கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவைதான் அரசு, தொழிலாளர்களின் போராட்ட வழி என்ன?- ராவணன்.


  
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள ரெனால்ட் நிசான் கார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 8.07.2020  முதல்  பேட்ஜ் அணிந்து வேலை செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சட்ட ரீதியான  நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தி தொழிலாளர்கள் தங்களுக்கான தொழிற்சங்கத்தை அமைத்துக் கொண்டனர். அதுமுதல் பெரும்பான்மையான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சங்கத்தின் எந்த ஒரு நியாயமான கோரிக்கைகளையும் நிர்வாகம் ஏற்றுகொள்ளாமல் தன்னிச்சையான பல முடிவுகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் ஊதிய உயர்வு ஒப்பந்தங்களை உரிய காலத்திற்குள் முடிக்காமல்  வேண்டுமென்றே  காலம் தாழ்த்தி வந்தது. அது மட்டுமில்லாமல் அதற்குப் பிறகு தொடர்ந்து வேலைநீக்கம், பணியிடமாற்றம் போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நோய்த் தொற்று காலத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக  தொழிற்சங்கத்துடன் கலந்து ஆலோசிக்காமல் நிர்வாகம் தன்னிச்சையாக பல முடிவுகளை எடுத்து வருகிறது. பணிநேரம் மாற்றம், விடுமுறை நாட்கள் பிடித்தம், ஊதியவெட்டு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிர்வாகம் முன்வராததால் இனி தொடர்ச்சியாக போராட்டங்களை ஒருங்கிணைக்கப் போவதாக ரெனால்ட் நிசான் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது .

சரி, ஒரே நிறுவனத்தின் 3500 தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டது என்னும் சங்கமாக இருப்பது ஆரோக்கியமான விசயம்தான் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதிலும் பிரிவினைகள் இருக்கலாம். ஆனால் நிர்வாகம் பிரிவினைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்து கொண்டு இருக்கிறது.

ஆலைத் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதார தேவைகளை  நிறைவேற்றிகொள்ள  ஊதிய உயர்வு, போனஸ் போன்ற பல பொருளாதார கோரிக்கைகளுக்காக போராடுவது என்பது  இயல்பான ஒரு நடவடிக்கை என்பதோடு அவசியமானதாகவும் இருக்கிறது. சில தொழிற்சாலைகளில் போராட்டங்கள் வெற்றி பெறுவதும், சில இடங்களில் தோல்வி அடைவதும் , வேறுவழியில்லாமல் சமரச நடவடிக்கைகளும் நடக்கின்றன. சரி வெற்றி பெற்ற போராட்டங்கள் கூட ஏன் அதை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை?

ரெனால்ட் நிசான் போன்ற பெரும் எண்ணிக்கையை கொண்ட தொழிற்சங்க தொழிலாளர்கள்  ஏன் தங்களது கோரிக்கைகளை வென்றெடுப்பதில் பின்னடைவுகளை சந்திக்கின்றனர்?

நிர்வாகம் ஏன் தொழிற்சங்கத்தை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது?என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேடி புறப்பட்டால் நமக்கு சில புரிதல்கள் கிடைக்கும்.

தொழிற்சங்க அதிகாரம் என்பது ஒரு தொழிற்சாலைக்குள் மட்டுமே! நம்மைச் சுற்றி புறநிலையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

தொழிலாளர் சட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் மாற்றி அமைத்தது, தொழிற்சங்க உரிமைகளை அடியோடு ஒழித்துக் கட்டுவது, நிரந்தர தொழிலாளர் என்ற நிலையை ஒழிப்பது என்று தற்போதைய பா.ஜ.க அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோதப் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. முதலாளிகளுக்கு  தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறது. அரசு நிறுவனங்களை கூட தனியார்களிடம் ஒப்படைக்க தீவிரம் காட்டி வருகிறது .

கொரோனா லாக்டவுன் காலத்தில் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து முதலாளிகள் கூட்டமைப்பு  தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பழைய உத்தரவை ரத்து செய்தது . இந்நிலையில் பல நிறுவனங்கள் இந்த உத்தரவு வருவதற்கு முன்பே ஊதிய குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டன. பல நிறுவனங்கள் தற்போது அதை தீவிரமாக கடைப்பிடிக்க முயன்று வருகின்றன.

இந்நிலையில் ஒரு நிறுவனம் சார்ந்த தொழிலாளர் வர்க்கம் தங்கள் நிறுவனத்தின் சுற்றுச் சுவருக்குள்ளே போராடுவதன் மூலம் மட்டுமே தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என நினைப்பது  சாத்தியமில்லை. அப்படி சில நேரங்களில் கிடைக்கும் தீர்வுகளும் நிரந்தரமானவையாக இருக்காது.

முதலாளிகள் தங்களது வியாபாரத்தை விரிவாக்க போட்டி போட்டுக்கொண்டு முன்னேறுவார்கள்.
ஆனால் தொழிலாளர்களை சுரண்டுவது, போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க பிரிவினைகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளில் முதலாளிவர்க்கம் ஒற்றுமையாக இருகின்றது. தொழிலாளர் வர்ககத்திடம் அந்த ஒற்றுமை உணர்வு குறைவாக இருப்பது பலவீனமாக உள்ளது.

ஒரு தொழிற்சாலையின் தொழிலாளி தனது உடன் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை எப்படி அணுகுகிறார்? என்பதில் தொடங்கி மற்ற தொழிற்சாலை தொழிலாளர்களின் நிலை என்ன? சமுக  புறநிலை பிரச்சனைகளை தொழிலாளர் வர்க்கம் எப்படி அணுகுகிறது? என்ற பல விசயங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பார்வை தொழிலாளர்களுக்கு வரும்போதுதான் தொழிலாளர் ஒற்றுமை வலுப்படும்.

புறநிலை காரணங்களை கணக்கில் கொள்ளாத போராட்டங்கள், செயல்திட்டம் இல்லாத அரசியல் போராட்டங்கள் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தாது.

எல்லா ஆலைத் தொழிலாளர்களும், பிற தொழிலாளர்களும் சுரண்டப்படுகின்றனர். அனைவரும் ஒரே பிரச்சனையைத்தான் எதிர்கொள்கின்றனர். தொழிற்சாலைக்கு வெளியே அரசின் கொள்கை, நடவடிக்கைகளாலும் “அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி உயர்வு, பேருந்து ரயில் கட்டண உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, சாதி மத இன மோதல்கள், குடியுரிமை பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களாலும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருகிறார்கள்.

எனவே, ஒட்டுமொத்த சமூக காரணிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் தொழிலாளர் வர்க்க அரசியல்!  
தொழிலாளர் பார்வை.!

அதுதான் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தித் தரும்.

ராவணன்.