கரோனா வைரஸைக் காரணம் காட்டி இஸ்லாமியர் மீது நடத்தப்படும் போர்!- பேராசிரியர் த.செயராமன்.

நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 வரைத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. 12380 பேருக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு என்றும், 414க்கு மேல் பலி என்றும் அறிவிப்பு வந்துவிட்டது. 21 நாட்கள் ஊரடங்கில், வேலை இன்றி, வருமானம் இன்றி கிடந்த எளிய மக்கள் அரசு உதவியையே முழுமையாக நம்பி, முடங்கியிருக்கிறார்கள். உயிரச்சம் மக்களைப் பற்றத் தொடங்கி விட்டது.

கொரோனா தொற்றைக் கண்டு அஞ்சி, ஓடிக்கொண்டிருக்கும் மக்களிடம், கொரோனாவைப் பரப்ப முஸ்லிம்கள் எச்சில் துப்புகிறார்கள் என்று, இந்து மதவெறி கலவர அரசியல் செய்பவர்கள், இன்று திட்டமிட்டு, மிக விரிவான அளவில், அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு, பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்கள், எதையும் நம்பும் ஏமாளிகள், இதையும் நம்புகிறார்கள். மெல்ல, மெல்ல, இஸ்லாமியர் மீதான வெறுப்பு வளர்த் தெடுக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட இந்த முதற்கட்ட ஊரடங்குக் காலமாகிய 21 நாட்களில் இஸ்லாமியர் மீது வெறுப்பு பெருத்த அளவில் வளர்க்கபட்டிருக்கிறது. இந்தியாவில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும், இம்மண்ணிலேயே தோன்றி, இரத்த உறவாக வாழ்ந்துவந்திருக்கும் இஸ்லாமியர்களைத் தங்கள் எதிரியாகக் கருதச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டுப் பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்துத்துவவாதிகளின் எதிர்கால இந்து ராஷ்டிர உருவாக்கத்துக்கு இது அவசியம்.

கண்டு அஞ்சத் தகுந்த மக்களாக இஸ்லாமியரைக் கருதும் மனநிலையை விரைவாக உருவாக்கிவிட, ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க. இந்துத்துவ சங்பரிவாரங்கள் முழுமூச்சாக வேலை செய்திருக்கிறார்கள். அதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று எதிர்ப்புப் பணியில், மக்களைக் காப்பாற்றும் இரட்சகராகக் காட்டும் வகையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார அமைப்புகள், அரசு ஆதரவுடன் களமிறக்கப் பட்டுள்ளன. வழக்கமாக, புயல், வெள்ளம் அனைத்திலும் களமிறங்கி, பட்டி தொட்டிகளிலெல்லாம் மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கக்கூடிய இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இப்போது இப்பணிகளில் ஈடுபட்டு விடாதபடி தடுக்கப் பட்டிருக்கிறார்கள். இப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ள தங்கள் விருப்பத்தை இஸ்லாமிய அமைப்புகள் மாவட்ட ஆட்சியருக்கு முறையாகத் தெரிவித்திருந்தாலும் கூட, இஸ்லாமியர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். களமிறக்கப்படுகிறது.

இந்து ராஷ்டிரக் கனவுத்திட்டத்தை நிறைவேற்ற உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன:
இஸ்லாமிய, கிறித்தவர் இல்லாத ஓர் இந்தியா, இந்துமதத்தின் சூத்திர சாதிகள் அனனத்தும் மரபுவழித் தொழில்களை ஏற்று, பிராமண மேலாண்மைக்கு உட்பட்டு, இந்து தர்மத்தைக் கடைபிடித்து வாழும் ‘இந்து ராஷ்டிர’ உருவாக்கம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது.
இதற்காகவே காந்தி கொல்லப்பட்டார். நாடு முழுவதும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. இரத யாத்திரைகள் நடத்தி, இராமர் கோயில் பிரச்சினையை உசுப்பி, இந்துமத உணர்வைக் கிளர்ந்தெழ வைத்து, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி, தங்கள் கனவுத் திட்டமான இஸ்லாமியர் இல்லாத இந்தியாவை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

இதில், இஸ்லாமியர் மீதான வெறுப்பை வளர்த்தெடுக்க, இதுவரை கிடைக்காத அரிய வாய்ப்பை கொரோனா வைரஸ் வழங்கியிருக்கிறது. “கொரோனாவை இந்தியாவுக்குள் இஸ்லாமியர்தான் கொண்டுவந்தார்கள்; இஸ்லாமியர்தான் பரப்புகிறார்கள்; அதற்காகவே துப்புகிறார்கள்; தும்முகிறார்கள்” என்று கடுமையாகப் பிரக்காரம் நடந்து கொண்டிருக்கிறது.

கொரோனா உருவாக்கும் அழிவை ஓராண்டில் சரி செய்ய முடியும். ஆனால், கொரோனாவைப் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரங்கள் செய்து வரும் சிதைவை ஒரு நூற்றாண்டு காலம் ஆனாலும் சரி செய்ய முடியாது. நடைமுறை அரசியல் செய்து கொண்டிருக்கும் தலைவர்கள் ஆபத்தின் பரிமாணத்தை உணர்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவிவரும் பன்மைத்துவத்தை, அடிப்படை மனித வாழ்வியல் ஜனநாயகத்தைக் காக்க, உடனடியாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசரத்தேவை எழுந்துள்ளது.

கொரோனா உயிர்களைக் காவு கொள்ளும்; ஆனால் கொரோனாவை முன்னிறுத்தி செய்யப்படும் இந்துத்துவ வேலைத்திட்டம், இந்திய பல்சமய சமூக அமைப்பைக் கிழித்தெறிந்து, பழைய இந்து சமூகக் கட்டமைப்பை மீண்டும் நிலைநிறுத்தும். இந்த பாதிப்பை சரிசெய்யவே முடியாது.

முஸ்லிம்கள்தான் கொரோனா வைரசை
இந்தியாவில் பரப்பினார்களா
?கொரோனா வைரஸ் பதற்றத்தினூடே, இஸ்லாமியருக்கு எதிராக இந்துக்களைத் திருப்பும சங்பரிவாரப் புரட்டர்கள் அப்படித்தான் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

உலக நாடுகள் கொரோனாவை எதிர்த்துப் போராடுகின்றன. இந்தியாவில், இஸ்லாமியரை எதிர்த்துப் போர் தொடுக்கிறார்கள். இந்தியாவில் இன்றளவும், இந்த நிமிடம் வரை, இடையறாது ஒரு பிரச்சாரம் நடந்து கொண்டேயிருக்கிறது. இந்திய துணைக்கண்டம் முழுவதும் இஸ்லாமியரை எதிர்த்து இப்பிரச்சாரம் நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்த மக்களும் இஸ்லாமியரை விரோதிகளாகக் கருதும் நிலையை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, கொரோனாவைவிட கூடுதல் அபாயகர , இந்துத்துவ வகுப்புவாத வைரஸ் பரப்பப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் வைரசைப் பரப்பியவர்கள் இஸ்லாமியர்கள்தான் என்றும், கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டை விடுவிக்க, அனைத்து தளங்களிலும் இப்போது அர்ப்பணிப்புடன் தொண்டாற்றி வருபவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தான் என்றும் ஒரு கருத்து பல்வேறு ஊடகங்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், இந்திய அரசின் ஆதரவுடன் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அஞ்சத்தக்க கொரோனாவையும், வெறுக்கப்பட வேண்டிய இஸ்லாமியரையும் ஒன்றாக இணைத்துப் பார்க்க வைக்கும் ஓர் உளவியல் இயக்கம் நடக்கிறது. இத்திட்டத்தின் இலக்கு, இஸ்லாமியரை இந்திய மக்கள் அனைவரும் எதிரியாகக் கருத வைக்க வேண்டும், கொரோனா வைரஸ் பரவலை எதிர்ப்பதைப் போல, இஸ்லாமியர்களும் வெறுப்புணர்வோடும், பகையுணர்வோடும் எதிர்க்கப்பட வேண்டும் என்பதுதான்.
ஒரு நூறு ஆண்டாகக் காத்திருக்கும் இந்துத்துவ வகுப்புவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.க்கு கொரோனா தாக்குதல் அளித்து இருக்கக்கூடிய அரிய வாய்ப்பு இது .
மக்களிடையே பரப்பப்பட்டுள்ள பொய்யான வீடியோக்கள் மற்றும் விஷமப் பிரச்சாரங்கள் விளைவாக இஸ்லாமியர்கள் மீது ஒரு வெறுப்பு உணர்வும், பகை உணர்வும், அச்ச உணர்வும் இன்று பரவலாகி இருக்கிறது.

பொய்ப்பிரச்சாரத்தின் விளைவுகள்
தெரியத் தொடங்கியுள்ளன

ஏப்ரல் 14 அன்று, டெல்லியில் தெருவில் காய்கறி விற்கக்கூடிய முகமது சலீம் என்ற ஒரு வியாபாரி, “பெயர் என்ன என்று சொன்னதுதான் தாமதம், சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள்” என்று பதிவு செய்கிறார். “என் பெயர், மதம் என்ன என்று கேட்டார். நான் முஸ்லிம் என்று சொன்னவுடனேயே கொரோனா வைரஸ் பரப்புவதாகச் சொல்லி, கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி, அடித்து விட்டார்” என்று , தெருவில் காய்கறி விற்கும் முகமது சலீம் டெல்லி பத்ராபூரில் உள்ள பிரவீன் பப்பார் என்பவர் தன்னைத் தாக்கியதாகப் புகார் கொடுத்தார். இப்போது அடையாள அட்டை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு அடிக்கத் தொடங்குகிறார்கள் என்கிறார். இந்த வீடியோ இப்போது மக்கள் மத்தியில் பரவி வருகிறது.

இஸ்லாமியர்களே கொரோனா வைரஸ் பரவியதற்குக் காரணம் என்ற பிரச்சாரம் எந்த அளவிற்கு ஊடுருவி இருக்கிறது என்பதற்கு, முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உழவர்சந்தையில் முகக்கவசம் வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கோபத்தோடு குறிப்பிட்டதை சான்றாகக் காட்டலாம். விழாவில் பங்கேற்ற சாத்தூர் ராமச்சந்திரன் இஸ்லாமியர்களைப் பார்த்து, “கொரோனா வைரஸ் உங்களால்தான் பரவிவருகிறது. முதலில் வெளியே இருங்கள்… இந்தத் தகவலை அனைத்து ஜமாத், த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ., தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லுங்கள்” எனக் கூறியுள்ளார்.

டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் கட்டிடத்தில் செயல்படும் தப்லீகி ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் மார்ச் 13ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை அவ்வமைப்பின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்க வெளிநாடுகளிலிருந்து வந்த இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று இருந்திருக்கிறது. அம்மாநாடு முடிந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்றவர்கள் கொரோனா வைரஸைப் பரப்பி விட்டார்கள் என்பது குற்றச்சாட்டு.

2023 -க்குள், இஸ்லாமியர் இல்லாத இந்தியாவைப் படைத்துவிட வேண்டும், இந்து தர்மத்தைத் தவறாமல் கடைப் பிடிக்கின்ற இந்துக்களைக் கொண்ட இந்துராஷ்டிரம் படைத்துவிட வேண்டும் என்ற நோக்கம் கொண்ட இந்துத்துவவாதிகளுக்கு வரப்பிரசாதமாக கொரானா வைரஸ் பிரச்சினை வந்திருக்கிறது. தப்லீகி ஜமாத் இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களால்தான் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்றும், அதை எதிர்த்து இன்று பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தான் பாதிப்பை தடுத்து நிறுத்த அருந்தொண்டாற்றி வருகிறார்கள் என்றும், பெரிய அளவில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியரை எதிரியாகக் காட்டி இந்துக்களைத் திரட்டும் உத்திக்கு மிகப்பொருத்தமாக, தப்லீகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது வசதியாகிப்போனது. அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு அவர்களிடமிருந்து வைரஸ் பரவியுள்ளதாக செய்திகள் வெளியானதும், இந்துத்துவ வேலைத்திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தப்லீகி ஜமாத் மாநாடும் ,குற்றச்சாட்டுகளும்.

தப்லீகி ஜமாத் திட்டமிட்டே கொரோனா வைரசை இறக்குமதி செய்து, இந்தியா முழுவதும் பரப்பிவிட்டதாக பா.ஜ.க., ஆர்.எஸ்., எஸ். சங் பரிவார அமைப்புகள் இன்று பிரச்சாரம் செய்கின்றன. மருத்துவர்கள் ஆய்வதற்கு பதில், தப்லீகி ஜமாத் தலைமையகக் கட்டிடத்தை தடயவியல் நிபுணர்கள், குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தார்கள். கரோனா தொற்றை பரப்ப முஸ்லிம்களுக்கு உள்நோக்கம் இருந்ததா என்று விசாரணை நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உள்ளிட்ட சர்வதேச சதி உள்ளதா என்றும் விசாரணை நடைபெற்றது.

ஒரு நோய்த் தொற்றை நோயாகப் பார்க்காமல், பங்கேற்ற இஸ்லாமியரை நோயாளிகளாகப் பார்க்காமல், சதித்திட்டமாகவும், சதிகாரர்களாகவும் உலகுக்குக் காட்டப்பட்டது. மாநாடு நடந்த 15 மார்ச் அன்று கூட ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. மாநாடு தொடங்கும் நாளன்றுதான் தடை விதிக்கப்பட்டது. இம்மாநாடு முடிந்து, மாநாட்டுக்கு வந்திருந்தோர் வேறுபல மசூதிகளுக்கும் இயல்பாகச் சென்றனர்.

மாநாடு திடீரென்று நடந்துவிடவில்லை. ஓராண்டுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. ஆறு மாதங்க ளுக்கு முன்பே பயண ஏற்பாடுகளைச் செய்தனர். மாநாடு நடத்த டெல்லி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்றனர். அதில் பங்கேற்ற இந்தோனேஷியர்களுக்கு கொரோனா தொற்று இருந்திருக்கக்கூடும். ஏனெனில், அங்கு 16,000 பேர் பங்கேற்ற மாநாட்டிற்குப் பலர் சென்றிருந்தனர். நோய் தொற்று இருப்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியா இன்னமும் நோய்த்தொற்றை அறிந்து கொள்ள குறைவான வசதிகளையே பெற்றிருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு எவ்வித சுகாதார நோய்த்தொற்று ஆய்வும் விமான நிலையத்தில் செய்யப்படவில்லை. அரசுகள் அது பற்றி அப்போது கவலைப்படவில்லை. நோய்த்தொற்று உள்ளவருக்கும் தான் ஒரு நோயாளி என்று தெரியாது.

“தப்லீகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மனித குலத்தின் எதிரிகள்” என்றும், “விடமாட்டோம்” என்றும், டெல்லி மாநாடு சென்றவர்கள் மீது உத்தரபிரதேச முதல்வரும், ஆர்.எஸ்.எஸ்.காரருமான யோகிஆதித்யநாத் கடுமையாக பாய்ந்திருக்கிறார். நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் மீது கடும் குற்றங்களை சுமத்தி சாடியிருக்கிறார். மாநாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் விசா விதிமுறைகளை மீறி விட்டதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செய்தி வெளியிட்டது. நோய்த்தொற்று உடையவர்களை நோயாளிகளாக அல்லாமல் கடுமையாக நடத்தினர். காசியாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முஸ்லிம்கள் மீது கடும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. “அவர்கள் எங்கள் உத்தரவை பின்பற்ற வில்லை. அவர்கள் மனித குலத்தின் எதிரிகள். அவர்கள் மீது நாங்கள் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போட உத்தரவிட்டு இருக்கிறோம். அவர்கள் யாரையும் விடமாட்டோம்” என்று வன்மத்தோடு வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார் யோகி ஆதித்யநாத்..

ஆட்சியாளர்கள் படுத்துகிறபாட்டில், ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லி தில்ஷாத் கார்டன் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியை ஒரு நோயாளி மேற்கொண்டார்.

“டெல்லி மாநாடு நாட்டுக்கு எதிரான குற்றம்” என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டினார். ஓர் இஸ்லாமிய மாநாட்டை நடத்துவதே எப்படி குற்றமாகும்? தப்லீகி ஜமாத் சார்பில் மத வழிபாடு மாநாடுதான் நடத்தப்பட்டது. அப்போது ஊரடங்கும் அறிவிக்கப்படவில்லை. ஜனதா ஊரடங்கு மார்ச் 22ஆம் தேதி ஒரு நாள் மட்டும் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மார்ச் 24 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்க நிஜாமுதீன் என் பகுதிக்கு வந்திருந்த இஸ்லாமியர்களை எச்சரித்து அங்கிருந்து அரசு வெளியேற்ற வில்லை. ஏப்ரல் 1-ஆம் தேதி தான் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியது. தப்லீகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் வைரசை சுமந்து இந்தியா முழுவதும் பரப்பினார்கள் என்று திட்டமிட்டபடியே ஊடகங்கள் மூலமாகவும், பல்வேறு அமைப்புகள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் செய்தி பரப்பப்பட்டது. இந்தத் திட்டமிட்ட பிரச்சாரத்தால், கொரோனா வைரசை நாடுமுழுவதும் இல்லாமியா்களே பரப்புகிறார்கள என்ற கருத்து பரவலானது.

பொய்ப்பிரச்சாரத்தால்
விளைந்த வன்முறைகள்
:

ஜார்கண்டில் அம்ராங்கா கிராமத்தில், ஏப்ரல் 3-ம் தேதி, ஒரு பள்ளி ஆசிரியர் காவல் துறைக்கு ஒரு செய்தி அனுப்பினார். அக்கிராமத்தில் தப்லீகி ஜமாத் மாநாட்டிற்குச் சென்ற இருவர் அமாரன் வயல் பகுதியில் ஒளிந்து இருப்பதாக செய்தி அளித்தார். கொரோனோ தொற்று இருந்தால் அவர் நோயாளி. அவரே, இஸ்லாமியராக இருந்தால் அவர் சதிகாரர், தீவிரவாதி, பயங்கரவாதி. அவர்களைப் பிடிப்பதற்கு, அருகாமை கிராமத்து மக்கள் வீட்டை விட்டுக் கிளம்பி வரவேண்டுமென்று வாட்ஸ் ஆப் செய்திகள் பறந்தன. அனைத்து இந்து கிராமங்களிலிருந்தும் ஆட்கள் விரைந்தனர். ஆனால் அப்படி யாரும் இல்லை. 9 மாதங்களாக குளம் தோண்டுகிறவர்கள் மட்டுமே குறிப்பிட்ட இடத்தில் இருந்தார்கள். இவ்வாறு, வதந்திகளைப் பரப்புவதும் ‘இல்லாமியரைத் தேடுவதும் வாடிக்கையாக்கப் பட்டிருக்கிறது.

தப்லீகி ஜமாஅத் என்பது COVID-19 நோயை பரப்புகிறது; அது வைரஸ் செறிவாக இருக்கும் இடம் என்று செய்தி பரப்பப்பட்டது. அதுவரை நோயைப் பரப்பிய வைரஸ், இப்போது வகுப்புவாத வெறுப்பைப் பரப்புகிறவர்களின் கைக்கருவியாக மாறியது. சமூக வலைதளங்களில் புதிய வீடியோக்கள் பரவ விடப்பட்டன. அந்த வீடியோக்கள் எங்கே, எப்போது, எது குறித்து எடுக்கப்பட்டன? அவற்றில் எவை போலியானவை? – என்பவை மக்கள் அறியாதவை. முன்பு பல ஆண்டுகளுக்கு முன், மாட்டுக் கண்ணில் MGR தெரிகிறார் என்றதும், சிறப்புப் பேருந்துகள் எடுத்துக்கொண்டு பார்க்கப் போனவர்கள் நம் மக்கள்.

முஸ்லிம்கள் உணவில் எச்சில் துப்பி வைக்கிறார்கள்; தட்டுகளை எச்சிலாக்க நக்குகிறார்கள்; வைரஸைப் பரப்ப பலர் ஒன்றாகச் சேர்ந்து தும்முகிறார்கள் என்றெல்லாம் செய்திகளை சமூக வலைதளங்களும், பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தகவல் அமைப்பும் (IT Cell) பரப்பின. தொற்றுநோயை விடவும் மிக வேகமாக வகுப்புவாத வெறுப்பு உணர்வு பரவியது. சில பகுதிகளில் இது வன்முறையாக மாறியது.ஏப்ரல் 7 ஆம் தேதி முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனா வைரஸைப் பரப்புவதாக வதந்தி பரப்பப்பட்டு, பல இடங்களில் மோதல்கள் நிகழ்ந்தன. ஜார்க்கண்ட் மாவட்டத்தில் இந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இரு இளைஞர்கள் படுகாயமுற்றார்கள்.

ஏப்ரல் 5- ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடம் விளக்குகளை அணைத்து விட்டு, அகல் விளக்குகளை ஏற்ற நரேந்திர மோடி அழைப்பு விடுத்த அன்று, தப்லீகி ஜமாத் சென்று வந்ததாகக் கருதப்பட்ட 22 வயது இளைஞர் போபால் – ஹேர்வாலி கிராமத்தில் தாக்கப்பட்டார்.
மோடியின் கட்டளைகளை நிறைவேற்றப் போவதாகக் கூறிச்சென்ற ஒரு ஊர்வலத்தை வீடியோ எடுத்த ஒரு முஸ்லிம் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குர்கானில் (Gurgaon) உள்ள பள்ளிவாசல் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதுகுறித்து காவல்துறை விசாரித்தபோது வைரஸ் உள்ளவர்கள் மசூதிக்குள் ஒளிந்திருக்கிறார்களா என்று பரிசோதிப்பதற்காக சுட்டதாக அவர்கள் கூறினார்கள். நான்கு மாநிலங்களில் இத்தகைய வன்முறைகள் கடந்த சில தினங்களில் அதிக முறை நடந்ததாக ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன. கர்நாடகத்தில், வைரஸ் தொற்றால் பாதிப்புக்குப் பயந்து முடங்கிய மக்கள் உணவில்லாமல் வாடியபோது, இஸ்லாமிய இளைஞர்கள் அவர்களுக்கு உதவி செய்யக் களம் இறங்கினார்கள். கர்நாடகாவில் உணவின்றி கிடப்பவர்களுக்கு உணவும், உதவியும் இஸ்லாமியத் தொண்டர்கள் வழங்கியபோது அவர்களைப் பலர் தாக்கினர். ஏப்ரல் 6 அன்று மாலை சரின் தாஜ் என்ற பெண் சமூகத் தொண்டர், அவருடைய மகன், நான்கு நண்பர்கள் மற்றும் சில தொண்டர்கள், அரிசி, பருப்பு போன்ற பொருட்களை வடகிழக்கு பெங்களூருவில் அம்ருதவல்லி பகுதியில் வழங்கியபோது, 10 பேர் கொண்ட கும்பல் அவர்களைத் தாக்கியது. “காரிலிருந்து இறங்கியதும் கிரிக்கெட் மட்டையால் அடித்தார்கள்” என்று தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பதிவு செய்தனர். தாக்கியவர்கள் “இது இந்து பகுதி. இங்கே ஏன் தருகிறீர்கள்?” என்று தடுத்தார்கள். மக்களுக்கு உதவி செய்ய வந்தவர்களை டில்லி-நிஜாமுதீனிலிருந்து வந்த தீவிரவாதிகள் என்றனர். ஏப்ரல் 6-ஆம் தேதி முஸ்லிம்கள் மீது நடந்த தாக்குதலை வடகிழக்கு பெங்களூருவின் காவல்துறை துணை ஆணையர் உறுதிப்படுத்துகிறார்.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு டில்லி விதிவிலக்கல்ல. டில்லியில் காலனிகள் பகுதியில் இஸ்லாமியர் வராதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்றொரு வீடியோவில், வடக்கு டெல்லி- சாஸ்திரிநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் தங்கள் பகுதியின் அருகாமையில் “முஸ்லிம்களை அனுமதிக்கமாட்டோம்” என்று பேசுகிறார். “நாட்டில் அனைவரும் இதைப் பின்பற்ற வேண்டும்” என்று வீடியோ எடுத்தவரின் குரலும் கேட்கிறது. வீடியோவின் இறுதியில், இரண்டு காய்கறி விற்பனையாளர்களை சூழ்ந்துகொண்டு கேள்விகளால் துளைத்து எடுக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமியர் இல்லை என்று தெரிந்த பிறகு, இனி ஆதார் கார்டு எடுத்து வரவேண்டும், இல்லாவிட்டால் கம்பெடுத்து விளாசி விடுவோம் என்று எச்சரிக்கின்றனர்.

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்திய அளவில் இச்செய்தி முதன்மை பெறாதபடி முடக்கப்பட்டது. இப்போது சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தவர் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இப்போது, பழைய எரிச்சலை அரசுகள் தீர்த்துக் கொள்கின்றன. மீரட் மாவட்டத்தில் கன்கெர் கேடா காவல் நிலையத்தில், நைமுதீன் என்ற பெயருடைய ஒர் இஸ்லாமியர் கடித்து விட்டார் என்றும், வைரஸைப் பரப்ப ஒரு கடையில் எச்சில் துப்பினார் என்றும் சிலர் புகார் கொடுத்தனர். அது பொய்ப் புகார் என்று விசாரணையில் தெரியவந்தது. மதக் கலவரங்களைத் தூண்ட பொய்க் குற்றச்சாட்டுகளைத் தாங்கி புகார்கள் தரப்படுவதாக காவல்துறையே கூறியுள்ளது.

அஸ்ஸாமில் பா.ஜ.க அரசு ஒருபடி மேலே சென்றது. சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கரோனா பாதிப்புக்குள்ளான பெயர்களை வெளிப்படையாக அறிவித்தார். இது விதிமுறைகளுக்கு முரணானது. அவர்கள் தப்லீகி ஜமாத் மாநாட்டுக்கு சென்றவர்கள் என்று ஊடகத்துக்கு செய்தியளிக்கப்பட்டது. “மாநாட்டுக்குப் போனவர்கள் ஏப்ரல் 6க்குள் தனிமைப்படுத்த வந்துவிடவேண்டும்; அப்படி அறிவித்துக் கொள்ளாதவர்கள் மீது கொலை வழக்கு பதியப்படும்” என்று அசாம் முதல்வர் அறிவித்தார்.

தப்லீகி ஜமாத் மாநாடு சென்றவர்கள் பற்றிய அச்சம், இப்போது இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான சந்தேகமாகவும், ஒட்டுமொத்த இஸ்லாமியருக்கு எதிரான உணர்வாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.

கோலாகாட் (Golaghat) மாவட்டத்தில் நிஜாமுதீன் மாநாடு சென்றவர்கள் அதிகம் உள்ளதாகக் கூறப்பட்டது. இஸ்லாமியர் வாழும் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் தடைகள் வைத்தும், மூங்கில் தட்டிகள் வைத்தும் அடைக்கப்பட்டன. அங்கு எவ்வித சேவையும் மக்களுக்குக் கிடைக்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. நாகரணி மஜ்கவான் போன்ற பகுதிகளில் இந்து கடைக்காரர்கள் முஸ்லிம்களுக்கு பொருள் தர மறுத்துவிட்டார்கள்.

ஏப்ரல் 4ஆம் தேதி, அசாமில் குவஹாத்தியில் உள்ள அசாரா பகுதியில், ஹபீஸ் அலி என்பவர் பசு மாடுகளுக்கு தீவனம் வாங்கச் சென்றபோது கடைக்காரர் “கிட்டே வராதே என்று கத்தினார். வேறு சிலர் மூலம் தீவனம் வாங்கிக் கொண்டேன்” என்று அவர் கூறுகிறார்.

இஸ்லாமியர் வேறு, கொரோனா வைரஸ் வேறு என்ற வேறுபாடே தெரியாத அளவிற்கு மக்களிடம் பிரச்சாரம் எடுபட்டிருக்கிறது. இஸ்லாமியர் என்றால், அவரிடம் வைரஸ் இருக்கும் என்று சாதாரண மக்கள் கருதுகிறார்கள். கொரோனா பாதிப்பு எந்த அளவிற்கு இருந்தாலும், “ஓராண்டு காலத்தில் வைரஸ் பாதிப்பு மறைந்துவிடும். இஸ்லாமியர்- இந்துக்களுக்கு இடையிலான, பல நூற்றாண்டு கால சகோதரத்துவம் போய் விடாது என்று நம்புகிறேன்” என்று மதபோதகர் மொஹிதுல் இஸ்லாம் குறிப்பிடுகிறார்.

ஒவ்வோர் இரவும் இந்திய பிரைம் டைம் டெலிவிஷனில், தப்லீகி ஜமாத் தலைமை நிர்வாகி மவுலானா சாத் பற்றி “இந்தியா முழுவதையும் வைரஸ் பாதிப்புக்குள்ளாக்கும் பயங்கரவாத சதியின் மூளை” என்று கூறி வருகிறது.

இந்திய அரசின் அலட்சியமான, வைரஸை முறையாக எதிர்கொள்ளாத, செயலற்ற , உரிய காலத்தில் செயல்படாத, கடமை தவறிய அரசின் போக்கை மறைக்க இப்படிப் பழியைப் பிறர் மீது போடுவதாகக் கருதலாம்.

சீனாவும் அமெரிக்காவும் கொரோனா வைரஸ் உருவாக்கத்திற்கு ஒருவரைஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தியாவில் முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. உலக நாடுகளிலெல்லாம், இந்த அழிவுக்கு கொரோனா காரணம்; இங்கே இஸ்லாமியர்களே காரணம்.

2014 -இல் நரேந்திர மோடி பிரதமரான திலிருந்து, 20 கோடி முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடும், வன்முறையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2019-இல் பா.ஜ.க மிகப் பெரும் பலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்து தேசிய அலையுடன், சமயசார்பற்ற ஜனநாயகத்தை சிதைத்து, இந்து மேலாண்மை செய்யும் சர்வாதிகார நாடாக்கி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நரேந்திர மோடியின் ஆட்சியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. “வலதுசாரி அடாவடித்தனம்” கை முட்டியை மடக்கி புஜபலம் காட்டுகிறது.

போலி வீடியோக்களும்
விஷமப் பிரச்சாரமும்.

நிஜாமுதீன் (மாநாடு)க்கும், வைரசுக்கும் இடையே உள்ள தொடர்பை விவரிக்க பல புதிய சேனல்கள் தோன்றியுள்ளன. அதன் மூலம் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு மிகப்பெரிய அளவில் பரப்பப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்றவர்களை “நிஜாமுதீன் இடியட்ஸ்” என்றும், நிகழ்ச்சியை “Corona jihad” என்றும் டுவிட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது. பி.ஜே.பி கட்சியில் உயர் பதவியில் உள்ளவர்கள் Islamic Insurrection (இஸ்லாமியக் கலவரம்) என்றும், Corona terrorism’ என்றும், நிஜாமுதீன் மாநாட்டில் பங்கு பெற்றவர்களைக் குறித்தார்கள். உண்மை ஆய்வு செய்யும் இணையதளம் என்று குறிப்பிடப்படுகிற Boom, “முஸ்லிம்களையும் தொற்று நோயையும் இணைத்தது குறித்து ஆச்சரியப்பட ஏதுமில்லை” என்கிறது. 2020-பிப்ரவரி இறுதியில், புதுடில்லியில் CAA எதிர்ப்பில் நிகழ்ந்த கலவரத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதன் பிறகு வாட்ஸ் ஆப்பில், முஸ்லிம் வணிகர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும், இஸ்லாமியர் அழுகிப்போன உணவுகளை விற்பதாகவும் செய்தி பரப்பப்பட்டது.

இந்நிலையில், தப்லீகி ஜமாத் மாநாட்டு பற்றியச் செய்தி ஒரு புதிய தொடக்கத்தைத் தந்தது. இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே கொரோனாவைப் பரப்புவதாக செய்தியை மக்களிடம் கொண்டு சென்று, இஸ்லாமியர் மீது ஆத்திரத்தை உருவாக்கிய பல வீடியோக்கள் வந்தன.

இஸ்லாமியத் தொப்பி அணிந்த முஸ்லிம்கள் பாத்திரங்களை நக்குவது போன்ற வீடியோ பரவலானது. இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, பலர் இஸ்லாமியர் வைரசைப் பரப்ப இப்படிச் செய்வதாக நம்பினர். இதுகுறித்து உண்மை கண்டறியும் இணையதளம், AltNews “அந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டதல்ல; 2018ல் எடுக்கப்பட்டது என்பதையும், அது கெரோனா பரப்பும் முயற்சியல்ல என்பதையும் கண்டறிந்து வெளியிட்டது. இஸ்லாமியரின் ஒரு பிரிவினர் (a sect), உணவுப்பொருளில் எதையும் மீதம் வைக்க மதரீதியாகவே கூடாது என்று நம்புகிறவர்களாகவும், உணவில் எள்ளவையும் வீணாக்காமல் உண்ணுவதை நடைமுறையாகவும் கொண்டுள்ளனர். எஞ்சியவற்றை உண்பது என்பது உணவை வீணாக்குவதிலிருந்து தடுக்கும் என்று நம்புகிறவர்கள் இவர்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியது.

இங்குள்ளவர்கள் தயிர்சாதம் சாப்பிடும்போது, கையைப் புரட்டி புரட்டி நக்குவதைப்போல, அவர்கள் ஸ்பூனை நக்கிவிடுகிறார்கள். அவர்களுடைய உணவு உண்ணும் முறை அதிகபட்சமானது; தட்டுகளை நக்குவது போன்ற வீடியோக்களை இங்கே கொண்டுவந்து போட்டு, வைரஸைப் பரப்புகிறார்கள் பாருங்கள்! என்று விஷமப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மற்றொரு வீடியோ, பாட்னாவில் உள்ள மசூதியில் இத்தாலி மற்றும் ஈரானிலிருந்து வந்த 30 பேர் தங்கி இருப்பதாகப் பேசுகிறது. வைரஸ் பரப்பியவர்கள் சீனாவைச் சேர்ந்த உய்குர் முஸ்லிம்கள் என்ற செய்தியை அந்த வீடியோ பரப்பியது, ஆல்ட் நியூஸ் இவை அனைத்தும் பொய்கள் என்பதை கண்டறிந்து சொன்னது. முஸ்லிம்களைக் கெட்டவர்களாகக் குற்றம்சாட்டுவது அந்த விடியோக்களின் நோக்கம்.

மற்றொரு வீடியோ, கல்கத்தா அருகில் உள்ள பகுதியிலும், பாகிஸ்தானிலும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் தனிநபர் இடைவெளி இல்லாமல் கூடிநின்று முஸ்லிம்கள் கொரோனாவைப் பரப்புவதாக, புகைப்படங்களுடன் அந்த வீடியோ குற்றம் சாட்டியது.

இப்படங்களை இந்திய அரசியல் தலைவர்களும், மேகாலயா ஆளுநர் உட்பட, பகிர்ந்து இருந்தார்கள். உண்மை அறியும் இணையதளங்கள் இப்படங்களை ஆய்வு செய்து, 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டவை என்ற உண்மையை வெளிப்படுத்தின.

மற்றொரு வீடியோ, ஒரு முஸ்லிம் குழுவினர் ஒரே மாதிரியாக உரத்து மூச்சிழுத்து, அழுத்தமாக ஒரே நேரத்தில் வெளியிடுவதைக் காட்டியது. இந்த வீடியோ டில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் மசூதியில் எடுக்கப்பட்டது என்றும், கொரோனா வைரசைப் பரப்புவதற்காக, வேண்டுமென்றே இப்படிச் செய்கிறார்கள் என்றும், அதற்கான சான்று இது என்றும் விளக்க விவரிப்பில் கூறினார்கள். இதையும் உண்மை கண்டறியும் ஊடகங்கள் ஆய்வு செய்து, இந்தப் பதிவு மாநாட்டிற்கு ஒரு மாதத்திற்கு முந்தையது என்றும், அவர்கள் சூபி முஸ்லிம்கள் என்றும், அவர்கள் பின்பற்றும் சமய சடங்கான இம்முறையில், அங்கிருப்போர் அனைவரும் மூச்சு இழுக்கும்போதே ஒன்றாக அல்லாஹ்வின் பெயரைக் கூறுவார்கள் என்றும் தெளிவுபடுத்தியது. அதுமட்டுமின்றி, ஹஸ்ரத் நிஜாமுதீன் மசூதியின் நிர்வாகம் அந்த வீடியோ தங்கள் மசூதியில் எடுக்கப்பட்டது அல்ல என்று தெளிவுபடுத்தியது.

மற்றொரு வீடியோவில் தொப்பி அணிந்த சிலர் உணவு சமைக்கும் இடத்தில் உணவு பாக்கெட்டுகளுக்குள் ஊதுகின்றனர். இது இந்தியில் தலைப்பிடப்பட்டுள்ளது. சமயலறையில், வாடிக்கையாளர்களுக்கு வைரசைப் பரப்புவதற்காக முஸ்லிம்கள் இந்தியாவில் இப்படிச் செய்வதாகக் கூறப்பட்டு, முஸ்லிம்கள் மீது ஆத்திர உணர்வை பரப்பியது. இதை இந்துத்துவ வலதுசாரிகள், பா.ஜ.க.வினர் இணையதளங்களில் பெரிய அளவில் பரப்பினர். இத்தகைய கடைகளைப் புறக்கணிக்குமாறு பாஜகவினர் அழைப்பு விடுத்தனர்.

ஆனால் அந்த வீடியோ ஓர் ஆண்டுக்கு முன்பு, மலேசியாவில் எடுக்கப்பட்ட வீடியோ. அது எந்த வைரசையும் எவருக்கும் பரப்புவதற்காக அப்படிச் செய்யப்படவில்லை என்பதும் வெளியானது. பேப்பர், பாலிதீன் பைகளை ஊதிப்பிரித்து, பொருட்களை உள்ளே போட விற்பனையாளர் முயல்வதும்கூட, முஸ்லிம்களை வீழ்த்திவிட இந்துத்துவவாதிகளுக்குக் கைக்கருவிதான்.வெள்ளிக்கிழமையில் ஒரு வீடியோ வெளியாகி பரவலானது. இதில் போலீஸ்காரர்கள் மீது ஒரு முஸ்லிம் துப்புகிறார். கொரோனா ஊரடங்கின் போது எடுக்கப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீடியோ பிப்ரவரி மாதமே எடுக்கப்பட்டது என்பதை Boom இணையதளம் கண்டுபிடித்துக் கூறியது. அந்த வீடியோ டெல்லியில் எடுக்கப்பட்டள்ளதல்ல, மும்பையில் எடுக்கப்பட்டது. அந்த விடியோவில் கைதாகி, போலீஸ் பாதுகாப்பில் கொண்டுசெல்லப்படும் ஒரு முஸ்லிம் கைதிக்காக அவருடைய வீட்டிலிருந்து வந்த சமைத்த உணவை உண்ண காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், அவர் கோபமாகத் துப்புகிறார். இதில் வைரசுக்கும் துப்புவதற்கும் தொடர்பில்லை. வீட்டு உணவை உண்ணுவதற்கு காவல்துறை அனுமதிக்காததால் ஏற்பட்ட ஒரு விசாரணைக் கைதியின் கோப நடவடிக்கை அது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, இப்போது பெரிய அளவில் பகிரப்பட்டது. 10 ஆயிரம் ஷேர்களும், 3 லட்சத்து 40 ஆயிரம் பார்வைகளும் பெற்றது.

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வை அனைத்து தரப்பினரிடமும் முழுமையாக வளர்ப்பதை, கொரோனா வைரஸ் பிரச்சினை முடியும் முன்னமே சாதித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார அமைப்புகள் முனைப்புடன் செயல்படுகின்றன. இதற்காக, பெரிய தலைவர்களும்கூட உள்ளூர் பண்படாத முரட்டுத் தலைவர்களைப் போல கருத்துகளை முன் வைத்து வருகின்றனர். ஏப்ரல் 1-ஆம் தேதி பாஜக IT Cell தலைவர் அமித் மால்வியா “முதலில் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பெயரில் ஷாஹின்பாக் முதல் ஜாமியா வரை. இப்போது மார்க்கஸில் தீவிரவாத தப்லீகி ஜமாத்தின் சட்டவிரோதக் கூட்டம். இதற்கு முடிவு கட்ட வேண்டும்.” என்று உசுப்பேத்துகிறார்.

மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி “தப்லீகி ஜமாத் தாலிபானைப் போல குற்றம் செய்து இருக்கிறது. இது ஒரு அலட்சியம் அல்ல. இது ஒரு கடுமையான குற்றச் செயல்.” என்று நோய்த் தொற்றுக்கு நோய்த்தொற்றால் பாதித்த இஸ்லாமியர்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தப்லீகி ஜமாத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்.

தப்லீகி ஜமாத்
வேண்டுமென்றே செய்ததா?

தப்லிகி ஜமாத் மாநாட்டை டெல்லியில் நடத்துவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. முறையாக அனுமதி பெறப்பட்டது. . அப்போது அரசு கட்டுப்பாடு ஏதும் விதிக்கவில்லை. மாநாட்டிற்கு வருகிறவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விட்டார்கள். .மாநாடு தொடங்குகிற நாளன்று, திடீரென்று தடை உத்தரவை டெல்லி அரசு அறிவித்தது. டெல்லி மாநாட்டிற்கு வந்தவர்கள் மாநாடு முடிந்ததும் ஊர் திரும்பினார்கள். திட்டமிட்டு பதிவு செய்தபடி ஊர் திரும்ப வேண்டியவர்கள் காத்திருந்தார்கள். இந்நிலையில், மார்ச் 22-ஆம் தேதி ஒரு நாள் ஜனதா ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. அதன்பிறகு, 24-ஆம் தேதி 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் மார்ச் 22 க்கு முன்பு ஊர் திரும்ப முடியாதவர்கள் தொடர்ந்து அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அவர்கள் நிஜாமுதீன் கட்டிடத்திலேயே தங்கினார்கள். அவர்களை அப்போதும்கூட அரசு வெளியேற்ற வில்லை. ஏப்ரல் 1-ஆம் தேதிதான் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஊரடங்கும், போக்குவரத்து முடக்கமும் தப்லீகி ஜமாத் மாநாட்டு ஏற்பாட்டுக்காரர்களுக்கும், அதில் பங்கேற்றவர்களுக்கும், எதிர்பாராத ஒன்றே ஆகும்.

தப்லீகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்பவர்கள் வைரஸைத் தங்கள் உடலில் தூக்கிச் சென்று ஊர் ஊராகப் பரப்பி விட வேண்டும் என்று திட்டமிட்டு வந்தவர்கள் அல்ல. அவர்கள் தங்களைத் தாங்களே நோயாளிகளாக மாற்றிக் கொள்ளக்கூடிய மனநோயாளிகளும் அல்ல. தொற்று ஏற்பட்டு இருப்பது அவர்களே அறியாத ஒன்று. ஆனால் தொற்று பற்றி அறிந்ததும் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும், தனிமைப் படுத்திக்கொள்ளவும் உடன்பட்டார்கள். நோயாளிகளை அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காகவே தூக்குமேடை வரை கொண்டு செல்ல வழி இருக்கிறதா என்று இந்திய அரசும், அதன் பின்புலமாக இருக்கக்கூடிய இந்துத்துவ சர்வாதிகாரிகளும் முயற்சி செய்கிறார்கள்.

உலகளாவிய கண்டனங்கள்:

சங்பரிவார் ஊடகங்களும் வலதுசாரி மதவாதிகளும் பரப்பிய மதவெறிக் கருத்துப் பரவலால் நாட்டில் பல இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன.

இதைக் கண்டுஉலகளவில் தலைவர்கள் கவலையுற்றனர். ஜெனிவாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் மைக் ரயான் இவ்வாறு தெரிவித்துள்ளார்: “வைரஸ் பரவலுக்கு யாருடைய தவறும் காரணம் இல்லை. ஒவ்வொரு நோயாளியும் பாதிக்கப்பட்டவராகவே பார்க்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மத, இன அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது. இந்தியாவில் கொரோனா வைரசுக்கு மதச்சாயம் பூசப்பட்டது. இது முற்றிலும் தவறானது.” பொறுப்புள்ள தலைவர்களெல்லாம் கொரோனா வைரஸ் பரவலுக்கு மதச்சாயம் பூசுவதற்குக் கண்டனம் செய்யத் தொடங்கினர்.

கர்நாடக முன்னால் முதல்வர் சித்தராமையா “வைரஸ் பாதிப்புக்கு மதச்சாயம் பூச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். வைரசால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஜாதி,மத வண்ணம் பூசப்பட்டு வருகிறது. இது அபாயகரமானது, எனவே கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள்*

“கொரோனா தொற்றுநோய் ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் தாக்கக்கூடியது” என்றும், “இதற்கு மதச்சாயம் பூசுவது அனைவரும் தவிர்க்க வேண்டும்” என்றும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் மக்கள் வெறுப்புணர்வுடன் பார்ப்பதைத் தவிர்த்து, இது போன்ற தொற்றுநோய் அனைவருக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து, அத்தகையவர்களை அனைவரும் அன்போடும், பரிவோடும் நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அறிக்கை வெளியிட்டார்.

ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களை வெறுத்து, வெறுப்பும வன்முறையுமான திசைநோக்கி செல்வதை எல்லோரும் புரிந்து கொண்ட நிலையில், பா.ஜ.க.வும் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டது. பா.ஜ.க.வின் தலைவர் ஜே.பி’ நட்டா இவ்வாறு கூறினார்: “வைரசுக்கு மதச்சாயம் பூச வேண்டாம். இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட வேண்டாம். ஏப்ரல் 2ஆம் தேதி, பா.ஜ.க.வின் தேசிய பொறுப்பாளர்களுடனான ஆலோசனையின்போது அவர் கருத்தை வலியுறுத்தினார். ஆனால், நடைமுறையில் மதவெறி அரசியலை தடையின்றி அக்கட்சி எடுத்துச் சென்றது.

இஸ்லாமியர்கள் மீது மட்டுமின்றி, வடகிழக்குப் பகுதி மக்கள் மீதும், இனவெறியை இந்துத்துவ பா.ஜ.க, சங்பரிவார அமைப்புகள் வெளிப்படுத்தின. கொரோனாவை விடவும் இவர்கள் வெளிப்படுத்தும் இனப்பாகுபாடு மோசமானது என்று பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தெரிவித்தார்:

” கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடங்கிக் கிடக்கிறது. ஆனால் ஊரடங்கைக் கண்டுகொள்ளாமல் இனப்பாகுபாடு மட்டும் அடங்காமல் ஊர் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. சீனாவில் கரோனா வைரஸ் உருவானதால், சீனாவுக்கு எதிராக உருவான மனநிலை, இப்போது வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. அவர்கள் தோற்றம் காரணமாக, சொந்த நாட்டு மக்களையே சிலர் புறக்கணிக்கின்றனர். அதிலும் வடகிழக்கு மாநிலச் சிறுமியின் மீது சிலர் எச்சில் துப்பியதைப் பார்த்தேன். அது என்னை பாதித்தது… இதுபோன்ற இனப் பாகுபாடுகளை நிறுத்தவேண்டும். சமூக ஊடகங்கள் மூலம் இனவெறி தூண்டும் கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.” (தினகரன், 10.04. 2020)

இஸ்லாமியர்களுக்கு எதிரான, இந்துத்துவச் சார்பான கருத்துக்களை பல செய்தித்தாள்களும், இதழ்களும் பதிவுசெய்து பிரச்சனையை ஊக்குவித்தன. தினமணி இதழ் 4.4.2020 அன்று தனது தலையங்கத்தில் அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸ்.,சங்பரிவாரக் கருத்துக்களை எதிரொலித்தது. தப்லீகி ஜமாத்தின் தலைமையகத்தை கடுமையாக விமர்சித்தது. “மதத் தீவிரவாதத்தின் நாற்றாங்காலாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது” என்றும், “உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்து இருக்கிறது”, என்றும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் தினமணி எழுதியது. மேலும் “இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு தீநுண்மி (வைரஸ்) நோய்த் தொற்றைக் கொண்டு சேர்த்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தப்லீக் ஜமாத் தொண்டர்கள். அது குறித்து அவர்களுக்கு கொஞ்சங்கூட வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லை என்பதுதான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது” என்று எழுதி மதவாத அரசியலுக்குத் தன் பங்களிப்பைச் செய்தது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு.

டெல்லி மாநாட்டுக்குத் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள், அதில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை என்ற அறிவிப்பு தொடர்ந்து வெளியானது. இந்திய அரசின் போக்கில் எந்த அலை தென்படுகிறதோ, அதே அலையுடன் தமிழகமும் நீந்திக் கொண்டிருந்தது. தமிழகத்தைப் பொருத்தவரை தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, டெல்லி மாநாட்டுக்குச் சென்றோர், அந்த தொடர்பில் உள்ளோர் 500 பேர் தாங்களாகவே தங்களை அறிவித்து, மருத்துவப் பரிசோதனைக்கும், தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்திக்கொண்டனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கொரோனாவால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கணக்கை அன்றாடம் கூறிவந்தார். தப்லீகி ஜமாத் மாநாட்டில் பங்கு பெற்றோர் எண்ணிக்கையையும், அதில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் எண்ணிக்கையையும் தவறாமல் கூறிவந்தார். ஆனால் அவர் கூறிய தகவல் சரியானதா என்பது கேள்விக்குரியது. 31. 3. 2020 அளவில் தமிழ்நாட்டில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. பின்னர், 1,131 பேர் தப்லீகி ஜமாத் மாநாட்டில் பங்கு பெற்றவர்கள் என்றும், இதில் 961 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 1131 பேரில் 633 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அவர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்களில் 961 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் கூறினார். அப்படி என்றால் தொற்று உறுதிசெய்யப்பட்ட 633 பேர் யார் என்ற கேள்வியை இஸ்லாமிய அமைப்புகள் எழுப்பின. இந்தியா முழுவதும் மத்திய பா.ஜ.க. இந்துத்துவ அரசு எதை விரும்புகிறதோ அதையே உயர்நிலை அதிகாரிகள் பதிவு செய்து வந்தார்கள். அதையேதான் பீலா ராஜேஷும் செய்தார்.

தப்லிக் ஜமாத்துதான் முழுக்க முழுக்க
கொரோனா தொற்றுப் பரவலுக்குக்
காரணமா?

மார்ச்சு 31ஆம் தேதி பிரிட்டிஷ் காலத்தில் இயற்றப்பட்ட தொற்றுநோய்த்தடுப்புச் சட்டத்தின்கீழ் டெல்லி குற்றவியல் காவல்துறை தப்லீகி ஜமாத் தலைவர் மௌலானா சாட் மற்றும் மார்க்கஸ் நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்தது. அரசு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டியது. மௌலானா சாட் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டார். பின்னர் அரசு விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவித்தார். மார்ச் 22-ஆம் தேதி தான் அரசு கட்டுப்பாடுகளையே விதித்தது. அதன் பிறகு தாங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார். மார்ச் 13-ஆம் தேதி மாநாடு நடைபெறும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் அங்கே சுகாதார அவசரநிலை ஏதும் அறிவிக்கவில்லை என்று கூறியது என்று தப்லீகி ஜமாத்தின் வழக்கறிஞர் முஜிபுர் ரகுமான் பதிவுசெய்கிறார். மார்ச் மாத இறுதியில் தான் அரசு விழித்துக்கொண்டது. ஆகவே அரசாங்கம் அலட்சியமாக இருந்தது என்பது வெளிப்படையான ஓர் உண்மை. அதுபோலவே ஜமாத்தும் இது பற்றி அறியாமலே இருந்தது. தொற்று பற்றி அறிவியல் பூர்வமாக மதபோதகர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

சீனாவிலிருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், இந்தோனேஷியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும், கொரோனா வைரஸ் பரவியது. பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை மலேசியாவில் இருந்து அதிகம் பயணிகள் இந்தியாவிற்குள் வந்தனர். தப்லீகி ஜமாத்தின் கோலாலம்பூர் மாநாட்டில் 16,500 பேர் பங்கேற்றனர். மார்ச் 16-ஆம் தேதிதான் முதன்முதலாக இந்தோனேசிய மதபோதகர்கள் தெலுங்கானாவின் தலைநகராகிய ஹைதராபாத்தில் தனிமைப்படுத்தப் பட்டனர். மார்ச் 17 அன்று முதல் நபருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டது. மார்ச்சு 21 ஆம் தேதி மேலும் 10 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது நிரூபணமானது. ஆகவே, தப்லீகி ஜமாத் மாநாட்டால்தான் தொற்று பரவியது என்று சொல்லமுடியாது.

வெளிநாடுகளிலிருந்து ஜமாத் மாநாட்டிற்கு வந்தவர்கள் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர்; அவர்களால் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் அதற்கு முன்னமே கொரோனா தொற்று இந்தியப் பகுதிகளைத் தொட்டு விட்டது.

2020 பிப்ரவரி 15ஆம் தேதி வெளிவந்த இந்து தமிழ் இதழில் வந்த ஒரு செய்தி மிக முக்கியமானது. அது இப்படிப் பேசுகிறது:

“சீனாவில் இருந்து டெல்லி வந்த 17 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு!
4 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை!”
“பிப்ரவரி 13 நிலவரப்படி, சீனா மற்றும் கரோனா பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து டெல்லி வந்த 5700 பயணிகள் உடல் நலம் குறித்து விசாரிக்கப் பட்டுள்ளது…. 4707 பேருக்கு அறிகுறிகள் இல்லை. “17 பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 817 பயணிகளைத் தொடர்பு கொள்ளவோ கண்டுபிடிக்கவோ முடியவில்லை. 68 பயணிகள் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.” “ஜனவரி 17ஆம் தேதிக்குப் பின் சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து டெல்லி விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை ஆய்வு செய்ததில், இதுவரை 21 பேருக்கு கரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது”. (சுகாதாரத்துறை அதிகாரி கூறியபடி) “ஜனவரி 15ம் தேதிக்குப் பின் டெல்லியிலிருந்து சீனா மற்றும் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்குச் சென்றவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.”
இந்த செய்தி பிப்ரவரி 15- ஆம் தேதி வெளியானது.

தப்லீகி ஜமாத் மாநாடு மார்ச் 13-15இல் நடைபெற்றது.இந்து இதழ் பதிவு செய்துள்ள செய்தியின்படி, 2020 ஜனவரி மாதமே கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து 6 ஆயிரம் பேர் டெல்லிக்கு வந்துள்ளார்கள் என்பதும், சீனாவில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்பதும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 5,700 பயணிகளில் 4707 பேருக்கு அறிகுறிகள் இல்லை என்றும், ஆனால் 17 பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்றும், 817 பயணிகளைத் தொடர்புகொள்ளவும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை என்றும் தெரிகிறது. ஆகவே கரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்கள் சனவரி மாதமே இந்தியாவுக்குள் வந்து விட்டார்கள் என்பதை இந்து தமிழ் நாளிதழ் உறுதி செய்துள்ளது.

கரோனா வைரஸ்
பரவலைத் தடுத்து நிறுத்துவதில்
இந்திய அரசு கடமை தவறி இருக்கிறது
.

2019 டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் பற்றிய செய்தி இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டது. இந்திய அரசு தாமதமாகவே விமானப் போக்குவரத்தை நிறுத்தியது. சீனாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் COVID-19 நோய் பரவியது. ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வெளிநாட்டவர் வருவதை இந்திய அரசு தடுக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால்தான் இந்தியாவில் நோய்த்தொற்று ஏற்பட்டது என்றால், அப்படி வெளிநாட்டவர்கள் வருவதை அனுமதித்த மத்திய அரசைத்தான் குற்றம் சாட்ட வேண்டும்.

சீனாவிலிருந்து டிசம்பர் மாதமே வைரஸ் பரவல் குறித்து செய்தி கிடைத்து விட்ட நிலையில், மூன்று மாத காலத்திற்கு இப்பிரச்சினையை பெரிதான ஒன்றாகவே இந்திய அரசு உணரவில்லை. மார்ச் 13ஆம் தேதி தப்லீகி ஜமாத் மாநாடு தொடங்கியது. மார்ச் 14-ஆம் தேதி மத்திய அரசு வைரஸ் பிரச்சனையை தேசியப் பேரிடராக அறிவித்தது.. அப்போதும்கூட வெளிநாட்டுப் பயணிகள் தடை செய்யப்படவோ அல்லது ஊரடங்கு அமலாக்கப்படவோ இல்லை.

தொற்று ஏற்பட்டு இரண்டு வாரங்கள் கழித்துதான் பொதுவாக நோய் அறிகுறிகள் தெரியும் என்ற நிலையில், வெளிநாட்டவரை முற்றிலுமாக அனுமதித்து இருக்கக் கூடாது. டெல்லி மாநாட்டிற்கு வந்தவர்கள் வெளியேற முடியாதபடி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதேயொழிய, மாநாட்டை முன்கூட்டியே தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசோ, டெல்லி அரசோ ஏதும் செய்துவிடவில்லை.

2020 ஜனவரி 14ஆம் நாள் பிபிசி இவ்வாறு செய்தி வெளியிட்டது: “ஒரு புதிரான வைரஸ், அறிவியலில் முன்பு அறியப்படாத வைரஸ், சீனாவில், வுகான் நகரில் தீவிர நுரையீரல் நோயை உருவாக்கி வருகிறது. இந்த நோயால் உலகம் முழுவதும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 பேருக்கு மேல் இறந்துள்ளனர். சீனாவில் இருந்து பல நாடுகளில் இது பரவியுள்ளது. இந்த நோயாளிகளுக்கு வுகானிலுள்ள தெற்கு சீனா கடல் உணவு மொத்த விற்பனை அங்காடியுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“04.04.2020 பிபிசி வெளியிட்ட செய்தியில், “2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவி விட்டது” என்று செய்தி வெளியிட்டது. அந்த நிலையிலும் சரியான செயல்பாடுகளை இந்தியா முன்னெடுக்கவில்லை. வைரஸ் அச்சுறுத்தலை அறிந்தவுடன், தொற்று ரஷ்யாவுக்குப் பரவி விடாத வகையில், சீனாவுடனான எல்லையை உடனடியாக ரஷ்யா மூடியது. ( மாலைமலர், 30 ஜனவரி 2020). சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட 17 நாடுகளில் வைரஸின் தாக்கம் உணரப்பட்ட போது, பிரிட்டன், அமெரிக்க விமான சேவையை மட்டுமே இந்திய அரசு நிறுத்தியது. அதேநேரம் ரஷ்யா எல்லையை மூடியது.

அரசியல் மற்றும்
இந்து சமய மாநாடுகள்
கேள்விக்கு அப்பாற்பட்டவையா:

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸால் உருவாக்கப்பட்ட COVID- 19 என்ற நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டிலிருந்து பல்லாயிரம் பேர் பங்கேற்ற ஈஷா யோகா மஹா சிவராத்திரி நிகழ்ச்சி பிப்ரவரி 21ஆம் நாள் கோயம்புத்தூரில் நடத்தப்பட்டது. இதை இந்திய அரசு தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிச்சாமி, இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம் என்று அறிவித்தார். ஆனால், ஈஷாவில் ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு இல்லை. வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈஷா யோகா அமைப்பு கடிதம் எழுதியது. ஈஷா யோகா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். இலட்சக்கணக்கானவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், கேரளாவில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானவர்கள் பங்கேற்றார்கள். ஆனால், இப்பிரச்சனை ஈஷா யோகா தொடர்பானது என்பதால் பேசப்படவில்லை.

பாலிவுட் பாடகி கனிகா கபூர் லண்டனில் இருந்து மார்ச் 9ஆம் தேதி மும்பை திரும்பினார். அடுத்து, மார்ச் 11ஆம் தேதி லக்னோவிற்கு வந்தவர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மூன்று விருந்துகளில் பங்கேற்றார். அவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது. ஆகவே 18-ஆம் தேதி காய்ச்சலில் விழுந்தார். அவர் பங்கேற்ற விருந்தில் வசுந்தரா ராஜே சிந்தியா, துஷ்யந்த் சிங் எம்.பி, ஆகியோர் பங்கேற்றனர். துஷ்யந்த் சிங் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மார்ச் 18ஆம் தேதி சந்தித்தார். இந்த சந்திப்புகள், விருந்துகள், பங்கேற்ற பிரபலங்கள்,அதிகாரிகள், பல தலைமைகள் கணக்கில் கொள்ளப் படவில்லை.

மார்ச் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை லக்னோவில் நான்கு பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. அதில் கனிகா கபூர் ஒருவர் என்று பிபிசி 21ஆம் தேதி செய்தி வெளியிட்டது. மார்ச்சு மாதம் வெளிநாட்டிலிருந்து வந்த கனிகா கபூருக்கு விமான நிலையத்தில் ஏன் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை? இதுபோல வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கெல்லாம் எவ்வித பரிசோதனையும் செய்யாமல், இந்தியா முழுவதையுமே கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கிய குற்றத்தை மத்திய அரசு செய்திருக்கிறது.

தப்லீகி ஜமாஅத் மாநாடு மார்ச் 13 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், மாநாடு தொடங்கிய பிறகுதான் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. மாநாடு பற்றி முன்னமே தெரிந்திருந்தும் டில்லி அரசு அதற்கு தடை விதிக்காமல் இருந்தது அரசின் தவறாகும்.

இந்தியாவுக்கான இரண்டு நாள் பயணமாக (பிப்ரவரி 24- 25 ),அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவருடைய மனைவி மற்றும் மகள், மற்றும் பல அதிகாரிகளும் அமைச்சர்களும் பிப்ரவரி 24ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு வந்தனர். குஜராத் மாநிலத்தின் உள்துறையின் ஓராண்டு பட்ஜெட் ஆகிய 85 கோடி ரூபாய் டிரம்ப்பின் ஒருநாள் வருகையையொட்டி செலவிடப்பட்டது. ஒரு இலட்சம் பேர் கலந்து கொள்ளக் கூடிய “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் பிறகு டெல்லிக்கும், ஆக்ராவுக்கும் டிரம்ப் குடும்பமும், அமெரிக்க அதிகாரிகள் கூட்டமும் வருகை தந்தது.

அமெரிக்காவில் 2020 ஜனவரி 21ஆம் தேதி கொரோனா பாதிப்பு முதன்முதலாக உறுதி செய்யப்பட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி கொரோனாவால் முதல் இறப்பு நிகழ்ந்தது. ஜனவரி 31 அன்று சீனாவிற்கு சென்ற எவரும் அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்று அமெரிக்கா தடை விதித்தது. ஆகவே சனவரி மாதம் முதலே அமெரிக்காவில் வைரஸ் பரவி இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

. இந்நிலையில், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டவர்களை இந்தியாவிற்கு அழைத்து குஜராத்தில் பெரிய ஒரு இலட்சம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சி நடத்திய நிலையில், இன்று குஜராத்தில் வைரஸ் பெருமளவில் பரவி பாதித்திருக்கிறது. இதற்கு யார் காரணம்?

குஜராத்தில், ஐந்து பகுதிகள் “கொரோனா ஹாட்ஸ்பாட் ” என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன. டிரம்ப் நிகழ்ச்சியை இந்திய அரசு தவிர்த்திருக்கலாம்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் அடங்கிய சர்வதேச ஒருநாள் தொடர் தர்மசாலாவில் 12 -3 -2020 அன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் 10 ஆம் தேதியிலிருந்து தீவிர வலைப் பயிற்சி நடத்தப்பட்டது. அதிக அளவு ரசிகர்கள் கூட்டம் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் இப்பயிற்சி நடைபெற்றது.

தென்ஆப்பிரிக்க வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபடவில்லை. பாதிப்புக்கு பயந்து, தென்ஆப்பிரிக்க அணியினர் கைகுலுக்க திட்டவட்டமாக மறுத்து விட்டனர். மைதானத்தை ஒட்டி எச்சரிக்கை போர்டுகளும் கூட வைக்கப்பட்டன. வைரஸ் பாதிப்பு பற்றி பலர் எச்சரிக்கை செய்து இருந்தும், சர்வதேசஅளவில் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் பரவி இருந்த நிலையிலும், தர்மசாலாவில் கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி நடத்த இந்திய அரசு எப்படி அனுமதித்தது?தொடர்ந்து பயிற்சியை வேடிக்கை பார்த்த ரசிகர்கள் கூட்டத்தை எப்படி அனுமதித்தது? இவையெல்லாம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணங்கள்தான்.

தன் கடமையில் தவறிய இந்திய அரசு எந்த குற்ற உணர்வும் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில், ஏழை, எளிய, ஏதுமற்ற மக்கள் நிறைந்த இந்தியாவில், திடீரென்று ஊரடங்கு அறிவித்ததால் உண்ணுவதற்கு உணவும், அத்தியாவசிய பொருட்களுக்கு பணமும் இல்லாமல் தவிக்கக்கூடிய மக்களைக் காப்பாற்றும் பெரும் பொறுப்புகொண்ட மாநில அரசுகள் கேட்கக்கூடிய நிதி உதவியையும் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. மக்கள் கூடி நிற்கக் கூடாது; தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; தனிமனித இடைவெளி இருக்க வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்துகிறார் பிரதமர். இந்திய அரசு முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று ஊரடங்கு அறிவித்ததால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் முக்கிய நகரங்களிலெல்லாம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல், உணவு இல்லாமல், தங்க இடமில்லாமல், தடுமாறி, பெரும் கூட்டமாக பேருந்து நிலையங்களிலும், சாலைகளிலும் கூடிநின்று, வேறு வழியில்லாமல் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார்கள். இது வைரஸ் பரவலை விரைவுபடுத்தாதா? திட்டமிடப்படாத ஊரடங்கை அறிவித்த அரசு குற்றவாளியா, இல்லையா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கையில், இந்தியாவில், இந்திய அரசின் ஆதரவுடன் இஸ்லாமியர்களை எதிர்த்து உளவியல் போர் நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்த மக்கள் மனதிலும் இஸ்லாமிய வெறுப்பை விதைத்து, இந்த மண்ணில் வாழவே அவர்கள் அச்சப்படும் சூழலை உருவாக்கி, இஸ்லாமியர் எண்ணிக்கையைக் குறைத்து, அவர்களை இந்துத்துவத்தை ஏற்கச்செய்து, எதிர்காலத்தில் பிற மதத்தவர்கள் இல்லாத, இந்து தர்மத்தை ஏற்றிப் போற்றி அனைத்து சாதிகளும் அடங்கி வாழ்கிற, ஓர் இந்துராஷ்டிரத்தை படைத்துவிட வேண்டும் என்ற முனைப்போடு, இந்துத்துவவாதிகள், ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார அமைப்புகள், இப்பேரிடர் காலத்திலும் தங்கள் இலக்கை கைவிடாமல், திட்டமிட்டப்படியே முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு மிக அபாயகர பேரிடர் காலத்தில் ஒர் அரசு மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றத் தவறியிருந்தாலும், தங்கள் அமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த இந்துராஷ்டிர இலக்கை நிறைவேற்ற தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது. மற்றவர்களுக்கெல்லாம் கொரோனா வைரஸ் ஓர் அபாயம்! இந்துத்துவ, இந்து ராஷ்டிரக்காரர்களுக்கு அதுவே ஒரு வரப்பிரசாதம்!

பேராசிரியர் த. செயராமன்,
வரலாற்றுத் துறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here