#காவிரிப்படுகையின் கதறல் உங்கள் காதில் கேட்கவில்லையா?-பேரா.த.செயராமன்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு அறிக்கை – 10.04.2019)

மதிப்புமிகு காவிரிப்படுகை பெருமக்களே,
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் அனல் பறக்கும் நேரம் இது. நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு கட்சி இருக்கிறது. அவரவர் கட்சியின் வெற்றிக்காக ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

வட இந்திய கார்ப்பரேட்டுகளின் முகவர்களாக உள்ள கட்சிகள் ஏராளமாக பணத்தை தமிழகத்துக்குள் கொண்டு வந்து வாக்குகளை கொள்முதல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில, காவிரிப் படுகை மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நேரம் இது.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு நடுநிலையானது. சாதி, மதம், கட்சி அரசியல் ஆகியவற்றைக் கடந்து மக்களை இணைத்து, தமிழக இயற்கை வளம், கனிம வளம், வாழ்வாதாரங்கள், நிலத்தடி நீர், சுற்றுச் சூழல் ஆகியவற்றைப் பாதுகாக்கவும, நாசகார திட்டங்களை விரட்டியடிக்கவும் போராடி வருகிறது.

காவிரிப்படுகையை ஒட்டுமொத்தமாக அழிக்க வரும் திட்டங்களை நாம் எதிர்க்கையில், அரசியலாளர்கள், ஆட்சியாளர்கள் செய்யும் ஏடாகூடங்களை, காவிரிப்படுகையே காணாமல் போவதற்கு உடன்படும் வரலாற்றுத் தவறுகளை சுட்டிக் காட்டுவதும், மக்களை கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை செய்வதும் நம் கடமையாகும்.

நடைபெற இருப்பது நாடாளுமன்றத் தேர்தல். தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் டில்லி சென்று யாரை ஆதரிக்க இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தேர்தலில் நம் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதை விட, காவிரிப்படுகை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம்.

காவிரிப்படுகை மிகப்பெரிய அபாயத்தில் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி காவிரிப்படுகையை ஒட்டுமொத்தமாக அழித்துவிடக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்ட ஏலங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

மீத்தேன் திட்ட தடையாணையும் – பாஜக அரசின் அடாவடியும்:
2010 இல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலக்கரிப் படுகை மீத்தேன் (Coal Bed Methane) எடுப்பு தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நடைமுறைப்படுத்தப்பட இருந்தது. 2011 சனவரி 4- அன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க அரசு GEECL நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டது. பின்னாளில், மீத்தேன் திட்ட பாதிப்புகள் குறித்து தெரியாமல் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு விட்டதாக முன்பு துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் கூறினார்.
இத்திட்டம் கொண்டு வரப்பட்டதும், அதைக் கடுமையாக எதிர்த்து நாம் போராடினோம். தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் மீத்தேன் திட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு வல்லுனர் குழுவை நியமித்தார். தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு, ‘மீத்தேன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நீரும் நிலமும் பாழாகும், நிலம் வறண்டு பாலையாகும், காவிரிப் படுகையின் பசுமை மிக்க ரம்மியமான காட்சி காணாமல் போகும், நிலத்தட்டுகள் நகரும், நிலநடுக்கங்கள் ஏற்படும்’ _ என எச்சரிக்கை செய்தது. அந்த பரிந்துரையின்படி, “நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுக்க தமிழக அரசு அனுமதி தராது” என்று அனுமதி மறுத்து அரசாணையை 8. 10. 2015 அன்று வெளியிட்டார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.
மேலும், அதே அரசாணை – ‘எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வருவதாக இருந்தால், அது குறித்து முதலில் தமிழக அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும்’ -என்று விதித்தது.
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு தமிழகத்தையோ, தமிழக அரசாணையையோ மதிக்கும் நோக்கில் இல்லை. 2016இல் முதல்வர் ஜெயலலிதா இறந்த உடன, தமிழக அரசாணை இருந்தும் கூட, கடந்த 23.3 .2017 அன்று, மத்தியில் உள்ள பாஜ.க அரசு காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியிருக்க்கிறது. இது தமிழக அரசையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களையும் அவமதிக்கும் செயல்.

அதுபோன்றே, நெடுவாசலில் கொண்டு வரப்பட்ட சிறிய வகையிலான ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடியபோது, மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசும், தமிழக அரசும் உறுதியளித்தன. இத் திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாயளவில் கூறினார். ஆனால், கடந்த 27. 3. 2017 அன்று பா.ஜ.க.வின் இந்திய அரசு ஜெம் லேபரட்டரீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்பந்தமிட்டு உரிமம் அளித்துவிட்டது. இது மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிற வேலை.

காங்கிரசு அரசின் ஷேல் மீத்தேன் எடுப் புத் திட்டம் :
2013 – ஷேல் அல்லது வண்டல் பாறையில் ஷேல் மீத்தேன், ஷேல் எண்ணெய் எடுப்பது என்ற கொள்கை முடிவை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு எடுத்தது. தமிழகத்தில் ஒன்பது பிளாக்குகளில் ஷேல் மீத்தேன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி முயற்சி செய்தது. அதை மக்கள் போராட்டங்கள் தடுத்து நிறுத்தின.

பா.ஜ.க. அரசின் அபாயகர ஹைட்ரோகார்பன் திட்டம்:
தமிழினப் பகை உணர் வோடு காவிரிப்படுகையை அழிப்பதில் பா.ஜ.க அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. நிலக்கரி மீத்தேன் திட்டத்தை விட கூடுதல் அபாயகரமான ஹைட்ரோகார்பன்கள் எடுப்பு திட்டத்தை 2016-இல் பா.ஜ.க.வின் இந்திய அரசு கொண்டு வந்தது. ஹைட்ரோ கார்பன் என்பது, நிலக்கரிப் படுகை மீத்தேன் , ஷேல் மீத்தேன் உள்ளிட்டு அனைத்து வகை எண்ணெய் எரிவாயுக்களையும் குறிக்கும் ஒற்றைச் சொல் ஆகும. இவற்றை ஒரே லைசென்ஸ் பெற்றுக்கொண்டு, அபாயகர இரசாயனக் கலவையை உள்ளே செலுத்தி, நீரியல் விரிசல் முறையைப் பயன்படுத்தி, நிலத்தடிப்பாறைகளை நொறுக்கி, வெவ்வேறு ஆழத்தில் உள்ள அத்தனை வகை ஹைட்ரோகார்பன் களையும் எடுத்துக்கொள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் அனுமதி அளிக்கிறது.

ஹைட்ரோகார்பன் ஏலங்கள்:

2018 அக்டோபர் மாதம் காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் எடுப்புக்காக 5099 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 3 மண்டலங்களை இந்திய அரசு ஏலம் விட்டது. இதில் நிலப்பகுதியில் 731 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ஒரு மண்டலத்தை ஓஎன்ஜிசி யும், மீதியுள்ள பகுதியை ஆழமற்ற கடல் பகுதியில் இரண்டு மண்டலங்களை வேதாந்தா நிறுவனமும் ஏலத்தில் பெற்றுள்ளன.

இரண்டாம் சுற்று ஏலத்தில் , திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை உள்ள 474 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ஒரு மண்டலத்திற்கு ஹைட்ரோ கார்பன் ஏல விண்ணப்பம் அளிக்க ஏப்ரல் 10ஆம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது சுற்று ஏலத்தில், காவிரிப்படுகையில் 1863 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ஏலம் விடப்பட இருக்கிறது.

தமிழக அரசாணையை அவமதிக்கும் பாஜக – அதிமுக அரசுகள்:
இந்த ஏலங்கள் அனைத்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அரசாணைக்கு எதிரானவை. “இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் தமிழக அரசை கலந்தாலோசிக்க வேண்டும்” என்று அவருடைய 2015 – அரசாணை கூறுகிறது. இந்திய அரசு அவ்வாறு கலந்தாலோசிக்கவில்லை. தமிழகத்தின் மீது அழிவுத் திட்டங்களை திணிக்கிறது.
எதிர்க்க வேண்டிய அதிமுக அரசோ இந்திய அரசை எப்படியாவது மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று படுமுயற்சி செய்கிறது. இந்திய அரசு எதைக் கூறினாலும் அதைச் செய்ய அதிமுக அரசு காத்துக் கிடக்கிறது. இந்நிலையில், தமிழக அரசு தமிழகத்தையும் காவிரிப்படுகையையும் பாதுகாக்கும் என்று நம்பி மக்கள் ஏமாந்து போகும் நிலை நிலவுகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இருந்த நிலை வேறு. இப்போது உள்ள நிலை வேறு.

ஜெயலலிதாவின் அதிமுக அரசும், இன்றைய அதிமுக அரசும்:
2014 நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அறிவிக்கப்பட்ட நிலக்கரி படுகை மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழக முதல்வர் ஜெயலலிதா “மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன்” என்று உறுதி அளித்தார். அதற்கான அரசாணையும் வெளியிட்டார். இப்போது 2019 நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கிறோம். காவிரிப் படுகையில் மட்டும் மூன்று சுற்று ஹைட்ரோகார்பன் ஏலங்கள் மூலம் 7000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க இருக்கிறார்கள். (முதல் சுற்று ஏலம் முடிந்தது). நிலக்கரிப்படுகை மீத்தேன் பரப்பளவு 691 சதுர கிலோ மீட்டர். ஹைட்ரோ கார்பன் திட்ட பரப்பளவு 7000 சதுர கிலோமீட்டர். இது மிகப் பெரியது. ஹைட்ரோ கார்பன் திட்டம் மீத்தேன் திட்டத்தை விடவும் கூடுதல் அபாயகரமானது. இந்த இரண்டுமே நீரியல் விரிசல் முறையில்தான் எடுக்க முடியும். ஹைட்ரோ கார்பன் திட்ட அறிக்கையிலேயே இது conventional (வழக்கமான) unconventional (மரபுசாரா தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்) அனைத்து ஹைட்ரோகார்பன்களையும் எடுக்கும் திட்டம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
நியாயமாக தமிழக அரசு பொங்கியெழுந்து இத்திட்டத்தை எதிர்த்து இருக்க வேண்டும். ஆனால, டில்லியில் உள்ள இந்திய அரசை எதிர்த்துப் பேச அதிமுகவின் இன்றைய தமிழக அரசு மறுக்கிறது.

அதுமட்டுமின்றி, அ.தி.மு.க அரசு மக்கள் விரோதமாக சில வேலைகளைச் செய்து முடித்திருக்கிறது. காவிரிப்படுகை மாவட்டங்களில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள் அமைப்பது குறித்து, 2014 இல் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் மக்களின் எதிர்ப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. விதிமுறைகளின்படி, அபாயகர எண்ணெய் – எரிவாயுக் கிணறுகளை மக்கள் கருத்து கேட்பு நடத்தாமல் அமைக்க முடியாது. இந்நிலையில், ”ஓஎன்ஜிசி யின் செயல்பாடுகளுக்கு எதிராக, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் எவ்வித எதிர்ப்போ, போராட்டங்களோ இல்லை” என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை, ஒரு மாபெரும் பொய்யை, மக்களின் கருத்து கேட்பு இல்லாமல் ஓ.என்.ஜி.சி எண்ணெய் எரிவாயுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக, தமிழக அரசின் நோட்டரி வழங்கியுள்ளார். அது மத்திய சுற்றுச் சூழல் வல்லுனர் மதிப்பீட்டு குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 .10 .2018 அன்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், டில்லி சென்று, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தனனை சந்தித்து, ‘மக்களின் கருத்து கேட்பு இல்லாமலே இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் விதிமுறைகளைத் திருத்த வேண்டும்’ என்று கோரிக்கை மனு அளித்து விட்டு வந்திருக்கிறார்.
கூடுதலாக, தற்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் பேசிவருகிறார்கள். இத்திட்டத்தை பற்றி ஏதும் அறியாதவர்களாக அல்லது அறிந்தும் மக்களை ஏமாற்றும் வகையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஆபத்தில்லை என்று காவிரிப்படுகை மாவட்டங்களில் பேசி வருகிறார்கள்.
சுருக்கமாக, நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறை நடைபெற இருக்கும் இவ்வேளையில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி இது தான்:
1) மத்தியில் உள்ள பாஜக அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை காவிரிப்படுகையில் 7000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நடைமுறைப்படுத்துவதில் தீர்மானகரமாக இருக்கிறது.
2) 2014 – நாடாளுமன்றத் தேர்தலின் போது மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அன்றைய அதிமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உறுதி அளித்ததை போல, மீத்தேன் திட்டத்தை விட பலமடங்கு அபாயகரமான ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த இன்றைய தமிழக முதல்வரோ அதிமுக அரசோ முன்வரவில்லை. பெரிய நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க களமிறங்கியிருக்கும் நிலையில், இன்றைய அதிமுக தலைமையும் தமிழக முதல்வரும் ஏலம் விடும் இந்திய அரசுக்கு ஆதரவளிக்கிறார்கள்.
3) வேதாந்தா உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏலம் எடுத்துள்ள நிலையில் , அதிமுக அமைச்சர்கள் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் ஆபத்தானவை அல்ல என்று ஏலம் எடுத்துள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
4) 2014-ல், மக்கள் கருத்துக் கேட்பு தடுத்து நிறுத்தப் பட்ட நிலையில் எண்ணெய் எரிவாயுத் திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்பு இல்லாமலே நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழக அரசின் நோட்டரி, ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக, நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ”ஓ.என்.ஜி.சி.க்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை” என்று பிரமாணப் பத்திரம் வழங்கி இருக்கிறார்.
5) காவிரிப்படுகையை சின்னாபின்னமாக்க இருக்கும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்பு இல்லாமல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் விதிமுறைகளையே திருத்துமாறு அதிமுக அரசின் சார்பில் டெல்லி சென்று அமைச்சர் கருப்பண்ணன் 9 .10. 2018 அன்று கோரிக்கை மனு அளித்து விட்டு வந்திருக்கிறார்.

என்ன செய்யப் போகிறோம்?

நம் கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, காவிரிப்படுகையும், தமிழகமும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம்.
காவிரிப் படுகை நிலத்துக்குள் பல இலட்சம் கோடிகள் கனிமங்களாகப் புதைந்து கிடக்கின்றன. இவற்றை எடுத்தால் காவிரிப் படுகை அழியும். ஆனால், கனிமங்களை எடுப்பதற்கு பெருமுதலாளிகள் காத்திருக்கிறார்கள்.

மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுப்பு பற்றி காங்கிரஸ் கட்சி பாஜக ஆகியவை ஒரே பார்வையை கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டை ப் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் பிரச்சினை உள்ளூர் பிரச்சனை என்றும், காங்கிரஸின் மாநில தலைவர்கள் பதிலளிப்பார்கள் என்றும் ராகுல்காந்தி செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலிருக்கிறார். மீத்தேன, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானவை என்று பாஜக தலைமை பேசுகிறது.

காவிரிப்படுகையின் அழிவில் பல இலட்சம் கோடி பணம் கொட்ட இருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் அதிமுக அமைச்சர்கள் மிகமிக ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இராணுவத்தை வைத்தாவது நடைமுறைப்படுத்துவதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பெருமுதலாளிய வேதாந்தா நலனுக்காக 13 பேரை தமிழக அரசு சுட்டுக் கொன்றது ஒரு முன்னோட்டம் தான்.
இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்யும் வாய்ப்பு பாஜக கூட்டணிக்கு கிடைத்தால் போதும், காவிரிப்படுகை கரிக்காடாக மாறும்; படுகையே காணாமல் போகும். காவிரிப்படுகையை விட்டு மக்கள் விரட்டியடிக்க படுவார்கள்.
திட்டமிட்ட அழிப்பை எதிர்நோக்கியிருக்கிறது காவிரிப் படுகை.
காவிரிப் படுகையைக் காப்பாற்றுங்கள். உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அகதிகளாக வெளியேற இருப்பதைத் தடுத்து நிறுத்துங்கள்!

நாடாளுமன்றத் தேர்தல் சூழலில், இந்திய தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைக் கைவிட வேண்டும் என்ற முன்நிபந்தனைகளை வைக்காமலே தமிழகக் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் பற்றி தேசியக் கட்சிகள் ஒரே பார்வையைக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்திய தேசியக் கட்சிகளை தமிழக மக்கள் நிராகரிக்க வேண்டும். தமிழ் மொழி – இனம் – நாடு பற்றிய கோரிக்கைகளை உயர்த்திப்பிடிக்கும் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை வலிமையாக எதிர்க்கும் கட்சிகளுக்கும், உறுதியாகக் களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்களுக்கும் இத்தேர்தலில் வாக்களியுங்கள்!

திட்டமிட்ட அழிப்பை எதிர்நோக்கியிருக்கும் காவிரிப் படுகையின் கதறல் உங்கள் காதில் கேட்கவில்லையா?

– பேராசிரியர் த .செயராமன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here