காதல் தோல்வி, கல்வியில் தோல்வி…..தற்கொலை ?….S.மீனா.

காதல் தோல்வி, கல்வியில் தோல்வி இந்த இரண்டு விடயங்களும் பெரும்பாலும் தற்கொலைகள் நேருவதற்கு காரணமாக அமைகிறது. எந்த வித மனநிலையில் இவர்கள் இதனை மேற்கொள்ளுகிறார்கள். இதற்கு அடிப்படையாக விளங்கும் உளவியல் காரணங்கள் என்ன?

பொதுவாக பலவீனமான மனம் கொண்ட மாணவர்களும், மனிதர்களும் உணர்ச்சி வேகத்தில் இவ்வாறு தற்கொலை முடிவெடுக்கின்றனர். காதலும் சரி, மதிப்பெண்களும் சரி உயிர் வாழ அத்தியாவசியமான விஷயம் என்று சொல்லிவிட முடியாது. இவற்றில் தோல்வி அடைந்தாலும் வெற்றிகரமான வாழ்கை வாழ மாற்று வழிகள் இருக்கிறது. உலக வாழ்வில் உயிர் மட்டுமே உன்னதமான விஷயம். விடலை பருவத்தை தொடும் ஆண், பெண் இருவருக்கும் எதிர் பாலினத்தினரிடம் ஈர்ப்பு வருவது இயல்பு. அது காதலாக மாறுவதும் நடக்கும். ஆனால் அதை எதிர் பாலினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற பட்சத்தில் அதைவிட்டு விலகி படிப்பில் அல்லது பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கான விழிப்புணர்வுடன் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் கடமை பட்டுள்ளனர். ஒரு மனிதருக்கு ஒரு காதல் தான் வரும், இது நிறைவேறவில்லை என்றால் வாழ்க்கையே இல்லை போன்ற மாசுகளில், சினிமாத்தனங்களிலிருந்து மனித மனங்களை வெளியில் கொண்டு வர வேண்டும். காதலை அதிகமாக புனித ப்படுத்துவதை தவிர்த்தல் நலம். அது போல் தான் இந்த மதிப்பெண் என்னும் மாயை. அதிக மதிப்பெண்ணும், படிப்பும் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவது பெற்றோர்கள், மற்றும் கல்வி நிறுவனங்களின் கடமை. படிப்புடன் கூடிய வாழ்க்கை கல்வியையும், சின்னச் சின்ன பிரச்சினைகளை சமாளிக்கவும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தல் அத்தியாவசியம்.

S.மீனா.
உளவியலாளர்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here