ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு – அஸ்வினி கலைச்செல்வன்.

“ஏற்கெனவே ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே வரி, ஒரே தேர்தல், ஒரே கல்வி என்று சொல்லி வரும் பிரதமர் மோடி, இப்போது ஒரே குடும்ப அட்டை என்றும் சொல்கிறார்.

ஏன் இந்த ஒரே… ஒரே…?எல்லா வகையிலும் ஏற்றத் தாழ்வு நிலவும் இந்த சமூகம், மாறாமல் அப்படியே தொடர வேண்டும் என்ற சிந்தனை தான்; மாநிலங்களை வெறும் நிர்வாக அலகுகளாக மாற்றி, மத்தியிலேயே அதிகாரம் அனைத்தையும் குவித்துக்கொள்ளும் பாசிச உத்திக்கான மறைமுக பூச்சுகள்தான்.

2016 நவம்பரில் வந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்தான் நாடு முழுவதும் இந்த ஒரே குடும்ப அட்டை (Smart card)திட்டத்தைக் கொண்டு வருவதாகச் சொல்லும் மோடி அரசு, மாநிலங்கள் இதை ஓராண்டுக்குள் அமல்படுத்த வேண்டும் எனக் கெடு விதித்திருக்கிறது.

இந்தக் குடும்ப அட்டைக்கு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பொருள் வாங்கிக் கொள்ளலாம் என்கிறார்,மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்.இதனால் இடம் பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என்று அரசு கூறுகிறது.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் , உணவு வினியோகத்துறை செயலாளர்கள் மற்றும் மாநில அரசுகளின் பிற அதிகாரிகள், இந்திய உணவுக் கூட்டுக் கழகம் (எஃப்.சி.ஐ), மத்திய கிட்டங்கிக் கழகம் (சி.டபிள்யூ.சி) மற்றும் மாநில கிட்டங்கிக் கழகங்கள் (எஸ்.டபிள்யூ.சி) அதிகாரிகளுடன் இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.

பாயிண்ட் ஆஃப் சேஸ் இயந்திரங்கள்:
இந்த திட்டத்தின் முன்னேற்பாடுகளை, ஒரு வருடத்தில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும்,திட்டத்தை செயல்படுத்த அனைத்து பொது வினியோக கடைகளிலும் பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, ஹரியானா போன்ற சில மாநிலங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த இயந்திரங்கள் ஏற்கனவே உள்ளன. ஆனால் நாடு முழுவதும் இத்திட்டத்தை கொண்டு சேர்க்க, 100 சதவீதம் எல்லா ரேஷன் கடைகளிலும் பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரங்கள் தேவை. இந்த திட்டம் பயனாளிகளுக்கு பொருள் வாங்கும் சுதந்திரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஏனெனில் அவர்கள் ஒரு ரேஷன் கடையுடன் மட்டுமே பிணைக்கப்பட மாட்டார்கள், ஊழலைக் குறைக்கும் திட்டம் இதுவாகும். இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் மிக உதவியாக இருக்குமெனவும் பாஸ்வான் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டமானது ,தமிழகத்திற்கு நாள்தோறும் படையெடுக்கும் வடமாநிலத்தவர்களைக் கணக்கில் கொண்டதே என்பதை சிந்திக்க வேண்டும்.
வட மாநிலத்தவர் வருகையை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் இருக்க,இங்குள்ள மத்திய, மாநில வேலைவாய்ப்புகளை பிற மாநிலத்தவர்களுக்கல்லாமல் தமிழர்களுக்கே முறையே 95 மற்றும் 100 விழுக்காடு அளிக்க வேண்டும் என்கிறதான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்க,அதற்கு நேர் மாறாக வடமாநிலத்தவரைத் தமிழகத்தில் குவிக்கவும், அவர்களுக்கு குடும்ப அட்டை உள்பட அனைத்து வசதிகளை ஏற்படுத்தவும் வகை செய்கிறது மோடி அரசு.மாநில உரிமையைப் பறித்து, கூட்டாட்சி முறையினை அழித்து, ஜனநாயகத்தையே குழி தோண்டிப் புதைக்கும் மோடியின் ஒரே நாடு ஒரே திட்டங்கள் முழுவதும் சர்வாதிகார பாசிச ஆட்சிக்கான உத்திகள்.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவை. பொது விநியோக முறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம், இந்தியா முழுவதும் உணவுப் பழக்க வழக்கங்களையும் ஒரே முறையில் மாற்ற வேண்டும் என்கிற பா.ஜ.க. அரசின் உள்நோக்கம் நாட்டில் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும். மாறுப்பட்ட தட்பவெப்ப சூழலில் வாழும் மக்களையும், வெவ்வேறான கலாச்சாரங்களையும் கொண்ட ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த திட்டமானது உணவு பழக்கவழக்கங்களை மாற்றி அமைப்பதோடு சீதோசன நிலையின் மாற்றங்களுக்கு உடன்படாத உணவுகளால் உடல்உபாதைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளையும் தோற்றுவிக்கும். அது சமயம்பொது விநியோகத் திட்டத்தில் அந்தந்த மாநில மக்களுக்கே பொருட்களை சரியாக விநியோகிக்க முடியாதபோது, எப்படி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விநியோகிப்பார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.எனவே, மத்திய அரசு ‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ திட்டத்தைக் கைவிட வேண்டும்.

ரேஷன் கார்டு மரணங்கள்:

பீகாரிலிருந்து 2000-வது ஆண்டில் உருவாக்கப்பட்ட மாநிலம் ஜார்க்கண்ட். தற்போது பாஜக-வின் ரகுபர்தாஸ் முதல்வராக இருக்கிறார். மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து 2006-ம் ஆண்டுவரையிலும்,2010-லிருந்து 2013 வரையிலும்,2014-லில் இருந்து தற்போது வரையிலும் பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. நடுநடுவே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் இருந்திருக்கிறது.

பொது விநியோகத் திட்டத்தை டிஜிட்டல்மயமாக்கும் சோதனை தற்போது இந்த மாநிலத்தில் நடந்துவருகிறது. இதில் உள்ள குளறுபடிகள் காரணமாக, உணவு தானியம் கிடைக்காமல் பட்டினியால் 2017 செப்டம்பரிலிருந்து 2019 ஜூன் வரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். கடைசியாகச் செத்தவர் லடேஹர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திர முண்டா. இவர் கிராமத்திற்கு பல மாதங்களாக ரேஷன் பொருட்களே வரவில்லை.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களை வாங்க பல விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலில் ரேஷன் கார்டு இருக்க வேண்டும். பிறகு ஆதார் அட்டை இருக்க வேண்டும். அதற்குப் பிறகு இரண்டையும் இணைக்க வேண்டும். இங்கிருக்கும் ரேஷன் கடைகளில் பாய்ண்ட் ஆஃப் சேல் மிஷின் மூலம்தான் விற்பனை நடக்கிறது. அது இயங்க இன்டர்நெட் வேண்டும். இதெல்லாம் சரியாக இருந்தால்தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.

சில இடங்களில் ரேஷன் கடைகளுக்குப் பொருட்கள் வந்துவிடும். ஆனால், இன்டர்நெட் இல்லாததால் பொருட்களை பயனாளிகளுக்கு விநியோகிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு நடுவில் அதிகாரிகள் இடும் பல உத்தரவுகள், நிலைமையை மோசமாக்கியிருக்கின்றன. 2017-ல் தலைமைச் செயலராக இருந்த ராஜ்பாலா வர்மா, ஆதாருடன் இணைக்காத ரேஷன் கார்டுகளை ரத்துசெய்ய உத்தரவிட்டார். இது மிகப் பெரிய அளவில் பயனாளிகளை பொதுவிநியோகப் பட்டியலில் இருந்து நீக்கியது. இதைவிட இன்னொரு கொடுமை நடந்தது. சத்தர்பூரில் இருந்த துணை வட்டாட்சியர் ஒரு உத்தரவை வெளியிட்டார். அதன்படி ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கழிப்பறையைப் பயன்படுத்தாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, பயனாளிகளுக்கு நேரடியாக பணம் வழங்கும் முறை பரிசோதிக்கப்பட்டது. ஆனால், வங்கிக் கணக்கில் வந்து விழும் பணத்தை வந்து எடுக்க ஒரு நாளும் பொருட்களை வாங்க ஒரு நாளும் ஆனதால், கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து இந்தத் திட்டம் இப்போதைக்கு கைவிடப்பட்டது.

இந்த மாநிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மோசமாக செயல்படுத்தப்படுவது நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது.
இதுவரை பட்டினியால் இறந்துபோன 20 பேரில் 11 பேர் ஆதிவாசிகள்,4 பேர் தலித்துகள்,11 பேர் பெண்கள்,13 பேர் ஆதார் கணக்கை ரேஷன் கார்டுடன் இணைக்க முடியாததால் இறந்துபோனவர்கள்.(web source)

இப்படியிருக்க, தமிழகத்தில் மட்டுமே, நான்கு உறுப்பினர் உள்ள குடும்பத்திற்கு, மாதம், 20 கிலோ இலவச அரிசியும்; அதற்கு மேல் உள்ள, ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, ஐந்து கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.பிற மாநிலத்தவர்கள், தமிழகத்திற்கு வந்தால், அந்த சலுகைகளை பெறக்கூடும் என்பதால், தமிழக அரசுக்கு, கூடுதல் செலவு ஏற்படும். இதனால் தான், எந்த கடையிலும், பொருட்கள் வாங்கும் திட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது.மத்திய அரசு, ஓராண்டிற்குள், நாடு முழுவதும், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அன்றாடம் உழைத்துச் சாப்பிடுகிற மக்களுக்கு ரேசன் பொருட்கள்தான் வாழ்வாதாரம் என்பதை மறந்துவிடாமல், உரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் உணவுக்கு பாதுகாப்பான நிலையை ஏற்படுத்திட வேண்டும்.”ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை” என்று அறிவித்து, கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் பிற்போக்கான காரியத்தில் பிரதமர் தலைமையிலான பாசிச பா.ஜ.க. அரசு தீவிரமாக ஈடுபட்டிருப்பது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.

அதிகாரங்களை மையப்படுத்தும் முயற்சிகள் இங்கு நடக்காது என்று அறிந்த மோடி அரசு இத்துடன் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இனிமேல் மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளை மத்திய அரசே அகில இந்தியத் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யுமாம். நீதித்துறையைக் கையகப்படுத்துவதற்கு பா.ஜ.க அரசு வெறியோடு நிற்பதை நாம் அறிவோம். ‘கொலீஜியம்’ முறையை ஒழித்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தாமே தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவர முயற்சிப்பவர்கள் இவர்கள். அது இப்போதைக்கு முடியவில்லை என்பதால் மாநில நீதித் துறையைக் கைவசமாக்கிக் கொள்ள நிற்கின்றனர்.

“ஒரு தேசத்திற்கு அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட ஒரே அரசு” (Nation State) என்பது ஒரு ஐரோப்பியக் கருத்தாக்கம். சம்பந்தமற்ற நாடுகளின் கொள்கைகளை பொருந்தா நாடுகளில் திணிப்பதும் வன்முறையே.

வரலாறு முழுவதிலும் இந்தியா உள்ளிட்ட ஆசியநாடுகள் இப்படி அதிகாரங்கள் மையத்தில் குவிக்கப்பட்ட ‘தேச அரசுகளாக’ இருந்ததில்லை. வரலாறு முழுவதும் பல கூறுகளுக்கிடையில்  அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட  அமைப்புகளாகவே (segmentary state) அவை இருந்துள்ளன. அந்த வகையில் இன்றைய இந்திய அரசமைப்பை “அரசுகளின் தேசம்” (State Nations) என்பார் லாயிட் ருடால்ஃபு.(source: A. Marx)

சாதியால் மதத்தால் இனத்தால் தொடர்ந்து இந்திய ஒற்றுமையை குலைத்து வரும் பாசிச அமைப்புகளை எதிர்த்து களமாட வேண்டிய கடமை இந்தியராகிய ஒவ்வொருவருக்கும் உண்டு.ஒரே நாடு ஒரே சுடுகாடு என்று கூறி திரியும் மோடி அரசின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ‘‘சுதந்திரம் மனிதனின் சாராம்சமாக இருக்கிறது” என்று சொன்னவர் மார்க்ஸ்.மார்க்சிய வழியில் சுதந்திர இந்தியாவை சுகந்தரித்து கொள்வோம்.

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here