கருத்து என்கிற ஆயுதம்

காந்தியால் வழிநடத்தப்பட்ட காங்கிரசும் மவுண்ட்பேட்டன் பிரபுவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஆங்கிலேய காலனி ஆதிக்கமும் தங்களுக்குள் செய்து கொண்ட சுதந்திர உடன்படிக்கையின்படி ஆகஸ்டு- 15 சுதந்திரதினமாக பிரகடனப்படுத்தப்பட்டதில், சுதந்திரக் கனவை நனவாக்க களம் கண்டவர்களின் இச்சையும் அனுபவித்த இம்சையும் கண்டு கொள்ளப்படவே இல்லை என்பதோடு, குப்பை கூளம் போல் தூக்கி எறியப்பட்டது. 1947 ஆகஸ்டு 15 நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆகஸ்டு 15 அஷ்டமி என்பதால் அன்று சுதந்திரம் பெறக்கூடாது என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஏற்கனவே சுதந்திரத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சுதந்திர தினமாக கொண்டாடப்பட்ட ஜனவரி 26 என்ற நாளும் புறந்தள்ளப்பட்டது. மாறாக இரண்டாம் உலகப்போரின் போது அப்போதைய கிழக்கு ஆசிய கடற்படை கமாண்டராக இருந்த மவுண்ட் பேட்டனிடம் ஜப்பானை சேர்ந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வீரர்கள் 1945 ஆகஸ்டு- 15 ஆம் தேதி சரணடைந்ததை கொண்டாடும் விதமாக, மவுண்ட்பேட்டனுக்கு மகிழ்ச்சியான தினமான ஆகஸ்டு -15 இந்திய சுதந்திர தினமாக திணிக்கப்பட்டது.

ஆங்கிலேய ஆதிக்க வாதிகளின் அடிமை விசுவாசிகள் அச்சரம் பிசகாமல் நன்றிக்கடன் செலுத்த ஆயத்தமாயினர். வங்கப்பிரிவினை மூலம் மக்கள் எதிர்ப்பை பிரித்தாளும் சூழ்ச்சியை கொண்டு சிதைக்க முனைந்த ஆங்கிலேய ஆதிக்கவாதிகள், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை மூலம் பகை மூட்டப்பட்ட நாடுகளை உருவாக்கி தங்களை நிரந்தர நாட்டாமை ஆக்கி உள்ளம் குளிர்ந்தது.

ஆங்கிலேய ஆதிக்கவாதிகளின் அரவணைப்பில் ஆட்சிக்கலைக்கும் பயிற்சி பெற்ற அடிமை விசுவாசிகள், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்ட களத்தில் சமர்புரிந்த விவசாயிகள், தொழிலாளர்கள், ஆளப்பட்ட அனைத்து தரப்பு மக்கள் ஆகியோரால் போராட்டங்களின் வழி எழுப்பப்பட்ட கோரிக்கைகளை ஒதுக்கிவிட்டு, மக்களை ஒடுக்குதற்காக ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்ட கருப்புச் சட்டங்கள் அனைத்தையும் தமதாக தத்தெடுத்து கொண்டனர்.

1935 ன் பிரிட்டிஷ் இந்தியச்சட்டம் இந்திய அரசியல் சட்டத்தில் பெரும் பங்காக இருத்தப்பட்டது இந்த அடிப்படையில்தான்.

அதிகபட்ச உரிமையுள்ள மாநிலங்களின் ஒருங்கிணைப்பாக இந்தியாவை கட்டமைப்பதற்கு பதிலாக, ஒற்றை அரசாக இந்தியாவை உருவாக்கும் ஆதிக்க வெறியுடன் களமிறங்கியது இந்திய ஆளும் வர்க்கம். இதன் காரணமாக இந்தியா பல்வேறு தேசிய இனங்கள் வலுக்கட்டாயமாக பிணைக்கப்பட்ட நாடாகவே விளங்குகிறது.

மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட மாநில பிரிவினைகளும் ஆங்கிலேய ஆதிக்க அடியொற்றி பிரித்தாளும் சூழ்ச்சி நிறைந்ததாகவும், இந்திய அரசு தன்னை அனைத்திற்கும் மேலான நாட்டாமையாக நிலைநிறுத்திக் கொள்வதையுமே குறிக்கோளாக கொண்டிருந்தது.

இத்தகைய மக்கள் விரோத ஆதிக்க செயல்பாடுகளே சுதந்திர தினத்தை கருப்பு நாளாக பிரகடனம் செய்வதில் தொடங்கி, தனிநாடு கோரிக்கையாக வளர அவசியமான அடிப்படைகளாக அமைந்தன.

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரிக்கவொண்ணாத பகுதியாக வளர்ந்துள்ள தமிழக ஆளும் வர்க்கத்தின் தீர்மானகரமான ஒரு பிரிவு, இந்திய வளங்களின் மீதான தங்களின் பங்குக்காக சண்டை போடுவதற்கு அவசியமான அளவிற்கே ஆதிக்க எதிர்ப்பை பயன்படுத்தி கொள்கிறது. அந்த நோக்கத்திற்காக தமிழ்நாடு மக்களிடம் எழுகின்ற ஆதிக்க விழிப்புணர்வை “அணையா விளக்காக” பாதுகாத்து பத்திரப்படுத்தி கொள்கிறது. தங்களுடைய பொருந்தாத தலைமையின் மூலம் மக்களின் எதிர்ப்பு அவர்களுடைய கையை மீறி போகாமலும் பார்த்து கொள்கிறது.

மாநில கட்சிகளாக பிறப்பெடுத்துவிட்டு, மத்திய ஆட்சியில் பங்கேற்பவர்களாக அவதாரமெடுத்ததற்கு வேறென்ன காரணமும் விளக்கமும் இருக்க முடியும்.

ஆரிய திராவிட முரண்பாட்டை மையமாக கொண்டு எழுப்பப்பட்ட திராவிட அரசியல் தமிழ்நாட்டின் அரசியல் களத்திலிருந்து தேசிய ( இந்திய முழுமைக்குமான சக்தியாக தங்களை கருதி கொள்கின்ற என்ற பொருளில் மட்டும்) கட்சிகளை ஓரஞ் சாரத்திற்கு தள்ளிவிட்டது சாதனை என்றால், நாடாளுமன்ற கூட்டாளிகளாக தங்களை நீட்டித்து கொண்டது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட சாபக்கேடான சோதனைதான்.

ஆரிய மாயையின் இடத்தில் திராவிட மாயயையும், இந்தி மொழியின் இடத்தில் ஆங்கில மொழியையும், வேதங்களின் இடத்தில் திருக்குறளையும் வைத்ததன் மூலம் தமிழ்நாட்டினை அனைத்து மாயைகளிலிருந்தும் மீட்டெடுக்க தவறியதோடு, தமிழ்நாட்டின் மொழியாக அனைத்து தளங்களிலும் தமிழ்மொழியை நிலைநாட்டவும் தவறியது. பாமர மக்களிடமிருந்து மறைக்கப்பட்ட பாமர மக்களுக்கு மறுக்கப்பட்ட வேதமென்னும் மறைகளுக்கு மாற்றாக திருக்குறளை பொதுமறையாக, “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு” என்ற வள்ளுவனின் வாக்கிற்கு விரோதமாக பீற்றிக்கொண்டது.

ஆரிய மாயையும் திராவிட மாயையும் ஒருங்கே வீழ்த்தி மக்களை உண்மையான சுயத்தோடு தட்டி எழுப்ப வேண்டிய இடதுசாரி முற்போக்கு இயக்கங்கள் தங்களுக்கிடையில் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் அடிப்படையிலான விரிந்து பரந்த ஒற்றுமையை கட்டியெழுப்ப தவறியதால், இந்த அல்லது அந்த அணியில் (ஆளும் வர்க்கத்தின்) கூட்டாளிகளாகவே ஜீவிக்கும் பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளன. நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல் கூட்டணிகளுக்கு வெளியே தனிக்குடித்தனம் நடத்துபவைகளும் உண்டு.

சமூகத்தின் நேரிய வளர்ச்சிக்கு தடையாக உள்ள அனைத்து தடைகளையும் தகர்த்து சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை தங்களின் கனவாகவும் இலட்சியமாகவும் கொண்டுள்ள ஒவ்வொரு பிரிவினரும், ஆளுவோருக்கு எதிராக ஓர் அணியில் அணிதிரள தடைகற்களாக உள்ள பழைமையின் பிடியிலிருந்து கடந்த காலத்தின் தளைகளில் இருந்து தங்களை விடுவித்து கொள்வது அவசியமான முன்நிபந்தனையாக உள்ளது.

சமூகத்தின் அடித்தள மக்களின் பரிபூரண விடுதலையை சாத்தியமாக்க – சாத்தியமாக்க விரும்பாத ஆதிக்க சக்திகளின் கைகளில் இந்திய அதிகாரம் விடுதலையின் பெயரில் கைமாற்றப்பட்டது எந்த வகையிலும் மக்களுக்கான விடுதலை ஆகாது என “சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக” கருதிய சமூக சீர்த்திருத்தவாதி பெரியாரின் ஆற்றாமையும், மேலைநாடுகளின் சனநாயக சட்ட வரையறைகளை கொண்டிருப்பதால் மட்டுமே ஒருநாடு சனநாயக நாடாக ஆகிவிட முடியாது. அந்நாட்டில் சமூகம் – சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் தளங்களும் சனநாயகத்தன்மை கொண்டதாக மாறவேண்டியது அவசியமான முன்நிபந்தனை என போதித்த அம்பேத்கரின் அறவுரையும் நாளது தேதி வரை நனவாகவில்லை.

வர்த்தக சுதந்திரத்தையும், லாபவேட்டை சுதந்திரத்தையும், வளங்களை சூரையாடும் சுதந்திரத்தையும், யுத்தங்களின் பேரால் மனித உயிர்களை பலிகொள்ளும் சுதந்திரத்தையும் கொண்ட வளமையான மேற்கத்திய சட்டமுலாம் பூசப்பட்ட சனநாயகத்திற்கு மாற்றாக, உழைக்கும் மக்களுக்கான வாழ்க்கை ஊதியத்தை உறுதி செய்வதை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு சனநாயகக் கட்டமைப்பை கட்டியெழுப்புவது தலையாய கடமையாக உள்ளது.

இக்கடமையை நிறைவேற்றும் வகையில், பேசப்படாத – பேச மறுக்கப்படும் நம்முடைய மூதாதையர்களின் இலட்சியக் கனவுகளை நனவாக்கும் நோக்கில், நம்முன்னுள்ள அனைத்து தளைகளையும் அறுத்தெறிவதற்கான ஆக்கபூர்வ திட்டங்களை, கருத்தாயுதமாக வடித்தெடுப்பது அவசியமாகிறது. கருத்து பரந்துபட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் பொழுது, தவிர்க்கவொண்ணாத பொருளியல் சக்தியாக மாறும் என்பதில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது.

அந்த வகையில் கருத்தாயுதத்தை வடித்தெடுக்கவும் பரந்துபட்ட மக்களிடையே கொண்டு சேர்க்கவும் மக்களோடு ஒன்றிணைந்து புதிய சமூகத்தை படைத்திடவும் நமது வரலாற்று கடமையினை நிறைவு செய்யவும் நாம் அனைவரும் தயாராக வேண்டும்.

தமிழ்நாடு தேசிய கட்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here