காஷ்மீர் – எரியும் பனிமலை – 3- க.இரா.தமிழரசன்.

கருத்துருவாக்க படையாட்களை உருவாக்க வேண்டும்
…………………………………………………………

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக ராணுவத்தின் துப்பாக்கி முனையில் அந்த மக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். போராடும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது உரிமைக்காக போராடிய தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவை எதுவும் வெளியுலகுக்கு கொண்டு வரப்படவில்லை என்ன காரணம்?

வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இந்த அரசால் தடை செய்யப்பட்டுள்ளது , செல்பேசி உள்ளிட்ட இணையதள வசதிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது, பத்திரிக்கையாளர்கள் நுழைவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே எந்தச் செய்தியும் வெளியே வராமல் தடுக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் காஷ்மீருக்குள் நடக்கும் நிகழ்வுகளை நம்மால் வெளியே கொண்டுவர முடியாதா ? நிச்சயம் முடியும். ஆனால் அதற்கான தயாரிப்புகளோடு போராடுகிற இயக்கங்கள் இல்லை என்பது தான் வெளிப்படையான உண்மை.

நமக்கான கருத்துருவாக்க படையாட்கள் போதுமானதாக இல்லை என்பதால் எந்த செய்திகளையும் வெளியே கொண்டுவர முடியவில்லை, அரசாங்கத்தின் நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியவில்லை , அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை அம்பலப்படுத்த முடியவில்லை.

இந்தியாவில் நடந்த இரண்டு சம்பவங்களை நாம நினைவுபடுத்திப் பார்த்தால் நம்முடைய தேவை நன்கு புரியும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஆசி பா 8 பேர் கும்பலால், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், குற்றவாளிகளுக்கு உடனடியாக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில பா.ஜ.க-வின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது. ‘டீம் கேரளா சைபர் வாரியர்ஸ்’ எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் ஹேக்கிங் குழு, இந்த இணையதளத்தை ஹேக்கிங் செய்துள்ளதாகத் தெரிகிறது.
‘வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி வேண்டும்’ என்ற வாசகம் இணையத்தில் வெளியிடப்பட்டது.

பாலியல், துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட கும்பலை மாநில பா.ஜ.க ஆதரிக்கிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய தேசியக்கொடியின் வண்ணங்களைப் பயன்படுத்தி தகவலை வெளியிட்டுள்ள ஹேக்கர்கள், ‘மனித நேயத்துக்கு அப்பால் எதுவும் இருக்கக் கூடாது, பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும்’ என்ற தகவல்களையும் இணையத்தில் பதிவுசெய்திருந்தனர். அதே போல் இன்னொரு நிகழ்வு ,

நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மோடி அரசு கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியின்போது செய்த சாதனைகள், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பி.ஜே.பி. மேற்கொள்ளவிருக்கும் பிரச்சாரம் குறித்த அறிவிப்புகள், வேட்பாளர்களின் பிரசார உரைகள் உள்ளிட்டவற்றை தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வேலைகளில் பி.ஜே.பி-யின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்கள் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பி.ஜே.பி-யின் அதிகாரபூர்வ இணையதளம் மார்ச் 5-ம் தேதி முதல் முடக்கப்பட்டது. மர்ம நபர்கள் சிலர் அந்த இணையதளத்தை ஹேக் செய்து முடக்கியது மட்டுமன்றி, அதில் பிரதமர் மோடியை விமர்சித்து ஒரு மீமையும் பதிவேற்றம் செய்தார்கள்.

  • இதனை மீட்க அவர்களுக்கு 15 நாட்களுக்கும் மேல் அவகாசம் தேவைப்பட்டது. இப்படி ஒரு எதிர்ப்பை அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இதனால் சமூக வலைதளப் பிரச்சாரம் 15 நாள் முடங்கியது.

இதே போல் ஓரிரண்டு சர்வதேச நிகழ்வுகளையும் பார்க்கலாம்

பாதுகாப்புத்துறையின் கணிணிகளில் இருந்து ரகசிய ஆவணங்களை எடுக்க சதி செய்ததாக அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டி கைது செய்து வைத்துள்ள ஜுலியன் அசாஞ்சேவை நாம் அறிவோம்.

ரகசிய ஆவணங்கள் மற்றும் படங்களை பெறுவதற்கு மற்றும் வெளியிடுவதற்காக கடந்த 2006-ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளத்தை ஜூலியன் அசாஞ்சே நிறுவி
இராக் போர் தொடர்பான மேலும் சில ஆவணங்களை ,
அமெரிக்காவின் முன்னாள் ராணுவ புலனாய்வு ஆய்வாளர் செல்சியா மேனிங் கசியவிட்ட ஆயிரக்கணக்கான ஆவணங்களை
ஆஃப்கானிஸ்தானில் நடந்த போர் தொடர்பான ஆவணங்கள், அமெரிக்க ராணுவம் எப்படி நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்றது என்பது குறித்த தகவல்களை அதில் வெளியிட்டார். இது அமெரிக்காவின் கோர முகத்தை வெளிகொண்டு வந்தது.

கடந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்த போது டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனின் கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்களின் ஈ மெயில்களை ஜூலியன் அசாஞ்சே தேர்தலுக்கு முன்னர் வெளியிட்டார். ஹிலாரி கிளின்டன் கட்சி தலைவர்கள் நடத்திய அந்த உரையாடல்கள் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு பொது வெளியில் வெளியிடப்பட்டது. அப்படி இவர் செய்ததனாலேயே டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பு அதிகமானதாகவும் கூறப்படுகிறது. இப்படி அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளையே மாற்றியமைத்ததற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார்.

துருக்கியில் இயங்கும் இடதுசாரி ஹேக்கர்சின் செயல்பாடுகளையும் பார்ப்போம் .

துருக்கியில் இயங்கும் இடதுசாரி ஹேக்கர்ஸ் (Hackers), இணையத்தை ஊடறுத்து, துருக்கி அரசின் இரகசிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். அதிலே Reyhanli குண்டுவெடிப்பு சம்பவம் பற்றிய தகவல் முக்கியமானது. அதாவது, Reyhanli நகரத்தில் குண்டுவெடிப்பு நடக்கவிருக்கிறது என்ற விபரம், துருக்கி அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. இந்த தகவல், துருக்கி முழுவதும் காட்டுத்தீ போன்று பரவியது. மக்கள் மத்தியில், அரசுக்கு எதிரான எதிர்ப்பலைகளை உண்டாக்கியது.

அதே போல் கோடிக்கணக்கான டாலர் மின்சாரக்கடன் பாக்கியை அழித்துவிட்டுள்ளது.
துருக்கி மின்சார சபையின் கணினிக்கோப்புக்குள் நுழைந்து சுமார் 1.5 டிரில்லியன் (66,000 கோடி டாலர்) லீரா தொகையை அழித்துவிட்டது. இதனால் மின்சார நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது. ரெட் ஹேக் அமைப்பு, தாங்கள் எவ்வாறு கோப்புகளை அழித்தோம் என்ற விவரத்தையும் இணையத்தில் வெளியிட்டனர்.

துருக்கி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்புடைய, இளம் மார்க்சிய லெனினிய கணினித்துறை நிபுணர்கள். 1997ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகின்றனர். இதுவரை காலமும் துருக்கி இராணுவம், காவல்துறை, புலனாய்வுத்துறை தொலைதொடர்புத்துறை போன்றவற்றின் இணையத்தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி உள்ளனர். துருக்கி அரசு, ரெட்ஹேக், “ஒரு பயங்கரவாத இயக்கம்” என்று அறிவித்துள்ளது.

  • இந்த ஹேக்கர்கள் தான் இப்பொழுது உலக அளவில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறார்கள் ஹேக்கர்கள் என்றாலே அவர்களை மிகவும் சாதாரணமாக எண்ணுகிற பார்வை நமக்கு உள்ளது. ஆனால் , அரசாங்கள் மிகவும் அச்சப்படுகிற ஆட்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் அரசாங்கத்தின் மீதான கோபத்தை இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் , அரசாங்கத்தின் அடக்குமுறையை அம்பலப்படுத்துகிறார்கள். அவர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும், உருவாக்க வேண்டும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அந்த அனுபவம் நமக்கு இப்பொழுது தேவைப்படுகிறது.
    இப்படியான ஹேக்கர்ஸ் – கள் இல்லாததால்தான் காஷ்மீர் சிக்கல் வெளிக்கொண்டுவர படாமல் இருக்கிறது.

ஒவ்வொரு தேர்தல் கட்சியும் தனக்கென சமூக வலைத்தளக் குழுவைக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தொடங்குவதற்கு முன்னதாகவே, பாஜக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தனது ஒன்பது லட்சம் ஆதரவாளர்களை கொண்டு பகுதிவாரியாக வாட்சப் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் தங்களது பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தேர்தல் கட்சியும் தேர்தலுக்கு முன்பாக தனியார் விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.

2013-ல் சிட்டிசன்ஸ் பார் அக்கவுன்டபுள் கவர்னன்ஸ்' என்கிற அமைப்பைத் தொடங்கிய பிரசாந்த் கிஷோர், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமராவதற்கான பிரச்சாரத்தை செய்யத் தொடங்கினார். பெருவெற்றி பெற்ற மோடியின்சாய் பே சர்சா’, `மன்தன்’ பிரசாரங்கள் எல்லாம் பிரசாந்த் கிஷோரின் ஐடியாக்கள்தான்.

2014 தேர்தலில் பி.ஜே.பி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததற்கு பிரசாந்த் கிஷோரின் பிரச்சார உத்தி மிகப்பெரும் காரணமாக அமைந்தது .

2015-ல் தனது அமைப்பை இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்ஷன் கமிட்டி', சுருக்கமாகஐபேக்’ என மாற்றினார். அரசியல் கட்சிகள், தனி நபர்களுக்குத் தேவைப்படும் பிரசார வியூகங்கள், விளம்பரம், புதுமையான தேர்தல் யுக்திகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இதற்கான கட்டணமாக 150 கோடிக்கு குறையாமல் வசூலித்தும் விடுகிறார்கள். இவர்கள் கட்சிகளின் கருத்துருவாக்க அடியாட்களாக வேலை செய்கிறார்கள்.

நாட்டில் இன்றைக்கு யார் ? என்ன ? பேச வேண்டும் என்பதை இவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் . இவை குறித்தெல்லாம் நாம் கவலைப்பட வேண்டும், அக்கறை கொள்ள வேண்டும்.

We want Jallikattu , Goback modi போன்ற வாசகங்கள் இணையதளத்தில் டிரெண்ட் ஆக்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதை நாம் பார்க்கிறோம். இவை இயக்கங்களால் ஒழுங்கமைக்கப்படாமல் இருக்கிறது. இவற்றை நாம் ஒழுங்கமைக்க வேண்டும்.

மாணவர் அணி , இளைஞர் அணி , தொழிலாளர் அணி என்று இருப்பது போது சமூக வலை தள அணி உருவாக்க வேண்டும். அது மட்டும் போது துருக்கியில் உள்ள ரெட் ஹேக்கர்ஸ் _கள் போல் நாமும் ரெட் ஹேக்கர்ஸ் – களை உருவாக்க வேண்டும். அவர்கள் தான் நமது கருத்துருவாக்கப் படைகள் . துண்டறிக்கை போடுவது , சுவரொட்டி போடுவது மட்டும் நமக்கு போதாது என்பதை புரிந்து நகர வேண்டிய காலமிது. இவர்கள் இல்லாமல் ஈழப்படுகொலையை வெளியுலகிற்கு கொண்டு வந்திருக்க முடியாது.

அரசின் கருத்துருவாக்கப் படையாட்கள் என்பவர்கள் வெறும் பொருளாதார அடியாட்கள் தான் ஆனால் நம்மால் பயிற்றுவிக்கப்படும் கருத்துருவாக்க படையாட்கள் கொள்கை வீரர்கள். அவர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும் உருவாக்க வேண்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அந்த அனுபவம் நமக்கு இப்பொழுது தேவைப்படுகிறது.
இப்படியான ஹேக்கர்ஸ் – கள் இல்லாததால்தான் காஷ்மீர் சிக்கல் வெளிக்கொண்டுவர படாமல் இருக்கிறது.
(தொடர்வோம் )
க.இரா. தமிழரசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here