ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலங்களில் வெறும் 10 சதவீத இட ஒதுக்கீடு தர தயாரா?-வசந்தன்.

சாதியின் பெயரால் ஈராயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையாக இருந்துவரும் இடப்பங்கீட்டு கோட்பாட்டின் மீது புதிய தாக்குதலை நடத்தியிருக்கிறது இந்திய பாஜக அரசு. மாநிலங்களைவில் நிறைவேற்றப்பட்ட முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இடப்பங்கீட்டு கோட்பாட்டையும், அதன் நோக்கத்தையும் இந்த சட்டம் முற்றிலுமாக சீர்குலைத்திருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினரின் பொருளியல் மேம்பாட்டுக்காக என்ற பெயரில் சமூகநீதி, சமதர்மத்துக்கான பாதையை திசைதிருப்பியிருக்கிறார்கள்.

‌முதற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை சாதி இந்துக்களின், உயர் வகுப்பினரின் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்கான தந்திரம் என்ற அளவில் மட்டும் சுருக்கி பார்த்துவிட முடியாது. இடப்பங்கீட்டு திட்டத்தின் மீது ஆதிக்க சக்திகளுக்கும், பார்ப்பனிய மேட்டுக்குடிகளுக்கும் நெடுங்காலமாக இருந்து வரும் வன்மத்தின் வெளிப்பாடுதான் திட்டம். நீடித்த நெடுங்கால நோக்கில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சட்ட மசோதா எஞ்சியிருக்கும் இடப்பங்கீட்டு உரிமைக்கும் முடிவுகட்டுவதற்கான தொடக்கப்புள்ளியாகும். ஏற்கனவே இடப்பங்கீடு கோட்பாட்டின் பின்னணியில் இருக்கும் தர்க்க காரணத்தை உணர மறுக்கும் ஒரு பெருங்கூட்டம் அதற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. வறுமை எல்லா சாதியிலும் இருக்கும் போது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் ஏன் இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும்? இதனால் நமது வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன என்கிற பிரச்சாரம் சமகாலத்தில் அதிகரித்து வருவதை அவதானித்து வருகிறோம். இந்த கருத்தியல் பரப்புரையின் அடுத்தகட்ட நகர்வாகவே பொருளியல் அடிப்படையிலான சட்ட மசோதாவையும் பார்க்க வேண்டும்.

‌முதலில் இடப்பங்கீடு திட்டம் வறுமை ஒழிப்பு, பொருளியல் மேம்பாட்டுக்கான செயல்முறை இல்லை என்பதை விளங்கிக்கொள்வது இதில் முதன்மையானது. சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை சமூகத்தின் அனைத்து படிநிலைகளிலும் சமநிலைக்கு கொண்டுவருவதற்கான முன்னுரிமை வழங்குவதே இதுநாள் வரையில் நடைமுறையில் இருந்து வரும் இடப்பங்கீட்டு முறையின் சாராம்சம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய தளங்களின் ஒடுக்கப்பட்ட மக்களை சமநிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சி இது. இங்கு ‘முயற்சி’ என்ற சொல்லை கவனமாக பொருத்தி கூறுவதற்கு வலுவான காரணம் இருக்கிறது. இலக்கை அடையும் வரை இந்த செயல்முறை ஒரு முயற்சி தான். அதனோடு பண்பாட்டு கூறுகளில் படிந்துக்கிடக்கும் சாதிய பிணியை ஒழிக்க இன்னும் பல்வேறு செயல்திட்டங்கள் தேவையாக இருககின்றன. நிலைமை இப்படியிருக்க சமூகநீதி விழுமியங்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் வஞ்சகத்தோடு பொருளியல் அடிப்படையிலான இடப்பங்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துவதும், அதன் மீதான விவாதத்தில் இடதுசாரி கட்சிகளும்கூட தெளிவற்ற முடிவுகளை எடுப்பதும் அநீதியான செயல்.

‌பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் பலவீனமாக இருக்கும் மற்றொரு கூறு, இதனை அனுபவிப்பதற்கான தகுதி வரைமுறை. இந்திய சமூக பொருளாதார நிலையை மிக மோசமாக உள்வாங்கியவர்களால் அல்லது தெரிந்தே உயர் சாதியினரை கவர நினைப்பவர்களால் மட்டுமே இப்படியான வரையறையை உருவாக்க முடியும். ஓர் ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் குறைவாக பொருளீட்டுபவர்கள் எல்லாம் குறித்த இடஒதுக்கீட்டு தகுதியானவர்கள் என்றால் இவர்கள் யாரை ஏழையாக கருதுகிறார்கள் என்ற கேள்வியே எழுகிறது. இங்கு விளிம்புநிலை மக்களின் ஒரு நாள் வருமானம் 100 ரூபாய்க்கும் கீழாக பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரின் ஆண்டு வருமானம் ஒரு இலட்சத்துக்கும் குறைவாக இருக்கிறது. ஒருவேளை பிற சாதியில் உள்ள ஏழைகளுக்காகவே பாஜக அரசு இத்திட்டத்தை கொண்டுவந்திருக்கிறது என்றால் இவ்வளவு மொன்னையான வரையறையை கொடுத்திருக்க முடியாது.

‌வெறும் வாக்கு பொறுக்கி அரசியலுக்காகவும், சமூகநீதி கோட்பாடுகளின் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகவும் கொண்டுவரப்பட்டிருக்கும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை எதிர்க்க வேண்டியது நமது தார்மீக கடமை. இடப்பங்கீட்டாலான முன்னுரிமை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமன்றி சாதிய படிநிலைகளில் அங்கம் வகிக்கும் இதர இடைநிலை மக்களுக்கும் சேர்த்தே பயனளித்து வந்திருக்கிறது. அதனடிப்படையிலும், ஜனநாயக பூர்வமான சமநிலை சமூகத்தை அடைவதற்கான செயல்முறையிலும், அரசியல் சாசனம் நமக்கு வழங்கியிருக்கும் இடப்பங்கீடு என்கிற அடிப்படை உரிமையை நாம் பாதுகாப்பது அவசியம்.

இந்த சூழலில் ஓடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை திரும்ப தருவதுடன் ,தற்போதைக்கு நிலங்களில் 10% இட ஒதுக்கீடு தர இவர்கள் தயாரா?இனி ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் இடப்பங்கீட்டுக்காக மட்டுமின்றி தங்களின் நில உரிமைக்காகவும் போராட வேண்டும். நில உரிமையே ஒடுக்குமுறைகளை நிரந்தரமாக ஒழிக்கும்.

‌மத்திய அரசு மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளின் சூட்சுமத்துக்கு இடமளிக்காமல் முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் முறையை எதிர்த்தால் மட்டுமே நமது உரிமையை இழப்பதை தடுக்க முடியும். இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு வளைந்துக்கொடுக்காமல் எதிர்த்து நிற்கும் எஞ்சிய மக்கள் இயக்கங்களின் எதிரவினைகளும், சட்ட ரீதியான நடவடிக்கைகளும் குறித்த சட்டத்தை விரட்டியடிப்பதற்கு உதவலாம். அதனோடு, மக்களாக இதற்கு எதிராக குரலெழுப்பும் பணியை நாமும் முன்னெடுக்காவிட்டால், வெகு சீக்கிரமே இச்சமூகத்திலிருந்து நம்மை துடைத்தெறிய பேராதிக்கத்தை சுருட்டி வைத்திருக்கும் சிறுகூட்டமொன்று காத்துக்கிடக்கிறது.

வசந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here