கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த அரசு – சியாம்சுந்தர்.

மத்திய ரிசர்வ் வங்கி கொரோனா நோய்த் தொற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்கும் பொருட்டு ரெப்போ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் ஆகியவற்றினை 0.75 சதவீதம் குறைத்து அறிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து கடன்களுக்கும் வட்டி குறைவதற்கு வாய்ப்புள்ளது.

ஆனால் பெரும்பாலான நேரங்களில் ரிசர்வ் வங்கி இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் வங்கிகளும், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களும் இந்த தள்ளுபடியை முழுவதுமாக மக்களுக்கு வழங்குவதில்லை. என்றாலும் இந்த அறிவிப்பு குறைந்தபட்சம் 0.25 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 0.75 சதவீதம் வரை வட்டி வீதங்கள் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும். இந்தத் தள்ளுபடியானது கடன் வாங்கியவர்களுக்கு வட்டிச் சுமையிலிருந்து சிறிது தளர்வு ஏற்படுவதற்கு உதவி செய்யும்.

ஆனால் மத்திய அரசு இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திலேயே மற்றொரு அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி மத்திய அரசின் திட்டங்களான பொது வைப்பு நிதி, மகளிர் திருமணத்திற்கு உதவும் செல்வமகள் திட்டம் போன்றவற்றிற்கு 0.8 சதவீதம் வட்டியை குறைத்துவிட்டது. ஒரு பக்கம் கடன்களுக்கான வட்டி வீதங்களில் 0.75 சதவீதம் வரை குறைத்துவிட்டு மறுபக்கம் இது போன்ற ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் பயன்படுத்தும் சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கும் வட்டியினை அதிகமாக ( 0.8 சதவீதம்) குறைத்துள்ளது.

மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பயன்தரும் தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தையும் 8.5 சதவீதமாக குறைத்துள்ளது.

மேலும் பொதுமக்கள் அதிகம் சேமிக்கும் பொது வைப்பு நிதிக்கான வட்டியை 0.8 சதவீதம் குறைத்துள்ளது. இப்பொழுது வழங்கப்படும் பொது வைப்பு நிதிக்கான வட்டிவீதம் ஆனது 43 ஆண்டுகளில் வழங்கப்பட்டதில் குறைவான வட்டி விகிதம் ஆகும்.

இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை செல்வமகள் திட்டத்தின் மூலம் நாம் பார்க்கலாம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா ( செல்வமகள் திட்டம்) என்பது மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறந்த திட்டமாகும்.
இத்திட்டத்தில் குழந்தை பிறந்ததிலிருந்து அக்குழந்தையின் பத்து வயதிற்குள் வருடத்திற்கு அதிகபட்சமாக ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.

இத்திட்டத்தின் முதிர்வு காலம் 14 வருடங்கள் ஆகும்.

ஒரு பெண்ணின் திருமண வயதான 21ஆவது வயதில் இத்திட்டம் முதிர்வடையும்.

இத்திட்டத்தில் சேர்க்கும் பணம் பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு உதவும் என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டம் தொடங்கும் பொழுது இதன் வட்டி வீதம் 9.1 சதவீதமாக இருந்தது. இந்த வட்டி வீதத்தின் படி இதில் சேமிக்கும் பணம் 92 மாதங்களில் இரட்டிப்பாகும்.

இத்திட்டத்தின் வட்டி வீதத்தினை படிப்படியாக குறைத்து, இப்பொழுது அதிகபட்சமாக 0.8 சதவீதம் குறைத்து, இப்பொழுது 7.6 சதவீதமாக குறைத்துள்ளது.

அதனால் இத்திட்டத்தில் இப்பொழுது முதலீடு செய்யும் பணம் 92 மாதத்திற்கு பதிலாக 118 மாதங்களில் இரட்டிப்பாகும்.

இந்த குறைக்கப்பட்ட வட்டி வீதத்தால் பணவீக்கத்தை சேர்த்து கணக்கிடும் போது இந்த்த் திட்டம் பெரிய பலன்களை கொடுத்துவிட முடியாது.

செல்வமகள் போன்ற திட்டங்களில் பெருவாரியாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களே முதலீடு செய்வார்கள். அரசும் இந்த்த் திட்டத்தினை கொண்டு வரும் பொழுது மிக அதிகமான வட்டி வீதங்களை கொண்ட திட்டமாக அறிமுகம் செய்தது. ஆனால் தொடர்ந்து இத்திட்டங்களில் வட்டியைக் குறைத்து வருவது இத்திட்டத்தின் நோக்கத்தை சிதைந்து போக செய்யும்.

பேரிடர் காலங்களில் தொழில்துறை நசிந்து போகாமல் இருப்பதற்கு வட்டி வீதங்களை குறைப்பது எல்லா நாட்டிலும் உள்ள நடைமுறை தான். ஆனால் அதற்காக ஏழை மக்களின் சேமிப்பு கனவினை சிதைப்பது ஏற்புடையது அல்ல.

பெருவாரியான மக்கள் கந்து வட்டி வாங்கி குடும்பம் நடத்தினாலும் தங்கள் குழந்தைகளின் திருமண வாழ்க்கைக்கு உதவும் என்ற நோக்கில் நீண்ட காலத்திற்கு செல்வமகள் போன்ற திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் வட்டியினை பிடுங்கி தொழில்துறைக்கு கொடுப்பது கடையில் உள்ள தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போன்றதாகும்.

இந்தப் பேரிடருக்கு நிதி திரட்டுவதற்கு பெருமுதலாளிகளிடமும், பெரு நிறுவனங்களிலும் அதிக வரி பெறலாம் என்ற நிதிநிபுணர்களின் வழிகாட்டுதல்களை அரசு பின்பற்றலாம்.

அதனால் அரசு ஏழை மக்களின் சிறுசேமிப்புகளை தொடர்ந்து குறைப்பதை நிறுத்தி அந்த ஏழை மக்களுக்கு உதவ வேண்டும். அதுதான் தமது வாக்குகளை வழங்கி இந்த அரசை தேர்ந்தெடுக்க செய்த பெருவாரியான ஏழை மக்களுக்கு அரசு செய்யும் கைம்மாறு ஆகும்

  • சியாம் சுந்தர்