ஏழைகளின் கண்ணியத்தையும், நம்பிக்கையையும் சிதைக்கும் மோடி அரசின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் முனைவர் சபூர் அலி.

ஹர்ஷ் மந்தர் எழுதுகிறார்: இந்திய அரசை பொறுத்தவரை மருத்துவ ஊழியர்களுடன் கூடிய சார்டர் விமானம் பிற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த மக்களை கொண்டு வருவதற்கு பொருத்தமானதாக இருக்கும் என கருதியது. ஆனால் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வேலை மற்றும் உணவு இல்லாமல் சிக்கித் தவிக்கும் இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் பற்றி தனக்கு எந்தவித பொறுப்புணர்வும் இருப்பதாக உணரவில்லை.

“நான் கொரோனாவால் மரணிக்க மாட்டேன். அதற்கு முன், நிச்சயமாக பசி என்னை கொன்றுவிடும்”. பழைய டெல்லியில் ஆயிரக்கணக்கான வீடற்ற மக்களுக்கு உணவளிக்க முயற்சிக்கும் இளம் நண்பர்களின் குழுவில் நான் சேர்ந்தபோது, ​​ இது போன்ற புலம்பலை வெவ்வேறு நபர்களிடமிருந்து ஒரு டஜன் தடவைகளுக்கு மேலே கேட்டேன். “எங்களது தற்போதைய பரிதாப நிலையை பணமதிப்பிழப்பு பாதிப்புடன் ஒப்பிட்டால் அது மிக மிக சொற்பமே” என்றார் மற்றொருவர். “இத்தகைய கொடிய தருணத்தில் இருந்து நாங்கள் எப்படி பிழைப்போம் என்பது எங்களுக்குத் தெரியாது” என அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவர் கூறி கொண்டு இருந்தனர்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிவாரணத் திட்டங்களை நான் மனமுடைந்து விரக்தியுடன் படித்தேன். கொரோனா வைரஸ் கொண்டு வந்த ஊரடங்கு கொடுமையால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து ஏழைகளை பாதுகாப்பதே அவரது நோக்கம் என்று அவர் அறிவித்தார். “யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள்”, என்றும் அவர் உறுதியளித்தார்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு மற்றும் ஐந்து கிலோ கூடுதல் கோதுமை அல்லது அரிசி, வயதானவர்கள், ஊனமுற்றோர், விதவைகளுக்கு ரூபாய் ஆயிரம், ஜன் தன் கணக்குகள் உள்ள பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு மேல் ரூபாய் ஆயிரத்து ஐநூறு, இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் மற்றும் நடப்பில் இருக்கும் ஒரு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூபாய் இரண்டாயிரம் ரொக்கப் பரிமாற்றம் போன்ற அறிவிப்புகள் மேற் கூறிய ஏழைகளை உண்மையிலேயே காத்துவிடும் என்று அவர் நம்புகிறாரா?

நிர்மலா சீதராமனின் அறிவிப்புகளை போன்று கோவிட்-19 வைரஸின் அபாயகரமான பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அளித்த மூன்று உரைகளும் கூட இந்த நடவடிக்கைகள் இலட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள், பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு பேரழிவுகரமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று குறிப்பிடவில்லை.

மோடி ஏழைகளைக் பற்றி அழுத்தமாக குறிப்பிட்டு, சிவில் சமூகம் அவர்களின் துயரத்தைத் தணிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். சீதாராமன், குறைந்த பட்சம், ஏழைகளின் துன்பத்தை அறிந்தவர் என்ற கருத்து இருந்தது, ஆனால் அவரது அறிவிப்பு எதனை போன்று இருந்தது என்றால், ஏழை மக்களின் வீடுகளுடன் ஒரு நேர சிறிய உணவு பொட்டலத்தையும், ஒரு சிறு தொகையை கொடுக்கும் டோக்கனையும் இணைப்பது அவர்கள் எதிர்கொள்ளும் சுனாமியிலிருந்து அவர்களை பாதுகாத்து கொள்ள போதுமான இருக்கும் என்று நம்புவதாகத் தோன்றியது.

சீதாராமனின் திட்டங்களை செயல்படுத்துவதில் எண்ணற்ற நடைமுறை சிக்கல்கள் இருகின்றன. உதாரணமாக, ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது அவர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து எவ்வாறு பணத்தை எடுக்க முடியும்? அனாதை சிறுவர், சிறுமியர், வீடற்றவர்கள், ஊனமுற்றோர்கள் மற்றும் நாடோடி பழங்குடியினர்கள் போன்ற சமுதாயத்தின் விளிம்பில் உள்ளவர்கள், ஒரு நேர உணவிற்கே போராடி கொண்டிருப்பவர்கள். அவர்கள் எந்த ஒரு வங்கி கணக்கையும் கொண்டிருக்கவில்லை மேலும் அவர்களிடம் ATM கார்டுகளும் கிடையாது.

இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் கூறுவோமேயானால், பெரும்பாலும் முறைசாரா தொழிலாளர்களின் பொருளாதாரத்தில் தேசிய ஊரடங்கு ஏற்படுத்தும் பேரழிவு தரும் பொருளாதார தாக்கத்தை அவர்களின் அறிவிப்பு கருத்தில் கொள்ளவில்லை. பொருளாதார வல்லுனர் ஜெயதி கோஷ் தனது சமீபத்திய நேர்காணலில், ஊரடங்கின் முதல் இரண்டு நாட்களின் தாக்கம் பணமதிப்பிழக்கத்தின் தாக்கத்தை விட அதிகமாக இருப்பதாகவும், தொடர்ச்சியான சரிவில் இருந்த இந்திய பொருளாதாரம் படுகுழியில் விழும் அபாயத்தில் நிற்பதாகவும் மதிப்பிட்டுள்ளார். அவரது கடுமையான மதிப்பீட்டின் உண்மைத்தன்மையை அங்கீகரிக்க முறையான பொருளாதார பயிற்சி தேவையில்லை சாதாரண பொது அறிவே போதுமானதாக இருக்கின்றது.

இத்தருணத்தில் யார் அறுவடை செய்வார்கள்?,அறுவடை செய்யப்பட்டதை யார் வாங்குவார்கள்? சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, கட்டுமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன, உணவகங்கள் மற்றும் தையல் அலகுகள் போன்ற முறைசாரா பணியிடங்கள் கூட மூடப்பட்டுள்ளன. வீடற்ற ஒருவர் என்னிடம், “ நான் தெருக்களில் வளர்ந்திருக்கிறேன். எனக்கு குடும்பம் இல்லை. தந்தூரி ரொட்டி தயாரிக்க கற்றுக்கொண்டு ஒரு நாளைக்கு ரூ .500 சம்பாதித்தேன். இன்று, உங்களிடமிருந்து இரண்டு ரொட்டிகளுக்கு நான் கைகளை நீட்டுகிறேன்” என்றார்.இதனை கேட்டவுடன் என் முகம் வெட்கத்தில் மூழ்கின.

நாங்கள் உணவு வழங்கும் இடங்களில், வீடற்ற பல ஆயிரம் பேர் வரிசையில் காத்திருந்தனர். யாரோ ஒருவர் உணவுடன் வருவதற்காக ஆறு மணி நேரம் உட்கார்ந்திருப்பதாக பலர் சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் கடந்த மூன்று நாட்களில் ஒரு நேர அல்லது இரு நேர உணவுகளுக்கு மேல் சாப்பிடவில்லை என்று கூறினர். தொண்டு நிறுவனத்தின் மூலம் அவர்களுக்கு கிடைத்த உணவுகள் மிகக் குறைவாக இருந்தன, அவ்வுணவு அவர்களின் வயிற்றை நிரப்பவில்லை.

இங்கு நிலவும் சூழ்நிலை எத்தகையது எனில் ஏதோ ஒரு நபர் ஒரு மூலையில் உணவை விநியோகிக்கிறார் என்று ஒரு வதந்தி எழுந்தால், அங்கு உடனே கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசல் ஏற்பட்டுவிடும். மேலும் ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்ட நெரிசலிமுன் தாக்கு பிடிக்க முடியாதவர்களாக இருப்பார்கள். இங்கு உணவு அடிப்படையனதாக இருக்கிறது, அது போதுமானதாகவும் இருக்கவில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக, அது அவர்களின் சுய மரியாதையை அழிக்ககூடியதாகவும் இருக்கிறது. அவர்கள் வேலையை விரும்புகிறார்கள்,பரிதாபத்தை அல்ல. அரசு நடவடிக்கை மூலம் அவர்களிடமிருந்து வேலைகள் பறிக்கப்பட்டால், அவர்களின் வாழ்வாதாரம் தனியார் தொண்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கக்கூடாது, அது மிக உயர்ந்த பொது கடமையாக இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது மூன்று வாரங்கள் அவர்கள் இச்சூழ்நிலையை சகித்துக்கொள்ள முடியும், அதன் பிறகு இங்கு பசி இன்னும் அதிகமாக பயங்கரமாக அதிகரிக்கும்.

இங்கு பலர் கூறியது யாதனில் நகரத்தில் அவர்களுக்கு உணவும் இல்லை, வேலையும் இல்லை. இச்சூழ்நிலையில் அவர்கள் தப்பிப்பிழைப்பதற்கும்,தங்களது நலம் விரும்பும் உறவுகளை சென்றடைவதற்கும் ஒரே வழி தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதேயாகும். ஆனால் ஊரடங்கு குறித்து பிரதமர் அறிவித்த குறுகிய காலத்திற்குள், ரயில்கள் மற்றும் பேருந்துகள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இந்திய அரசை பொறுத்தவரை மருத்துவ ஊழியர்களுடன் கூடிய சார்டர் விமானம் பிற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த மக்களை கொண்டு வருவதற்கு பொருத்தமானதாக இருக்கும் என்று கருதியதோ ஒழிய. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வேலை மற்றும் உணவு இல்லாமல் சிக்கித் தவிக்கும் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் பற்றி தனக்கு எந்த பொறுப்புணர்வும் இருப்பதாக உணரவில்லை. அவர்கள் மாநில எல்லைகளுக்கு நடக்க முயன்றால், காவல்துறையினரால் தாக்கப்படுகிறார்கள். காவல்துறையின் கண்ணில் படாமலும் விடாமுயற்சியுடன் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்களது கிராமங்களை அடைய அவர்கள் பசியையும், காவல்துறையையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே போல எண்ணற்ற டிரக் ஓட்டுநர்கள் நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் சிக்கியுள்ளனர். அவர்கள் தப்பிக்க வழி இன்றியும் உதவி பெற முடியாத நிலையிலும் உள்ளனர்.

சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக ஒரு சிறிய நிதி தொகுப்பு அறிவிக்கப்பட்டதைத் தவிர, ஏழைகளுக்கு வைரஸ் தாக்கும்போது அவர்களுக்கு வேலை செய்யும் ஒரு சுகாதார அமைப்பை அவர்கள் அணுக முடியும் என்ற உறுதிமொழி எதுவும் அங்கு இல்லை. வைரஸ் தாக்குதல் பற்றி அவர்கள் எங்கு சோதிப்பார்கள்?, சோதனைக்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டியிருக்குமா?, அவர்களுக்கு மருத்துவமனை படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் எங்கே இருக்கும்? நாம் ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்திடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், தொற்றுநோய் காலத்தில் குறைந்தபட்சம் தனியார் சுகாதார சேவைகளை தேசியமயமாக்க வேண்டும். இல்லையெனில் ஏழைகள் பசியால் மட்டுமல்ல, வைரஸ் தாக்குதலாலும் இறக்க நேரிடும்.

இந்த முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியிலிருந்து நாட்டை வழிநடத்தும் பிரதமருக்கு எதிர் கட்சிகளின் ஆதரவு தேவை என்று பல கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த போரில் பிரதமர் தனது தளபதியாக இருப்பதாக ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். பல முதலமைச்சர்களும் இதனை ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஏழைகளுக்கு எதிரான இந்த அதிர்ச்சியூட்டும் ஊரடங்கு உத்தரவை என்னால் மனப்பூர்வமாக ஆதரிக்க முடியவில்லை. தேசிய ஊரடங்கு இல்லாமல் வைரஸை எதிர்த்துப் போராடிய தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியா நன்றாகக் கற்றுக்கொள்ள முடியும். ஊரடங்கை திரும்பி பெற வேண்டும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அரசு பணக்காரர்களையும், ஏழைகளையும் சமமாக பார்க்கும் பொது இரக்கத்தையும், திறனையும் இழந்துவிட்டது. மகாத்மா காந்தி எங்களுக்காக விட்டுச் சென்ற சமுதாயத்தை நினைவுபடுத்துவதற்கு இதைவிட சிறந்த நேரம் இல்லை. சந்தேகம் மற்றும் குழப்பத்தில் இருக்கும்போது, ​​அவர் உங்களுக்கு ஆலோசனை வழங்கினார், உங்களுக்குத் தெரிந்த மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபரைப் பற்றி யோசித்துப் பாருங்கள், மேலும் உங்களது நடவடிக்கைகள் பாதிக்கபட்டவரின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் மேம்படுத்துமா என்று கேளுங்கள் என்றார்.
“கைவிடபட்ட நபர்களில்” சிலரை நான் இன்று சந்தித்தேன். அரசு தேர்ந்தெடுத்த நடவடிக்கைகள் உங்களையும் என்னையும் பாதுகாக்கக்கூடும், ஆனால் அவர்களைப் பொறுத்தவரை, அவை கண்ணியமான மற்றும் நம்பிக்கையான உயிர்வாழ்வதற்கான சாத்தியங்களை அழிக்கவே செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here