குதிரை பேரம் நடத்தி அவமானப்பட்ட தே.மு.தி.க……………அபராஜிதன்

பிரதான அரசியல் கட்சிகள் என்று பார்க்கும் போது ஒவ்வொன்றும் உருவான விதம் ஒரு வரலாற்று தேவையை நிறைவு செய்வதற்காக தோன்றியிருக்கிறது. தே.மு.தி.க உருவான போதும் அப்படி ஒரு தோற்றம் இருந்தது. தி.மு.க., அ.தி.மு.க இரண்டிலும் மக்கள் நம்பிக்கை இழந்திருந்த நேரம் தே.மு.தி.க வை ஒரு மாற்றாக பலர் கருதினர்.ஆனால் தேசிய முற்போக்கு திராவிட கழகம் உருவாகும் போது மக்களுக்கு எதிர்பார்ப்புகள் இருந்தது.ஆனால் இயல்பிலேயே அதற்கான எந்த உள்ளடக்கமும் இல்லாமல் தோன்றிய கட்சியாக அது இருந்தது. இந்தக்கட்சியில் தேசியமும் இல்லை,முற்போக்கும் இல்லை,திராவிடமும் இல்லை என்று ஒருவர் அப்போதே சொன்னது நினைவுக்கு வருகிறது.
எந்தவித கொள்கையும் இல்லாமல் அரைகுறை வாக்குறுதிகளுடன் ஆட்சியில் இருந்த தி.மு.க. வை வீழ்த்த அ.தி.மு.க வுடன் கூட்டணி சேர்ந்த அன்றே, அதுவரை மக்களுடன் மட்டும்தான் கூட்டணி ,தனித்து ஆட்சி என்று பேசி வந்ததையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டது தே.மு.தி.க.

அதன் பிறகெல்லாம் தேர்தல் வரும் காலங்களில் கூட்டணி பேச வரும் கட்சிகளிடம் இவர்கள் முதலில் கேட்பது எவ்வளவு பணம் தருவீர்கள் என்பதைத்தான்.தேர்தலில் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ ஆனால் பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள் இவர்கள்.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதா,மைத்துனர் சுதீஷ் ஆகியோர் விஜயகாந்தின் உடல்நலம் மோசமான பின்னர் அனைத்து அதிகாரங்களையும் கையிலெடுத்துக்கொண்டது கட்சிக்கு இன்னும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்பொழுது நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் பேரங்கள்தான் தே.மு.தி.க விற்கு இதுவரை இல்லாத ஒர் அவமானத்தை தேடித்தந்துள்ளது.மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக தேர்தல் களம் காண்பது என்பது போய் பணம் சம்பாதிப்பதற்காக களம் காண்பது என்ற கட்சித்தொழில் நடத்தும் பாணி முன்னரே உருவாகிவிட்டாலும் அதனையே முழுமையான தொழிலாக ஏற்றிருக்கும் கட்சியாக தே.மு.தி.க உருவாகிவிட்டது.

தி.மு.க விடம் பேச்சுவார்த்தை நடத்தி அதில் தோல்வி ,அ.தி.மு.க கூட்டணியில் இணைகிறோம் என்பதெல்லாம் இயல்பான விடயங்கள்தான் .ஆனால் அதையே பலமுறை செய்வதும் மற்றவர்களை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்வதும் என்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது அதில் அம்பலப்பட்டு நிற்கும் கட்சியாகவும் தே.மு.தி.க இன்று நிற்கிறது.

ஒரு கட்டத்தில் தி.மு.க கதவை முழுமையாக மூடிய பின்னர் அ.தி.மு.க விடம் எதிர்பார்த்த பேரம் முடியாத போது மீண்டும் தி.மு.க விடம் சேர்க்க சொல்லி கேட்டது அதனை துரைமுருகன் அம்பலப்படுத்தியது தே.மு.தி.க வுக்கு பலத்த அடியாக மாறியது.இப்போது தே.மு.தி.க அ.தி.மு.க தரப்பு என்ன தருகிறதோ அதை மட்டும்தான் பெற முடியும்,இல்லையேல் தனித்து களம் காண வேண்டும்.

குதிரை பேரம் நடத்தி வந்த கட்சி இன்று பேரம் பேசும் வலிமையை முற்றிலுமாக இழந்திருக்கிறது.கடந்த முறை எதிர்க்கட்சியாக இருக்கும் போதே பொறுப்பான முறையில் செயல்படாத தே.மு.தி.க மேலும் ஆட்சிக்கு வரும்முன்னரே இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தப்பித்தவறி அதிகாரத்திற்கு வந்தார்கள் என்றால் நாட்டையே பேரம் பேசி விற்றுவிடுவார்கள்.நம் நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

திருடர்கள் மாட்டிக்கொண்ட பிறகு கொடுக்கும் விளக்கம் போல நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிரேமலதா அதிலும் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசியது , மற்ற கட்சி தலைவர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியது மக்களை அவர்கள்பால் முகம் சுளிக்கவே வைத்திருக்கிறது.மக்கள் மத்தியில் தே.மு.தி.வின் செல்வாக்கு கடுமையாக சரிந்திருக்கிறது.

கடந்த தேர்தலிலேயே பலத்த அடி வாங்கிய தே.மு.தி.க விற்கு இந்த தேர்தல் இன்னும் மோசமானதாக இருக்கப்போகிறது.
தே.மு.தி.க தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படவேண்டிய ஒரு கட்சி.அதனை தமிழக மக்கள் முன்நின்று செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here