கூட்டுறவு வங்கிகளின் எதிர்காலம்- சாருமா.

தோற்றம்

இந்திய நாட்டில் நிலவிய கடும் ஏழ்மையைப் போக்க, வேளாண் மற்றும் நாட்டுப்புற, நகர்ப்புற தொழில்களைக் காப்பாற்ற ஐரோப்பிய மாதிரிகளை ஒட்டி, ஃப்ரெட்ரிக் நிக்கல்சன் 1899, சர் எட்வர்ட் லா, 1901, ஆகிய வெள்ளையரின் பரிந்துரைப்படி, கூட்டுறவுக் கடன் சங்கச் சட்டம், 1904 ஆம் ஆண்டு போடப்பட்டது. அந்தச் சட்டம், 1912ல் போடபட்ட கூட்டுறவு சங்கங்கள் சட்டம் ஆகியவை, கூட்டுறவுத் துறை பதிவாளரிடம் பதிந்து கூட்டுறவு சங்கங்களும் வங்கிகளும் தோன்றக் காரணமாகின. விடுதலைக்குப் பின் கூட்டுறவு மாநிலப் பட்டியலில் இடம்பெற்றது.

இந்த கூட்டுறவு அமைப்புகள் ஒரு மாநிலத்தில் மூன்று அடுக்குகளில் இயங்குகின்றன. மாநில அளவில் மாநில கூட்டுறவு வங்கியாகவும் (state co-op banks), மாவட்ட அளவில் மத்திய கூட்டுறவு வங்கிகளாகவும் (district central co-op banks), கிராம அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களாகவும் (primary agricultural co-op societies) இயங்குகின்றன. வட கிழக்கு மாநிலங்களில் மாவட்ட அடுக்கு இல்லாமல், இரண்டு அடுக்குகளாக இய்ங்குகின்றன.

நகர்ப்புறங்களில் அவை தொடக்க கூட்டுறவு வங்கி(primary co-op banks)(எ) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளாகவும் (urban co-op banks) பன்மாநில நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளாகவும் (multi state urban co-op banks) இயங்குகின்றன.

இதில் கிராமப்புறங்களில் இயங்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களைத் தவிர மற்ற அனைத்து வங்கி அமைப்புகளுக்கும் வங்கி நடவடிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கி மற்றும் நபார்ட் வங்கியின் விதிகளே பொருந்தும். பதிவு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அந்தந்த மாநில அரசின் கீழ் வரும் கூட்டுறவு சங்க விதிகள் பொருந்தும். உறுப்பினர்களே கூட்டுறவு அமைப்புகளின் உரிமையாளர்கள். ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையல் தேர்தல் நடத்தப்பட்டு வங்கியின் இயக்குனர் குழுவுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழகத்தில் பின்னர் இந்த விதிமுறைகள் மாற்றப்பட்டு இயக்குனர் குழு மாநில அரசே நியமிக்கிறது. பன்மாநில நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

ஒரு ஊராட்சியில் அல்லது ஒரு நகரத்தில் அல்லது ஒரு மாவட்டத்தில் பெருவாரியாக மேற்கொள்ளப்படும் தொழிலை மையமாக வைத்து, அதன் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, அவர்களுடைய நலன் சார்ந்து கூட்டுறவு வங்கிகள் இயங்குகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டுத் தறி, அப்பளம் தயாரிப்பு, சிவகாசியில் பட்டாசு தொழில், திருப்பூரில் பின்னலாடைகள் என அந்தந்த பகுதிகளின் தொழில் முதலாளிகளையும் தொழிலாளரையும் ஊக்குவிக்க மாநில அரசின் நிதி ஆதாரமாக இருப்பவை கூட்டுறவு வங்கிகளே. அரசின் 67% கிராமப்புற கடன்களுக்கும், 27% விலை இல்லாப் பொருள்களுக்கும் கூட்டுறவு வங்கிகளே அடிப்படை.

கூட்டுறவு வங்கிகளும் அதன் முதல் அடுக்கான கூட்டுறவு சங்கங்களும் பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகளைப் போல லாப நோக்கற்றவை. அது மட்டுமல்லாமல் அந்தந்த பகுதி மக்களுக்கு மிகவும் நெருக்கமானவை. ஊழியர்கள், அலுவலர்கள் வட்டார மொழி பேசும் ஊர்க்காரர்களாக இருப்பர். வங்கியின் நடைமுறைகளும் எளிதில் புரிந்துகொள்ளத் தக்கனவாக இருக்கும். குறிப்பிட்ட பகுதியின் அரசியல் செல்வாக்கு இருக்கும் என்றாலும் அவற்றை மக்கள் குறை கேட்டு, நிர்வாக சீரமைப்பின் வழி சரி செய்ய இயலும்.

கூட்டுறவு வங்கிகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்:

ரிசர்வ் வங்கிச் சட்டம் 1834
வங்கி முறைப்படுத்தல் சட்டம் 1949, பிரிவு 22, 23, 35A,
வங்கிச் சட்டங்கள் கூட்டுறவு சங்கங்கள் சட்டம்1965.
இந்தச் சட்டங்களின் படி வங்கி நடவடிக்கைகள் மேற்பார்வையிடப் படுகின்றன. இவை போதாவென்று 2005 ஆந்திரா முதல் கடைசியாக 2014ல் தெலுங்கானா வரை எல்லா மாநில கூட்டுறவுத்துறை, பதிவுத்துறையோடும், கூட்டுறவு வங்கிகளோடும், ரிசர்வ் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளது. இதன்படி ரிசர்வ் வங்கி கூட்டுறவு வங்கிகளைக் கட்டுப்படுத்தும் தரப்புகளான கூட்டுறவுத்துறை, வங்கியின் செயற்குழு, நபார்ட் உள்ளிட்ட அனைவரையும் ஒரே மேசைக்கு வரவைக்க இயலும். ஒருங்கிணைந்த முடிவுகள் எடுக்க வழி செய்ய இயலும். மேலும் முடிவுகள் இசைவற்றோ, பொதுமக்களின் நலனுக்கு மாறாகவோ இருந்தால் முடிவுகளைக் கைக்கொண்டு மாற்றை அறிவிக்கவும் ஆணைகள் வழி செய்கின்றன.

பஞ்சாப்- மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியின் மோசடி

பஞ்சாப்- மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி 1984ல் தொடங்கப்பட்ட 7 மாநிலங்களில் 137 கிளைகளுடன் செயல்படும் ஒரு நகர்ப்புற கூட்டுறவு வங்கியாகும். இது ரிசர்வ் வங்கியின் பட்டியல் வங்கியாக வேகமாக வளர்ந்தது. கடந்த சில ஆண்டுகளில், ஒரு குறிப்பிட்ட, HDIL எனப்படும் மும்பையைச் சேர்ந்த வீட்டு வளர்ச்சி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விதிகளை மீறி கொடுத்த கடன் ரூ.6226 கோடி வாராக் கடனாகி ( இது அந்த வங்கிக் கடனில் 75%)2018 ஆம் ஆண்டு, அந்நிறுவனத்தின் 44 கணக்குகளை மறைக்க 21049 போலி கணக்குகள் காட்டப்பட்டிருக்கின்றன. அந்த நிறுவனத்தின் முறைகேடுகளால் கடன் நெருக்கடியாகி, கடந்த ஆண்டு இறுதியில் கூட்டுறவு வங்கியின் தலைவர் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் மூலம் தெரிவிக்க, அதன் பின்னரே நடந்த முறைகேடுகளை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது.

வங்கியின் தலைவரைக் கைது செய்துவிட்டார்கள். முன்னாள் வங்கி இயக்குனரும் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தக் கடன் நிறுவனத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடி, முதலில் ரூ.1000 வரையே ஒரு கணக்கில் எடுக்க முடியும் என்று சொன்ன ரிசர்வ் வங்கி, கடந்த ஜூன்22 முதல் ரூ.1 லட்சம் வரை ஒரு கணக்கில் எடுக்க முடியும் என்று அனுமதித்து உள்ளது. இதன் மூலம் 84% வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தைப் பெற்றுவிட முடியும். பணம் போனது கடந்த பல ஆண்டுளாக என்பதால் இன்னும் சிக்கல் தீரவில்லை.  சில சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளார்கள்.

புதிய சட்டக் கோரிக்கை

8.6 கோடி வாடிக்கையாளர்களின் ரூ.4.85 லட்சம் கோடி வைப்புத் தொகையைக் கொண்ட 1540  நகர்ப்புற (urban co-op banks) மற்றும் பன்மாநில கூட்டுறவு வங்கிகளை (multi state urban co-op banks) ரிசர்வ் வங்கியின்  நேரடிக் கட்டுப்பட்டிற்குள் கொண்டு வர புதிய சட்டம் கொண்டு வரப்படும் என 24.6.2020 அன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளின்  பதிவு, உறுப்பினர்கள், தலைமை உள்ளிட்ட நிர்வாகம், கொள்கை முடிவுகள் அந்தந்த மாநில அல்லது மத்திய கூட்டுறவு அமைச்சின் கீழ் வருகிறது. ஆனால் வங்கிப் பரிவர்த்தனைகள் இதர பட்டியல் வர்த்தக வங்கிகளைப் போல் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இன்றும் உள்ளது.  வங்கியின் இயக்குனர் குழுவின் முடிவுகளை கைக்கொண்டு, மேலதிகாரம் செலுத்தும் உரிமைகளும் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆணைகள் அனுமதிக்கின்றன.
பரிவர்த்தனைகள், கடன்கள், குறிப்பாக வாராக் கடன்கள் குறித்த அறிக்கை தாக்கலின் போது குறிப்பிட்ட பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி மறைத்த உண்மைகளை தங்கள் வழக்கமான ஆய்வுகளில் கண்டுபிடிக்க முடியாதது யார் குற்றம்? அல்லது எதன் போதாமை? கூடுதல் அதிகாரத்திற்காகத்தான்  என்று ஆளும் தரப்பு சொல்லி இருக்கிறார்கள். இதனால் மாநில உரிமைகளுக்கோ, பங்கு முதலீட்டிற்கோ, கொள்கை முடிவுகளுக்கோ பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
கூட்டுறவு வங்கிகளும், கூட்டுறவுத்துறையும் எல்லா  மாநிலங்களிலும் இருந்தாலும், குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் தமிழ்நாட்டில் தான் அவை துடிப்பாக இயங்குகின்றன. குஜராத் மற்றும் மாகாராஷ்ட்ரத்தில் பாஜக அரசின் ஆட்சிகளின் போது நிர்வாகத்தை கபளீகரம் செய்து அவர்கள் கைப்பாவிகளாக மாற்றி இருக்கிறார்கள். அடுத்து தமிழகத்தில் இருக்கும் கூட்டுறவுகளே வலுவாக இருக்கின்றன.  அரசியல் செல்வாக்கும், தேர்தல் அரசியலும் கூட்டுறவுகளையும் விட்டுவைக்கவில்லை. இந்த பின்புலத்தின் தான் இந்த ரிசர்வ் வங்கியின் கூடுதல் அதிகாரக் கோரிக்கையையும், வங்கி முறைப்படுத்தல் சட்ட திருத்தம் 2020ன் கீழ் புதிய சட்டத்திற்கான அனுமதியையும் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. இவை உள்ளபடியே கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளையும் நிர்வாகத்தையும் சீரமைக்க எடுக்கும் நடவடிக்கைகளா? அல்லது கூட்டுறவுகளை மாநில உரிமைகளிலிருந்து பிரித்து, பொதுத் துறை வங்கிகள் போல் பெருமுதலாளிகளின் வேட்டைக் காடாக மாற்றி கபளீகரம் செய்யும் தொடக்க முயற்சியா?  மாநில அரசின் எல்லா உரிமைகளையும் கொஞ்சம்கொஞ்சமாக விட்டுக்கொடுக்கும் தமிழக அரசு இந்த விசயத்திலும்  இன்னும் வாய் திறக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. நகர்வுகளைக் கூர்ந்து கவனிப்போம்..

சாருமா.