கீழடி – ஆதிக்கவாதிகளுக்கு விழுந்த பேரிடி! – ராஜகுரு.

0
20

தமிழ்நாட்டின் பரப்பில் வாழும் தமிழர்களின் தொன்மை தொடர்பான கதையாடல்கள் பெரும்பாலும் இலக்கிய வெளியை சார்ந்தே நிலவிவந்தமை, தமிழ்நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் பேரிடராகவே இருந்ததை எவரும் மறுப்பதற்கில்லை.

தொல்லியல் ஆய்வுகள் தமிழக வரலாற்றின் இருண்ட பகுதிகள் மீது அறிவொளியை பாய்ச்சியது ஆறுதல் தரக்கூடியதுதான். இந்த வகையில் கீழடி தொல்லியல் அகழாய்வு 2600 ஆண்டுகளுக்கு முன்பு வைகை நதியோரம் பண்பாட்டுச் செழிப்புடன் வாழ்ந்த நம் முன்னோரின் கதையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதோடு, நமது பண்டைய வரலாற்றை வெளிக்கொண்டு வருவதில் – வெளிக்கொண்டு வராமல் காலங்கடத்துவதில் – கிடப்பில் போடுவதில் – முடிந்தவரை தடுப்பதில் ஆதிக்க வாதிகளுக்கு இருக்கின்ற அடங்காத களவாணித்தனத்தையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட முயற்சியால் ‘கீழடியில் கிடைத்துள்ள கட்டுமான அமைப்புகள் ஒரு முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளமாக உள்ளதோடு, எழுத்தறிவு பெற்ற, சிறந்த கைவினைக் தொழில்நுட்ப அறிவில் தேர்ச்சியுடைய, உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டு வணிகத்தையும் மேற்கொண்ட வளமிக்க சமூகமாக தமிழர்கள் வைகைக் கரையில் கி.மு.600 லேயே வாழ்ந்தார்கள்’ என்ற உண்மை உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கீழடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்ட மத்திய தொல்லியல் துறை இரண்டு ஆண்டுகள் ஆய்விற்கு பின், ‘தமிழகத்தில் முதன்முறையாக நகர நாகரிகத்திற்கான விரிவான கட்டுமானங்கள் கிடைத்திருக்கின்றன’ என இடைக்கால அறிக்கை தந்தது. அறிக்கை அளித்த அமர்நாத் இராமகிருஷ்ணன் பணியிடம் மாற்றப்பட்டார். மூன்றாம் ஆண்டு ஆய்வு நடத்திய ஸ்ரீராமன் வெறும் 10 குழிகளை அகழ்ந்துவிட்டு ‘புதிய ஆதாரங்களோ, கட்டுமானத்தின் தொடர்ச்சியோ கிடைக்கவில்லை, புதிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை’ என மத்திய அரசுக்கு ஒரு பக்க அறிக்கையை அனுப்பினார். அதன் அடிப்படையில் மத்திய அரசின் தொல்லியல் துறை கீழடி ஆய்வை கைவிட்டு வெளியேறியது.

உத்தரப்பிரதேசம் பாக்பத்தில் உள்ள சனவுலி கிராமத்தில் கடந்த ஆண்டு மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் பழங்காலத்து சவப்பெட்டிகளும், கல்லறைகளும் கிடைத்துள்ளன. அவற்றின் காலம் என்ன என்பது இன்னும் ஆய்வால் உறுதி செய்யப்படவில்லை. அதற்கு முன்பே சனவுலி கிராமத்தில் 28.67 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட நிலமாக மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

கீழடியில் ஏறத்தாழ 200 ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் எச்சங்கள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்களும், கட்டுமான சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டு காலப் பகுப்பாய்வின்படி கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இருந்தும் கீழடியின் ஆய்வுக்குரிய நிலத்தை பாதுகாக்கப்பட்ட நிலமாக அறிவிக்க, மத்திய தொல்லியல் துறைக்கு கண்ணுமில்லை, கருத்துமில்லை.

மத்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இருப்பினும், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் ஆய்வு முயற்சியால் கீழடி அகழாய்வு தமிழக வரலாற்றில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள திருப்புமுனைகளை ஏற்படுத்தியுள்ளது.

  1. தமிழில் சங்க காலம் கி.மு.3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.2 ஆம் நூற்றாண்டு வரை எனக் கருதப்பட்டதை, கி.மு.6 ஆம் நூற்றாண்டுக்கு நகர்த்தி சங்ககாலத்தை மேலும் மூன்று நூற்றாண்டுகள் வயதானவை ஆக்கியுள்ளது.
  2. தமிழ் பிராமி எழுத்தின் காலம் இதுவரை கருதப்பட்டது போல கி.மு.5 ஆம் நூற்றாண்டு அல்ல கி.மு.6 ஆம் நூற்றாண்டு என காட்டியுள்ளது.
  3. இதுவரை கருதப்பட்டு வந்த எழுத்தறிவு தொடங்கிய காலம் கி.மு.3 ஆம் நூற்றாண்டு என்பதை மாற்றி கி.மு.6 ஆம் நூற்றாண்டு அளவிலேயே தமிழகம் எழுத்தறிவு பெற்றது என நிலை நிறுத்தியுள்ளது. தமிழகத்தின் தொன்மை வரலாற்றை அறிவதற்கு நாம் இன்னும் அதிக தொலைவு போக வேண்டியுள்ளது.

“சொந்த வரலாற்றை அறிவதற்கு மட்டுமல்ல, சொந்தமாக புதிய வரலாற்றைப் படைக்கவும்” உறுதியுடன் பயணிப்போம்.

ராஜகுரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here