காஷ்மீர்/ஹாங்காங் – பெப் எஸ்கோபர்

ஹாங்காங்

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்து சீனா 1997-ல் ஆட்சியதிகாரத்தை பெற்றது. இதற்காக, ஹாங்காங்-ன் தனித் தன்மைகளை 50 ஆண்டுகளுக்கு மாற்றுவதில்லை என்று சிறப்பு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. ஹாங்காங் சீனாவின் ஒரு சிறப்பு நிர்வாக மண்டலமாக உள்ளது.

இப்போது ஹாங்காங் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஜனநாயகத்தை வலுப்படுத்தக் கோரியும், மேலும் உரிமைகள் கோரியும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் பல வாரங்களாக தொடர்கின்றன.
எல்லா தொலைபேசி இணைப்புகளும் தொடர்ந்து செயல்படுகின்றன, இணையம் வேலை செய்கிறது. ஊடகங்கள் போராட்டங்கள் பற்றிய செய்திகளையும் போலீஸ் நடவடிக்கை பற்றிய தகவல்களையும் வெளியிடுகின்றன. சீன அரசு அறிக்கைகள் வெளியிடுகிறது, எச்சரிக்கை விடுக்கிறது. சீன ராணுவம் ஹாங்காங் தெருக்களில் இறக்கி விடப்படவில்லை. போராட்டம் தொடர்கிறது

காஷ்மீர்

1947-ம் ஆண்டில் ஜம்மு&காஷ்மீரின் அப்போதைய ஆட்சியாளருடனான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அப்பகுதியை ஒரு மாநிலமாக இணைத்துக் கொண்டது.

இப்போது, இந்திய அரசு ஜம்மு&காஷ்மீரின் அந்தஸ்தை மாற்றியிருக்கிறது. மாநிலத்தின் உரிமைகளை பறித்து விட்டு அம்மாநில மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்துள்ளது.

எல்லா தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையம் முடக்கப்பட்டுள்ளது.

ராணுவமும், துணை ராணுவப் படைகளும் காஷ்மீர் தெருக்களில் இறக்கி விடப்பட்டுள்ளன.

எந்த நாட்டில் தன்னம்பிக்கை கொண்ட, சட்டபூர்வமான, செயல்படும் ஜனநாயகம் உள்ளது?
எந்த நாடு கோழைத்தனமான, சட்ட விரோதமான, செயலிழந்த அரசைக் கொண்டுள்ளது?

இது தொடர்பாக “பெப் எஸ்கோபர்” என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே

==============================
ஹாங்காங், காஷ்மீர் : இரண்டு ஆக்கிரமிப்புகளின் கதை
https://thesaker.is/hong-kong-kashmir-a-tale-of-two-occupations/

பல நாடுகளைச் சேர்ந்த வாசகர்கள் ஹாங்காங் பற்றி எழுதும்படி கேட்டிருக்கிறார்கள். நான் ஹாங்காங்-ல் வாழ்ந்திருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும். 1997-ல் பிரிட்டிஷ் அதிகாரத்தில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது [19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சீனாவிடமிருந்து வலுக்கட்டாயமாக கைப்பற்றிய ஹாங்காங், 1997-ம் ஆண்டு சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒரு சிறப்பு நிர்வாக மண்டலமாக சீனாவின் ஆட்சியின் கீழ் வந்தது] முதலே எனக்கும் ஹாங்காங்-க்கும் இடையே ஒரு சிக்கலான பன்முகத்தன்மையிலான உறவு வளர்ந்தது. ஹாங்காங் பற்றிய விரிவான செய்திக் கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். இப்போது நடப்பவை பற்றி நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.

ஹாங்காங்-ல் போராடுபவர்கள் மீது சீனா அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது நடக்கப் போவதில்லை, அதாவது ஒரு தியனான்மென் 2.0 [1989-ம் ஆண்டு பெய்ஜிங்-ன் தியனான்மென் சதுக்கத்தில் பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் திரண்டு ஜனநாயகம் கோரி போராடினார்கள். அது சீன இராணுவத்தை அனுப்பி ஒடுக்கப்பட்டது] நடக்கப் போவதில்லை. ஏனென்றால் ஹாங்காங் சீனாவுக்கு அவ்வளவு ஒர்த் இல்லை. இது மேற்கத்திய புதியபிற்போக்காளர்களுக்கும் மனித உரிமை ஏகாதிபத்தியவாதிகளுக்கும் கடுப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. [சீன அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டால், அதில் ஏற்படும் குழப்பத்தில் குளிர் காயலாம், ஹாங்காங்-கில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது அவர்களது திட்டம்]

இந்தப் போராட்டங்களில் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும் வண்ணப் புரட்சிக்கான [துனீஷியா, எகிப்து முதல், அரபு நாடுகளிலும், முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளிலும் மக்கள் எழுச்சிகளில் புகுந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது அமெரிக்க உளவுத்துறை] கூறுகளை சீன அரசு கண்டு கொண்டிருக்கிறது. NED (National Endowment for Democracy) சி.ஐ.ஏ-வின் மிதவாத அவதாரமாக செயல்படுகிறது. அது ஹாங்காங் அரசு அதிகாரிகள் மத்தியிலும் தனது ஏஜெண்டுகளை புகுத்தியிருக்கிறது.

இந்தப் போராட்டங்களுக்கு பிற காரணிகளும் தூண்டுதலாக உள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஹாங்காங் பொருளாதாரத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் பண முதலை கும்பலின் ஆதிக்கம் பரவியிருப்பது ஹாங்காங் வாசிகளின் கோபத்திற்குக் காரணமாக உள்ளது. மேலும் “சீன கண்டப் பகுதியிலிருந்து “புலம் பெயர்பவர்களின் படையெடுப்புக்கு” ஹாங்காங்வாசிகளின் எதிர்ப்பு, ஹாங்காங்-ல் பேசப்படும் மொழிக்கும் சீனாவின் அதிகாரபூர்வ பெய்ஜிங் மொழிக்கும் இடையேயான இழுபறி, வடக்குக்கும் தெற்குக்கும் இடையேயான இழுபறி, மாகாண உரிமைகளுக்கும் மத்திய அதிகாரத்துக்கும் இடையேயான இழுபறி என்று பல காரணிகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
|
தன்னுடைய பிரம்மாண்டமான ஒருமைப்படுத்தல்/வளர்ச்சித் திட்டத்தின் ஒரு முக்கியமான பகுதியாக ஹாங்காங் இருக்கும் என்ற நம்பிக்கைக்கு ஹாங்காங் பாத்தியதை இல்லை என்ற சீன அரசின் கருத்தை இந்தப் போராட்டங்கள் வலுப்படுத்தியிருக்கின்றன. ஹாங்காங்-ஜூஹாய்-மக்காவ் [ஹாங்காங் பிரிட்டிஷ் காலனியாகவும், மக்காவ் போர்ச்சுக்கல் காலனியாகவும் இருந்தன. இரண்டுமே 1990-களில் சீனாவின் ஆட்சியின் கீழ் வந்தன. ஹாங்காங், மக்காவ், ஜூஹாய் மூன்று நகரங்களுமே பேர்ல் – முத்து – ஆற்றங்கரையில் அமைந்தவை] 55 கி.மீ நீளமான பாலம் கட்டுவதற்கு சீன அரசு $1,880 கோடி [சுமார் ரூ 1.2 லட்சம் கோடி] செலவழித்தது. அது ஹாங்காங்-ஐ சீனாவின் கண்டப் பகுதியுடன் இணைப்பதற்காக செய்யப்பட்டதே தவிர, ஹாங்காங்-ஐ அவமதிப்பதற்காக இல்லை. இப்போது போராடும் கும்பல் எந்த வகையான ஆதாயம் கிடைக்கும் திட்டங்களுக்கும் ஹாங்காங் தகுதி இல்லை என்பதை தெருக்களில் நடத்திக் காட்டி விட்டது.

இப்போது ஹாங்காங்-இல் பரபரப்பாக பேசப்படுவது, இந்தக் காட்டுமிராண்டித்தனமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் போராட்டங்கள் இல்லை. (இது பிரான்சில் நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள், அங்கு மேக்ரோனின் ராணுவம் ஜிலெட் யானஸ்/மஞ்சள் சட்டை போராட்டக் காரர்களை ஊனப்படுத்தவும் கொலை செய்யவும் செய்கிறது). இப்போது ஹாங்காங்-ல் பெரிதாகப் பேசப்படுவது எச்.எஸ்.பி.சியை விழுங்கிக் கொண்டிருக்கும் நோயைப் பற்றியது. அது டாய்ச்ச வங்கி ஊழலைப் போன்ற இன்னொரு மெகா ஊழலாக உருவெடுத்து வருகிறது. எச்.எஸ்.பி.சி $2.6 லட்சம் கோடி [சுமார் ரூ 170 லட்சம் கோடி – இந்தியாவின் ஜி.டி.பியை விட அதிகம்] கடன் [சொத்துக்களை] கைவசம் வைத்திருக்கிறது. அதே நேரம் அதன் பாதாள அறையில் எண்ண முடியாத அளவுக்கு கரப்பான் பூச்சிகள் நிறைந்திருக்கின்றன. கட்டுதிட்டமில்லாத உலகளாவிய முதலாளித்துவ மேட்டுக்குடியின் பண மாற்று ஊழல்கள் பற்றியும், சந்தேகத்துக்கிடமான ஒப்பந்தங்கள் பற்றியும் கேள்விகள் தீவிரமாக எழுப்பபடுகின்றன.

கடைசியில் ஹாங்காங் அதன் உள்ளேயே இருக்கும் அரித்து அளிக்கும் காரணிகளின் தயவில் விடப்படும். அது மேற்கத்திய மேற்பூச்சுடன் கூடிய சீனாவின் டிஸ்னிலேண்ட் என்ற நிலைக்கு படிப்படியாக தள்ளப்படும். சீனாவின் முதன்மை நிதித்துறை மையமாக ஷாங்காய் [சீனாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள சீனாவின் மிகப்பெரிய வணிக நகரம் – இந்தியாவின் மும்பையைப் போன்றது] ஏற்கனவே கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஷென்சென் [ஹாங்காங்-க்கு அருகில் சீனாவின் தெற்கு எல்லையில் உள்ள 1980-களில் புதிதாக உருவாக்கப்பட்ட நகரம்] ஏற்கனவே முதன்மை உயர்தொழில்நுட்ப மையமாக உள்ளது. ஹாங்காங் இதில் எல்லாம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விடும்.

திருப்பி அடிப்பதை எதிர்கொள்ள தயாராகுங்கள்

“ஹாங்காங் முற்றுகை” போராட்டம் மேற்கத்திய தூண்டுதலால் நடத்தப்படுவது என்று சீனா இனம் கண்டிருக்கிறது அதே நேரம், இந்தியா காஷ்மீரை முழுமையாக ஆக்கிரமிக்க முடிவு செய்திருக்கிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இணையம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து காஷ்மீர் அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். உண்மையில் (இந்தியாவுக்கு) விசுவாசமானவர்கள், தேசியவாதிகள், பிரிவினைவாதிகள், தனிநாடு கோருபவர்கள், அரசியல் அற்றவர்கள் என அனைத்து காஷ்மீரிகளும் “எதிரி” யாக முத்திரை குத்தப்பட்டிருக்கின்றனர். இந்துத்துவ ரகசிய பாசிசத்தின் கீழான இந்திய “ஜனநாயகத்துக்கு” நல்வரவு.

இதுவரை [170 ஆண்டுகளாக] இருந்து வந்த “ஜம்மு & காஷ்மீர்” இனிமேல் இல்லை. அது இரண்டு தனித்தனியான பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. புவியியல் ரீதியில் அதிசயிக்கத்தக்க லடாக் இந்திய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும். இதற்கான எதிர்வினைக்கு உத்தரவாதம் உண்டு. இங்கு எதிர்ப்புக் கமிட்டிகள் ஏற்கனவே முளைக்கத் தொடங்கி விட்டன.

காஷ்மீரில் எதிர்ப்பு விளைவு இன்னும் மோசமாக இருக்கும், ஏனென்றால் அங்கு இன்னும் கொஞ்ச காலத்துக்கு தேர்தல்கள் நடக்கப் போவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போன்ற தொல்லைகளை இந்திய அரசு விரும்பவில்லை, நேரடியாக முழுக் கட்டுப்பாடுதான் தேவை, வேறு பேச்சுக்கே இடம் இல்லை.

1990-களில் தொடங்கி நான் காஷ்மீரின் இரண்டு பகுதிகளுக்கும் ஒரு சில முறை சென்று வந்திருக்கிறேன். பாகிஸ்தான் பக்கத்து காஷ்மீரில் ஆசாத் (“சுதந்திர”) உணர்வு உள்ளது. [இது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது] இந்திய காஷ்மீர் சந்தேகத்துக்கிடமில்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் [இது இந்த மாதத் தொடக்கம் வரையில் ஜம்மு&காஷ்மீர் மாநிலமாக தனி அரசியல் சட்டம், மாநில சட்டமன்றம், உரிமைகளுக்கான உத்தரவாதத்துடன் இருந்த பகுதி]. இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழ்வது எப்படி இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை சிறப்பாக சித்தரிக்கிறது. https://thefunambulist.net/disobedient-bodies-defiant-objects-occupation-necropolitics-and-the-resistance-in-kashmir-by-mohamed-junaid

பாகிஸ்தான் அரசு கில்கிட்-பால்டிஸ்தான் என்ற ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தின் வடக்குப் பகுதியை “சட்ட விரோதமாக” தனது நேரடி நிர்வாகத்தின் கொண்டு வந்திருப்பதாக இந்தியாவில் பா.ஜ.கவின் அடிப்பொடிகள் கதறுகின்றனர். அதில் எந்த விதமான சட்டவிரோதமும் இல்லை. சென்ற ஆண்டு இறுதியில் சீனா பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் தொடர்பாக நான் கில்கிட்-பல்டிஸ்தானில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தேன். அங்கு “சட்டமீறல்” பற்றி யாரும் புகார் சொல்லவில்லை.

“[இந்தியாவின்] சட்டவிரோதமான நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு எல்லா சாத்தியமான முயற்சிகளையும் எடுக்கப் போவதாக” பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. மோடி இந்துத்துவா வெறியர்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், ஒரு முஸ்லீம் பெரும்பான்மை மாநிலத்தை இந்து பெரும்பான்மை மாநிலமாக மாற்ற முயற்சிக்கிறார் என்று தெரிந்திருந்த போதிலும் இம்ரான் கான் மோதலை விரும்பவில்லை. நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது தவிர்க்க முடியாத ஏதோ ஒன்று நடக்கத்தான் போகிறது. சிதறலாகவோ ஒரு கொரில்லா போராகவோ அல்லது ஒரு ஐக்கிய முன்னணியாகவோ எதிர்ப்பு வெளிப்படப் போகிறது.

காஷ்மீரில் ஒரு எழுச்சிக்கு நல்வரவு!

மொழிப்பெயர்ப்பு- மா.சிவகுமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here