ,சப்பாத்தி (அ) கோதுமையினால் ஆன உணவு.

8.அடுத்தாக 7 மாத்திரைகள்.

9. 8:30 மணிக்கு மஞ்சள் பொடி மற்றும் மிளகு கலந்த பால்.

இது மட்டும் தான் சிகிச்சை முறை. இது முதல் மற்றும் இரண்டாம் நிலை நோய் தொற்று உள்ளவர்களுக்கான சிகிச்சைமுறை.

மூன்றாம் நிலை நோய் தொற்று உள்ளவர்களுக்கு கூடுதலாக சில INJECTION, GLUCOSE மற்றும் VENTILATOR-ல் வைத்திருந்தார்கள்.

இதில் அரசு கவனிக்க வேண்டிய விசயம், சில நேரங்களில் உணவு மற்றும் பால் போன்றவை சரியான நேரங்களுக்கு வருவதில்லை என்பதை கூட பொறுத்துக்கொள்ள முடியும்,
ஆனால் அவ்வளவு பெரிய தலைமை மருத்துவமனையில் அன்றாடம் தரக்கூடிய நோய்தடுப்பு மாத்திரைகள் கையிருப்பு இல்லாமல் போவதும் ,நோய் தொற்று உள்ளவர்களுக்கு கையிருப்பு இல்லாத மாத்திரை “இன்று உங்களுக்கு தேவையில்லை என்பதும்” ,அடுத்தநாள் அதே மாத்திரை வந்ததும் இதை நீங்கள் கட்டாயம் உட்கொள்ள வேண்டும் என்பதும் ஒரு வாடிக்கையாகவே சென்றுக்கொண்டிருந்தது.
இதை பற்றி மின்னஞ்சல் மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் செய்த போதிலும் இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டதா என்றால் கேள்விக்குறிதான்.

சிகிச்சையின் இறுதிநாளும் வழிமுறைகளும்:-

இதுவரை எனக்கு புரியாத ஒரு விசயம் என்னவென்றால் பத்து நாள் சிகிச்சைக்கு பின் அனைவரையும் DISCHARGE செய்யும் பொழுது எந்த ஒரு TEST-ம் எடுப்பதில்லை, மருத்துவமனை அளித்த இந்த பத்து நாள் சிகிச்சைமுறையில் தொற்று உள்ளவர்களின் உடலில் இருந்த (COVID-19) வைரஸ் அழிந்துவிட்டதா?.
தொற்றாளர்கள் அனைவரும் பூரண குணமடைந்துவிட்டனரா?.
மேலும் அரசாங்க அறிக்கையில் இத்தனை நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என கூறுகிறார்களே!! எந்த TEST-ம் எடுக்காமல் எப்படி குணமடைந்தனர் என அறிக்கை விடுகிறார்கள்!!
சரி, குணம் அடைந்தார்கள் என DISCHARGE செய்யும் பொழுது ஏன் அடுத்த 14 நாட்கள் உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களிடம் இருந்து மற்றவருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் ஏன் கூற வேண்டும்.

” இவர்களின் கணிப்பும் புரியவில்லை
இவர்களின் கணக்கும் புரியவில்லை”

108-ல் ஏறுவதற்கு முன்பு ஒரு ஹோமியோபதி மாத்திரை குப்பியும், ஒரு நெல்லிக்காய் லேகியமும் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள், இந்த 108 போகும் வழியிலே நம்மை இறக்கிவிட்டு போகிறது, அங்கிருந்து சிறிது தூரம் (சுமார் அரை கிலோமீட்டர்) நடந்தால் நம் வீடு வந்துவிடும்.

மேலும் விபரங்களுக்கு “TAMIL ARAVI” என்ற youtube பக்கத்தில் covid-19 public awarness என்ற காணொளியை பார்க்கவும்.
https://youtu.be/eEt-nI6UUPU

தமிழ் அரவி
தமிழ்நாடு தேசிய கட்சி.