கட்டலோனியாவின் அறிவிப்பும் ஸ்பெயினின் எதிர்வினையும்….

ஸ்பெயினைப் பொருத்தவரை தனி நாட்டுக்கான  வாக்கெடுப்பையே அது அரசியல் சட்டத்துக்கு  விரோதமானது என தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே அறிவித்துவிட்டது. வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என அறிவித்ததுடன் இவ்வாககெடுப்பை  ஒழுங்கு செய்பவர்கள் , வாக்குப் பத்திரங்களை அச்சடிப்பவர்கள் , வாக்குச் சாவடிகளாக தமது இடங்களை  அறிவித்துக் கொள்பவர்கள் என அனைவர் மீதும் கடும் சட்டம் பாயும் என எச்சரித்தது. அதையும் மீறி தேர்தல் நடந்த போது தேர்தல் சாவடிகளைக் கைப்பற்றியும் , கட்டலோனியா மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் கோரத்தாண்டவமாடியது இதையும் மீறி 43 விழுக்காடு மக்கள் கலந்து கொண்டு 92 விழுக்காடு மக்கள் கட்டலோனிய விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
வாக்கெடுப்பையும் சுதந்திரத்திற்கான பிரகடனத்தையும் ஸ்பெயின் அரசாங்கம் சட்டவிரோதமாகத் கருதி நடவடிக்கையில் இறங்கியுள்ளனது.
கட்டலோனிய விடுதலைப் பிரகடனத்தை அறிவித்த  அடுத்த நாளே கட்ட லோனியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் அறிவித்துள்ளார் மேலும் திசம்பர் – 21 தேதி கட்டலோனியாவிற்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் . கட்டலோனியாவில் பதவி வகித்த காவல்துறை உயரதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .
கட்டலோனிய வாக்கெடுப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது . கட்டலோனிய பிரதமர் கார்லஸ் ப்யூஸ்மண்ட் மீதும் தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளது . அவர் ஸ்பெயினிலிருந்து வெளியேறியுள்ளார் பெல்ஜியம் நாட்டில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளார். மேலும் , பலர் கடுமையான ஒடுக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
Related image
கட்டலோனியா மீது இராணுவ ஆட்சி நடத்துவதற்குரிய அதிகாரத்தை ஸ்பெயின் நாடாளுமன்றம் அந்நாட்டின் பிரதமர் மரியானோ ரஜாய்க்கு வழங்கியுள்ளது. எனவே , கடும் தாக்குதலை கட்டலோனியா மீது நடத்துவதற்கு ஸ்பெயின் அணியமாகிக் கொண்டிருப்பதாகவே நமக்குத் தெரிகிறது. ஏற்கனவே பாஸ்க் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இப்படித்தான் தடுத்து நிறுத்தியது .இது குறித்து பின்னர் பார்க்கலாம் .
கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்கவில்லை.
கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை இலங்கை முந்திக் கொண்டு நிராகரித்துள்ளது. ஈழ விடுதலையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த இலங்கையிடம் இது எதிர்பார்த்ததுதான்.
கட்டலோனிய நெருக்கடியை ஸ்பெயினும்  கட்டலோனிய அதிகாரிகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்பெயினுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் என்று கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதையே மெக்சிகோவும் வலியுறுத்தியுள்ளது .
கட்டலோனியா விவகாரத்தில் ஸ்பெயின் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோஸ் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கிற இந்தியாவின் கருத்து என்ன தெரியுமா?
    அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள்ளாகவும் , தேசிய ஒருமைப்பாட்டிற்கான  மரியாதையிடனும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்  கொள்ள வேண்டும் என்று நமது மாண்புமிகு வெளிவிவகார அமைச்சர் இரவீஸ் குமார் அறிவுரை வழங்கியுள்ளார் .
 இவர்களிடமிருந்து இதைத் தவிர வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும் .
எந்தவொரு தேச விடுதலைப் போரட்டத்தையும் தனக்கு சாதக அம்சங்களிலிருந்து தான் வல்லரசு நாடுகள் அணுகும் என்பது யதார்த்த நிலைமை அப்படி , கட்டலோனியாவா ? ஸ்பெயினா ? என்றால் வல்லரசு நாடுகளின் தற்போதைய நண்பன் ஸ்பெயின் தான் இப்படியான நிலைமையில் கட்டலோனியா என்னவாகும்?
கட்டலோனியாவும் தேசியமும்
Image result for catalonia
            வரலாற்றில் முதலாளித்துவம் தேசியத்தில் இரண்டு போக்குகளைக் கொண்டிருக்கும் என்று புரட்சியாளர் லெனின் நமக்கு வரையறை வழங்கியுள்ளார்.
ஒன்று , முதலாளித்துவத்தின் தொடக்க காலம் தேசிய இயக்கத்தை வலுப்படுத்தும் ,தேச நலனை முன்னிறுத்தும,
இரண்டாவது , முதலாளித்துவத்தின் இறுதி காலம் அதாவது , ஏகாதிபத்திய காலம் தேச நலனுக்கு விரோதமாக இருக்கும் , தேச எல்லைகளை உடைத்துக் கொண்டு சர்வதேசத்தையே எல்லையாக கொண்டிருக்கும்.
தேச நலனை முன்னிறுத்தும் போதும் , தேச எல்லைகளை உடைக்கும் போதும் முதலாளித்துவம் தனது  “சந்தைக்காகவே “அதனை செய்யும் .
          தற்போதைய காலகட்டம் தேச எல்லைகளை உடைத்துக் கொண்டு முதலாளித்துவம் தனது சந்தை தேவைக்காக சர்வதேச அளவில் விரிவடைந்து கொண்டிருக்கிறது .இப்படியான நிலையில் பாட்டாளி வர்க்கத்திற்கு இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளது .
ஒன்று , முதலாளித்துவம் செல்லுகின்ற அதே பாதையில் சென்று அதாவது சர்வதேச அளவில் தனது சுரண்டலைத் தீவிரப்படுத்திக் கொண்டிருப்பது போல் , பாட்டாளி வர்க்கமும் சர்வதேசிய அளவில் ஒன்றிணைந்து போராடுவது .
           மற்றொன்று முதலாளித்துவம் செல்லுகின்ற பாதைக்கு நேர் எதிராகச் சென்று சர்வதேச வலைப் பின்னலை உடைப்பது . அதாவது எந்த தேச எல்லைகளை உடைத்துக் கொண்டு பரந்துபட்ட சுரண்டலை முதலாளித்துவம் நடத்திக் கொண்டிருக்கிறதோ அந்த தேச எல்லைக்குள் நின்று முதலாளித்துவத்தின் வலைப்பின்னலை அறுத்தெறிவது அதாவது பரந்துபட்ட அரச எல்லையிலிருந்து தேச விடுதலையை வென்றெடுப்பது .
வரலாறு நமக்கு அளித்த இந்த இரண்டு வாய்ப்புகளில் கட்டலோனியா இரண்டாவது வாய்ப்பை பற்றிக் கொண்டு நிற்கிறது .அது தான் அதன் பலம். அதே நேரத்தில் அதன் பலவீனம் பாட்டாளி வர்க்கத் தலைமையில் ஒருங்கிணையாதது தான் .
          கட்டலோனியாவின் தேச விடுதலைக்கு முன் நிற்க கூடிய கட்சிகள் முதலாளித்துவக் கட்சிகள் தான் . அதன் பின் அணிவகுத்து நிற்பவர்களில் பெரும்பாலானோர்கள் நடுத்தர வர்க்கத்தினர் தான் .ஸ்பெயின் அரசாங்கத்தின் அரசு இயந்திரத்தை எதிர் கொள்கிற எந்த திட்டமும் இல்லாமல் தான் அவர்கள் வாக்கெடுப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள் . சட்ட ரீதியாக இந்தப் “பிரிவினை” சாத்தியமில்லை என்று தெரிந்து தான் இந்த வாக்கெடுப்பை நடத்தியுள்ளார்கள் .
        ஒருங்கிணைந்த சோவியத் ருசியாவில் (VSSR) எல்லா தேசிய இனங்களுக்கும் வழங்கப்பட்டிருந்த “சுய நிர்ணய உரிமை” அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டிருந்ததை போல் , ஸ்பெயின் அரசியல் சட்டத்தில் அப்படி வழங்கப்பட்டிருக்கவில்லை .
       கட்டலோனியாவுக்கு தனி கொடி , தனி முத்திரை , தனி நாடாளுமன்றம் வழங்கப்பட்டிருந்தலும் அங்கு அவர்கள் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தி விட முடியாது .தமிழக சட்டமன்றம் எப்படி பெயரளவுக்கு இயங்குகிறதோ அதை விட சற்று கூடுதலாக அதிகாரங்களோடு இயங்குகிறதே தவிர தனித்த அதிகாரம் கொண்டிருக்கவில்லை .
எ.காட்டாக காசுமீர் சட்டமன்றத்தைச் சொல்லலாம் .காசுமீருக்கு தனி கொடி ,தனி முத்திரை ….., என 370 சட்ட பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படிருக்கிறதோ அப்படி ஒரு அந்தஸ்து தான் ” கட்டலோனியாவுக்கும் ” வழங்கப்பட்டிருக்கிறது .
         காசுமீரின் சட்டமன்றம் (உண்மையில் அது நாடாளுமன்றம் தான்) சட்டம் இயற்றிக் கொண்டாலும் மைய அரசின் (நாடாளுமன்றம் , குடியரசுத் தலைவர்) ஒப்புதலைப் பெற்ற பின்புதான் அந்த சட்டத்தை காசுமீரில் நடை முறைப்படுத்திக் கொள்ள முடியும் .அப்படி , கட்டலோனியாவும் தனது நாடாளுமன்றத்தில் எந்த சட்டத்தை இயற்றிக் கொண்டாலும் மைய அரசின் (மாட்ரின்/ஸ்பெயின் அரசு ) ஒப்புதலோடு தான் நடைமுறைப்படுத்த முடியும் .
      இப்படியிருக்கையில் கட்டலோனிய நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள “சுதந்திர பிரகடணம் “சட்ட ரீதியாக செல்லாது .ஒரு தேச விடுதலையை “சட்ட ரீதியாக ” மட்டுமே எதிர்பார்க்க முடியாது , சட்ட ரீதியான “வாய்ப்புகளை ” மட்டுமே தேடிக் கொண்டிருக்க முடியாது தான் .
இந்த இடத்தில் தான் கட்டலோனியா அரசாங்கமும் சரி , கட்டலோனியாவை ஆண்டு கொண்டிருக்கிற கட்சியும் சரி , சட்டத்திற்கு பட்ட”தேச விடுதலையை ” மட்டுமே எதிர்பார்த்து காய் நகர்த்தி கொண்டிருந்தனர் .
அதை விட பொது வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்பதை விட கட்டலோனியாவிற்கு கூடுதல் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதைத் தான் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர் .அதில் ஸ்பெயின் அரசாங்கம் மண்னை அள்ளிப் போட்டுவிட்டதால் ராஜதந்திர ரீதியாக கட்டலோனிய ” விடுதலையை “பிரகடணப்படுத்த வேண்டியதாயிற்று .
 எவ்வித முன் தயாரிப்பும் இல்லாமலே தான் இந்த விடுதலைப் பிரகடனம் நடந்து விட்டது. எல்லா வித முன் தயாரிப்புகளோடு அரசியல் திட்டத்தோடு ஆயுதப்படை கட்டி ஸ்பெயினிலிருந்து விடுதலை வேண்டி போராடிய “பாஸ்க் மக்களின் ” விடுதலைப் போராட்டத்தையே ஸ்பெயின் அரசாங்கம் முடக்கிப் போட்டுள்ளது.
மார்க்சியப் புரிதல் கொண்ட பாஸ்க் விடுதலை இயக்கம் ஸ்பெயினுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆயுதப் போராட்டத்தை தற்காலிகமாக  நிறுத்தி வைத்துள்ளது.
 பாஸ்க் இன விடுதலை இயக்கம் சந்தித்த நெருக்கடிகளை கட்டலோனிய போராட்டக்காரர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் . பாக்ஸ் இன மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி சில குறிப்பான விசயங்களை நாமும் தெரிந்து கொண்டு மீண்டும் கட்டலோனியாவுக்கு வருவோம் .
பாஸ்க் விடுதலைப் போராட்டம்
Image result for basque liberation group eta
கட்டலோனியாவின் விடுதலைப் பிரகடனத்தை அங்கீகரிப்பதில் ஸ்பெயினுக்கு இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று கட்டலோனியாவின் பொருளாதாரத்தை நம்பியே  ஸ்பெயின்உள்ளது.இரண்டாவது எந்நேரம் வேண்டுமானாலும் ஸ்பெயினிலிருந்து விடுதலை கேட்க தயாராக இருக்கும் ‘ பாஸ்க்’ தேசிய இன மக்கள்.
         கட்டலோனியா எப்படி ஸ்பெயினின் பொருளாதார பலமாக இருக்கிறது என்பதை இதற்கு முந்தைய தொடர்களிலேயே பார்த்தோம்.இப்போது இரண்டாவது பெரும் தலைவலியாக இருக்கும் பாஸ்க் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் குறித்து பார்த்துவிடலாம்.அது கட்டலோனியாவுக்கும் மட்டுமின்றி உலகெங்கும் போராடுகிற தேசிய விடுதலை இயக்கங்களுக்கு உற்ற படிப்பினையாக இருக்கும்.
 ஸ்பெயினில் எப்படி கட்டலோனியா மக்கள் ஒரு மாநிலம் என்றளவில் அடிமைகளாக இருக்கிறார்களோ அதைவிட சற்று கூடுதலான அதிகாரத்தோடு பாஸ்க் இன மக்களும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்..
                     கட்டலோனியா மக்கள் தங்கள் விடுதலைக்கான போராட்டத்தை தொடக்கம் முதலே ஜனநாயக வழியில் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் பாஸ்க் மக்களோ மிகப்பெரும் ஆயுதப் போராட்டத்தை நடத்திவிட்டு தற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறிவிப்பு செய்துவிட்டு ஜனநாயக வழியில் தங்கள் கோரிக்கைக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்..
          வீரம்செறிந்த ஆயுதப்போராட்டத்தை சிங்கள அரசுக்கு எதிராக நடத்திக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்ததை நம் கண் முன்பாகவே பார்த்திருக்கிறோம். ஒரு தேசிய விடுதலை போராட்டத்தை குறிப்பாக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை வல்லரசு  நாடுகள் மொத்தமும் இணைந்து இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்ததை நாம் பார்த்திருக்கிறோம்.
ஈழ விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்ட (2009) காலகட்டத்திற்கு பிறகு தான் 2011இல் பாஸ்க் விடுதலை இயக்கம் தங்கள்ஆயுதப்போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக (cease fire) அறிவித்ததை நாம்  கவனத்தில் கொள்ளவேண்டும்.இவ்வியக்கம்  விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் சிங்கள அரசால் குண்டு வீசி கொல்லப்பட்ட போது சிங்கள அரசை கடுமையாக கண்டனம் செய்ததோடு சு.ப.தமிழ்செல்வனுக்கு வீரவணக்கம் செய்து அறிக்கை வெளியிட்ட சிறப்பைக் கொண்டது இவ்வியக்கம்..
பாஸ்க் மொழி பேசும் மக்களின் அடிமைத்தனத்திற்கு எதிராக தனிநாடு கேட்டு போராடி வந்த இந்த இயக்கத்தின் பெயர் ETA (எயுஸ்கடி தாயகத்திற்கும் விடுதலைக்குமான இயக்கம்). எயுஸ்கடி என்று தான் தங்கள் மொழியை பாஸ்க்  ம க்கள் குறிப்பிடுவர்..
        1938இல் சர்வதிகாரி பிரான்சிஸ் பிராஸ்கோ ஸ்பெயினின் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு கட்லோனியாவை எப்படி எல்லா விதத்திலும் அடிமை படுத்தினாரோ, அப்படி பாஸ்க் மொழியும் தடை செய்யப்பட்டது. எல்லா உரிமை களும் காலில் போட்டு மிதிக்கப்பட்டது. எனவே இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக PNU என்றழைக்கப்படுகிற பாஸ்க் தேசியக்கட்சி  ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுத்தது..
ஜனநாயக வழிப்போராட்டங்களில் எவ்வித  நன்மையும் சர்வதிகாரி ஆட்சியில் கிடைக்கப் போவதில்லை என்று உணர்ந்த PNU – வின் மாணவர் அமைப்பு போராளிகள் ஆயுதப் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானித்து உருவாக்கிய அமைப்பு தான் ETA.
 கட்டலோனிய விடுதலைப் போராட்டத்தை  போல் வெறும் தேசியவாதக் கண்ணோட்டம் மட்டுமில்லாமல் பாஸ்க் விடுதலைப் போராட்டம் மார்க்சிய கண்ணோட்டத்தோடும் நடத்தப்பட்டது.தொடர் தாக்குதலை ETA நடத்தத் தொடங்கி இறுதியில் சர்வதிகாரி பிரான்சிஸ் பிராஸ்கோவின்  அரசியல் வாரிசு பிளாஸ்கோவை  குண்டு வைத்து கொலை செய்து சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
    1978 இல் ஸ்பெயினில் சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வந்து  ஜனநாயக பாராளுமன்ற முறை நிறுவப்பட்டு கட்டலோனியாவுக்கு வழங்கியதைப் போலவே ‘பாஸ்க்’கும் தன்னாட்சி  அதிகாரம் வழங்கப்பட்டது… ஆனால் அந்த அதிகாரம் பெயரளவுக்கு இருந்ததே தவிர  நடைமுறையில்  ஸ்பெயினின்  மத்திய பாராளுமன்றமே அதிகாரம் கொண்டதாக இருந்தது.எனவே பல கட்டப் பேச்சு வார்த்தைப் பிறகு மீண்டும் ETA ஆயுதப் போரட்டத்தை தொடங்கியது…
   ஸ்பெயினுக்கும் ETA க்கும் கடுமையான போர் நடக்கத்  தொடங்கியது. ETA பயங்கரமான அதிர்வலைகளை உலகெங்கும் ஏற்படுத்தியது. ETA நடத்திய தாக்குதல்களால் ஸ்பெயின் மட்டுமின்றி உலகமே ETA வைத் திரும்பிப் பார்த்தது. இப்படியான வலுவான நிலையில் இருந்த ETA – 2011 இல்  ஆயுதப் போராட்டத்தை கைவிட்டது
          க.இரா. தமிழரசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here