ஓகி புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – பழ.நெடுமாறன்

ஓகி புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் - பழ.நெடுமாறன்
ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பேரிடருக்கு உள்ளான மாவட்டங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,”தூத்துக்குடி, குமரி, நாகை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஓகி புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மாயமானவர்களின் எண்ணிக்கைக் குறித்து மீனவர்களின் பிரதிநிதிகள் கூறும் எண்ணிக்கைக்கும், அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் எண்ணிக்கைக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது.

ஏற்கெனவே மீன்பிடித் தொழிலுக்காக கேரளம் சென்ற தமிழக மீனவர்களின் சரியான எண்ணிக்கையும் தெரியவில்லை. பலர் மகாராஷ்டிரம், குசராத், இலட்சத்தீவுகள் போன்றவற்றில் கரையேறியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அவர்களைப் பத்திரமாக தமிழகம் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

எனவே, கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கணக்கு விரைவாக எடுக்கப்பட வேண்டும். புயலில் சிக்கிய மீனவர்களை தேடும் பணி தொடரவேண்டும்.

இறந்துபோன மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவி நிதி வழங்குவது விரைவுபடுத்தப்பட வேண்டும்.

இரப்பர், தென்னைத் தோட்ட விவசாயிகள் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கும் உதவுவதற்கு அரசு முன்வரவேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பேரிடருக்கு உள்ளான மாவட்டங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என வற்புறுத்துகிறேன்.”என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here