கழிவு நீர் மேலாண்மை


சென்னை பெருநகர குடிநீர் மேலாண்மையே ஒழுங்காக இல்லாத போது கழிவு நீர் மேலாண்மை எங்கிருந்து எதிர்பார்ப்பது. கழிவு நீர் மேலாண்மை ஒழுங்காக இருந்தால் தான் நல்ல குடிநீரும் கிடைக்கும். வேண்டுமெனில் மொத்தமாக நீர் மேலாண்மை என்று வரையறுத்துக் கொண்டாலும், கழிவு நீர் மேலாண்மைக்கு முதன்மையான பங்கு உண்டு குறிப்பாக நகரங்களுக்கு . ஏன் நகரங்களை குறிப்பிடுகிறேன் எனில், நகரங்களில் தான், வீட்டிற்கு கழிவு நீர் இணைப்பு , குடிநீர் இணைப்பு , சாலை வசதி இன்னும் சில இடங்களில் மின் இணைப்பு கூட பெறாமலே வீட்டைக் கட்டி, குடியும் வந்து விடுகின்றனர். அது போன்ற வீடுகளில் உருவாக்கப்படும் கழிவு நீரானது , முறையான பாதாள சாக்கடை இணைப்பு கிடைக்கும் வரை, கழிவு நீர் ஊர்திகளின் மூலம்தான் வெளியேற்றப்படுகிறது.

வீட்டுக் கழிவு நீரானது தமது வீட்டை விட்டு அகன்றால் போதும் என்று தான் பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்கள் , வாடகைக்கு குடியிருப்போரின் எண்ணம். ஆனால் அந்தக் கழிவுநீரை எங்கு சென்று கொட்டுகிறார்கள் என்பது தான் அதிர்ச்சியான ஒன்று. நீங்களும் உங்கள் வீட்டின் கழிவுநீரை ஊர்திகளின் உதவியுடன் அப்புறப்படுத்துபவர் எனில் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பகுதிக்கென தனித்தனியான கொட்டும் பகுதிகளை ஓட்டுநர்கள் கண்டறிந்து வைத்துள்ளனர். ஒரு வேளை அவர்களது முதலாளி காட்டிய இடமாக கூட இருக்கலாம்.

OMR ல் இருந்து எடுக்கும் கழிவுநீரை கேளம்பாக்கம் தாண்டியோ அல்லது கோவளம் முட்டுக்காடு தாண்டியோ உள்ள நிலங்களிலும் வண்டலூர் போன்ற பகுதிகளில் இருந்து எடுக்கும் கழிவுநீரை மண்ணிவாக்கத்தை அடுத்த ஆதனூர் செல்லும் வழியிலும் கொட்டுகிறார்கள். நகரமயமாக்கலினால் பெருமளவு பாதிக்கப்படுவது நகரங்களுக்கு அருகிலுள்ள கிராமங்கள் தான். அவர்களால் நகரமாகவும் மாற இயலாமல் கிராமமாக தொடர இயலாமலும் இருக்கிறார்கள். சாலையின் ஓரங்களில் வெட்டி வைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களில் யாரும் அறியாத வண்ணம் கழிவுநீரை கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். அந்த வாய்க்கால்களின் வழியாகத்தான் ஏரிகளிருந்து வயல்களுக்கு தண்ணீர் செல்லும். ஏரிகளில் தண்ணீர் இல்லாவிட்டாலும், அந்த கழிவு நீரானது நிலத்தடி நீரையும் மண் வளத்தையும் பாதிக்கிறது. அங்கு விளையும் நெல் எப்படி பட்டது என்று உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

ஒட்டு மொத்த இயற்கையையும் நகரமயமாக்கல் அழிப்பதற்கு முன் நாம் விரைந்து செயலாற்ற வேண்டும். தமிழ்நாடு அரசும், மாநகராட்சியும் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளிலும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, கழிவு நீர் ஊர்திகளிலிருந்து பெறப்படும் கழிவு நீர் மட்டுமல்லாது, பாதாள சாக்கடைகளிலிருந்தும் கழிவுநீரை சுத்திகரித்து மரம், செடிகொடிக்களுக்கோ அல்லது பெரு நிறுவனங்களுக்கோ , ஐ.டி. நிறுவனங்களுக்கோ கொடுக்கலாம் அல்லது விற்கலாம். கழிவு நீர் மேலாண்மை திறம்பட செயல்பட்டால் தான் ஓரளவு மிச்சமிருக்கும் நிலத்தடி நீரையும் காப்பாற்ற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here