கிராமசபை – கிராம மக்களுக்கான அதிகாரம்

    இந்திய அரசியல் சட்டத்தின் 73 வது திருத்தத்தின் மூலம் 1992 இல் உருவாக்கப்பட்ட ‘பஞ்சாயத்து ராஜ்’ சட்டம் அதிகாரத்தைப் பரவலாக்குவதையும் உள்ளாட்சி அளவில் சுய ஆட்சியை உருவாக்குவதையும் தனது குறிக்கோளாக பிரகடனப்படுத்தியது. அதனை அடிப்படையாகக் கொண்டு, மாநிலங்கள் தங்களுக்குரிய ஊராட்சிகள் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்ற வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு 1994 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை உருவாக்கியது.

அரசியல் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் என்பது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ள நிலையில், அதே அரசியல் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட  கிராம சபையை ஆளுவோரால் புறந்தள்ள முடியாதது மிகவும் கவனத்திற்குரிய ஒன்றாகும்.
ஊராட்சிகள் சட்டத்தின் தனிச்சிறப்பாக உள்ள கிராமசபை உள்ளாட்சி தேர்தலை சார்ந்த அமைப்பு அல்ல என்பதே அதற்கு காரணம்.


ஊராட்சியை பொருத்தவரை அதிகாரமிக்கதாக விளங்கும் கிராம சபையை பற்றி அறிந்துகொள்வதும் ஊராட்சி மக்களின் உணர்வையும் உரிமையையும் உரியவகையில் பறைசாற்றும் அமைப்பாக அதை உறுதி செய்வதும் சனநாயகத்தின் உயிர் துடிப்பாக இருக்க வேண்டிய அதிகாரப் பரவலை சாத்தியமாக்க முனைவதும் மக்களாட்சியை விரும்பும் ஒவ்வொருவரும் கடமையாகும்.

கிராமசபை அரசியல் சட்டப்படியான அமைப்பு.

கிராமசபையின் உறுப்பினர்கள் யார்?
ஒவ்வொரு ஊராட்சியிலும் அந்த ஊராட்சி சம்பந்தப்பட்ட சட்டமன்ற வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் கிராம சபை உறுப்பினர்கள் ஆவர்.
சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலராகிய சார் / வருவாய் கோட்ட அலுவலரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட திருத்தங்களுடன் கூடிய சட்டமன்ற வாக்காளர் பட்டியலே அடிப்படையானது.

கிராமசபை  எப்பொழுது நடத்தப்பட வேண்டும்?

ஆறு மாத இடைவெளிக்கு மிகாமல் ஆண்டுக்கு இரண்டு முறை கிராமசபை நடத்தப்பட வேண்டும் என ஊராட்சிகள் சட்டத்தின் பிரிவு 3(2) கூறுகிறது.
ஆனால் தமிழக அரசு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தினங்களில் 4 கிராமசபை நடத்தி வருகிறது.

ஜனவரி 26 – குடியரசு தினம்
மே 1 – தொழிலாளர் தினம்
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
   மேற்கூறிய நான்கு தினங்கள் தவிர அரசாணையின் மூலம் கூடுதலாக சிறப்பு கிராம சபை கூட்டங்களை குறிப்பிட்ட நாட்களில் நடத்தலாம்.

கிராம சபைக்கான இடம் எது.?

கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வசதியான பொது இடத்தில் வைத்து கிராமசபை நடத்தப்பட வேண்டும்.
கிராம ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்கள் வாரியாகவோ, வார்டு வாரியாகவோ சுழற்சி முறையில் கிராம சபைக்கான இடத்தை தேர்வு செய்யலாம்.
கிராம சபை கூட வேண்டிய நேரம் எது.?
நிர்ணயிக்கப்பட்ட நாளில், காலை 11 மணிக்கு கிராமசபை நடைபெறும்.
கிராம சபை கூட்ட அறிவிப்பு செய்யப்பட வேண்டிய வழிமுறை என்ன.?
கூட்டம் நடைபெறும் நாள், இடம், நேரம் மற்றும் கூட்டப்பொருள் குறித்து  அனைத்து குக்கிராமங்களிலும் டாம்-டாம் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.
கிராம சபை நடைபெற உள்ள நாள் மற்றும் நேரத்திற்கு முழுமையாக ஏழு நாட்களுக்கு முன்பு, கிராமசபையின் கூட்டப்பொருள் குறிப்பிட்ட வழிமுறைகளில் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
கிராம சபை கூட்டம் தொடர்பான எழுத்துப்பூர்வமான அறிவிப்பு, ஊராட்சி அலுவலகத்திலும், மக்கள் கூடும் இடங்களான பள்ளிக்கூடங்கள், சத்துணவு அங்கன்வாடி மையங்கள், கிராம கோவில்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் போன்ற இடங்களிலும் செய்யப்படவேண்டும்.

கிராம சபை கூட்ட அறிவிப்பு செய்ய வேண்டிய பொறுப்பு யாருடையது.?
கிராம ஊராட்சியின் சார்பாக ஊராட்சித்தலைவர் அல்லது அவர் இல்லாத பட்சத்தில் துணைத்தலைவர் கிராம சபைக்கான அறிவிப்பை கொடுக்கவேண்டும். ஊராட்சி அமைப்புகள் இல்லாத காலத்தில் ஊராட்சியின் தனி அலுவலர் என்ற முறையில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கிராமசபைக்கான அறிவிப்பை கொடுக்க வேண்டும்.

கிராம சபையில் எப்படி அமரவேண்டும்.?
கிராம சபையில் அனைவரும் சமமாக தரையிலோ அல்லது இருக்கையிலுலோ அமரலாம்.

கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்.?
கிராம ஊராட்சி சம்பந்தப்பட்ட நடப்பு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் பங்கேற்கலாம். மேற்படி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு நபரையும் கிராம சபையில் கலந்து கொள்வதை தடை செய்ய முடியாது.

வெளி நபர் கிராம சபையில் பங்கேற்கலாமா.?
கிராம ஊராட்சிக்கு அப்பாற்பட்ட வெளிநபர்கள் கிராமசபை ஆட்சேபனை செய்யாத பட்சத்தில், பார்வையாளராக பங்கேற்கலாம். கிராம சபை உறுப்பினர் மட்டுமே கருத்து சொல்ல முடியும். அதிகாரிகளோ, நாடாளுமன்ற உறுப்பனரோ, சட்டமன்ற உறுப்பினரோ அந்த கிராம சபை உறுப்பினராக இருந்தால் மட்டுமே கருத்து சொல்ல முடியும்.

கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டிய குறைந்தபட்ச அளவு என்ன.?
    ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த குறைந்தபட்ச அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வரிசை எண்                                                   கிராம ஊராட்சி மக்கள் தொகை
குறைவெண் வரம்பு
1 500 வரை 50
2 501-3000 வரை 100
3 3001-10000 வரை 200
4 10000 க்கு மேல் 300
   கூட்டத்தில் பங்கேற்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர்(1/3) பெண்களாகவும்,பட்டியல் இனத்தவர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) ஊராட்சி மக்கள் தொகையில் உள்ள விகிதாச்சாரத்துக்கு ஏற்பவும் இருத்தல் வேண்டும்.
கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய குறைந்தபட்ச எண்ணிக்கை மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறதே தவிர வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல.

கிராம சபையின் தலைவர் யார்.?
கிராம ஊராட்சியின் தலைவரே கிராம சபையின் தலைவர் ஆவார். ஊராட்சி தலைவர் இல்லாத போது ஊராட்சி துணைத்தலைவர் தலைமை தாங்கலாம். துணைத்தலைவரும் இல்லாதபோது வருகை தந்துள்ள வார்டு உறுப்பினர்களில் ஒருவர் தலைமை தாங்கலாம்.
ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு இல்லாத போது, கிராம சபைக்கு வந்து உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம்.

குறிப்பிட்டுள்ள அளவு மக்கள் கலந்து கொள்ளாத போது கிராம சபையின் நிலை என்ன.?
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச அளவிற்கு கிராம சபையில் மக்கள் கலந்து கொள்ளாத போது, கூட்டம் ஆரம்பிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் கடந்த பிறகும் போதுமான பங்கேற்பாளர்கள் வரவில்லையெனில், கூட்டம் மற்றொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டு அறிவிக்கப்படும். கூட்டம் சேர காலவரையற்ற காத்திருக்க வேண்டியது இல்லை.

கூட்டப்பொருளை யார் முடிவு செய்வார்.?
   ஊராட்சியின் தலைவரே கூட்டப்பொருளை முடிவு செய்வார். ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு இல்லாத போது தனி அலுவலர்/ வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முடிவு செய்வார்.
கூட்டப்பொருளாக சேர்க்க வேண்டிய பொருள் குறித்து ஏழு நாட்களுக்கு முன் ஊராட்சித் தலைவர்/தனி அலுவலருக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் செய்யலாம்.
கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையோர் வலியுறுத்தும் பட்சத்தில், கூட்டப்பொருள் சேர்க்கப்படலாம்.

கூட்டத்தை யார் ஒழுங்குபடுத்துவது.?
கிராம சபைக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் எவரோ, அவரே கூட்டத்தை ஒழுங்குபடுத்தபவர் ஆவார். கிராம சபை உறுப்பினர்களின் பெரும்பான்மை அடிப்படையிலேயே தலைவர் முடிவை அறிவிக்க வேண்டும். முடிவு அறிவித்த பின்னர் எதுவும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது.

வருகை பதிவேடு உண்டா.?
  கிராம சபைக்கு என்று தனியாக வருகை பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். கூட்டத் தலைவர் வருகைப்பதிவேட்டில் வருகையை பதிவு செய்ய உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

பற்றாளர் (NODAL OFFICER) எனப்படுபவர் யார்.?
ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒரு நபர் வீதம் கிராம சபைக்கு பொறுப்பாக நியமிக்கப்படும் வளர்ச்சித்துறை அலுவலர் ஆவார்.
கிராமசபை நடைபெற்றது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிக்கை செய்ய வேண்டிய அலுவலரே பற்றாளர். இவர் பார்வையாளராக கிராம சபையில் பங்கேற்பார். கருத்து கூறவோ, விவாதிக்கவோ கூடாது.

தீர்மானத்திற்கு குறிப்பிட்ட வடிவம் உண்டா.?
கிராம சபை தீர்மானத்திற்கு என்று குறிப்பிட்ட வடிவம் எதுவும் இல்லை. இந்த வடிவத்தில்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.

தீர்மானத்தை அதிகாரி நிராகரிக்கலாமா.?
கிராம சபை ஒப்புதலோடு, மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை எந்த அதிகாரியும் நிராகரிக்க முடியாது. ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சித் தலைவரால் கூட கிராம சபை தீர்மானத்தை நிராகரிக்க முடியாது. தீர்மானத்தில் சரித்தன்மை குறித்து நீதிமன்றமே முடிவு செய்ய இயலும்.
சட்டமன்ற, நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராமசபை தீர்மானத்திற்கு உண்டு.

கிராம சபை தீர்மானம் எவ்வளவு காலத்திற்கு செல்லுபடியாகும்.?
கிராம சபை தீர்மானம் ஒருபோதும் காலாவதி ஆவதில்லை .முன்பு கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை ரத்து செய்ய, சிறப்பு கிராம சபையை கூட்டியே தீர்மானிக்க முடியும்.

கூட்ட நடவடிக்கைகள் எப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.?
   கிராம சபை கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்வதற்கென தனி பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். கூட்ட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பொருளின் மீதும் எதிர்ப்புகள் இருப்பின் அவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.
கிராமசபை கூட்ட தீர்மானங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் தொடங்கி தொடர்ச்சியாக எண் இடப்பட வேண்டும். தீர்மான எண்ணைக் குறிக்கும் போது அதனுடன் ஆண்டையும் தெரிவிக்க வேண்டும்.
கூட்டத்தை முடிக்கும் முன்பு கூட்ட நடவடிக்கைகளை கூட்டத்தின் முன் வாசித்துக் காட்டிய பின், கூட்டத் தலைவர் ஒப்பம் இடவேண்டும். கிராம சபை கூட்ட நடவடிக்கைகளை அடுத்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் வைத்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிராம சபை தீர்மானத்தின் நகலை பெறுவது எப்படி.?
கிராம சபை தீர்மானத்தின் நகலை கட்டணம் ஏதுமின்றி ஊராட்சிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தர மறுப்பார்களேயானால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தகவல் அலுவலரான, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி)க்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இவண்.
தமிழ்நாடு தேசியக் கட்சி.
9500555321

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here